இரானை அமெரிக்கா தாக்கினால் என்ன நடக்கும்? 7 சாத்தியங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி
    • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
    • பதவி, பாதுகாப்பு செய்தியாளர்

அமெரிக்கா சில நாட்களுக்குள் இரானை தாக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எங்கு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பது கணிக்கப்பட கூடியதாக இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

இரானுடன் கடைசி நிமிடத்தில் ஒப்பந்தம் எதுவும் ஏற்படாவிட்டால், இரான் மீது அமெரிக்க படைகள் தாக்க அதிபர் டிரம்ப் உத்தரவிடும் பட்சத்தில், அதன் சாத்தியமான விளைவுகள் என்னவாக இருக்கும்?

1. துல்லியத் தாக்குதல், ஆட்சி மாற்றம்

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவ அமைப்பான பாசிஜ் பிரிவின் ராணுவத் தளங்கள், ஏவுகணை தளங்கள், சேமிப்பு கிடங்குகள் மீது அமெரிக்காவின் விமான மற்றும் கடற்படைகள் வரையறுக்கப்பட்ட மற்றும் துல்லியமான தாக்குதல்களை நடத்தலாம். இதில் இரானின் அணுசக்தி திட்டமும் குறி வைக்கப்படலாம்.

இரானில் ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஜனநாயக முறையிலான ஆட்சி மாறி உலக நாடுகளுடன் மீண்டும் இரான் இணைவதற்கான வாய்ப்பு உருவாகலாம்.

இராக் மற்றும் லிபியாவில் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட ராணுவ தலையீடுகள், சீரான ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

அந்த நாடுகளில் கடுமையான ஆட்சிகள் முடிவுக்கு வந்தாலும், அதற்குப் பின்னர் பல ஆண்டுகாலமாக குழப்பமும் வன்முறையும் தொடர்ந்தன.

மேற்கத்திய ராணுவ ஆதரவின்றி, 2024-ஆம் ஆண்டு அதிபர் பஷர் அல்-அசத் ஆட்சியை வீழ்த்தி தன் சொந்த புரட்சியை நடத்திய சிரியா, இதுவரை ஒப்பீட்டளவில் சிறப்பாக முன்னேறி வருவதாக பார்க்கப்படுகிறது.

2. ஆட்சி நிலைத்திருக்கும் - ஆனால் கொள்கைகளில் மாற்றம்

அமெரிக்காவின் வேகமான மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும். நாட்டின் ஆட்சி நிலைத்திருக்கும், ஆனால் கொள்கை அளவில் மாற்றம் ஏற்படும். இதனை பொதுவாக "வெனிசுவேலா மாதிரி" எனக் கூறலாம்.

இந்த சூழலில், இஸ்லாமிய குடியரசு தொடருவதால் பல இரானியர்களுக்கு இது திருப்தி அளிக்காது.

இருப்பினும், மத்திய கிழக்கில் உள்ள ஆயுதப்படை குழுக்களுக்கு வழங்கும் ஆதரவை குறைக்கவும், அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை நிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ, மேலும் போராட்டங்களை அடக்குவதில் தளர்வைக் காட்டவோ கட்டாயப்படுத்தப்படலாம்.

இது சாத்தியக்கூறுகள் குறைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய குடியரசின் தலைமைத்துவம், கடந்த 47 ஆண்டுகளாக மாற்றத்திற்கு எதிராக நிலைத்திருக்கிறது. இப்போது அதன் போக்கை மாற்ற இயலாது என்று தோன்றுகிறது.

3. ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி ஏற்படலாம்

ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி ஏற்படும் என்பதே சாத்தியமான முடிவாக இருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.

தற்போதைய ஆட்சி மக்களிடம் பிரபலமற்றதாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒவ்வொரு போராட்டமும் அதை மேலும் பலவீனப்படுத்தியது. ஆனால் நிலைமையை கட்டுப்படுத்தும் விதமாக பரந்த மற்றும் ஆழமான பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரானின் உள்ளது.

போராட்டங்கள் இதுவரை ஆட்சியை கவிழ்க்க முடியாததற்கான முக்கிய காரணம், அதிகாரத்தில் உள்ள முக்கிய நபர்களின் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள எந்த அளவிலான வலிமையையும் பயன்படுத்தத் தயாராக உள்ளனர்.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகான குழப்பத்தில், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் சேர்ந்தவர்களால் உருவான வலுவான ராணுவ அரசால் இரான் ஆளப்படக்கூடும் என்பதும் ஒரு சாத்தியமாகக் கருதப்படுகிறது.

ஜனவரி தொடக்கத்தில் இணையம் துண்டிக்கப்பட்ட போதிலும், அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ஜனவரி தொடக்கத்தில் இணையம் துண்டிக்கப்பட்ட போதிலும், அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

4. அமெரிக்கப் படைகள் மற்றும் அண்டை நாடுகள் மீது இரான் பதிலடி

எந்த அமெரிக்க தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என இரான் கூறியுள்ளது. "எங்கள் விரல் துப்பாக்கி விசையில் உள்ளது" எனவும் இரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படையின் வலிமை உடன் ஒப்பிடும் போது இரான் சமமாக இல்லை. இருப்பினும், குகைகள், நிலத்தடி தளங்கள் அல்லது தொலைதூர மலைப்பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக்கூடும்.

குறிப்பாக பஹ்ரைன், கத்தார் உட்பட வளைகுடாவின் பல நாடுகளில் அமெரிக்க தளங்கள் உள்ளன. அமெரிக்க தாக்குதலில் உடந்தையாக இருப்பதாக இரான் கருதும் நாடுகளின் முக்கிய உட்கட்டமைப்புகள் குறிவைக்கப்படலாம். அதில் ஜோர்டானும் இருக்கலாம்.

2019-ஆம் ஆண்டு, இராக்கில் இருந்து செயல்பட்ட இரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும், சௌதி அராம்கோ நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் வளாகங்கள் மீது நடந்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல், இரானிய ஏவுகணைகளுக்கு தாங்கள் எவ்வளவு பாதிப்புக்குள்ளாக முடியும் என்பதை சௌதிக்கு வெளிப்படுத்தியது.

அமெரிக்காவின் கூட்டாளிகளான வளைகுடா அரபு நாடுகள், எந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் பதிலடி தங்கள் மீது திரும்பமோ என்ற அச்சத்தில் உள்ளன.

இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது

பட மூலாதாரம், Middle East Images / AFP via Getty Images

படக்குறிப்பு, இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது

5. வளைகுடாவில் கண்ணி வெடிகள்

வளைகுடா பகுதியில் கண்ணி வெடிகள் பதிப்பது என்பது உலக வர்த்தகம் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக நீண்ட காலமாக கருதப்படுகிறது.

1980 முதல் 1988 வரை நடந்த இரான்-இராக் போரின் போது, இரான் கடல் பாதைகளில் கண்ணி வெடிகள் பதித்தது. அவற்றை அகற்ற பிரிட்டன் கடற்படை உதவியது

இரான் மற்றும் ஓமன் இடையே உள்ள குறுகிய ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய வர்த்தகத்திற்கு முக்கியமான பாதையாகும். உலகின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியின் சுமார் 20 சதவிகிதமும், எண்ணெய் மற்றும் அதன் துணைப்பொருட்களின் 20–25 சதவிகிதமும் ஆண்டுதோறும் இந்த வழியாக செல்கின்றன.

கடலில் கண்ணி வெடிகள் விரைவாகப் பதிப்பதற்கான பயிற்சிகளை இரான் நடத்தியுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால், உலக வர்த்தகத்திலும் எண்ணெய் விலைகளிலும் தவிர்க்க முடியாத தாக்கம் ஏற்படும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

6. அமெரிக்க போர்க் கப்பலை மூழ்கடிப்பது

இரானிடமிருந்து தமக்கு மிகுந்த கவலை அளிக்கும் அச்சுறுத்தலாக "கூட்டுத் தாக்குதல்" (swarm attack) இருக்கும் என வளைகுடாவில் உள்ள அமெரிக்க போர் கப்பலின் கேப்டன் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்

அதாவது, ஒரே நேரத்தில் அல்லது பல இலக்குகளை நோக்கி, அதிக எண்ணிக்கையிலான வெடிபொருள் ஏற்றப்பட்ட டிரோன்கள் மற்றும் அதிவேக டார்பிடோ படகுகளை இரான் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு நடந்தால், அமெரிக்க கடற்படையின் நவீன பாதுகாப்பு அமைப்புகள் கூட அனைத்தையும் சரியான நேரத்தில் தடுக்க முடியாமல் போகலாம்.

வளைகுடாவில், இரான் கடற்படைக்கு பதிலாக, இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. அதன் சில தளபதிகள், ஷா ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவின் டார்ட்முத் நகரில் பயிற்சி பெற்றவர்களாகவும் இருந்தனர்.

இரானின் கடற்படை வீரர்கள், அமெரிக்க ஐந்தாவது கடற்படையின் தொழில்நுட்பத்துக்கும் பலத்துக்கும் பதிலடி கொடுக்க வழக்கத்துக்கு மாறான முறையில் அதிக கவனம் செலுத்தி பயிற்சி பெற்றுள்ளனர்.

ஒரு அமெரிக்க போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டால் , அதன் பணியாளர்களில் சிலர் பிடிபட்டால், அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானமாக இருக்கும்.

இந்த நிலை சாத்தியமில்லை எனக் கருதப்பட்டாலும், 2000-ஆம் ஆண்டு ஏடன் துறைமுகத்தில், அல்-கொய்தா தற்கொலைத் தாக்குதலால், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள யு.எஸ்.எஸ் கோல் கப்பல் சேதமடைந்தது. அதில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

அதற்கு முன், 1987-ஆம் ஆண்டு, இராக் விமானி தவறுதலாக யு.எஸ்.எஸ். ஸ்டார்க் மீது இரண்டு எக்ஸோசெட் ஏவுகணைகளை ஏவியதில், 37 வீரர்கள் உயிரிழந்தனர்.

இரான்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க ராணுவத் தலையீட்டின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், டெஹ்ரானைச் சுற்றியுள்ள பொது இடங்களில் அமெரிக்காவுக்கு எதிரான சுவரோவியங்களைக் காணலாம்.

7. ஆட்சி கவிழ்க்கப்படுவதால் குழப்பம்

ஆட்சி கவிழ்க்கப்படுவதால் ஏற்படும் குழப்பமான சூழல் மிகவும் அபாயமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கத்தார் மற்றும் செளதி அரேபியா போன்ற அண்டை நாடுகள் இதுகுறித்து கடும் கவலை கொண்டுள்ளன.

சிரியா, ஏமன் , லிபியா போன்ற நாடுகளில் நடந்தது போல உள்நாட்டுப் போர் ஏற்படும் அபாயம் மட்டுமன்றி, அதிகார வெற்றிடத்தில், குர்துகள், பலூச்சிகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தங்களை பாதுகாக்க முயல்வதால் ஆயுத மோதல்களும் உருவாகலாம்.

மத்திய கிழக்கில் பல நாடுகள் இஸ்லாமிய குடியரசு முடிவுக்கு வருவதை விரும்பலாம். அதில் இஸ்ரேல் அடங்கும்.

ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் மத்திய கிழக்கில் மிகப்பெரிய நாடான சுமார் 9.3 கோடி மக்களை கொண்ட இரான், குழப்பத்தில் மூழ்கி, மனிதாபிமான மற்றும் அகதிகள் நெருக்கடியை உருவாக்குவதை யாரும் விரும்பவில்லை.

தற்போதைய மிகப்பெரிய அபாயம் என்னவென்றால், இரான் எல்லைகளுக்கு அருகே இவ்வளவு வலுவான படைகளை திரட்டியுள்ள டிரம்ப், நடவடிக்கை எடுக்காவிட்டால் தன் மதிப்பை இழப்பதாகக் கருதி, தெளிவான முடிவில்லாத மற்றும் கணிக்க முடியாத விளைவுகளைக் கொண்ட ஒரு போரைத் தொடங்கிவிடக்கூடும் என்பதே.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு