துணி மடிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகள் செய்வதற்கான ரோபோ - கனவு நனவாகப் போகிறதா?

1எக்ஸ் நிறுவனத்தின் என்இஓ எனும் ஹியூமனாய்டு ரோபோ மற்றும் செய்தியாளர் ஜோ டைடி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். இந்த ரோபோ 5 அடி உயரம் கொண்டது.
படக்குறிப்பு, இந்தாண்டு வீட்டு வேலைகளை செய்வதற்கான என்இஓ எனும் ரோபோ அறிமுகமாகவிருக்கிறது

சலிப்பூட்டும் வீட்டு வேலைகளை செய்வதற்கு ஏற்ற ஒரு ரோபோ வேண்டும் என்ற யோசனை நீண்ட காலமாக நிலவி வருகிறது.

ஆனால், இப்போது ஏஐயின் உதவியுடன் வீட்டு வேலைகள் பலவற்றையும் செய்யக்கூடிய முதல் முழுமையான ரோபோக்கள் வீடுகளுக்குள் நுழையவிருக்கின்றன.

தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்த ரோபோக்கள் விரைந்து துணிகளை மடிக்கவும், அழுக்கு பாத்திரங்களை சுத்தம் செய்யும் இயந்திரத்திற்குள் வைக்கவும், சுத்தம் செய்யவும் பயிற்சியளிக்கப்படுகின்றன.

பணியாள் போன்று இயங்கும் ரோபோ என்ற யோசனை எவ்வளவு யதார்த்தமானது என்பதை நான் காண விரும்பினேன்.

எனவே, நான் எக்கி (Eggie), என்இஓ (NEO), ஐசக் (Isaac) மற்றும் மெமோ (Memo) ஆகியவற்றை சந்திக்க சென்றேன்.

டேஞ்ஜிபிள் ஏஐயின் எக்கி ரோபோ சமையலறையில் கொட்டியிருப்பதை துடைக்கிறது. 4.5 அடி உயரம் கொண்டது இந்த ரோபோ, மேலும் பெரிய ரோபோட்டிக் கைகளுடனும் ஷூ பெட்டி போன்றதலையுடனும் உள்ளது.

பட மூலாதாரம், Tangible AI

படக்குறிப்பு, எக்கி ரோபோ வீட்டு வேலைகளை மெதுவாக பார்க்கிறது, ஆனால் இது மனிதரால் கட்டுப்படுத்தப்படுகிறது

மனிதனை போன்று தோற்றமளிக்கும் இத்தகைய ஹியூமனாய்டு அல்லது பகுதி ஹியூமனாய்டு ரோபோக்கள் (கால்கள் இல்லை) அறைக்குள் நுழையும்போது யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த ரோபோக்கள் பலவும் தற்போதைய சூழலில் சோர்வை அளிக்கும் பல முக்கியமான வேலைகளை சுறுசுறுப்பாகவும் திறமையுடனும் செய்வதற்கேற்ப உள்ளன.

ஒப்பீட்டளவில் புதிய நிறுவனமான டேஞ்ஜிபிள் ஏஐ-யின் எக்கி ரோபோ ஒரு கோட் ஸ்டாண்டில் ஆடையை மாட்டுவதையும் படுக்கையை சரிசெய்வதையும் சமையலறையில் கொட்டிய திரவத்தை துடைப்பதையும் பார்க்க முடிந்தது.

ஆனால், மிக மெதுவாகவே அந்த வேலைகளை செய்கிறது.

அதேபோன்று, 1X நிறுவனத்தின் என்இஓ ரோபோ, சமீபத்தில் ப்ரீ-ஆர்டரை தொடங்கி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த ரோபோ மெதுவாக இயங்கினாலும், அந்நிறுவனத்தின் பரிசோதனை சமையலறையில் அதனால் திறமையாக செயல்பட முடிந்தது.

'கார், வீடு மற்றும் ஒரு ரோபோ'

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், என்னுடைய சிறு உதவியுடன் (அலமாரியின் கைப்பிடியை பிடிக்க இயலாததால்) பாத்திரங்கள் மற்றும் கோப்பைகளை அதனிடத்தில் வைத்தல் போன்றவற்றை அந்த ரோபோ செய்தது.

நேரம் ஒரு பிரச்னையில்லை என்றால், எக்கி அல்லது என்இஓ ரோபோக்கள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், இந்த இரு ரோபோக்களிலும் ரகசிய ஆயுதம் ஒன்று இருக்கிறது - அதாவது, அவை மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இதை விளம்பர வீடியோக்கள் காட்டுவதில்லை - மேலும், சிலிக்கான் பள்ளத்தாக்கில் நாங்கள் சென்ற நிறுவனங்களும் அதை பெரிதளவில் காட்டுவதில்லை.

டேஞ்ஜிபிள் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர் பிபாஷா சென், இந்த தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதில் நம்பிக்கையுடன் உள்ளார்.

"இன்றைக்கு மக்களுக்கு இரண்டு ஆசைகள் உள்ளன - ஒன்று கார் மற்றொன்று வீடு. எதிர்காலத்தில் அவர்களுக்கு மூன்று ஆசைகள் இருக்கும் - கார், வீடு மற்றும் ஒரு ரோபோ," என மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார்.

இந்நிறுவனங்களுள் மைக்ரோசிப் உருவாக்கும் என்விடியா உட்பட பல தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் பெரியளவிலான நிதி ஆதரவை பெற்றுள்ள நிறுவனமாக 1 எக்ஸ் உள்ளது.


விஆர் (மெய்நிகர்) ஹெட்செட் மற்றும் சென்சார் மூலம் என்இஓ ரோபோவுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சியளிக்கின்றனர். அதைக் கட்டுப்படுத்துபவர்கள் எப்படி நகர்கிறார்களோ அதையே ரோபோவும் பின்பற்றுகிறது.

பட மூலாதாரம், 1X

படக்குறிப்பு, விஆர் (மெய்நிகர்) ஹெட்செட் மற்றும் சென்சார் மூலம் என்இஓ ரோபோக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்படுகின்றது.

அதன் ஆடம்பரமான தலைமை அலுவலகத்தில் என்இஓ ரோபோ முன்மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு, சோதனை மற்றும் சரிசெய்யப்படும் கட்டுப்பாடுமிக்க இடங்கள் எங்களுக்கு சுற்றி காண்பிக்கப்பட்டன.

நார்வேயை சேர்ந்த அதன் தலைமை செயல் அதிகாரி பெர்ன்ட் பார்னிச் தன்னுடைய வீட்டில் என்இஓ மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும் தரையை சுத்தம் செய்தல், ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றில் சுறுசுறுப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த ரோபோ தானாகவே இயங்குதல் மற்றும் மனிதரால் கட்டுப்படுத்தப்படுவது என இரண்டின் "கலவையாக" உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்களிடம் அதிக தரவுகள் உள்ளதால் அந்த ரோபோவால் என் வீட்டில் பல வேலைகளை தானாகவே செய்ய முடிகிறது, ஆனால் அவ்வப்போது யாராவது தலையிட்டு உதவ வேண்டியுள்ளது," என்றார் அவர்.

என்இஓவின் ஏஐ திறனை மேம்படுத்துவதற்கான 1 எக்ஸ் திட்டங்களுள் ஒன்று, அதை இந்தாண்டே வீடுகளுக்குள் கொண்டு சேர்ப்பதாகும்.

சமீபத்திய ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் என்இஓ ரோபோவால் தாமாக அதிக திறனுடன் செயலாற்ற முடியும் என 1 எக்ஸ் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.

ஆனால், அந்த ரோபோ தாமாக சிந்திப்பது குறித்த எந்த செயல்விளக்கமும் எங்களுக்கு காண்பிக்கப்படவில்லை.

துணி மடிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகள் செய்வதற்கான ரோபோ - கனவு நனவாகப் போகிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்த ரோபோவை முதலில் வாங்குபவர்கள், அவை குழப்பமடையும்போது அதை தொலைவிலிருந்து மனிதர்கள் இயக்குவார்கள் என்பதால், தனியுரிமை குறித்து பெரிதும் கவலைப்படாமலும் மிகவும் பொறுமையுடனும் இருக்க வேண்டியிருக்கலாம்.

என்இஓ ரோபோவின் விலை 20,000 டாலர்கள் (சுமார் 18 லட்சம் ரூபாய்) அல்லது மாதத்திற்கு 500 டாலர்கள் (சுமார் 45,000 ரூபாய்) என்பதால் அதை வாங்குபவர்கள் பணக்காரர்களாகவும் இருக்க வேண்டும்.

துணிகளை மடிக்கும் ரோபோ. ஷூபெட்டி போன்ற அதன் தலையில் கேமராக்கள் உள்ளன.
படக்குறிப்பு, 90 நொடிகளில் டி-ஷர்ட்டை மடிக்கிறது ஐசக் ரோபோ, ஆனால் அதைவிட இன்னும் வேகமாக செய்ய முயல்கிறது.

ஈலோன் மஸ்க் திட்டம்

தொழில்நுட்பத் துறையில் வழக்கத்திற்கு மாறாக வீட்டு வேலைகளை செய்யும் ரோபோக்களுக்கான பெரும் முதலீடுகளும் விளம்பரங்களும் பெருநிறுவனங்களுக்கு செல்லாமல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கே செல்வதாக தோன்றுகிறது.

டெஸ்லா உருவாக்கி வரும் ஹியூமனாய்டு ரோபோ, தொழிற்சாலைகள் அல்லது வீடுகளில் எந்த சந்தையை குறிவைக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

இத்தகைய ரோபோக்களுக்கு ஒரு வலுவான சந்தை உருவாகும் என டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி ஈலோன் மஸ்க் நம்புகிறார்.

ஈலோன் மஸ்குக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய வெகுமதியை வழங்குவதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளித்தனர். அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் பத்து லட்சம் ரோபோக்களை விற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஓரளவு தொடர்புடையது.

ஆனால், சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள சுறுசுறுப்பான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த சந்தையை முதலில் பிடிப்பதற்கு உகந்த நிலையில் உள்ளன என தோன்றுகிறது.

துணி மடிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகள் செய்வதற்கான ரோபோ - கனவு நனவாகப் போகிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வீட்டை சுத்தம் செய்யும் ரோபோ (சித்தரிப்புப் படம்)

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நோ வேலி (Noe Valley) பகுதியில், மற்றொரு வீட்டு வேலைகளை செய்யக்கூடிய ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனம், துணிகளை மடிக்கும் ஒரு குறிப்பிட்ட பணியில் தரவுகளைச் சேகரிப்பதற்காக, தனது ரோபோவை ஏற்கெனவே களமிறக்கியுள்ளது.

வீவ் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தன்னுடைய ஏழு ஐசக் ரோபோக்களை நகர் முழுதும் களமிறக்கியுள்ளது, இந்த ரோபோக்கள் துணிகளை சலவை செய்யும் இடங்களில் அவற்றை தானாகவே மடித்துக்கொடுக்கின்றன.

அந்த ரோபோக்கள் 90 நொடிகளில் டி-ஷர்ட்டுகளை உன்னிப்பாக மடிப்பதை நாங்கள் பார்த்தோம், ஆனால், அவை இன்னும் வேகமாகிவருவதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

"அவற்றை பணியில் ஈடுபடுத்துவதுதான் உத்தி," என அதன் இணை நிறுவனர் எவான் வின்லாண்ட் கூறுகிறார்.

இதே மாதிரியான பொது பயன்பாடுகளுக்கான ஐசக் ரோபோக்களை வீட்டு வேலைகளுக்காக இந்தாண்டு அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, ஆனால் எவ்வளவு பணிகளை முற்றிலும் தானாக செய்யும் என்பது தெளிவாக தெரியவில்லை.

சன்டே ஏஐ நிறுவனம் இத்துறையில் சந்திக்கும் தரவு சேகரிப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு நன்கு செயல்படத்தக்க தீர்வை கண்டறிந்துள்ளது.

அந்நிறுவனத்தின் ரோபோ மெதுவாக ஆனால் சீராக காபி தயாரிக்கிறது, சில சாக்ஸுகளை சுருட்டி வைக்கிறது, மேலும் எளிதில் உடையக்கூடிய வைன் கோப்பைகளை ஒழுங்கு செய்கிறது.

ஆனால், இவ்வளவு திறன்வாய்ந்த ரோபோ ஒரு தவறை செய்துவிடுகிறது - அதாவது ஒரு வைன் கோப்பையை தன் முதல் முயற்சியில் உடைத்துவிட்டது, இதுவொரு எதிர்பாராத தற்செயலான நிகழ்வாக இருக்கலாம்.

தாங்கள் தயாரித்த கையுறைகள் மூலம், அடுத்தாண்டு இந்த ரோபோக்கள் முற்றிலும் தயாரான பிறகு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிடும் என பொறியாளர்கள் நம்புகின்றனர்.

"நாங்கள் தயாரித்த இந்த கையுறைகளை மக்கள் அணிந்துகொள்கின்றனர், அதன்மூலம் அவர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர். அதிலிருந்து எங்களுக்கு பலதரப்பட்ட தரவுகள் கிடைக்கின்றன. ஏனெனில், இப்போது நாங்கள் 500 வீடுகளில் மக்கள் வெவ்வேறு வழிகளில் எப்படி வீட்டு வேலைகளை செய்கின்றனர் என்ற தரவுகளை பெறமுடிகிறது," என அதன் இணை நிறுவனர் டோனி ஸாவோ கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏஐ அமைப்புகள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றன என்பதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் கடின உழைப்பை இது நினைவூட்டுகிறது.

ஏஐ சாட்பாட்டுகள் பில்லியன்கணக்கான இணைய பக்கங்கள், புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களை அறிந்திருப்பதால், அவற்றுக்கு கற்றுத்தருவது ஒப்பீட்டளவில் எளிதாக உள்ளது.

நாங்கள் கடைசியாக சென்ற நிறுவனம், வீட்டு வேலைகளை செய்யும் ரோபோக்களை யதார்த்தத்திற்கு கொண்டு வருவதற்கு முற்றிலும் வேறொரு கோணத்தில் பணியாற்றுகிறது.

பிசிக்கல் இண்டலிஜென்ஸ் நிறுவனம் ஒரு ரோபோவை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக அறிவற்ற ரோபோக்களை புத்திசாலித்தனமாக மாற்றுவதற்கான திறனை உருவாக்கிவருகிறது.

அந்நிறுவன பொறியாளர்கள் எந்தவொரு ரோபோ ஹார்ட்வேருக்கும் தேவையான ஏஐ சாஃப்ட்வேரை உருவாக்க, பலவிதமான ரோபோ கைகள், கரங்கள் மற்றும் உடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பீநட் பட்டர் சாண்ட்விச் தயாரிக்கும் ரோபோ கை

பட மூலாதாரம், Physical Intelligence

படக்குறிப்பு, பீநட் பட்டர் சாண்ட்விச் செய்வது ஆச்சர்யகரமான கடினமான வேலை

"அது மனித உருவ ரோபோவாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு வீட்டு உபகரணத்தைப் போலத் தோற்றமளிக்கும் ஒன்றாக இருந்தாலும் சரி, எந்தவொரு வடிவத்திலும் அறிவாற்றலைச் செலுத்தக்கூடிய திறனை நாங்கள் பெற விரும்புகிறோம்" என அதன் இணை நிறுவனர் செல்சீ ஃபின் கூறுகிறார்.

இந்த தொழில்நுட்பத்தின் மீது பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் சிலிக்கான் பள்ளத்தாக்கு மையமாக இருந்தாலும், சீன போட்டியாளர்களிடமிருந்து அவர்கள் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய வீட்டு வேலைகளை செய்யும் ரோபோக்கள் உண்மையிலேயே பயனுள்ளதாகவும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் உருவாவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம் என, சர்வதேச ரோபோட்டிக்ஸ் கூட்டமைப்பு கருதுகிறது.

இத்தகைய ரோபோக்களுக்கு எந்தளவுக்கு தேவை இருக்கும் என்ற கேள்விகளும் உள்ளன. அந்த ரோபோக்கள் பணக்காரர்களுக்கானதாக இருக்குமா அல்லது தரையை சுத்தம் செய்யும் ரோபோக்களை போன்று பரவலாக மக்கள் பயன்படுத்தும் வகையில் மலிவாக இருக்குமா?

இந்த தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பொறியாளர்கள், நம் எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டும் என்று விரும்பும் ஓர் எதிர்காலத்தை தாங்கள் உருவாக்கிவருவதாக நம்புவதாக தோன்றுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு