அஜித் பவார் இறந்த விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI
மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது.
புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ''இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.'' என்றார்.
பிபிசி மராத்தி செய்தியின்படி, அஜித் பவாருடன் இறந்த மற்ற நபர்களின் பெயர்கள் சுமித் கபூர், ஷாம்பவி பதக், விதிப் ஜாதவ் மற்றும் பிங்கி மாலி.
'தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது' என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
விமானம் பாராமதியில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையிலான உரையாடலின் விவரங்களையும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.
அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர், மகாராஷ்டிரா முதல்வர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

விமான போக்குவரத்து அமைச்சகம் என்ன கூறியது?
விபத்து தொடர்பாக, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையை, பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்டுள்ளது.
அதில், பாராமதி விமான தளம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC)) கோபுரம் இல்லாத தளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போக்குவரத்துத் தகவல்கள் பாராமதியில் அமைந்துள்ள விமானி பயிற்சி அமைப்பின் (Flying Training Organisation) பயிற்றுநர்கள் அல்லது விமானிகளால் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.
டிஜிசிஏ கூறியுள்ளது என்ன?
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,
- விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை (ATC) கையாண்ட நபர் அளித்த தகவல்களின்படி, ஜனவரி 28, 2026 அன்று, விமானம் VI-SSK காலை 8:18 மணிக்கு பாராமதியுடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது.
- அந்த விமானம் பாராமதிக்கு 30 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்து, பாராமதி நோக்கி வருவதாகத் தகவலைத் தெரிவித்தது. அப்போது புனே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விடுவிக்கப்பட்டு பாராமதி நோக்கி நோக்கி பறக்க அனுமதிக்கப்பட்டது
- வானிலையை பொறுத்து அவருடைய சொந்த கணிப்பின்படி தரையிறங்க அதன் விமானி அறிவுறுத்தப்பட்டார்.
- காற்று மற்றும் தெரிவுநிலை (visibility) குறித்து விமான குழுவினர் விசாரித்தனர். காற்று சீராக இருப்பதாகவும், தெரிவுநிலை சுமார் 3,000 மீட்டர் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
- பின்னர் விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழுவினர் கூறினர். ஆனால், குழுவினரால் ஓடுபாதையைப் பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் முதல் முயற்சியில் தரையிறங்கும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
- அதன்பின், விமானத்தின் நிலை குறித்து குழுவினரிடம் கேட்கப்பட்டது. பின்னர் விமானக் குழுவினர் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
- ஓடுபாதை தெரிகிறதா தகவலை தெரிவிக்க அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, "ஓடுபாதை தற்போது தெரியவில்லை. அது தெரியும்போது அழைப்பதாக" பதிலளித்துள்ளனர்.
- சில வினாடிகளுக்குப் பிறகு, ஓடுபாதை தெரிவதாக குழுவினர் கூறியுள்ளனர்.
- காலை 8:43 மணிக்கு, விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் தரையிறங்கும் அனுமதி குறித்து விமானக் குழுவினரால் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை.
- பின்னர், காலை 8:44 மணிக்கு, ஓடுபாதை 11-க்கு அருகில் தீப்பிழம்புகள் எழுவதை ATC கவனித்தது. பின்னர் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.
- விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஓடுபாதை 11-க்கு அருகில் இடது பக்கத்தில் காணப்பட்டன.

பட மூலாதாரம், ANI
விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணையை மேற்கொண்டுள்ளது. விசாரணையை நடத்த AAIB இயக்குநர் ஜெனரல் விபத்து நடந்த இடத்திற்கு செல்லவுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது பகிரப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானக் குழுவினர் பற்றி தெரியவந்தது என்ன?
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர்.
ஒரு விமானி 15,000 மணிநேர விமானப் பயண அனுபவமுள்ளவர். இரண்டாவது விமானிக்கு 1,500 மணிநேரம் பறக்கும் அனுபவம் இருந்தது.

பட மூலாதாரம், ANI
நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
விபத்தை நேரில் கண்ட ஒருவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம், "நான் அதை என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையானது. விமானம் கீழே விழும்போது, அது தரையிறங்க முடியாது என்று தோன்றியது, அதுதான் நடந்தது. அதன் பிறகு, அந்த விமானம் வெடித்தது. அந்த விமான வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதன்பின், நாங்கள் விமானம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டோம்." என்றார்.
"பின்னர் விமானத்தில் மேலும் நான்கு அல்லது ஐந்து வெடிப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகு, பொதுமக்கள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் தீ மிகவும் கடுமையாக இருந்ததால், மக்களால் உதவ முடியவில்லை. அஜித் பவாரும் விமானத்தில் இருந்தார், இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது..."
மற்றொரு நபர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "நாங்கள் இங்கே வசிக்கிறோம், எங்களுக்குப் பின்னால் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. ஒரு விமானம் வருவதைக் கண்டோம், ஆனால் அது தரையிறங்கவில்லை. அது முன்னோக்கிச் சென்றது, பின்னர் சிறிது நேரம் கழித்து அது திரும்பி தரையிறங்கத் தொடங்கியது. ஆனால் அது ஓடுபாதைக்கு சற்று முன்பு விபத்துக்குள்ளானது." என்றார்.
"இதைப் பார்த்தவுடன், ஓடுபாதையைச் சுற்றியுள்ள எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம், அதன் பிறகு காவல்துறையினரும் மற்றவர்களும் உடனடியாக வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
















