'மிகுந்த ஏமாற்றம்': இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்கா கூறுவது என்ன?

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.
இந்தியாவும் ஐரோப்பாவும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று அழைக்கின்றன.
ஆனால் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார்.
சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "அவர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யட்டும். ஆனால் ஐரோப்பாவின் இந்த அணுகுமுறை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது," என்று கூறினார்.
"யுக்ரேன் - ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் இவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இந்தியா முதலில் தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் கிடைத்ததால் வாங்கத் தொடங்கியது. பின்னர், ஐரோப்பா அதே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இந்தியாவிடமிருந்து வாங்கத் தொடங்கியது. இதன் பொருள் அவர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளிக்கிறார்கள் என்பதுதான்," என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டார்.
இந்தியா மீதான 'அழுத்தத்தை அதிகரிக்க', அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்ததாகவும், ஆனால் ஐரோப்பா அவ்வாறு செய்யவில்லை என்றும் பெசென்ட் கூறினார்.
"ஐரோப்பியர்கள் எப்போதும் யுக்ரேன் மக்களின் நலனைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், அவர்கள் யுக்ரேன் மக்களை விட வர்த்தகத்தில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டியுள்ளனர்'' என்று கூறினார்.
பெசென்ட் இதற்கு முன்பும் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்திருந்தார்.
ஜனவரி 26 அன்று ஏபிசி நியூஸிடம் பேசிய அவர், "யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பாவை விட அமெரிக்கா அதிக தியாகம் செய்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது நாங்கள் 25 சதவீத வரி விதித்தோம். ஐரோப்பா இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறது," என்று கூறினார்.

பட மூலாதாரம், Chris J. Ratcliffe/Bloomberg via Getty Images
'இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம்'
முன்னதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், ஃபாக்ஸ் பிசினஸ் ஊடகத்திடம் பேசுகையில், இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவை விட இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
"இதுவரை இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை நான் பார்த்துள்ளேன். தெளிவாகச் சொல்லப்போனால், இதன் மூலம் இந்தியா அதிக பலன்களைப் பெறுவது போல் தெரிகிறது. ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்," என்றார்.
இந்தியா ரஷ்ய எண்ணெயை இன்னும் வாங்குகிறதா என்ற கேள்விக்கு கிரீர் பதிலளிக்கையில், "அவர்கள் இந்த திசையில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்குத் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய் பிடித்துள்ளது. எனவே அதை விட்டுக்கொடுப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது," என்று கூறினார்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்

பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images
ஜனவரி 27 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இணைந்து இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதி, ''இந்தியா தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இன்று 27-ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு" என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வர்த்தகத்தை ஒரு ராஜீய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
இதுவே இந்த ஒப்பந்தத்திற்கு மிக முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Harun Ozalp/Anadolu via Getty Images
அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமாக நகர்ந்தன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து மீதான அமெரிக்கக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்ததால், அவர்கள் மீது வரி விதிக்கப்படும் என ஆரம்பத்தில் மிரட்டினார், ஆனால் பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்கினார்.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. ஒட்டுமொத்தமாக, டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images
ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்தியா தனது மற்ற வர்த்தக கூட்டாளிகளுக்கு வழங்காத வரிச் சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று கூறியுள்ளது.
உதாரணமாக, கார்கள் மீதான வரி படிப்படியாக 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்படும், அதே நேரத்தில் கார் பாகங்கள் மீதான வரி ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்கப்படும்.
மேலும், இந்த ஒப்பந்தம் சிறிய ஐரோப்பிய நிறுவனங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.
இயந்திரங்கள் மீது 44% வரையிலும், ரசாயனங்கள் மீது 22% வரையிலும் மற்றும் மருந்துகள் மீது 11% வரையிலும் விதிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் நீக்கப்படும்.
2024–25 நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பொருட்கள் வர்த்தகம் சுமார் ரூபாய் 11.5 லட்சம் கோடியாகவும், சேவை வர்த்தகம் ரூபாய் 7.2 லட்சம் கோடியாகவும் இருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் முதல் நாளிலிருந்தே ஜவுளி, ஆயத்த ஆடைகள் மற்றும் உடைகள் மீதான வரி பூஜ்ஜியமாக இருக்கும் என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவிக்கிறது.
''இந்தச் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 263.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜவுளிச் சந்தைக்கான வாய்ப்பைத் திறந்துவிடும். இது கைவினைஞர்கள், பெண்கள், நெசவாளர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் தொகுப்புகளுக்குப் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.''
பிரதமர் நரேந்திர மோதி, இது உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் (ஐரோப்பா) மற்றும் 4-வது பெரிய பொருளாதாரம் (இந்தியா) இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐரோப்பாவிற்கு 6.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ''இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்லும் சுமார் 99 சதவீத ஏற்றுமதிகள் இனி பூஜ்ஜிய வரி வரம்பிற்குள் வரும். அதேபோல், இந்தியா தனது 99 சதவீதத்திற்கும் மேலான ஏற்றுமதிக்கு ஐரோப்பிய சந்தையில் நேரடி மற்றும் எளிதான அணுகலைப் பெறும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தொழிலாளர்களும் மாணவர்களும் பயனடைவார்கள். ஒப்பந்தத்தின்படி, தகவல் தொழில்நுட்பம் (IT), கல்வி மற்றும் நிதி போன்ற துறைகளில் இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்படும்.
அதோடு, ஐரோப்பாவிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு தங்குவதற்கான 9 மாத கால விசா கட்டமைப்பு குறித்தும் ஒப்புக்கொள்ளப்படுள்ளது.'' என தெரிவிக்கப்படுள்ளது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












