ரோஸ் தங்கம், வெள்ளை தங்கம் என்றால் என்ன? - தங்கத்தின் விலை, தரத்தை நிர்ணயிக்கும் கேரட் பற்றிய விளக்கம்

ரோஸ் தங்கம், வெள்ளை தங்கம் என்றால் என்ன? கேரட் மூலம் தரத்தை கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தங்கத்திற்கான வருடாந்திர தேவையில் தங்க நகைகள் உற்பத்தி மற்றும் விற்பனையின் பங்கு மிகப்பெரியது. சர்வதேச தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இது தங்கத்திற்கான உலகின் மொத்த தேவையில் 50%.

உலகின் மிகப்பெரிய நகை சந்தைகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. இவையிரண்டின் மொத்த தேவை, உலகளாவிய தேவையில் 50% என்றும் சர்வதேச தங்க கவுன்சில் கூறுகிறது.

ஆனால், சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ச்சியான ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. இது மக்களிடையே கலவையான உணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தங்க நகைகளின் தரத்தை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் அளவீடான கேரட் என்றால் என்ன, அது எப்படி அளவிடப்படுகிறது போன்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

அதேநேரம், மஞ்சள் தங்கம் போலவே, இன்று தங்கம் ரோஸ், வெள்ளை எனப் பலவிதமான வண்ணங்களில் கிடைக்கிறது. அவற்றின் பின்னணி என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

இவை குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள தங்க நகை உற்பத்தியாளர், பொற்கொல்லர் ஆகியோரிடம் பிபிசி தமிழ் பேசியது.

தங்கத்தின் தரத்தைக் குறிக்கும் கேரட் என்றால் என்ன?

கேரட்டேஜ் (Caratage) எனப்படுவதன் சுருக்கமே கேரட். இது தங்கத்தின் தூய்மையை அளவிடுவதற்கான ஓர் அளவுகோல்.

கேரட் என்பது பிற உலோகங்களுடன் கலக்கப்பட்ட கலவையில் இருக்கும் தங்கத்தின் தூய்மையை அளவிடும் முறையாகும்.

ரோஸ் தங்கம், வெள்ளை தங்கம் என்றால் என்ன? கேரட் மூலம் தரத்தை கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ஒரு பொருளை தங்கம் என்று அழைக்கப்படுவதற்கான குறைந்தபட்ச கேரட் அளவு, ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. அமெரிக்காவில், 10 கேரட் என்பது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குறைந்தபட்ச தரம்.

பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரியா, போர்ச்சுகல், அயர்லாந்து ஆகிய நாடுகளில், தங்கம் என்றழைக்க அனுமதிக்கப்பட்ட மிகக் குறைந்த தர அளவீடாக 9 கேரட் உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை முதல் 9 கேரட் என்பதை மிகக் குறைந்த தங்கத்தின் தரமாக அங்கீகரித்து பி.ஐ.எஸ் விற்பனைக்கு அனுமதித்தது.

கேரட் அளவீட்டிற்கு ஏற்ப, தங்கம் மற்றும் பிற உலோகங்களின் கலவை, விகிதாச்சார அடிப்படையில் மாறுபடும். உதாரணமாக, 18 கேரட் தங்கத்தில் 75% தூய தங்கமும் 25% செம்பு, வெள்ளி போன்ற பிற உலோகங்களின் கலவையும் இடம்பெற்றிருக்கும்.

வேறு எந்த உலோகங்களும் கலக்கப்படாத தூய தங்கம் என்பது 24 கேரட். அதனுடன் செம்பு, வெள்ளி போன்ற பிற உலோகங்களைக் கலக்கும் செயல்முறையானது, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட தங்கத்திற்கு நீடித்து உழைப்பதற்கான உறுதிப்பாட்டைக் கொடுப்பதாகக் கூறுகிறார் நகை தயாரிப்பில் 45 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொற்கொல்லர் சுப்பிரமணி.

ரோஸ் தங்கம், வெள்ளை தங்கம் என்றால் என்ன? கேரட் மூலம் தரத்தை கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் தரத்தை கேரட் தீர்மானிப்பது எப்படி?

பொதுவாக, 22 கேரட், 18 கேரட், 14 கேரட், 10 கேரட், 9 கேரட் ஆகிய தரங்களில் தங்க ஆபரணங்கள் காணப்படுகின்றன.

அவற்றில், "22 கேரட் என்பதில் 91.7% தூய தங்கம் இருக்கும்" என்கிறார் கோவை தங்க உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன்.

இந்த கேரட் வேறுபாடுகள் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், "21 கேரட் என்பதில் 88% தங்கம் இருக்கும். அதாவது 100 கிராமில் 88 கிராம் தூய தங்கம். அதுவே 100 கிராமில் 8 கிராம் 300 மில்லி அளவுக்கு செம்பு, வெள்ளி போன்றவை கலக்கப்பட்டு, 91.700 கிராம் தூய தங்கம் இருந்தால் அது 22 கேரட் அல்லது 916 தரத்திலான தங்க நகை," என்று விளக்கினார்.

"இதேபோல, 14 கேரட்டில் 58.3% தூய தங்கமும் மீதம் செம்பு மற்றும் வெள்ளியின் உலோகக் கலவையும் இருக்கும். 18 கேரட்டில் 75% தங்கமும் 25% செம்பு, வெள்ளியின் உலோகக் கலவையும் இருக்கும்."

இவை போலன்றி, தூய தங்கத்தின் அளவு மிகக் குறைவாக, அதாவது 37.5 சதவிகிதமாகவும், செம்பு, வெள்ளி உலோகக் கலவை 62.5 சதவிகிதமாகவும் இருந்தால் அது 9 கேரட் தங்கம் என்று விளக்கினார் முத்து வெங்கட்ராமன்.

அவரது கூற்றுப்படி, ஆபரணத் தங்கத்தின் தயாரிப்பில் கலக்கப்படும் பிற உலோகங்களின் கலவை எந்த அளவுக்கு இருக்கிறது, தூய தங்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து கேரட் தரக் கணக்கீடு அமையும்.

ரோஸ் தங்கம், வெள்ளை தங்கம் என்றால் என்ன? கேரட் மூலம் தரத்தை கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தங்க நகையின் தரத்தில் இருக்கும் வித்தியாசம் என்ன?

பொதுவாக, 18 கேரட்டுக்கு கீழே உள்ள அளவுகோல்களில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் ஒப்பீட்டளவில் அவ்வளவு தரமாக இருக்காது என்பதில் முத்து வெங்கட்ராமன், சுப்பிரமணி ஆகிய இருவருமே ஒருமித்த கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதுகுறித்துப் பேசிய முத்து வெங்கட்ராமன், "18 கேரட் என்பதே ஆரம்பத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகளைத் தயாரிக்க எனப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 14 கேரட் அளவிலும் பயன்படுத்துவது வழக்கமானது. ஆனால், அதற்கும் கீழே சென்றால், தங்க நகைகளில் தூய தங்கத்தின் அளவு மிகக் குறைவாக இருக்கும்," என்றார்.

பொற்கொல்லர் சுப்பிரமணியின் கூற்றுப்படி, "14, 9 கேரட் போன்றவற்றில் ஆபரணம் செய்யும்போது பெருமளவு தூய தங்கம் உலோகக் கலவையில் ஒட்டாமல், ஆவியாகிவிடும். ஆபரணங்களில் ஒரு பூச்சு போல அவை இருக்குமே தவிர, அவ்வளவு தரமான நகையாக இருக்காது."

அதாவது, பாலின் மீதுள்ள பாலாடையைப் போல ஆபரணத்தில் தங்கம் இருக்குமே தவிர, அவற்றுக்கு அவ்வளவாக மறுமதிப்பு இருக்காது எனக் கூறுகிறார் அவர்.

