அஜித் பவாரின் விமான விபத்தைத் தவிர்த்திருக்க முடியுமா? - விமான பயணத்தின் முக்கியமான 11 நிமிடங்கள்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு, இந்த விமான விபத்தைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 53 விமான விபத்துகளில் 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
    • எழுதியவர், ரௌனக் பைரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு, இந்த விமான விபத்தைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பாராமதி ஓடுதளத்தில் கூடுதல் வசதிகள் இருந்திருந்தால், குறைவான தெரிவுநிலையிலும் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

 அஜித் பவார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 66 வயதான அஜித் பவார் புதன்கிழமை விமான விபத்தில் இறந்தார்.

பாராமதி விமான ஓடுதளம்

அஜித் பவார் பாராமதி விமான ஓடுதளத்தை மேம்படுத்த விரும்பினார், இதற்காக ஒரு சில கூட்டங்களையும் நடத்தியிருந்தார்.

"கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராமதி விமான ஓடுதளத்தை மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் கையகப்படுத்தியது. இந்தத் திட்டத்தை இறுதி செய்வதற்காக அஜித் பவார் சமீபத்தில் மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனத்துடன் சந்திப்புகளை நடத்தியதாக இந்த விவகாரத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த விமான ஓடுபாதை ஆகஸ்ட் 2025 வரை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் விமான நிலைய டெவலப்பர்ஸ் நிறுவனத்தால் (Reliance Airport Developers) நிர்வகிக்கப்பட்டது. பாராமதி விமான நிலையத்தின் பொறுப்பாளரான மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாளர் சிவாஜி தவ்டே, "ஆகஸ்ட் 19 அன்று விமான நிலையத்தின் நிர்வாகத்தில் பல குறைபாடுகள் இருந்ததால், அதன் நிர்வாகத்தை நாங்கள் எடுத்துக் கொண்டோம்" என்று கூறினார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .

"விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக அஜித் பவார் கடந்த சில மாதங்களில் பல கூட்டங்களை நடத்தினார். இரவு தரையிறக்கம் மற்றும் வழக்கமான அடிப்படை வசதிகளை அவர் கோரியிருந்தார்" என்று அந்த செய்தி கூறியது.

ஓய்வுபெற்ற விமானி எஹ்சான் காலித் பிபிசி இந்தியிடம் பேசுகையில், "பாராமதியில் சரியான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு சான்றளிக்கப்பட்ட கட்டுப்பாட்டாளரால் மட்டுமே தரையில் என்ன தெரிவுநிலை என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியும்" என்று கூறினார்.

"ஒரு அனுபவம் வாய்ந்த கட்டுப்பாட்டாளர் இல்லையென்றால், விமானி தனது தெரிவுநிலையின் அடிப்படையில் தரையிறங்க முயற்சிப்பார். விபத்து நடந்த நேரத்தில், விமானி சூரிய ஒளியால் பார்வை பாதிப்பட்டிருக்கலாம், இதனால் விமானம் சரியான திசையில் சென்றதா என்பதை தீர்மானிப்பது கடினம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஷுவல் அப்ரோச் சிஸ்டம் இல்லாத நிலையில், விமானியே தெரிவுநிலையை மதிப்பிட்டால், அபாயம் நான்கு மடங்கு அதிகமாகும் என்று அவர் கூறுகிறார்.

இந்த விமான ஓடுபாதை ரெட் பேர்ட் ஃப்ளையிங் ஸ்கூல் மற்றும் கார்வர் ஏவியேஷனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு விமானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏர் டிராஃபிக் கன்ட்ரோல், கருவி மூலம் தரையிறங்கும் அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் அல்லது தீயணைப்பு குழுக்கள் போன்ற சாதாரண விமான நிலைய வசதிகள் இல்லாததால் இது ஒரு "கட்டுப்பாடற்ற விமான நிலையம்" என்று அழைக்கப்படுகிறது.

வானிலை ஆய்வாளர்களோ அல்லது விமானிகளுக்குத் தகவல் வழங்கச் சிறந்த வழிசெலுத்தல் கருவிகளோ அங்கு இல்லை.

பாராமதி விமான ஓடுதளத்தில் பயிற்சி பெற்ற ஒரு விமானி தி இந்துவிடம் கூறுகையில், காக்பிட்டில் வழிசெலுத்தல் உதவி எதுவும் இல்லாததால் விமானிகள் தங்கள் கண்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றார்.

இந்த ஓடுதளம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஏடிசி வரம்பிற்கு வெளியே உள்ளது. எனவே, மிக அடிப்படையான வசதிகளைக் கொண்ட விமானப் பயிற்சிப் பள்ளி ஊழியர்களால் மட்டுமே ஏடிசி உதவி வழங்கப்படுகிறது.

பாராமதி விமான ஓடுதளத்தில் பயிற்சி பெற்ற ஒரு விமானி தி இந்துவிடம் கூறுகையில், காக்பிட்டில் வழிசெலுத்தல் உதவி எதுவும் இல்லாததால் விமானிகள் தங்கள் கண்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, விபத்துக்குப் பிறகு பாராமதி விமான ஓடுதளத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

வசதிகள் குறைவாக உள்ள விமான ஓடுதளம்

ஓய்வுபெற்ற விமானி எஹ்சான் காலித் கூறுகையில், பாராமதி விமான ஓடுதளம் சிறியதாக இருந்தாலும், லியர்ஜெட் 45 போன்ற விமானங்களுக்கு அது ஏற்றது என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஓடுதளம் விபத்துக்குக் காரணம் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் விபத்து ஓடுதளத்திற்கு முன்னால் அல்லது வெளியே நடந்துள்ளது. குறைவான தெரிவுநிலையிலும் விமானிக்கு வழிகாட்டும் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம், விஓஆர் மற்றும் ஜிபிஎஸ் போன்ற அமைப்புகள் ஓடுதளத்தில் இருந்திருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம். இவை இருந்திருந்தால் விபத்து ஏற்படும் அபாயத்தை 75 முதல் 80 சதவீதம் வரை குறைத்திருக்கும்"என்றார்.

இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் என்பது தரையில் பொருத்தப்பட்ட ஒரு ரேடியோ அமைப்பாகும், இது விமானங்கள் ஓடுதளத்தில் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் தரையிறங்க உதவுகிறது.

குறிப்பாக கடும் மூடுபனி, பலத்த மழை, மேகமூட்டமான வானம், இருள் அல்லது பிற காரணிகளால் தெரிவுநிலை குறைவாக இருக்கும்போது, விமானத்தை ஓடுதளத்தின் மையப்பகுதிக்கு, சரியான வேகத்தில் மற்றும் சரியான கோணத்தில் தரையிறங்குவதற்கு ஐ.எல்.எஸ் வழிகாட்டுகிறது.

இந்திய விமானிகள் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவரான கேப்டன் எம்.ஆர். வாடியா கூறுகையில், "பாராமதி விமான ஓடுதளம் முழுமையாக மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் அல்ல. அங்கு இரண்டு பயிற்சிப் பள்ளிகள் மட்டுமே இயங்கி வந்தன. நன்கு மேம்படுத்தப்பட்ட விமான நிலையங்களிலேயே ஐ.எல்.எஸ் வசதி இருக்கும், எனவே இங்கு ஐ.எல்.எஸ் இல்லை. பாராமதியில் விமான நிலைய ஏடிசி அதிகார அமைப்பும் இல்லை"என்றார்.

பாராமதி போன்ற சிறிய ஓடுதளத்தில் ஐ.எல்.எஸ் அமைப்பை நிறுவ முடியாது என்பதை எஹ்சான் காலித்தும் ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவர் அதற்கு ஒரு மாற்று யோசனையையும் பரிந்துரைக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போதெல்லாம் உலகம் முழுவதும் விமானங்கள் செயற்கைக்கோள் வழியாக ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்குகின்றன. ஜிபிஎஸ் வசதி இருந்தால், தரையில் இயங்கும் கருவிகள் தேவையில்லை."

"ஆப்பிரிக்காவில்கூட ஜிபிஎஸ் தகவல்களின் அடிப்படையில் தான் விமானங்கள் தரையிறங்குகின்றன. ஐஎல்எஸ்க்கு பணமும் நிலமும் தேவை, ஆனால் ஜிபிஎஸ் அடிப்படையிலான அமைப்பு மலிவானது" என்றார்.

பாராமதி போன்ற சிறிய ஓடுதளத்தில் ஐ.எல்.எஸ் அமைப்பை நிறுவ முடியாது என்பதை எஹ்சான் காலித்தும் ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவர் அதற்கு ஒரு மாற்று யோசனையையும் பரிந்துரைக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எந்தவொரு விமானத்திற்கும் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. (படம் - ஆமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் )

தரையிறங்கும் நேரம் மிகவும் முக்கியமானது

எந்தவொரு விமானத்திற்கும் பதினொரு நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. புறப்படுவதற்கு மூன்று நிமிடங்களும், தரையிறங்குவதற்கு எட்டு நிமிடங்களும் ஆகும்.

இது "முக்கியமான 11 நிமிடங்கள்" என்று அழைக்கப்படுகிறது.

மற்ற நாடுகளிலும், இந்த முக்கியமான 11 நிமிடங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

ஜப்பான் பிளையிங் சேஃப்டி ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, முக்கியமான 11 நிமிடங்கள் என்பது விமானம் புறப்பட்ட முதல் மூன்று நிமிடங்களையும், தரையிறங்குவதற்கு முந்தைய எட்டு நிமிடங்களையும் குறிக்கிறது.

இந்த 11 நிமிடங்களில், விமானப் பணிப்பெண்கள் காக்பிட்டில் உள்ள விமானிகளுடன் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானிகளும் விமானத்தைக் கட்டுப்படுத்தும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த வேலையையும் (பேசுவது அல்லது வேறு எதவும்) செய்யக்கூடாது.

ஏனெனில் 80% வணிக விமான விபத்துக்கள் இந்த இரண்டு காலக்கட்டங்களில் தான் நிகழ்கின்றன. இந்த நேரங்களில், விமானம் அதிக ஆபத்தைச் சந்திக்க நேரிடலாம். புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் பல சிரமங்கள் ஏற்படலாம்.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் 2005 முதல் 2023 வரையிலான விமான விபத்துக்கள் குறித்த தரவுகளைச் சேகரித்துள்ளது.

இந்த ஆய்வுகள், அனைத்து விமான விபத்துக்களில் பாதிக்கும் மேலானவை (53%) தரையிறங்கும் போது நிகழ்கின்றன என்பதைக் காட்டுகின்றன. மற்றொரு 8.5% விபத்துக்கள் புறப்பட்ட பிறகு நிகழ்கின்றன.

தரையிறங்கும் போது விமானிகள் சிறப்பு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தரையிறங்கும் போது ஏன் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்ற கேள்விக்கு, ஓய்வு பெற்ற விமானி காலித் ஹுசைன் மோசமான வானிலை காரணமாக தெரிவுநிலை தெளிவாக இல்லை என்று குறிப்பிடுகிறார்.

ஒரு உதாரணத்தைக் கூறிய அவர், "பறவை பறப்பதைப் போலவே விமானமும் பறக்கிறது. பறக்கும்போது, மோதாமல் இருக்க அல்லது எந்தச் சிக்கலிலும் சிக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்"என்று விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விமானம் வானத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கும்போது, விபத்துக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் தரையிறங்கத் தொடங்கியவுடன், விமான நிலையம் எங்கே இருக்கிறது, ஓடுதளம் எங்கே இருக்கிறது, ஏதேனும் தடைகள் இருக்கிறதா என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்"எனக் குறிப்பிட்டார்.

புலனாய்வு அறிக்கை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று கேப்டன் எம்.ஆர். வாடியா கூறினார்.

புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. தெரிவுநிலை 3000 மீட்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது, இது ஒன்றும் அவ்வளவு மோசமானது அல்ல.

விமானி முதலில் ஓடுதளத்தைத் தவறவிட்டார், பின்னர் அதைக் கண்டறிந்தார், பிறகு தரையிறங்கத் தவறிவிட்டார். சில கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளன, அவை விபத்து குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு