விண்வெளியில் இருந்து கண்ட காட்சி மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?பிபிசிக்கு சுனிதா வில்லியம்ஸ் பேட்டி

- எழுதியவர், திவ்யா உப்பல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"வானத்தில் இருந்து கீழே பூமியைப் பார்க்கும்போது, வாக்குவாதங்களும் சண்டைகளும் மிகவும் அற்பமாகத் தெரிகின்றன."
நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சுமார் 30 ஆண்டு பணிக்காலத்தில், விண்வெளியில் இருந்து அவர் பார்த்த காட்சி, அவரது மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, மனிதகுலம், தொழில்நுட்பம், தாயகம் ஆகியவற்றை அவர் பார்க்கும் விதத்தையும் அந்தக் கண்ணோட்டம் இன்றும் வடிவமைத்து வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் கடந்த டிசம்பர் மாதம் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்து முடிந்த கேரள இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நீண்டகால பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.
டெல்லி மற்றும் கேரளாவுக்கான பயணத்தின்போது, அவர் மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அங்கு வந்திருந்த பார்வையாளர்களைச் சந்தித்து, விண்வெளியில் தனது வாழ்க்கை மற்றும் பணியின் எதிர்பாராத இறுதி அத்தியாயம் குறித்து நினைவு கூர்ந்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூன்று நீண்ட கால பயணங்களின் மூலம், சுனிதா வில்லியம்ஸ் 600 நாட்களுக்கும் மேலாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் கழித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான விண்வெளி நடைகளை மேற்கொண்ட பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
"நாசாவில் எனக்கு ஒரு வேலை கிடைக்கும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை," என்று கூறிய அவர், விண்வெளிக்குச் செல்லும் வேலை கிடைக்கும் என்று தான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.
தனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில், அதில் விண்வெளிப் பயணங்கள் மட்டுமே தனித்துத் தெரியவில்லை என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
"என்னை வழிநடத்தி, எனக்கு வழிகாட்டியாக இருந்து, என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த அனைத்து அற்புதமான மனிதர்களைப் பற்றியும் நான் நினைவில் கொள்கிறேன். உண்மையிலேயே நான் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற அனைத்து மனிதர்களையும்தான் முக்கியமாக நினைத்துப் பார்க்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்த நாட்கள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2024-ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸின் கடைசி விண்வெளிப் பயணம் தொடங்கிய நேரத்தில், அது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் அவர் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இருப்பினும் அதை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
அதுகுறித்துப் பேசியபோது, "எனக்கு விண்வெளியில் இருப்பது மிகவும் பிடிக்கும், அதனால் அங்கிருப்பது எனக்குப் பிடித்திருந்தது." என்று அவர் கூறினார்.
"ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது, ஒரு நாட்குறிப்பு எழுதுவது, சோதனைகளைச் செய்வது என எனக்குப் பிடித்த பல விஷயங்களை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது ஓர் அற்புதமான ஆய்வகம்," எனப் பகிர்ந்து கொண்டார் சுனிதா வில்லியம்ஸ்.
அறிவியல் சோதனைகள், ரோபோடிக் கை பயிற்சி, உபகரணங்கள் பழுதுபார்ப்பு, தரைக் கட்டுப்பாட்டுக் குழுக்களுடனான ஆலோசனைகள் மற்றும் பல மணிநேர தினசரி உடற்பயிற்சிகள் என அவரது நாட்கள் பரபரப்பாக இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும், அதுவே மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது" என்றார் அவர். ஆனால், உளவியல் ரீதியாகப் பார்க்கையில், நீண்ட காலம் தங்க வேண்டும் என்பது சவாலானதாக இருந்துள்ளது.
அதுகுறித்துப் பேசிய வில்லியம்ஸ், "எனது 80 வயது தாயார் உள்பட எனது குடும்பத்தினருடன் செய்ய வேண்டிய விஷயங்களுக்கான சில திட்டங்களை வைத்திருந்தேன்."
"நான் அவருடன் இல்லாததாலும், குறிப்பாக எனது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் இணைந்து பல விஷயங்களைச் செய்ய முடியாததாலும், நான் அந்தக் காலத்தை இழந்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது," என்று கூறினார்.
அந்தச் சூழலில் தன்னைத் தாங்கிப் பிடித்தது தனது குடும்பத்தின் ஆதரவுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அவர்கள் என்னிடம், 'நீ தொடர்ந்து செல், அங்கேயே மகிழ்ச்சியாக இரு, ஏதோவொரு நேரத்தில் பாதுகாப்பான விண்கலத்தில் திரும்பி வா' எனக் கூறினார்கள். அது எனக்கு மிகுந்த நிம்மதியைக் கொடுத்தது" என்று விவரித்தார் சுனிதா வில்லியம்ஸ்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய பயணம் குறித்து சுனிதா கருத்து
இந்தியாவுக்கான ஒவ்வொரு பயணத்திலும், முந்தைய பயணத்தைவிட முற்றிலும் மாறுபட்டதாக உணர்வதாக சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
"நான் ஒரு சில முறை இங்கே வந்திருக்கிறேன், ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் சூழல் மாறியிருக்கும்" என்று கூறிய அவர், "சாலைகள், மேம்பாலங்கள் என ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது மிகவும் எளிதாகத் தெரிகிறது. எங்கு பார்த்தாலும் தொழில்நுட்பம் நிறைந்து காணப்படுகிறது." என்றார்.
குறிப்பாக, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் வளர்ந்து வரும் இந்திய தொழில்நுட்பங்களைக் கண்டு அவர் வியப்படைந்தார்.
அதோடு, "தொழில்நுட்பத் துறையில் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக உள்ளனர். இதில் விண்வெளித் துறையும் அடங்கும்." எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவுடனான அவரது தொடர்பு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குஜராத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான ஜுலாசனில், அங்குள்ள மக்கள் அவரது சாதனைகளை நீண்ட காலமாகத் தங்களுடைய சொந்த சாதனைகளைப் போலக் கொண்டாடி வருகின்றனர்.
"இது உண்மையில் என்னை நெகிழச் செய்கிறது, நான் எனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் அங்கு சென்றிருக்கிறேன். அது இன்னும் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக மாற்றுகிறது. எனக்கு அங்குள்ள மக்களைத் தெரியும்." என்று சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
விரைவில் தனது சகோதரி மற்றும் உறவினர்களுடன் அங்கு மீண்டும் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
"கேரளாவைப் பற்றி எனது தந்தை மிகவும் உயர்வாகப் பேசுவார். இங்கு வந்து இந்தியாவின் மற்றொரு பகுதியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நான் கண்டிப்பாக எனது சொந்த ஊரான ஜுலாசனுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்." என்று கூறினார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
விண்வெளியில் இருந்து கண்ட காட்சி சுனிதா மனதில் ஏற்படுத்திய தாக்கம்
புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்தபடி பூமியைப் பார்க்கும்போது, எல்லைகளும் மோதல்களும் முக்கியத்துவம் அற்றவையாக மறைந்துவிடுவதாக சுனிதா வில்லியம்ஸ் கூறுகிறார்.
"நமது கிரகத்தை அங்கிருந்து பார்க்கும்போது, நாம் அனைவரும், அதே தண்ணீர், அதே காற்று, அதே நிலப்பரப்புடன், இந்த ஒரே இடத்தில் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்வீர்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பார்வை, மனிதர்களுக்கு இடையிலான பிரிவினைகளை விசித்திரமான முறையில் மிகச் சிறியதாக உணர வைப்பதாக அவர் கருதுகிறார்.
"இங்கே கீழே நாம் பல விஷயங்களுக்கு நடுவில், பலவற்றால் திசைதிருப்பப்பட்டு இருக்கும்போது, விண்வெளியில் இருந்து பார்த்தால் மற்றவர்களிடம் கோபப்படுவதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. மக்கள் விவாதித்துக் கொள்வதும் சண்டையிடுவதும் மிகவும் விசித்திரமாகத் தோன்றும்" என்று அவர் கூறினார்.
சுனிதா வில்லியம்ஸின் மனதில், பரிவு என்ற பண்பை இந்த அனுபவம் வலுப்படுத்தியுள்ளது.
"நாம் அனைவரும் சிறிது நேரம் ஒதுக்கி, இயற்கையோடு இணைந்த ஏதேனும் ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும், ஒருவரையொருவர் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அநேகமாக ஒவ்வொருவரிடமும் ஒரு நியாயமான கருத்து இருக்கும்" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
'செயற்கை நுண்ணறிவு, ஆய்வு மற்றும் இந்தியாவின் ஆற்றல்'
அறிவியல் மற்றும் விண்வெளிப் பயணங்களில் செயற்கை நுண்ணறிவை ஒரு சக்திவாய்ந்த, அதே நேரம் வரம்புகளுக்கு உட்பட்ட ஒரு கருவியாக சுனிதா வில்லியம்ஸ் விவரிக்கிறார்.
"செயற்கை நுண்ணறிவால் தரவுகளை மிக விரைவாகச் செயலாக்கவும், எண்களைக் கணக்கிடவும், தகவல்களை வகைப்படுத்தவும் முடியும். மனிதர்கள் முடிவெடுப்பதில் கவனம் செலுத்துவதற்காக, ரோபோக்கள் தொடர்ச்சியாகச் செய்யப்படும் பணிகளைச் செய்ய முடியும்" என்றார் அவர்.
ஆனால் அதுவொரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
"இதுவே எல்லாமுமாக ஆகிவிடாது. இது நாம் மேலும் ஆய்வு செய்ய உதவும் ஒரு கருவி மட்டுமே" எனக் குறிப்பிட்ட சுனிதா வில்லியம்ஸ், "கற்பனைத் திறன்தான் இந்தியாவின் எல்லை. இந்தியாவிடம் மனித ஆற்றலும், அற்புதமான விஷயங்களைச் செய்யக்கூடிய அறிவாற்றல் கொண்ட பலரும் உள்ளனர்." என்று விவரித்தார்.

எதிர்காலத் திட்டங்கள்
தற்போது ஓய்வு பெற்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், தனது வாழ்வின் அடுத்த கட்டம், பயணம், குடும்பம் மற்றும் புதிய சவால்கள் நிறைந்தது என்று கூறுகிறார்.
கேரளாவின் கடற்கரைகள் முதல் லடாக்கின் மலைகள் வரை இந்தியாவின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்க்க அவர் விரும்புகிறார்.
"நான் மலைகளை நேசிக்கும் நபர், நான் மலைகளுக்குச் செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.
விண்வெளி தனக்குக் கற்றுக் கொடுத்தது என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்த அவர், ஒரு கணம் இடைநிறுத்தி, "பொறுமையுடன் இருங்கள். ஒருவருக்கொருவர் செவிசாயுங்கள்" என்றார்.
ஓய்வு காலத்தில் உங்களை மிகவும் உற்சாகப்படுத்துவது எது என்று கேட்டபோது, "மலை ஏறுவது" என அவர் உடனடியாகப் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












