இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் யாருக்கு என்ன லாபம்? நிபுணர்கள் பகுப்பாய்வு

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் யாருக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுகல் புரோகித்
    • பதவி, பிபிசி

16-வது இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டின் முடிவுகள், 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்', 'மிகப்பெரிய உடன்படிக்கை' மற்றும் 'வரலாற்றுச் சிறப்புமிக்கது' எனப் பலவாறாகப் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால், இவற்றில் பெரும்பாலான கருத்துகள் இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததையே குறிக்கின்றன.

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எதை அடைய முயல்கிறது?இதில் பல விஷயங்கள் விலக்கப்பட்டுள்ளனவா? பல்வேறு துறைகளும், மக்களும் இதன் தாக்கத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்? இந்தியாவுக்கு வெளியே இதற்கு என்ன மாதிரியான எதிர்வினைகள் உள்ளன?

 ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடம்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஒப்பந்தம் எதனை உள்ளடக்கியுள்ளது?

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 27 நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பாக உள்ளது.

இது ஒருங்கிணைந்த குழுவாக செயல்படுகிறது. அதாவது, பொருட்கள், சேவைகள், முதலீடு மற்றும் மக்கள் - சட்ட அல்லது நிர்வாக தடைகள் இன்றி நாடுகளுக்கு இடையே நகர முடியும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரிய பொருளாதார அமைப்பாக உள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 20 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஜெர்மனி அதில் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் உள்ளன.

தேசிய பங்குச் சந்தை கட்டிடம்

பட மூலாதாரம், Getty Images

உலக வங்கி தரவுகளின்படி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும், அதிவேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து சுமார் இரண்டு பில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளன.

2024–25 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம் 136.54 பில்லியன் டாலராக இருந்தது. அதே காலகட்டத்தில் சேவைகளுக்கான வர்த்தகமும் 83.1 பில்லியன் டாலரை கடந்தது.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை 2007-ஆம் ஆண்டில் தொடங்கின.

ஆனால், அவை 2013-ஆம் ஆண்டில் நின்றுவிட்டன. பின்னர் 2022- ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கின.

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பெரும்பாலான பணிகள் 2025 பிப்ரவரி மாதத்திற்கு பிறகே தொடங்கியதாக தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது, என்ன சேர்க்கப்படவில்லை?

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியாவின் 99 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்கள் சிறப்பு சலுகைகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்ல முடியும் என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கத்திலிருந்து விலக்கி வைத்திருக்கும் சில பகுதிகள் உள்ளன.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியாவின் 99 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்கள் சிறப்பு சலுகைகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்ல முடியும் என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது .

ஜவுளி, தோல், காலணிகள், கடல்சார் பொருட்கள், ரத்தினக் கற்கள், கைவினைப்பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஒப்பந்தத்தின் கீழ் அதன் ஏற்றுமதியில் 96.6 சதவீத பொருட்களுக்கான வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்பதால், 2032 ஆம் ஆண்டுக்குள் அதன் பொருட்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.

வேறு எந்த நாடும் அனுபவிக்காத வரி சலுகைகளை இந்தியா தனக்கு வழங்கியுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

உதாரணமாக, கார்கள் மீதான வரிகள் படிப்படியாக 110 சதவீதத்திலிருந்து வெறும் 10 சதவீதமாகக் குறையும், மேலும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் கார் பாகங்கள் மீதான வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

ஆனால் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எல்லாவற்றுக்கும் பொருந்தாது.

பியூஷ் கோயல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ஒப்பந்தத்தில் பல அம்சங்களை தெளிவுபடுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து முக்கியமான விஷயங்கள் விலக்கப்பட்டுள்ளன என்று பியூஷ் கோயல் தெளிவுபடுத்தினார்.

அதாவது, பால் பொருட்கள், தானியங்கள், கோழி, சோயாபீன், மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற துறைகளில் இந்திய சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படவில்லை

மறுபுறம், மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, அரிசி மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் இறக்குமதி ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது .

ஆனால், இந்த விதிகள் நடைமுறைக்கு வர, இந்த ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, அரிசி மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உட்புறக் காட்சி

தடையற்ற வர்த்தக ஒப்பந்த ஆவணம் அனைத்து அதிகாரப்பூர்வ ஐரோப்பிய ஒன்றிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு, இரண்டு கட்டங்களில் பரிசீலிக்கப்படும். அதன் பின்னர், இந்தியாவும் இறுதி ஆவணத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதற்குப் பிறகே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வர முடியும்.

இந்தியாவின் தூதராக இருந்து, ஐரோப்பாவில் பணியாற்றியுள்ள சர்வதேச வர்த்தக நிபுணர் முனைவர் மோகன் குமார், இந்த நடைமுறை செயல்படுத்தப்பட சிறிது காலம் ஆகலாம் என்று பிபிசியிடம் கூறினார்.

"என் கருத்துப்படி, அதிகபட்சமாக 2027 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்," என்று அவர் தெரிவித்தார்.

கவலைகள் என்ன?

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் நிறுவனம் இந்த ஒப்பந்தம் குறித்த ஆய்வில், "உலக வர்த்தகம் பிளவுபட்டு வரும் இந்த காலகட்டத்தில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார உறவுகளை நிலையான மற்றும் விதிமுறை அடிப்படையிலான கட்டமைப்பில் உறுதியாக பதியச் செய்கிறது. ஆனால், இன்னும் தீர்க்கப்படாத சில பிரச்னைகள் இருப்பதால், அதன் தாக்கம் வரம்புக்குள்தான் உள்ளது," என்று கூறியுள்ளது.

"ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் (CBAM) இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இது சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. அதாவது, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்கள் இந்தியாவுக்கு சுங்க வரி இல்லாமல் வரலாம். ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பாவில் தொடர்ந்து கார்பன் வரி செலுத்த வேண்டிய நிலை தொடரும்," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய தூதராக இருந்து, ஐரோப்பாவில் பணியாற்றியுள்ள சர்வதேச வர்த்தக நிபுணர் முனைவர் மோகன் குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்தார்.
இந்த நடைமுறை செயல்படுத்தப்பட சிறிது காலம் ஆகலாம் என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் என்றால் என்ன ?

கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் என்பது, அதிக கார்பன் வெளியீடு ஏற்படுத்தும் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இறக்குமதி செய்யப்படும் போது, அவற்றிற்கு தனி கார்பன் விலையை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை ஆகும்.

இதன் நோக்கம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளிலும் சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் உற்பத்தியை ஊக்குவிப்பதே என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால், ''மற்ற நடவடிக்கைகளுடன், கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் இருந்தபோதிலும் இந்திய பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளை அணுகும் வகையில் 'உரையாடல்' தொடங்கப்படும்'' என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புதன்கிழமை, காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது. "கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசத்தில் இருந்து இந்தியாவின் அலுமினியம் மற்றும் எஃகு தொழில்களுக்கு விலக்கு பெற முடியாதது பெரிய கவலையாக உள்ளது," என்று அது தெரிவித்தது.

கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் என்பது, அதிக கார்பன் வெளியீடு ஏற்படுத்தும் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இறக்குமதி செய்யப்படும் போது, அவற்றிற்கு தனி கார்பன் விலையை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பிய ஒன்றியத்தில் சில வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து வரும் ஏற்றுமதிகளுக்கு குறைந்த இறக்குமதி வரிகள் வழங்கும் ஒரு திட்டம் உள்ளது. இந்தச் சலுகையை இந்தியா முன்பு பெற்றுவந்தது. ஆனால் 2026 ஜனவரி 1 முதல், இந்தியா மற்றும் சில பிற நாடுகள் இந்தத் திட்டத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கப்படுகின்றன.

இதனால், கனிமப் பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர், ஜவுளி, ரத்தினங்கள், எஃகு மற்றும் இயந்திரத் துறை போன்றவை அதிகமாக பாதிக்கப்படும்.

ஆனால், இந்த விவகாரத்தில் சமீப காலமாக இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றதா என்பது தெளிவில்லை.

இதுகுறித்து முனைவர் மோகன் குமார், "தற்போதைய நேர்மறையான உறவுகளுக்கு மத்தியில் இது கவலைக்குரிய விஷயம் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வரும் வரை, குறைந்தது நமது பொருட்களும் தொழில்களும் முன்பு பெற்று வந்த சலுகைகளை இனி பெற முடியாது" என்று கூறினார்.

"ஆனால் இது திடீரென்று நடக்கவில்லை. இந்தச் சலுகைகள் இந்த நேரத்தில் முடிவுக்கு வரப்போகின்றன என்பது நமக்கு ஏற்கனவே தெரியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க கொள்முதல், அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல விவகாரங்களில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன என்பதையும் ஜிடிஆர்ஐ ஆய்வு முன்னிலைப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

"இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்று டெல்லியைச் சேர்ந்த ஒரு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் (MSME) பிரதிநிதி, பெயர் குறிப்பிடாத விரும்பாமல் பிபிசியிடம் தெரிவித்தார்.

முனைவர் அஜய் சகாய், வர்த்தக அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பான இந்திய ஏற்றுமதி அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது, மேலும் இந்தியத் தயாரிப்புகள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிகப்படியான வரிகளை ஒப்பிடுகையில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

"நிச்சயமாக, இதைச் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படும். இந்த ஆண்டுக்குள் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், நமது ஏற்றுமதித் துறை பயனடையும். ஆனால், அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளின் பிரச்னைகளை இது முழுமையாகத் தீர்த்துவிடும் என்று என்னால் சொல்ல முடியாது," எனக் குறிப்பிட்டார் அஜய் சகாய்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

சவால்கள் என்னென்ன?

யுக்ரேன் உடனான மோதல் காரணமாக, ரஷ்யாவை ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாக ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதி வருகிறது. இந்தச் சூழலில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்க்குமா என்ற கேள்வி எழுகிறது.

மேலும், டொனால்ட் டிரம்ப் அதிபராக இருக்கும் அமெரிக்கா, இந்த முழு விவகாரத்தையும் எப்படிப் பார்க்கும் என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது.

ஜனவரி 27 அன்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், "என் கருத்துப்படி, இந்த ஒப்பந்தத்தால் இந்தியா பெரும் பயனடையும். இந்தியாவுக்கு, ஐரோப்பிய சந்தையை அணுகும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்," என்று தெரிவித்தார்.

ஜனவரி 27 அன்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் இது குறித்துக் கூறுகையில், "என் கருத்துப்படி, இந்த ஒப்பந்தத்தால் இந்தியா பெரும் பயனடையும். இந்தியாவுக்கு, ஐரோப்பிய சந்தையை அணுகும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Press Information Bureau, India

இது தவிர, திறமையான பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்களை அனுப்புவதை எளிதாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால், இதனால் சில ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றம் குறித்த கவலைகள் அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

"ரஷ்யா இனி ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த (ரஷ்யா-யுக்ரேன்) மோதல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் விரும்புவதைப் போலவே, இந்தியாவும் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடுகளில் ரஷ்யாவையும் உள்ளடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்கள் எப்போதும் மோதல் நிலையிலேயே இருப்பார்கள்," என்கிறார் மோகன் குமார்.

இது தவிர, திறமையான பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் இடமாற்றத்தை எளிதாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

மேலும் அமெரிக்கா இதை எப்படிப் பார்க்கும்? என்ற கேள்விக்கு, "என் பார்வையில், அமெரிக்கா இதை எதிர்மறையாகப் பார்க்கக் கூடாது. ஏனெனில், அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகள் அதிகப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்று சொல்லி வருகிறது. இங்கே இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தாங்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்பதைக் காட்டுகின்றன," என்கிறார் மோகன் குமார்.

மறுபுறம், அட்லாண்டிக் கவுன்சிலின் தெற்காசிய விவகாரங்களுக்கான மூத்த நிபுணர் மைக்கேல் குகல்மேன் பிபிசியிடம், "உலகளாவிய வர்த்தகத்தில் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை முறியடிக்க இந்தியா இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு வழியாகப் பார்க்கும். சீனாவை எதிர்கொள்ள இந்தியாவை ஒரு பயனுள்ள கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியமும் கருதுகிறது," எனத் தெரிவித்தார்.

இருப்பினும், இவை அனைத்தும் நடப்பதற்கு இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இன்னும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது என்று மோகன் குமார் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு