முடிவுக்கு வரும் 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தம்: அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுத போட்டியை தூண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் பிப்ரவரி 2026-இல் முடிவடைய உள்ளது.
இது 'நியூ ஸ்டார்ட் அணுசக்தி ஒப்பந்தம்' (New START Nuclear Treaty) அல்லது புதிய உத்தி ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், பல நாடுகள் தங்களின் அணு ஆயுத இருப்புகளை அதிகரித்து வருகின்றன. அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அவற்றைப் பெற முயற்சிக்கின்றன. அப்படியானால், அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகள் முடங்கிப்போகுமா?
சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணு ஆயுதப் போட்டி
ஜெர்மனியின் போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் நவீன வரலாற்றுப் பேராசிரியர் ஹெர்மன் வென்ட்கர், ''இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சித்தன'' என்கிறார்.
ஜெர்மனிக்கு முன்பே அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து முயற்சித்தன. இந்த ரகசிய ஆராய்ச்சி 'மன்ஹாட்டன் திட்டம்' என்று அழைக்கப்பட்டது.
அமெரிக்காவில் இந்த நாடுகள் அணு குண்டுகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றதாக அவர் விளக்கினார். போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே.
சோவியத் யூனியன் ஒரு உளவாளி மூலம் மன்ஹாட்டன் திட்டத்தைப் பற்றி அறிந்துகொண்டு, தனது சொந்த அணு குண்டை உருவாக்கத் தொடங்கியது. இது 1949-இல் அப்போதைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த கஜகஸ்தானில் சோதனை செய்யப்பட்டது என்கிறார் ஹெர்மன் வென்ட்கர்.
இதற்குப் பிறகுதான் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அணு ஆயுதங்களை தயாரிக்கும் போட்டி தொடங்கியது.
அணுசக்தி போரின் ஆபத்தைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்து, ஆயுதக் கட்டுப்பாடு குறித்த விவாதங்களைத் தொடங்கின.
இருப்பினும், அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆகின.
ஒப்பந்தம்

பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே முயற்சிகள் தொடங்கியதாக ஹெர்மன் வென்ட்கர் விளக்கினார்.
'சால்ட் 1' பேச்சுவார்த்தைகள் 1971-இலும், 'சால்ட் 2' பேச்சுவார்த்தைகள் 1979-இலும் நடைபெற்றன.
முதன்முறையாக, 'உத்தி ஆயுதக் கட்டுப்பாடு பேச்சுவார்த்தைகள்' அல்லது 'சால்ட் 1'-இல், அணு ஏவுகணைகளின் உற்பத்தி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இது அனைத்து உத்தி ஆயுதங்களையும் உள்ளடக்கியதாக இல்லை. இருப்பினும், 1979-இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பிறகு, அமெரிக்கா சால்ட் 2 ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை.
ஆனாலும், இரு நாடுகளும் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் தலைவர்கள் 1987-இல் 'ஐஎன்எஃப் ஒப்பந்தம்' எனப்படும் நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மிகைல் கோர்பச்சோவ் மற்றும் ரொனால்ட் ரீகன் ஆகியோர் அணு ஆயுதங்கள் இல்லாத உலகிற்காக பாடுபட விரும்பினர். அவர்களின் அந்த தொலைநோக்குப் பார்வையே ஐஎன்எஃப் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியது என்று கூறினார் ஹெர்மன் வென்ட்கர்.
இது ஒரு முக்கிய நடவடிக்கையாக இருந்தது, இதன் கீழ் 500 முதல் 5,500 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் அணு ஏவுகணைகளை அழிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஒப்பந்தத்தின் விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான விதிகளும் இதில் அடங்கும்.
இருப்பினும், 2008-இல் ரஷ்யா நடுத்தர தூர அணு ஏவுகணைகளை உருவாக்கியதன் மூலம் ஒப்பந்தத்தை மீறியதாக நேட்டோ நம்புகிறது.
ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை எனக் கூறி அவற்றை மறுக்கிறது.
2017-இல் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக அதிபரானபோது, 2019-இல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது.
கடந்த ஆண்டு ரஷ்யாவும் ஐஎன்எஃப் ஒப்பந்தத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட மறுத்துவிட்டது.
எனவே, அணு ஆயுதப் போட்டியையும் வளர்ந்து வரும் அணுசக்திகளையும் கட்டுப்படுத்த என்ன செய்ய முடியும்?
எந்த நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன?
அமெரிக்காவைச் சார்ந்த 'அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின்' என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் அலெக்ஸாண்ட்ரா பெல் கருத்துப்படி, தற்போது ஒன்பது நாடுகளிடம் சுமார் 13,000 அணு ஆயுதங்கள் உள்ளன.
இதில் ரஷ்யாவிடம் 4,000 அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 3,700 அணு ஆயுதங்களும் உள்ளன என்கிறார் அவர்.
இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. இருப்பினும், சில மதிப்பீடுகளின்படி, இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.
1960களில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்ததாக அலெக்ஸாண்ட்ரா பெல் கூறினார்.
இதன் பிறகு, உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு அணுசக்தி திறனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தெளிவாகத் தெரிந்தன. அதே நேரத்தில், ஒரு அணுசக்தி போர் ஒட்டுமொத்த உலகையும் அழித்துவிடும் என்ற கவலைகளும் எழுந்தன.
என்பிடி மற்றும் அணு ஆயுதக் குறைப்பு

பட மூலாதாரம், Getty Images
1962-இல் சோவியத் யூனியன் தனது அணு ஏவுகணைகளை கியூபாவிற்கு அனுப்ப முடிவு செய்தபோது, அமெரிக்க கடற்படை கியூபாவை முற்றுகையிட்டது. இதனால் இரு வல்லரசுகளும் அணுசக்தி போரின் விளிம்பிற்கு வந்தன.
இந்த நெருக்கடி 13 நாட்கள் நீடித்தது. பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து, சோவியத் யூனியன் தனது ஏவுகணைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தது. மேலும் கியூபாவை தாக்கமாட்டோம் என்று அமெரிக்கா பொது வெளியில் உறுதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, 1970-இல் பன்னாட்டு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (என்பிடி ) நடைமுறைக்கு வந்தது.
இதன் கீழ், அப்போது அணு ஆயுதங்களை வைத்திருந்த சீனா, அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாக அலெக்ஸாண்ட்ரா பெல் கூறினார்.
"மேலும், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சிக்காது, அதற்குப் பதிலாக அந்த நாடுகளுக்கு அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் வழங்கப்படும். பனிப்போரின் போது 70 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருந்தன, அவை தற்போது சுமார் 13 ஆயிரமாகக் குறைந்துள்ளன" என்று அவர் கூறினார்.
ஆனால் அணு ஆயுத இருப்புகளைக் கண்காணிப்பதும், அவற்றின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணிப்பதும் எளிதல்ல.
உலகின் 191 நாடுகள் என்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இதில் இஸ்ரேல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் சேரவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணுசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி வருவதாக அலெக்ஸாண்ட்ரா பெல் கூறுகிறார்.
வடகொரியாவும் என்பிடியில் உறுப்பினராக இருந்தது, ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து விலகியது. இப்போது அது ஏராளமான அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதால் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
''இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பல வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் கீழ் சில வகையான தொழில்நுட்பங்களை அவர்களுக்கு வழங்க முடியாது'' என்று அலெக்ஸாண்ட்ரா பெல் கூறுகிறார்.
இதற்கிடையில், ''சீனாவும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் விதிகளை மீறி தனது அணுசக்தி திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது.''
1995-இல், என்பிடியில் கையெழுத்திட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை காலவரையறையின்றி நீட்டிக்க ஒப்புக்கொண்டனர்.
அது குறித்த தற்போதைய நிலைப்பாடு என்ன?
ஆனால், தற்போது அந்த ஒப்பந்தம் அவநம்பிக்கை மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகளுக்கு அடியில் புதைந்து கிடப்பதாகவும், அரசியல் விருப்பம் இல்லாமையே இதற்குக் காரணம் என்றும் அலெக்ஸாண்ட்ரா பெல் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Andrew Harnik/Getty
அமெரிக்கா - ரஷ்யா 'நியூ ஸ்டார்ட் ' ஒப்பந்தம்
அணு ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணரான மைக் ஆல்பர்ட்சன், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 'நியூ ஸ்டார்ட்' உத்தி ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைகளில் ஒரு பேச்சுவார்த்தையாளராக இருந்துள்ளார்.
எதிர் தரப்பின் ராணுவக் கட்டளை மையங்கள், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை அழிக்கப் பயன்படும் அணு ஆயுதங்களின் பயன்பாட்டைக் குறைப்பதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
2009-இல் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள் 2010-இன் பிற்பகுதியில் அங்கீகரிக்கப்பட்டு, பிப்ரவரி 2011 முதல் அமலுக்கு வந்தன என்று குறிப்பிட்டார் மைக் ஆல்பர்ட்சன்.
"ஸ்டார்ட் 2" ஒப்பந்தம் அமலுக்கு வந்தது, ஆனால் கையெழுத்திடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் ஆகியோரால் 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான விதிகளைக் கொண்டிருந்தது. ''
மிக முக்கியமாக, இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதிகளும் இதில் இருந்தன.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் ஆண்டுக்கு இருமுறை தங்கள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பற்றி ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
மேலும், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டின் அணுசக்தி நிலையங்களை ஆண்டுக்கு 18 முறை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு இரு தரப்புக்கும் இடையே விரிசல் உருவாகத் தொடங்கியது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மற்ற நாட்டுக்கு சென்று அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன என மைக் ஆல்பர்ட்சன் குறிப்பிடுகிறார்.
பின்னர், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா காட்டிய எதிர்வினையைத் தொடர்ந்து, ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியதுடன், அமெரிக்க ஆய்வாளர்கள் ரஷ்யாவிற்குள் நுழையவும் அனுமதி மறுத்தது.
மறுபுறம், ரஷ்யா 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தை மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2026-இல் காலாவதியாகிறது. இந்த ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நீட்டிக்க முடியும் என்ற விதி ஏற்கனவே 2021-இல் பயன்படுத்தப்பட்டுவிட்டது.
இதற்கு மாற்றாக ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு கணிசமான நேரமும் உழைப்பும் தேவைப்படும் என்கிறார் மைக் ஆல்பர்ட்சன்.
எனவே, நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் காலாவதியான பிறகு என்ன நடக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
என்ன நடக்கும்?
ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை ஆய்வுகள் பள்ளியின் பேராசிரியர் நடாலி டூச்சி, உலகளாவிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு சரிந்துவிட்டதாகக் கூறுகிறார்.
''நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் அத்தகைய ஏற்பாடுகளில் எஞ்சியிருந்த கடைசி ஒப்பந்தமாகும், இது இந்த ஆண்டு முடிவடையும் நிலையில் உள்ளது''
நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் முடிந்த பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுதக் கட்டுப்பாட்டைத் தொடர முடியுமா? என்ற கேள்விக்கு, ''கொள்கை ரீதியாக இரு நாடுகளும் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு ஆதரவாக இருப்பதாக'' அவர் பதிலளித்தார்.
"நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் முடிந்தவுடன் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகள் இருக்காது" என்று அவர் கூறுகிறார்.
'நியூ ஸ்டார்ட்' காலாவதியான பிறகு அணுசக்தி நாடுகளுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் சாத்தியமா என்ற கேள்விக்கு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தை எட்டுவதே மிகவும் கடினமாக இருப்பதாக நடாலி டூச்சி தெரிவித்தார்.
''இதில் சீனா பங்கேற்காது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை விட தன்னிடம் மிகக் குறைவான அணு ஆயுதங்களே இருப்பதால், அது கவலைக்குரிய விஷயம் அல்ல என்று சீனா வாதிடுகிறது. மேலும் இந்தியாவிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதை சீனா சுட்டிக்காட்டும், அதே வேளையில் பாகிஸ்தானின் ஆயுதங்கள் குறித்து இந்தியா கேள்வி எழுப்பும்.
அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்துப் பேச்சுக்கள் நடந்தாலும், ரஷ்யா மற்றும் அமெரிக்காவைத் தவிர மற்ற அணுசக்தி நாடுகளை ஒப்பந்தத்தில் சேர்க்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, எதிர்காலத்தில் பல நாடுகளை உள்ளடக்கிய ஒப்பந்தமும் சாத்தியமாகும் என்று நான் நினைக்கவில்லை" எனப் பகிர்ந்து கொண்டார் நடாலி டூச்சி.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த கடைசி ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும்.
அணு ஆயுதங்களை தயாரிக்கும் திறன் கொண்ட சில நாடுகள் என்ன செய்யும் என்பதை கணிப்பதும் கடினம்.
நட்பு நாடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால், சில நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்குவதில்லை என்ற கொள்கையை மாற்றிக்கொள்ள நேரிடும்.
நிபுணர் அலெக்ஸாண்ட்ரா பெல்லின் கூற்றுப்படி, "பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே நாம் மீண்டும் அணுசக்தி போர் அச்சுறுத்தலை எதிர்கொள்வோம். இந்த முறை அதிர்ஷ்டம் நம் பக்கம் இல்லாமல் போகலாம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












