ஓராண்டில் 60% விலையேற்றம்: தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா?

தங்கம் விலை குறையுமா? ஓராண்டில் 60% விலையேற்றம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா? தங்கம் விலை உயர்வு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் விலை கடந்த ஒரு வருடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது. உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1035 கிராம்கள்) தங்கத்தின் விலை 5 ஆயிரம் டாலர் என்பதைத் தாண்டிவிட்டது. ஜனவரி 28-ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் 15,330 ரூபாயாக இருந்தது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு காரட் 16,724 ரூபாய்.

ஓராண்டிற்கு முன்பாக, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை சுமார் 10,900 ரூபாயாக இருந்தது. 22 கேரட் தங்கம் சுமார் 10,000 ரூபாயாக இருந்தது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை சுமார் 5,820 ரூபாயாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் முதலீட்டு காரணங்களைத் தவிர்த்து ஆபரணமாகவும் திருமணங்களில் அளிக்கப்படுவதற்காகவும் தங்கம் பெருமளவில் வாங்கப்படும் நிலையில், இந்த விலை உயர்வு நுகர்வோரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபமடைந்துள்ளனர். ஆனால், புதிதாக முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில் உள்ளே நுழைவது சரியா என்ற கேள்வியும் இருக்கிறது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் (NATO) இடையே கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நிதி மற்றும் புவிசார் அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை குறித்த கவலைகளாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இது தவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளும் சந்தையைக் கவலையடையச் செய்துள்ளன.

கிரீன்லாந்து விவகாரத்தோடு தொடர்புடைய நாடுகளுக்கு விதிப்பதாக அறிவித்த இறக்குமதி வரியை கடந்த வாரம் அவர் ரத்து செய்தார். அதே நேரத்தில் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையாவது செய்துகொண்டால் அந்நாட்டின் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருக்கிறார். இம்மாதிரி கொந்தளிப்பான சூழலில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த உலோகங்களை பாதுகாப்பான ஒன்றாகக் கருதுகின்றனர்.

ஆனால், தங்கத்தின் விலை உயர்வுக்கான விதை அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த காலத்திலேயே விதைக்கப்பட்டுவிட்டது என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியது. இதையடுத்து ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துகளை (Foreign Assets) அமெரிக்கா முடக்கியது. சித்தாந்த ரீதியாக தங்களுக்கு ஒத்துப்போகாத நாடுகளின் முதலீடுகளை முடக்குவது அவ்வளவு சரியானதல்ல. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, அமெரிக்காவுடன் ஒத்துப் போகாத நாடுகள் தங்கள் சேமிப்புகளை டாலரிலிருந்து தங்கத்திற்கு மாற்ற ஆரம்பித்தார்கள். ரஷ்யா, சீனா, துருக்கி என பல நாடுகள் இதைச் செய்ய ஆரம்பித்தன. இதையடுத்துத்தான் தங்கத்தின் விலை ஏற ஆரம்பித்தது.

அதே நேரத்தில், தங்கத்தின் விலை குறைவதற்கான ஒரு சம்பவமும் நடந்தது. அதாவது, அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்தால் தங்கத்தின் விலை குறையும். அமெரிக்காவில் பூஜ்யமாக இருந்த வட்டி விகிதம் ஐந்து சதவீதம்வரை உயர்ந்தது. ஆகவே தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 2,000 டாலர் என்பதிலிருந்து 1,800 டாலராகக் குறைந்தது. ஆனால், இது நீடிக்கவில்லை. ரஷ்யா - யுக்ரேன் விவகாரத்திற்குப் பிறகு பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக்கொண்டே இருந்ததால், வட்டி விகிதம் அதிகரித்தாலும் தங்கத்தின் விலையும் உயர்ந்துகொண்டே போனது. கடந்த வாரம்கூட போலந்து 140 டன் தங்கத்தை வாங்கியது.

தங்கம் விலை குறையுமா? ஓராண்டில் 60% விலையேற்றம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா? தங்கம் விலை உயர்வு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், அமெரிக்காவில் வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தார்கள். வட்டி விகிதம் குறைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பதால், விலை இன்னும் வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. மற்றொரு பக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் விருப்பப்படி வரி விகிதங்களை மாற்ற ஆரம்பித்தார். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதத்தில் வரி விதிக்க ஆரம்பித்ததும் அது உலக வர்த்தகத்தையே புரட்டிப்போட்டது. அதற்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார். இதெல்லாம் சேர்ந்து தங்கத்தின் விலையை இன்னும் உயர்த்த ஆரம்பித்தது." என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

இந்த ஆண்டில் அமெரிக்கா இன்னும் இரண்டு தடவை வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலையை இன்னும் உயரச் செய்யக்கூடும். மற்றொரு பக்கம், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது தங்கத்தின் விலையை மற்ற நாடுகளைவிட இன்னும் அதிகரிக்க வைக்கிறது என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"பல நாடுகள் டாலருக்குப் பதிலாக தங்கத்தை வாங்க ஆரம்பித்தபோது, டாலரின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஆனால், இந்தியாவிலோ ரூபாயின் மதிப்பும் குறைய ஆரம்பித்ததால், அதன் பலன் கிடைக்கவில்லை. அமெரிக்க டாலர், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் என எல்லா முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு குறைந்ததால் இந்தியாவில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது." என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

தங்கம் ஓர் அரிதான உலோகம்

மற்ற உலோகங்களோடு ஒப்பிடுகையில், தங்கம் அரிதாகக் கிடைப்பதும் அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது. உலக தங்க கவுன்சில் வர்த்தக அசோசியேஷன் தரும் தகவல்களின்படி, இதுவரை உலகில் 2,16,265 டன் தங்கம் மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெருமளவு தங்கம், 1950களுக்குப் பிறகுதான் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் தங்கம் கிடைக்கக்கூடிய புதிய இடங்கள் கண்டறியப்பட்டன. மேலும் சுரங்கத் தொழில்நுட்பமும் அதற்குப் பிறகு பெரிய அளவில் வளர்ந்தது.

நிலத்தடியில் இருந்து இன்னும் 64,000 டன் தங்கத்தை வெட்டியெடுக்க முடியுமென யுஎஸ் ஜியோலாஜிகல் சர்வே மதிப்பிட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் தங்கத்தின் சப்ளை, பெரிய அளவில் உயராமல் நிலையானதாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தங்கம் விலை குறையுமா? ஓராண்டில் 60% விலையேற்றம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா? தங்கம் விலை உயர்வு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் விலை உயர்வுக்கு வேறு சில காரணங்களும் இருந்தன. கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் அதிலிருந்து வெளியேறுவதும் தங்கத்தின் விலையை அதிகரிக்கும்.

"ரஷ்யா, இரான், வெனிசுவேலா என பல நாடுகள் குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியிருந்த நேரத்தில் அவர் திடீரென கிரீன்லாந்தைத் தாக்குவேன் என்றார். கிரீன்லாந்தை தன் வசம் வைத்துள்ள டென்மார்க் அதற்குப் பதிலடியாக தங்கள் வசம் இருந்த அமெரிக்க கடன் பத்திரங்களை விற்க ஆரம்பித்தது. இது, டாலரின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனாலும் தங்கத்தின் விலை அதிகரிக்க ஆரம்பித்தது" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

அதே நேரம் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைந்தால், கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் அதிலிருந்து வெளியேற ஆரம்பிப்பார்கள்.

"கடன் பத்திரங்களில் பணத்தை வைத்திருப்பது இனி உண்மையில் லாபகரமானது அல்ல என்பதால் மக்கள் தங்கத்தை நோக்கிச் செல்கின்றனர்," என்கிறார் பெப்பர்ஸ்டோன் (Pepperstone) நிறுவனத்தின் ஆராய்ச்சி வியூகவியலாளர் அகமது அசிரி.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், தங்கம் வாங்குவது குறித்து முடிவெடுப்பதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. இந்தத் தருணத்தில் என்ன செய்வது? தங்கத்தை இப்போது வாங்கி, அடுத்த சில நாட்களில் பெரிய அளவில் விலை குறைந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் இருக்கிறது. ஆனால், அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"தங்கத்தின் விலை குறைய வேண்டுமென்றால் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வட்டி விகிதம் உயர வேண்டும். ஆனால், அவர்கள் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக இல்லை. இரண்டாவதாக, தங்கத்தின் விலை உயர்வதற்குக் காரணமாக அமைந்த புவிசார் அரசியல் காரணிகள் மாறுவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. ஆகவே உடனடியாக தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையாது. தற்போதைய சூழலில், தங்கத்தின் விலை 20 சதவீதமாவது குறையுமா என்றால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இப்போது ஒரு கிராமின் விலை சுமார் 15,000 ரூபாய் என வைத்துக்கொண்டால், அது 12 ஆயிரம் ரூபாயாக குறைய வாய்ப்பு மிக மிகக் குறைவு" என்கிறார் அவர்.

தங்கம் விலை குறையுமா? ஓராண்டில் 60% விலையேற்றம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா? தங்கம் விலை உயர்வு ஏன்?

தங்கத்தை எந்த வடிவில் வாங்கலாம்?

இப்போதைய சூழலில் தங்கத்தை ஆபரணமாக வாங்குவதா அல்லது டிஜிட்டல் தங்கமாக வாங்குவதா அல்லது பங்குச் சந்தைகளில் ETFஆக வாங்குவதா என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், பல காரணங்களுக்காக தங்கத்தை கடைகளில் வாங்குவதே சிறந்தது என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"ஆபரணத் தங்கமாக வாங்குவதே நல்லது. ஆனால் தங்கத்தை நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இருக்கிறனவே? அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் ஒரு நகையை 10 வருடங்கள் கழித்து விற்கும்போது, அதன் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும். உதாரணமாக, 100 ரூபாய்க்கு வாங்கிய தங்கம் 1,000 ரூபாய்க்கு விற்கும்போது, அதில் 10% சேதாரம் போனால் என்ன? உங்களுக்குக் கிடைக்கப்போகும் லாபமே அதிகம். மற்ற முதலீடுகளை விடத் தங்கம் உங்களுக்குத் தரும் பாதுகாப்பே முக்கியமானது" என்கிறார் அவர்.

வெள்ளியை ஒரு முதலீட்டு உலோகமாகக் கருதலாமா?

தங்கத்தின் விலையைப் போலவே, மற்றொரு மதிப்புமிக்க உலோகமான வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வெள்ளியின் விலை கடந்த ஓராண்டில் சுமார் 150 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆகவே, வெள்ளியையும் ஒரு முதலீட்டு உலோகமாகக் கருதலாமா? அப்படிக் கருத முடியாது என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

தங்கம் விலை குறையுமா? ஓராண்டில் 60% விலையேற்றம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா? தங்கம் விலை உயர்வு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

"வெள்ளியை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அடமானத்திற்கு பெற்றுக்கொள்ளாது. மத்திய வங்கிகளும் வெள்ளியை வாங்குவதில்லை. மேலும் வெள்ளியை வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் கிராமிற்கு 20 ரூபாய் மேல் வித்தியாசம் இருக்கும். வரலாற்றில் நான்கு முறை உயர்ந்திருக்கிறது. இது ஐந்தாவது முறை. வெள்ளியின் விலை உயர்வதற்குக் காரணம், யூக வணிகம். கடந்த 40 வருடங்களில், பல தடவைகள் வெள்ளியின் விலையில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது என்ன நடக்குமெனத் தெரியாது. ஆகவே தங்கத்தைப் போல வெள்ளியைக் கருத முடியாது" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

அமெரிக்க முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி தரும் தகவல்களின்படி, இந்தியக் குடும்பங்களிடம் 3.8 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இருக்கிறது. இதனை நாட்டின் உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால் 88.8 சதவீதம் ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு