யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக வைக்கப்படும் 2 முக்கிய வாதங்கள் என்ன? முழு விவரம்

யுஜிசி, புதிய விதிகள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி, சாதி, மாணவர்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, லக்னௌவில் புதிய யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கடந்த 13ஆம் தேதி, 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' விதிமுறைகளை வெளியிட்டது.

இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பொருந்தும். 2012 அறிமுகப்படுத்தப்பட்ட விதிகளுக்கு மாற்றாகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது.

ஆனால், இந்த புதிய விதிகளுக்கு ஒரு தரப்பு மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக வட இந்திய மாநிலங்களில்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரை சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் வரையறையில் கொண்டுவந்துள்ளது எதிர்ப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. மறுபுறம், இந்த புதிய விதிமுறைகள் பொதுப் பிரிவைச் (General category) சேர்ந்தவர்களுக்கு எதிரானது என்றும் எதிர்ப்பு கிளம்புகிறது.

புதிய விதிமுறைகளில் என்ன உள்ளது?

யுஜிசி, புதிய விதிகள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி, சாதி, மாணவர்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா (கோப்புப் படம்)

பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்​றும் பயல் தட்வி ஆகியோரின் தற்கொலையை தொடர்ந்​து, அவர்​களது தாய்​மார்​கள் ராதிகா வெமுலா மற்றும் அபேதா சலீம் தத்வி ஆகியோர் 2019ஆம் ஆண்டு உச்ச நீதி​மன்​றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழிமுறையைக் அவர்கள் அந்த மனுவில் கோரினர்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ஆம் ஆண்​டின் பழைய விதி​முறை​களை மறு​பரிசீலனை செய்​யு​மாறு பல்​கலைக்​கழக மானியக் குழு​வுக்கு (யுஜிசி) உத்​தர​விட்​டது.

அதன் தொடர்ச்சியாகவே 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் ஒழுங்குமுறை 2026' விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் ஒரு சம வாய்ப்பு மையத்தை (Equal Opportunity Centre) அமைக்க வேண்டும். ஒரு மூத்த பேராசிரியர் அல்லது தகுதியான ஆசிரியர் இந்த சம வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

பாகுபாடுகள் தொடர்பான புகார்களைப் பெறுவது, விசாரிப்பது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பதும் இந்த மையத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கும்.

சம வாய்ப்பு மையத்தின் செயல்பாட்டை நிர்வகிக்கவும் பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், கல்வி நிறுவனத் தலைவரால் ஒரு சமபங்கு குழுவும் (Equity Committee) அமைக்கப்படும்.

கல்வி நிறுவனத்தின் தலைவர் அதன் தலைவராக இருப்பார். இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் (சிறப்பு அழைப்பாளர்கள்) இடம்பெறுவர்.

இக்குழுவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குக் கட்டாயம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கல்வி வளாகத்தில் பாகுபாடு ஏற்படுவதைத் தடுக்கவும், விழிப்புடன் இருக்கவும் 'சமபங்கு கண்காணிப்புக் குழுக்கள்' (Equity Squads) அமைக்கப்படும். இவை வளாகத்தின் முக்கியமான இடங்களுக்கு அடிக்கடி சென்று கண்காணிக்கும்.

அதேபோல, ஒவ்வொரு துறை, விடுதி மற்றும் நூலகத்திலும் ஒரு 'சமபங்கு தூதர்' நியமிக்கப்படுவார். ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால் இவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிப்பார்கள் என யுஜிசி விதிமுறைகள் கூறுகிறது.

பாகுபாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள்

யுஜிசி, புதிய விதிகள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி, சாதி, மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

யுஜிசியின் புதிய விதிமுறைகளின்படி, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சமபங்கு உதவி எண் (Equity Helpline): அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் உதவி எண் இருக்க வேண்டும்.

உறுதிமொழி: சேர்க்கையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் எந்தவிதப் பாகுபாட்டிலும் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும்.

ரகசியம் காத்தல்: பாகுபாடு குறித்துப் புகார் அளிப்பவர்களின் அடையாளம், அவர்கள் விரும்பினால் ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஆலோசனைகள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொழில்முறை ஆலோசகர்கள் (Professional Counselors) நியமிக்கப்படுவார்கள்.

புகார் அளிப்பது எப்படி?

யுஜிசியின் புதிய விதிமுறைகளின்படி, ஆன்லைன் போர்டல், மின்னஞ்சல் அல்லது நேரடியாகச் சம வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளரிடம் புகார் அளிக்கலாம். இதற்காக ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் ஒரு 'சமபங்கு உதவி எண்' இருக்க வேண்டும்.

புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அதை விசாரிக்க சமபங்கு குழு கூட வேண்டும்.

விசாரணை முடிக்கப்பட்டு 15 பணி நாட்களுக்குள் கல்வி நிறுவனத்தின் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அறிக்கை கிடைத்த 7 பணி நாட்களுக்குள் கல்வி நிறுவனத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவியல் நடவடிக்கை தேவைப்பட்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

குழுவின் முடிவில் அதிருப்தி இருந்தால், 30 நாட்களுக்குள் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) முன்னிலையில் மேல்முறையீடு செய்யலாம். குறைதீர்ப்பாளர் 30 நாட்களுக்குள் அதைத் தீர்க்க முயற்சி செய்வார்.

கல்வி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில், மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் இடைநிற்றல் விகிதங்கள் இடம்பெற வேண்டும்.

யுஜிசி தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்து இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும்.

விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை?

யுஜிசி, புதிய விதிகள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி, சாதி, மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்த ஒழுங்குமுறைகளைப் பின்பற்றத் தவறும் கல்வி நிறுவனங்கள் மீது யுஜிசி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அதன் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • யுஜிசி திட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.
  • பட்டங்களை வழங்கத் தடை விதிக்கப்படும்.
  • ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்படும்.
  • யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

2012 விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது, புதிய விதிமுறைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) குறித்த தெளிவான குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, 'சாதி அடிப்படையிலான பாகுபாடு' என்பது பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை மட்டுமே குறிக்கிறது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 'சாதி' என்ற வரையறைக்குள் வராவிட்டாலும், அவர்கள் மீதான பாகுபாடும் தண்டனைக்குரியது தான், ஆனால் அது 'சாதி பாகுபாடு' என்ற வரையறைக்கு கீழ் வராமல் 'பொதுவான பாகுபாடு' என்ற பிரிவின் கீழ் வரும்.

அதேபோல, 2012 விதிமுறைகளில் புகார்கள் மீது முடிவெடுக்க 60 நாட்கள் வரை கால அவகாசம் இருந்தது.

அவை தனிநபர்களுக்கான தண்டனை பற்றி மட்டுமே பேசின. ஆனால், 2026 விதிமுறைகள் மூலம் விதிகளைப் பின்பற்றத் தவறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதார மற்றும் அங்கீகாரத் தடைகளை விதிக்க யுஜிசி-க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையின் பின்னணி என்ன?

யுஜிசி, புதிய விதிகள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி, சாதி, மாணவர்கள்

பட மூலாதாரம், ANI

யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளை எதிர்ப்பவர்களில் ஒரு பிரிவினர் முன்வைக்கும் வாதம், இது பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதுதான். இந்த புதிய விதிமுறைகளைப் பயன்படுத்தி, பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம், இது அவர்களின் கல்வியை பாதிக்கும் என கூறுகிறார்கள்.

இதை வலியுறுத்தி, உத்தர பிரதேசத்தின் அலிகார், சம்பல், குஷிநகர் போன்ற பல மாவட்டங்களில் மாணவர் அமைப்புகள் மற்றும் குழுக்கள் புதிய யுஜிசி ஒழுங்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை உடனடியாக திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மறுபுறம், சாதி ரீதியிலான பாகுபாடுகளை அதிகம் எதிர்கொள்ளும் பட்டியல் பிரிவு இருக்கும் ஒரு வரையறைக்குள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரையும் கொண்டுவருவது, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யக்கூடிய ஒன்று என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

"யுஜிசியின் விதிமுறைகள் மிகவும் அபத்தமாக உள்ளது. ஒரு தலித்தை சாதி இந்து தாக்கினால் அது வன்கொடுமை, அதேபோல ஒரு சாதி இந்துவை தலித் தாக்கினாலும் அது வன்கொடுமை என முன்வைக்கப்படும் வாதத்திற்கு வலுசேர்ப்பது போல இந்த விதிமுறைகள் உள்ளன" என்கிறார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் புனிதபாண்டியன்.

"அப்படி சாதி இந்து மாணவர் ஒருவருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்றால் அதற்கு இந்தியாவில் ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள் மூலம் தண்டனை அளிக்கலாமே. பல கல்வி நிறுவனங்களில் ஆய்வு மாணவர்கள், குறிப்பாக பட்டியலின மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எத்தனையோ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதே. அப்படியிருக்க இந்த விதிமுறைகள் யாருக்காக கொண்டுவரப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது." என்று அவர் கூறுகிறார்.

"ஓபிசி பிரிவை இதில் சேர்ப்பது கூட சரியே, ஆனால் உயர்சாதிப்பிரிவினரையும் இதில் கொண்டு வரவேண்டும் எனக் கேட்பது சாதி பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களை கேலிக்குள்ளாக்குகிறது" என்றும் புனிதபாண்டியன் தெரிவிக்கிறார்.

'கல்வி நிறுவனங்களில் காட்டப்படும் சாதி ரீதியிலான பாகுபாடுகள்'

யுஜிசி, புதிய விதிகள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி, சாதி, மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

"கல்வி நிறுவனங்களில் யார் சாதி ரீதியாக பாகுபாடு காட்டுகிறார்கள், யார் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தலைகீழாக மாற்றும் முயற்சிதான் இந்த புதிய விதிமுறைகள்" என்று கூறுகிறார் அகில இந்திய ஓ.பி.சி. தொழிலாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி. கருணாநிதி.

2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால், அமைக்கப்பட்ட தோரட் கமிட்டியை மேற்கோள் காட்டிய அவர், "வகுப்புகள், விடுதிகள், உணவருந்தும் பகுதிகள் என ஒரு கல்வி நிறுவனத்தின் பல இடங்களில் பட்டியல் பிரிவு மாணவர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். அப்படியிருக்க இந்த புதிய விதிமுறைகளில், பொருளாதார ரீதியில் நலிவடைந்தோர் பிரிவைச் சேர்த்ததே மிகப்பெரிய தவறு, இதில் பொதுப் பிரிவையும் சேர்க்க வேண்டும் எனச் சொல்வது அநியாயம்" என்கிறார்.

2007இல், டெல்லி எய்ம்ஸ்-இல் (AIIMS) பட்டியல் பிரிவு மாணவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகள் குறித்த ஊடக செய்திகள் வெளியானது மற்றும் அரசாங்கத்திற்கும் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க பேராசிரியர் சுகதேயோ தோரட் தலைமையில் ஒரு மூவர் குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் அளித்த அறிக்கையில், '69 சதவிகித பட்டியல் பிரிவு மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து போதுமான ஆதரவு தங்களுக்கு கிடைப்பதில்லை எனக் கூறினர். மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களை புறக்கணிப்பதற்கு தங்களது சாதிப் பின்னணியே காரணம் காட்டுகின்றனர்.' எனக் குறிப்பிடப்பட்டது.

அதேபோல, 'விடுதிகளில் கடைசி தளங்களான 4வது மற்றும் 5வது தளங்களில் உள்ள அறைகளுக்கு இடம்பெயர, உயர் சாதி இந்து மாணவர்கள் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் அவமானம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை எதிர்கொண்டதாகவும் பட்டியல் பிரிவு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்' என அறிக்கை கூறுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இன்று, பல கல்வி நிறுவனங்களில் நடைபெறுவது என்பது உளவியல் ரீதியிலான தாக்குதல்கள் தான். அதனால் தான் பல மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து பாதியில் வெளியேறுகிறார்கள். எனவே உயர் சாதியினரையும் இதில் கொண்டுவருவதால், யாரால் பாதிக்கப்படுகிறோமோ அவர்களிடமே புகார் கூறும் சூழல் தான் எழும்" என்று குறிப்பிடுகிறார் கருணாநிதி.

ஆனால், புதிய யுஜிசி விதிமுறைகளில் அனைத்துப் பிரிவினரையும் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுவது சரியானதே என்கிறார், கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி.

"கல்வி நிறுவனங்களில் அனைவரும் சமம் என்ற நிலை தான் நீடிக்க வேண்டும். அப்போதுதான் அது சமூகத்திலும் எதிரொலிக்கும். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் தான் பாகுபாட்டை எதிர்கொள்வார்கள் என நிச்சயமாக கூறிவிட முடியாது. சாதியைக் கடந்த பாகுபாடுகளும் இங்கு நிகழ்கின்றன. அப்படி பாதிக்கப்படும் மாணவர்கள் எங்கே சென்று புகார் அளிப்பார்கள்." என அவர் கேள்வியெழுப்புகிறார்.

"யுஜிசி தனது விதிமுறைகளில் தேவையான மாற்றங்களை கொண்டுவந்து, திருத்தப்பட்ட ஒரு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்." என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

யுஜிசி விதிமுறைகளுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்துப் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "யாரும் துன்புறுத்தப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நான் உறுதியளிக்கிறேன். எந்த பாகுபாடும் இருக்காது. பாகுபாடு என்ற பெயரில் இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்த யாருக்கும் உரிமை இருக்காது. இதற்கான பொறுப்பு யுஜிசி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளைச் சார்ந்தது. எந்த அமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது அரசியலமைப்பின் வரம்புக்குள் இருக்கும். இது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் நடந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு