சர்ச்சையை கிளப்பிய 'யுஜிசி' புதிய விதிகளில் என்ன உள்ளது?

கர்ணி சேனா அமைப்பின் போராட்டம் பற்றிய சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாகுபாடுகளைக் களைவதற்கான யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக வட இந்தியாவில் கர்ணி சேனா அமைப்பு தனது எதிர்ப்பை அறிவித்துள்ளது (சித்தரிப்புப் படம்).

இந்தியாவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட ஓர் அறிவிப்புக்கு சிலர் ஏன் கடுமையான எதிர்வினைகளைத் தருகிறார்கள்?

சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் இதனை எதிர்ப்பது ஏன்?

புதிய விதிகளின்படி, இப்போது அரசு கல்லூரியாக இருந்தாலும் சரி, தனியார் பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஈக்விட்டி கமிட்டி (சமத்துவக் குழு) அமைப்பது கட்டாயமாகும். இந்தப் பிரிவு ஒரு நீதிமன்றத்தைப் போலச் செயல்படும். ஒரு மாணவர் தனக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்பட்டதாக உணர்ந்தால், அவர் அங்கு சென்று புகார் அளிக்கலாம். அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், கல்வி நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் அமர்ந்திருக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

புதிய விதிகள் கூறுவது என்ன?

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பதற்காக யுஜிசி தனது தற்போதைய விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

ஜனவரி 13- அன்று யுஜிசி 'பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறை 2026'-ஐ வெளியிட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதும், எந்தவொரு பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.

  • மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவ, மாணவிகளிடம் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதும், குறிப்பாகப் பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி), பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதுமே இதன் நோக்கமாகும். இது தவிர, உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிப்பதும் இதன் இலக்காகும்.
  • இதன்படி, சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக சாதி அல்லது சமூகத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டைக் குறிக்கும்.

எதிர்ப்பு ஏன்?

சர்ச்சையின் முக்கியக் காரணம், சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் வரையறையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்ததுதான். இதற்கு முன்பு, வரைவுத் திட்டத்தில் சாதிப் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கும் வரம்பிற்குள் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மட்டுமே வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இப்போது இதில் ஓபிசி பிரிவினரும் சேர்க்கப்பட்டுள்ளனர், இதற்குச் சில இடங்களில் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இது பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு எதிரானது என்பது இந்த அறிவிப்பை எதிர்ப்பவர்களின் வாதம்.

ஏனெனில், இதில் பொதுப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு எதிராகப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.

அரசின் அறிவிப்பின்படி, உயர் கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளை ஒழிக்க ஒரு 'ஈக்விட்டி கமிட்டி' (சமத்துவக் குழு) அமைக்கப்படும். இதில் ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.

இந்தக் குழு பாகுபாடு குறித்த புகார்களை விசாரிக்கும்.

எதிர்ப்பாளர்களின் மற்றொரு வாதம் என்னவென்றால், இந்தக் குழுவில் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஏன் பேசப்படவில்லை என்பதாகும். அவர்களைப் பொறுத்தவரை, 'ஈக்விட்டி கமிட்டி'யில் பொதுப் பிரிவு உறுப்பினர் இல்லாததால் விசாரணை நேர்மையாக இருக்காது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாற்றம் ஏன் தேவைப்பட்டது?

மறுபுறம், உயர் கல்வியில் ஓபிசி மாணவர்களும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர், எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது.

இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி தொடர்பான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஓபிசி பிரிவினரும் இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி பிரியங்கா சதுர்வேதி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், "வளாகத்தில் எந்த வகையான சாதிப் பாகுபாடும் தவறானது, இந்தியாவில் ஏற்கனவே பல மாணவர்கள் இதன் மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளனர். ஆனால் சட்டம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டாமா? பிறகு சட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்த பாகுபாடு ஏன்? பொய் வழக்குகள் ஏற்பட்டால் என்ன நடக்கும்? குற்றம் எவ்வாறு தீர்மானிக்கப்படும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும், "இந்த பாகுபாட்டை எவ்வாறு வரையறுப்பது - வார்த்தைகளால், செயல்களால் அல்லது கருத்துக்களால்?. சட்டத்தைச் செயல்படுத்தும் செயல்முறை தெளிவானதாகவும், துல்லியமானதாகவும் மற்றும் அனைவருக்கும் சமமானதாகவும் இருக்க வேண்டும். வளாகத்தில் எதிர்மறையான சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, யுஜிசியின் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அதில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும்" என்றார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''பாகுபாடு என்ற பெயரில் இந்த விதியை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே இந்த விதிகளை ஆதரித்துப் பதிவிடுகையில், " யுஜிசியின் இந்த விதி எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் சேர்த்து உயர் சாதியினருக்கும் சமமாகப் பொருந்தும். இது அரசியல் அல்ல, நாடு பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பின்படிதான் நடக்கிறது" என்று எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு