'காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்' - உண்மையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
- பதவி, பிபிசிக்காக
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்)
ஆந்திராவில், தான் காதலித்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த நபரின் மனைவிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர்.
அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர், பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். கே.சி. கால்வாய் கரை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கீழே விழுந்த மருத்துவருக்கு உதவுவது போல நடித்த இருவர், அவருக்கு தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தியுள்ளனர்.
கர்நூல் டிஎஸ்பி பாபு பிரசாத் இந்த வழக்கு பற்றி பிபிசிக்கு விளக்கம் அளித்தார்.

பட மூலாதாரம், UGC
வழக்கு விவரம் குறித்து கர்னூல் டிஎஸ்பி பாபு பிரசாத் கூறுகையில், "கே.சி. கால்வாய் சாலையில் ஒரு பெண் மருத்துவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வாகனம் மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனே அங்கிருந்த இரு பெண்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆட்டோவில் ஏற்றினர். அந்த சமயத்தில், அவர்கள் தனக்கு ஏதோ ஒரு ஊசியைச் செலுத்துவதை அந்த மருத்துவர் உணர்ந்தார். இது குறித்து அவரது கணவர் புகார் அளித்தார்" என்று கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செவிலியர். தான் காதலித்த நபர் , தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அந்தச் செவிலியர், அவருக்கு இந்த ஊசியைச் செலுத்தத் திட்டமிட்டிருந்தார்."
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்ஐவி நோயாளிகளிடமிருந்து, மற்றொரு செவிலியரின் உதவியுடன் அவர் ஹெச்ஐவி வைரஸ் கலந்த ரத்தத்தைச் சேகரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"தனது தோழி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளின் உதவியுடன் இந்த ஊசியைச் செலுத்திவிட்டு அவர் தப்பி ஓடினார். காவல்துறை விசாரணையில் அதுகுறித்துத் தெரியவந்த பிறகு, நாங்கள் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தோம். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அந்த ஊசியில் இருந்தது என்ன வகையான வைரஸ் என்பது குறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். இந்த வழக்கில் தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கியப் பங்கு வகித்தன. சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை நாங்கள் கவனமாகச் சேகரித்துள்ளோம்" என்று டிஎஸ்பி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'காதலர் ஏமாற்றிய கோபத்தில் பெண் போட்ட திட்டம்'
தனது முன்னாள் காதலர் மீதான கோபத்தில் அந்தப் பெண் இந்தச் செயலைச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
"படிக்கும் போது, அந்த மருத்துவர் தனது வகுப்புத் தோழியுடன் நட்பு கொண்டிருந்தார். இருவரும் காதலித்தனர். பின்னர், அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார். செவிலியராக இருந்த அந்தப் பெண் திருமணமாகாமல் இருந்தார்".
"திருமணமான அந்த மருத்துவரின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்ட பெண் பொறாமை கொண்டிருந்தார். அவரைத் தன் காதலரிடமிருந்து பிரிக்கும் நோக்கில், அவருக்குத் தெரியாமலேயே ஊசி போட விரும்பினார். மருத்துவமனையில் தனக்கு இருந்த தொடர்புகள் மூலம் அவர் எச்.ஐ.வி வைரஸைச் சேகரித்தார். அன்றைய தினம் அவர் அந்த ரத்தத்தை மருத்துவரின் உடலில் ஊசி மூலம் செலுத்தியுள்ளார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது தோழி மற்றும் அவரது பிள்ளைகளின் உதவியைப் பெற்றுள்ளார். அவர்களும் இந்த குற்றத்திற்கு துணை போயுள்ளனர்" என்று டிஎஸ்பி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்?
குற்றம் சாட்டப்பட்டவர் தனது தோழி மற்றும் அதோனியில் வசித்து வந்த அவர்களது பிள்ளைகள் மூலம் இதைத் திட்டமிட்டதாக கர்நூல் காவல்துறை அதிகாரி சேஷையா பிபிசியிடம் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பரும் அவரது மகனும் அதோனியிலிருந்து வந்திருந்தனர்.
முதலில் பைக்கில் சென்று ஸ்கூட்டியில் மோதியதால், பெண் மருத்துவர் கீழே விழுந்ததாகவும், பின்னர் நண்பரின் மகளும் குற்றம் சாட்டப்பட்டவரும் பின்னால் வந்து ஊசி போட்டதாகவும் காவல்துறை அதிகாரி சேஷையா கூறினார்.
"அவர்கள் ஊசி போட்டது குறித்து மருத்துவர் சந்தேகித்தபோது, தன் செல்போனில் அவர்களின் முகங்கள் தெரியும் வகையில் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினோம். வாகன எண்ணை கண்டறிந்து, அது யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும் தெரிந்துகொண்டோம். அது குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரில் இருந்தது. ஆனால் எவ்வளவு விசாரித்தாலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை," என சேஷையா கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் தனது குற்றத்தை எவ்வாறு ஒப்புக்கொண்டார் என்பதையும் சேஷையா விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவரின் செல்போனில் அழைப்புப் பட்டியலை நாங்கள் சரிபார்த்தோம். அவர் பேசிய 17 பேரில் 15 பேர் எங்களின் தொடர்பில் வந்தனர். இருவர் மட்டும் தொடர்பில் வரவில்லை. தொடர்பில் வந்தவர்களில் அனைவரும் இயல்பாகப் பேசினர். ஆனால் ஒருவர் மட்டும் பொய் சொன்னார். நாங்கள் அவரை விசாரித்தோம். தொடர்பில் வராத மற்ற இருவரையும் பிடித்தோம்" என்றார் சேஷையா.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது பைக்கை வேறு ஒருவரிடம் கொடுத்திருந்தார். அந்த பைக் யாரிடம் கொடுக்கப்பட்டது என்று விசாரித்தபோது, இன்னொரு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தோம். அந்த எண்ணும் அவரின் அழைப்புப் பட்டியலில் இருந்தது. தொடர்பில் வராதவர்களின் எண்களுடன் அவரது எண்ணும் இருந்தது. அவர்கள் அனைவரும் குற்றம் நடந்த இடத்தில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
"அவர்களை அழைத்து வந்து குற்றம் சாட்டப்பட்டவரின் முன் நிற்க வைத்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், UGC
எச்.ஐ.வி மாதிரி எப்படி வெளியே வந்தது?
குற்றம் சாட்டப்பட்ட செவிலியர், கர்நூல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு செவிலியரின் உதவியுடன் எச்.ஐ.வி மாதிரியைச் சேகரித்ததாக கர்நூல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வர்லு பிபிசியிடம் தெரிவித்தார்.
"அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் மூலம் அந்த எச்.ஐ.வி மாதிரி சேகரிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் பயிற்சியின் போது சந்தித்துள்ளனர். அந்தச் செவிலியர் இரவுப் பணியில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடம் இந்த எச்.ஐ.வி மாதிரியைக் கொடுத்துள்ளார். அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்தச் செவிலியரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரும் எங்கள் மருத்துவமனையில் தான் பணிபுரிகிறார். அவர் தற்போது விடுப்பில் உள்ளார்," என்று கர்நூல் அரசு மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு மற்றொரு செவிலியர் (அவரது தோழி) எந்த அடிப்படையில் எச்.ஐ.வி மாதிரியை வழங்கினார் என்பது விசாரணைக்குப் பிறகு உறுதியாகும் என்றும், அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேஷய்யா தெரிவித்தார்.
"குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். அவர் தன்னைத் திருமணம் செய்யாமல் பெண் மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டதால் அவர் பொறாமைப்பட்டுளார். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அந்தப் பெண் நர்சிங்கில் முதுகலை முடித்துள்ளார். முன்பு செவிலியராகப் பணியாற்றிய அவர், தற்போது பணியில் இல்லை"என்று கூறிய அவர்,
"அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் இவருக்கு ஏன் ஹெச்ஐவி ரத்த மாதிரிகளைக் கொடுத்தார் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும்," என்றும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் தொலைபேசி மூலம் பேச, பிபிசி பலமுறை முயற்சித்தது. ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதேபோல், குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களிடம் பேச முயன்றபோது, அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
(தனிப்பட்ட ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அவர்களின் பதவி குறித்த கூடுதல் விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