ரோஸ் தங்கம், வெள்ளை தங்கம் என்றால் என்ன? கேரட் மூலம் தரத்தை கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து மேலும் விளக்கிய சுப்பிரமணி, "தூய தங்கம் சிறிதளவு மற்றும் சில உலோகங்கள் கலக்கப்பட்ட அரக்குத் தண்ணீரில் போட்டு எடுக்கும்போது தங்க நகை மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். இந்தச் செயல்முறை, 22 கேரட் தங்க ஆபரணத்தை மட்டுமின்றி 14 கேரட் அல்லது 9 கேரட் ஆபரணத் தங்கத்தைக்கூட ஜொலிக்க வைக்கும்.

ஆனால், அவற்றை அணிந்துகொண்டே இருக்கையில், வியர்வை படிந்து படிந்து, 14 கேரட் தங்கத்தின் உண்மை நிறத்தை எடுத்துக் காட்டிவிடும். தங்கத் தண்ணீரில் போட்டு எடுத்ததால் கிடைத்த மேற்பூச்சு 22 கேரட், 18 கேரட் தங்க ஆபரணத்தில் நீடித்து நிலைத்திருப்பதைப் போல, இவற்றில் நிலைத்திருக்காது" என்றார்.

மஞ்சள், ரோஸ், வெள்ளைத் தங்கம் – வித்தியாசம் என்ன?

ஆபரணத் தங்கம் என்றாலே மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் என்ற அளவில்தான் நம்மில் பலரின் புரிதல் இருக்கும். ஆனால் அதுபோக சமீப காலமாக சந்தையில் மஞ்சள், ரோஸ், வெள்ளை எனப் பலவிதமான வண்ணங்களில் தங்க ஆபரணங்கள் கிடைக்கின்றன.

இதில் வெள்ளைத் தங்கம் என்பது தூய தங்கத்துடன் பல்லாடியம் அல்லது வெள்ளி போன்ற வெண்மையான உலோகங்களைக் கலந்து உருவாக்கப்படுகிறது.

கூடுதலாக, ரோடியம் பூசப்பட்டு, கடினமான மேற்பரப்பு உருவாக்கப்படுகிறது. இதில் 22 கேரட் தங்கம் தயாரிக்கப்படுவதில்லை. 18 கேரட் வெள்ளை தங்கத்தில் 75% தூய தங்கமும் 25% பல்லாடியம் உலோகமும் கலக்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது குறிப்பாக, 14, 10, 9 ஆகிய கேரட்களில்தான் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. 14 கேரட் வெள்ளை தங்கத்தில், 58.3% தூய தங்கமும் 32.2% வெள்ளியும் 9.5% பல்லாடியமும் இருக்கும். அதுவே, 10 மற்றும் 9 கேரட்டில் முறையே 41.7% மற்றும் 37.5% என்ற அளவில்தான் தூய தங்கம் இருக்கும்.

இதுபோலவே, அதிகளவில் செம்பு கலக்கப்படுவதன் மூலம் ரோஸ் நிறத்திலான தங்க ஆபரணம் தயாரிக்கப்படுவதாக சர்வதேச தங்க கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. செம்பின் கலப்பு, ரோஸ் தங்கத்தின் மென்மையான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 22 கேரட் ரோஸ் தங்கத்தில் 91.6% தூய தங்கமும் 8.4% செம்பும் கலக்கப்படுகிறது. 18 கேரட் ரோஸ் தங்கத்தில் 75% தூய தங்கமும் 22.2% செம்பும் 9.2% வெள்ளியும் கலக்கப்படுகிறது.

அதிகமான செம்பு உலோகத்தைக் கலப்பதன் மூலம் 14, 10, 9 கேரட்கள் போன்ற குறைந்த தரத்திலான ரோஸ் தங்கம் தயாரிக்கப்படுகிறது. 14 கேரட் ரோஸ் தங்கத்தில் 32.5% செம்பு கலக்கப்படுகிறது. அதுவே 10 மற்றும் 9 கேரட்டில் முறையே 38.3 சதவிகிதமும் 42.5 சதவிகிதமும் செம்பு கலக்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு