ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? உண்மையான காரணம் இதுதானா?

ஒற்றைத் தலைவலி, உடல்நலம், மைக்ரேன், அறிவியல், மூளை

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

    • எழுதியவர், சோபியா குவாக்லியா

ஒற்றைத் தலைவலி (Migraine disorder) பற்றிய நமது புரிதல் இறுதியாக மாறத் தொடங்கியுள்ளது. எது அறிகுறி, எது தூண்டுதல் (Trigger) என்ற கருத்துகளையும், பயனுள்ள சிகிச்சைகளை உருவாக்குவதற்கு மூளையின் எந்தப் பகுதி முக்கியமானது என்பதை பற்றிய எண்ணங்களை இந்த புரிதல் மாற்றி அமைக்கிறது.

வாரத்திற்கு இரண்டு முறை, என் தலையின் இடது பக்கம், என் மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையில் சற்று கூடுதல் இடைவெளி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். நான் தலையைச் சாய்க்கும்போது, அந்த இடைவெளி ஒரு மந்தமான, திரவம் போல் நகரும் வலியால் நிரம்புகிறது. அந்த வலி என் கண் விழிக்கு பின்னால் ஊடுருவி, அங்கு ஒரு கத்தியைப் போல அமர்ந்து கொள்கிறது; பின்னர் என் தாடை வரை கீழே இறங்குகிறது. சில நேரங்களில் நான் கண்களைச் சுருக்கும்போது, என் மனதின் பின்புறத்தில் அது எரிச்சலையும் ஒலியையும் உண்டாக்குகிறது. மற்ற நேரங்களில், வெளியே வரக் கதவைத் தட்டுவது போல அது துடிக்கிறது.

மருந்து எடுப்பதற்கு முன்பு அந்த வலியை நான் எவ்வளவு அதிகமாக ஓடவிடுகிறேனோ, அதைக் கட்டுப்படுத்த அவ்வளவு அதிக நேரம் எடுக்கும்; மேலும் மாத்திரைகளின் வீரியம் குறைந்தவுடன் அது மீண்டும் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். இதுதான் 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி.

உலகம் முழுவதும் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் எனது அனுபவத்தின் ஏதோ ஒரு பகுதியோடு தங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இந்த நரம்பியல் நிலை, உலகில் குறைபாடுகளை ஏற்படுத்தும் இரண்டாவது மிக முக்கியமான காரணமாகும். இருப்பினும், இது பொதுவானதாகவும், முடக்கும் பாதிப்புகளைக் கொண்டதாகவும் இருந்தபோதிலும், மைக்ரேன் இன்னும் பெரும்பாலும் ஒரு மர்மமாகவே உள்ளது.

மைக்ரேன் என்பது உண்மையில் என்ன, எதனால் ஏற்படுகிறது, நோயாளிகளின் வாழ்க்கையிலிருந்து இந்த நிலையை அகற்ற என்ன செய்ய முடியும் என்பது பற்றிப் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன.

"மிகக் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட நரம்பியல் கோளாறுகள் அல்லது பொதுவான கோளாறுகளில் இதுவும் ஒன்று என்று நான் கூறுவேன்," என்கிறார் அமெரிக்காவின் டாலஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் நடத்தை மற்றும் மூளை அறிவியல் துறையின் தலைவர் கிரகரி டஸ்ஸர்.

இப்போது, ஆராய்ச்சியாளர்கள் மைக்ரேனுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஒரு நோயாளியின் மூளையில் மின் சமிக்ஞைகளாக இது நிகழ்வதை நிகழ்நேரத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது. மரபணுக்கள், ரத்த நாளங்கள் மற்றும் நோயாளிகளின் தலைக்குள் சுழலும் மூலக்கூறு கலவைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம், மைக்ரேன் ஏன் ஏற்படுகிறது, அதற்கு எப்படிச் சிகிச்சை செய்யலாம் மற்றும் - இது வெறும் ஒரு எரிச்சலூட்டும் தலைவலி மட்டுமல்ல - ஏன் இது ஒரு நாள்பட்ட, முழு உடல் சார்ந்த அனுபவமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலையை விஞ்ஞானிகள் நெருங்கி வருகின்றனர்.

மைக்ரேனை ஆய்வு செய்வது ஏன் கடினமாக உள்ளது?

ஒற்றைத் தலைவலி, உடல்நலம், மைக்ரேன், அறிவியல், மூளை

பட மூலாதாரம், Getty Images

18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், மைக்ரேன் பொதுவாக பெண்கள் சார்ந்த ஒன்றாக முத்திரை குத்தப்பட்டது: அதாவது "மைக்ரேன் ஆளுமை கொண்ட புத்திசாலியான கவர்ச்சியான மற்றும் அழகான பெண்களை மட்டுமே தாக்கும்" என்று கருதப்பட்டது. மைக்ரேன் நோயாளிகளில் முக்கால்வாசி பேர் பெண்களாக இருந்தபோதிலும், பல நூற்றாண்டுகளாக நிலவும் இந்தத் தவறான கண்ணோட்டம் மைக்ரேன் பற்றிய ஆராய்ச்சியைத் தடுத்து நிறுத்தியது; மேலும் இதற்கு மிகக் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டது.

"மக்கள் இதை ஒரு ஹிஸ்டீரியா நோய் என்று நினைத்தார்கள்," என்கிறார் அமெரிக்காவின் மியாமி ஹெல்த் சிஸ்டம் பல்கலைக்கழகத்தின் தலைவலிப் பிரிவின் தலைவர் டெஷாமே மான்டீத். இன்றும் கூட, மிகச் சில பல்கலைக்கழகங்களே வலுவான மைக்ரேன் ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளன; மற்ற நரம்பியல் நிலைகளுடன் ஒப்பிடும்போது இதற்கான முதலீடுகள் மிகக் குறைவே.

இருப்பினும், மைக்ரேனின் உளவியல், உடல் மற்றும் பொருளாதாரச் சுமை மிகவும் உண்மையானது என்று மான்டீத் கூறுகிறார். ஒரு நபரின் வாழ்க்கையின் மிகவும் உற்பத்தித்திறன் வாய்ந்த ஆண்டுகளில் (இருபதுகளின் நடுப்பகுதி முதல் ஐம்பதுகளின் நடுப்பகுதி வரை) மைக்ரேன் மிகவும் பொதுவானதாக இருப்பதால், மைக்ரேன் உள்ளவர்கள் வேலையைத் தவிர்க்கவும், வேலைகளை இழக்கவும் மற்றும் முன்கூட்டியே ஓய்வு பெறவும் அதிக வாய்ப்புள்ளது.

பிரிட்டனின் தரவுகள் படி, மைக்ரேன் உள்ள 44 வயதுடைய ஒருவர், மைக்ரேன் இல்லாத ஒருவருடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திற்கு 19,823 பவுண்டுகள் (27,300 அமெரிக்க டாலர்கள் அல்லது சுமார் 21 லட்சம் ரூபாய்) கூடுதல் செலவை ஏற்படுத்துகிறார்; அதாவது ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஆண்டும் பொதுப் பொருளாதாரத்திற்கு 12 பில்லியன் பவுண்டுகள் (17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படுகிறது.

மைக்ரேன் ஆய்வு செய்வதில் உள்ள சவால்களில் ஒன்று அதன் அறிகுறிகள் எவ்வளவு பரந்த அளவில் இருக்கக்கூடும் என்பதுதான்.

ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களைப் போலவே, நானும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் உள்ள ஒரு பெண். எனக்கு மாதவிடாய் வரும்போது இந்தத் பாதிப்புகள் என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிடும். எனது தலைவலி பொதுவாக இடது பக்கத்தைத் தாக்குகிறது மற்றும் அசைவுகளால் மோசமடைகிறது. இதற்கு முன்னதாக வாசனையில் அதிக உணர்திறன் ஏற்படும், சில நேரங்களில் எனது இடது தோள் மற்றும் கை மரத்துப் போனது போலத் தோன்றும்.

ஆனால் மற்ற நோயாளிகள் குமட்டல் மற்றும் வாந்தி, தலைச்சுற்றல் வயிற்று வலி மற்றும் ஒளி மற்றும் ஒலிக்கு அதிக உணர்திறன் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் கடுமையான சோர்வை அனுபவிக்கிறார்கள், சிலருக்கு குறிப்பிட்ட உணவுகள் மீது ஆசை ஏற்படுகிறது. மற்றவர்கள் ஆரம்பக் கட்டங்களில் அதிகப்படியான கொட்டாவி விடுவதைக் காண்கிறார்கள். சுமார் 25% நோயாளிகளுக்கு 'ஆரா' (aura) ஏற்படுகிறது - அதாவது பிரகாசமான ஒளிக்கற்றைகள் அல்லது மங்கலான பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

"ஒட்டுமொத்த மைக்ரேன் தாக்குதலும் மிகவும் சிக்கலான ஒன்று," என்கிறார் டஸ்ஸர். "இது வெறும் வலி மட்டுமல்ல. தலைவலி தொடங்குவதற்கு முன்பே நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகள் இவை."

தாக்குதலைத் தூண்டும் என்று கருதப்படும் காரணிகளும் அதேபோல் மாறுபட்டவை: தூக்கமின்மை மற்றும் பட்டினி கிடப்பது நிச்சயமாக எனது தலைவலியைத் தூண்டுகிறது; ஆனால் மற்ற நோயாளிகள் சாக்லேட், பதப்படுத்தப்பட்ட சீஸ், காபி அல்லது வெள்ளை ஒயின் ஆகியவை தங்களுக்குத் தலைவலியைத் தூண்டுவதாகக் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு மன அழுத்தம் மைக்ரேனுடன் பிணைக்கப்பட்டுள்ளது; சுவாரஸ்யமாக, மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதும் மைக்ரேனை தூண்டுகிறது - அதனால்தான் வார இறுதி நாட்களில் வரும் பாதிப்புகள் மிகவும் பிரபலமானவை.

தூண்டுதல்கள் vs அறிகுறிகள்

ஒற்றைத் தலைவலி, உடல்நலம், மைக்ரேன், அறிவியல், மூளை

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

படக்குறிப்பு, ஒற்றைத் தலைவலிக்கான தூண்டுதல்கள் என்று கருதப்படும் சில விஷயங்கள், உண்மையில் ஒற்றைத் தலைவலி பாதிப்பின் அறிகுறிகளாகவே இருக்கலாம்.

மைக்ரேனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் இந்தத் தூண்டுதல்களின் பரந்த வரிசையைக் கண்டு நீண்ட காலமாக வியப்படைந்தாலும், இப்போது வளர்ந்து வரும் ஆராய்ச்சிகள் இந்தத் தூண்டுதல்களில் பலவும் ஆரம்பகால அறிகுறிகளின் வெளிப்பாடாகவே இருக்கலாம் என்று கூறுகின்றன.

ஒரு நோயாளி தாக்குதலின் ஆரம்பக் கட்டங்களில் ஆழ்மனதில் சில உணவுகளைத் தேடக்கூடும் - உதாரணமாக சாக்லேட் அல்லது சீஸ். இதன் பொருள் அந்த உணவை உண்பது தாக்குதலின் தூண்டுதலாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் பாதிப்பு ஏற்கனவே தொடங்கியிருக்கக்கூடும் என்கிறார் நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் நச்சுயியல் பேராசிரியர் டெபி ஹே.

தனிப்பட்ட முறையில், வாசனை திரவியம் (Perfume) தான் எனக்கு மைக்ரேன் தாக்குதலை ஏற்படுத்துகிறதா என்று நான் எப்போதும் யோசித்திருக்கிறேன். ஆனால் நான் தினமும் வாசனை திரவியம் பயன்படுத்துகிறேன், எனக்குத் பாதிப்பு ஏற்படும் நாட்களில் மட்டுமே அந்த வாசனை என்னைத் தாக்குகிறது என்பதை உணர்கிறேன். எனக்கு மைக்ரேன் வரவில்லை என்றால், நான் எத்தகைய வாசனையை நுகர்கிறேன் என்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

"சரி, இதற்கான பொதுவான காரணமாக கூறப்படுவது அநேகமாக தவறாக இருக்கலாம் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணம்," என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் பீட்டர் கோட்ஸ்பி. "அதற்குப் பதிலாக, பாதிப்பின் தொடக்கநிலையில், நீங்கள் வாசனைக்கு அதிக உணர்திறன் கொண்டவராக மாறுகிறீர்கள், சாதாரண நேரங்களில் நீங்கள் கவனிக்காத வாசனைகளை அப்போது கவனிக்கிறீர்கள்."

ஒளி தங்களுக்குத் தாக்குதலைத் தூண்டுவதாக உணரும் மைக்ரேன் நோயாளிகளின் மூளை ஸ்கேன்களை கோட்ஸ்பி ஆய்வு செய்து தங்களது வலிக்கு ஒளியை காரணமாக சொல்லாதவர்களுடன் ஒப்பிட்டார். மைக்ரேன் வருவதற்குச் சற்று முன்பு, அவர்களின் மூளையில் பார்வைக்குத் தொடர்புடைய பகுதியில் அதிகப்படியான செயல்பாடு இருந்தது; அதாவது அந்த நேரத்தில் அவர்கள் மற்றவர்களை விட ஒளிக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக உயிரியல் ரீதியாகத் தயாராக இருந்தனர். "சந்தேகத்திற்கு இடமின்றி, உயிரியல் ரீதியாக ஏதோ ஒன்று நடக்கிறது," என்கிறார் கோட்ஸ்பி.

ஆனால் அந்த அடிப்படை உயிரியல் பொறிமுறையைக் கண்டறியும் தேடல் நீண்ட ஒன்றாக இருந்து வருகிறது.

மைக்ரேனின் மரபணு தோற்றம்

ஒற்றைத் தலைவலி, உடல்நலம், மைக்ரேன், அறிவியல், மூளை

பட மூலாதாரம், Getty Images

இரட்டை குழந்தைகள் மீதான ஆய்வுகள், இதில் ஒரு வலுவான மரபணு கூறு இருப்பதைக் காட்டுகின்றன; உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு மைக்ரேன் இருந்தால், நீங்களும் புள்ளிவிவரப்படி அந்த நரம்பியல் நிலையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். மைக்ரேனால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 30-60% பேருக்கு மரபுவழி மரபணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; மீதமுள்ளவை வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் நடத்தை போன்ற பிற காரணிகளால் ஏற்படுகின்றன என்கிறார் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரபணு நிபுணர் டேல் நைஹோல்ட்.

நைஹோல்ட் ஆயிரக்கணக்கான மக்களைச் சோதித்து இதற்கு காரணமான மரபணுக்களைக் கண்டறிய முயற்சிக்கிறார், ஆனால் அந்தத் தேடல் "நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது" என்கிறார் அவர். 2022-ல், அவர் 1,00,000 மைக்ரேன் நோயாளிகளின் மரபணுக்களை ஆய்வு செய்து, மைக்ரேன் இல்லாத 7,70,000 மக்களுடன் ஒப்பிட்டார்.

அவர் மைக்ரேனுடன் தொடர்புடைய 123 "ரிஸ்க் ஸ்னிப்ஸ்" - அதாவது மக்களின் டிஎன்ஏ குறியீட்டில் உள்ள மிகச் சிறிய வேறுபாடுகளை - அடையாளம் கண்டுள்ளார். இப்போது அவர் இன்னும் பலவற்றைக் கண்டறியும் நம்பிக்கையில் 3,00,000 நோயாளிகளுடன் மற்றொரு சோதனையை நடத்தி வருகிறார். "அநேகமாக ஆயிரக்கணக்கான மரபணுக்கள் இருக்கலாம்" என்று அவர் மதிப்பிடுகிறார்.

இருப்பினும், நைஹோல்ட்டின் பகுப்பாய்வு ஏற்கனவே வெளிப்படுத்திய ஒரு விஷயம் என்னவென்றால், மைக்ரேனுடன் தொடர்புடைய சில மரபணு அடையாளங்கள் மனச்சோர்வு மற்றும் நீரிழிவு நோயுடனும், மூளையின் பல்வேறு கட்டமைப்புகளின் அளவுடனும் நெருங்கிய தொடர்புடையவை. இந்த மரபணு தொகுப்புகள் மூளையைப் பாதிக்கும் விதம் காரணமாக, அவை நிஜ உலகில் வெவ்வேறு நிலைகளாகத் தோன்றலாம் என்று நைஹோல்ட் சந்தேகிக்கிறார். (இருப்பினும், மருந்துகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் வகையில் குறிப்பிட்ட எந்த மரபணுக்களையும் இந்த குழுவினரால் இன்னும் சுட்டிக்காட்ட முடியவில்லை.)

ரத்த ஓட்டத்திற்கும் மைக்ரேனுக்கும் இடையிலான தொடர்பு

ஒற்றைத் தலைவலி, உடல்நலம், மைக்ரேன், அறிவியல், மூளை

பட மூலாதாரம், Serenity Strull/ Getty Images

படக்குறிப்பு, மைக்ரேன் பற்றிய அடிப்படை அறிவியலை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்வது, ஒரு நாள் இன்னும் சிறந்த சிகிச்சைகளை உருவாக்க வழிகாட்டக்கூடும்.

பலரின் தலைவலி துடிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரிப்பதே மைக்ரேன் பாதிப்புகளுக்குக் காரணம் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் ரத்த ஓட்டத்திற்கும் மைக்ரேன் தொடங்குவதற்கும் இடையே ஒரு உறுதியான தொடர்பை விஞ்ஞானிகளால் ஒருபோதும் கண்டறிய முடியவில்லை. "இது 'ரத்த நாளம் இந்த காரியத்தை செய்கிறது' என்பது போன்ற எளிமையான விஷயம் அல்ல," என்கிறார் டஸ்ஸர். "பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் ஒரு மருந்தைக் கொடுத்தால், அனைவருக்கும் மைக்ரேன் வந்துவிடாது."

இதன் பொருள் ரத்த நாளங்களுக்கும் மைக்ரேனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதல்ல: மைக்ரேனின் தோற்றம் குறித்த மரபணு சோதனையில் நைஹோல்ட் கண்டுபிடித்த பல அபாய மரபணுக்கள் நரம்புகளை ஒழுங்குபடுத்த உதவும் மரபணுக்களாகும். பாதிப்புகளின் போது ரத்த நாளங்கள் அசாதாரணமாக விரிவடைகின்றன, மேலும் மைக்ரேன் வலியைக் குறைக்க மருந்துகள் மூலம் அவற்றைச் சுருக்க முடியும். எனவே, அவை மைக்ரேன் தாக்குதலில் நிச்சயமாக ஈடுபட்டுள்ளன, ஆனால் அவை காரணமாக இருக்காது. ரத்த நாளங்களில் வலியை உண்டாக்கும் மூலக்கூறுகள் வெளியாவது அல்லது ரத்த நாளங்களிலிருந்து மூளைக்கு அனுப்பப்படும் பிற சமிக்ஞைகள் போன்ற பிற மறைந்திருக்கும் காரணிகளால் மைக்ரேனில் அவற்றின் தாக்கம் இருக்கலாம் என்கிறார் டஸ்ஸர் அல்லது அவற்றின் விரிவாக்கம் மைக்ரேனின் ஒரு காரணியாக இல்லாமல் ஒரு அறிகுறியாகவே இருக்கலாம்.

"மைக்ரேன் என்பது மக்கள் நரம்பியல் மற்றும் மனநல மருத்துவம் என்று அழைக்கும் எல்லைக்கோட்டிற்குள் அமர்ந்திருக்கிறது," என்கிறார் கோட்ஸ்பி. இவரது சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைக்ரேனுக்கும் வலிப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளனர். "மத்திய நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் உள்ள சவால் என்னவென்றால், மூளையின் உயிரணுக்கள், அதன் அமைப்பு மற்றும் நியூரான்கள் வழியாக மின்சாரம் எவ்வாறு பாய்கிறது என்பதைப் பகுப்பாய்வு செய்வதுதான்" என்கிறார் கோட்ஸ்பி.

மூளை அலைகளை உருவாக்குதல்

ஒற்றைத் தலைவலி, உடல்நலம், மைக்ரேன், அறிவியல், மூளை

பட மூலாதாரம், Getty Images

மைக்ரேனில் மூளையின் பங்கு குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அதிகம் முன்வைக்கும் கோட்பாடு என்னவென்றால், மைக்ரேன் பாதிப்பு என்பது மூளையின் புறணி வழியாகப் பரவும் ஒரு மெதுவான, அசாதாரண மின் அலையாகும்; இது 'கார்டிகல் ஸ்பிரெடிங் டிப்ரஷன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த அலை மூளையின் செயல்பாட்டை அடக்கி, எச்சரிக்கை உணர்வைத் தூண்டும்வகையில் அருகிலுள்ள வலி நரம்புகளைத் தூண்டி, வீக்கத்தை உண்டாக்குகிறது. கார்டிகல் ஸ்பிரெடிங் டிப்ரஷன் அலை அடிப்படையில் "அனைத்து வகையான கெட்ட மூலக்கூறுகளையும் மூளையில் கொட்டுகிறது," என்கிறார் அமெரிக்காவின் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் நரம்பியல் பேராசிரியர் மைக்கேல் மாஸ்கோவிட்ஸ்.

ஆனால் இந்த மோசமான அலை ஏன் தொடங்குகிறது? அது எங்கே பரவுகிறது? மேலும் இந்த மின் அலை எவ்வாறு இவ்வளவு அறிகுறிகளுக்கு இட்டுச் செல்கிறது? அதைத் துல்லியமாகக் கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது. மார்ச் 2025-ல், அறுவை சிகிச்சைக்காகத் தயாராகி வந்த 32 வயது நோயாளியின் மூளையைக் கண்காணிக்கும் போது விஞ்ஞானிகள் இந்த அலையை நிகழ்நேரத்தில் படம்பிடித்தனர். அவரது மண்டை ஓடு வழியாகச் செருகப்பட்ட 95 மின்முனைகள் (electrodes) மூலம் இந்த அலை கண்டறியப்பட்டது. இது அவரது மூளையின் காட்சிப் பகுதியிலிருந்து (visual cortex) பரவியது - அதனால்தான் சிலருக்கு ஒளியின் உணர்திறன் மற்றும் 'ஆரா' பார்வைகள் ஏற்படுகின்றன என்கிறார் மாஸ்கோவிட்ஸ் - பின்னர் மூளை முழுவதும் 80 நிமிடங்கள் பரவியது.

அலையின் தன்மையில் உள்ள மாறுபாடுகள் ஏன் சிலருக்கு 'ஆரா' மட்டும் ஏற்படுகிறது, சிலருக்கு தலைவலிக்கு முன்பு ஆரா ஏற்படுகிறது, மற்றும் சிலருக்கு ஆராவுக்கு முன்பு தலைவலி ஏற்படுகிறது என்பதை விளக்க உதவுகிறது - இது அலையின் வடிவங்களைப் பொறுத்தது என்கிறார் மாஸ்கோவிட்ஸ். ஆனால் கார்டிகல் ஸ்பிரெடிங் டிப்ரஷன் இன்னும் மைக்ரேன் தாக்குதலின் போது ஏற்படும் சோர்வு, கொட்டாவி, மூளை மந்தநிலை மற்றும் குறிப்பிட்ட உணவுகள் மீதான ஆசைகள் போன்ற பிற நரம்பியல் அறிகுறிகளை விளக்குகிறது.

ஒரே ஒரு நோயாளி சம்பந்தப்பட்ட மற்றொரு ஆய்வு, மூளையின் ஆழத்தில் உள்ள 'ஹைபோதாலமஸ்' எனப்படும் ஒரு சிறிய பகுதி, மைக்ரேன் தாக்குதலுக்கு ஒரு முழு நாளைக்கு முன்பே விசித்திரமாகச் செயல்படுவதாகக் கூறுகிறது. ஹைபோதாலமஸ் மன அழுத்த எதிர்வினைகள் மற்றும் தூக்க-விழிப்புச் சுழற்சியில் ஈடுபட்டுள்ளது, இவை பொதுவான மைக்ரேன் தூண்டுதல்களாகும். ஆனால் அதன் பங்கைத் தெளிவாகப் புரிந்துகொள்ளப் பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

இருப்பினும், காட்சிப் பகுதி அல்லது ஹைபோதாலமஸ் ஆகிய இரண்டுமே மைக்ரேன் ஏற்படும் இடங்கள் அல்ல. தலைவலி மூளையின் மெனிஞ்சஸ் - மூளையின் தடிமனான, மூன்று அடுக்கு வெளிச்சவ்வு - நரம்பு இழைகளிலும் மற்றும் முக்கோண நரம்புத் திரள்கள் எனப்படும் தடிமனான நரம்புக் கற்றை வழியாகவும் உணரப்படுகிறது. அதனால்தான் எனது மைக்ரேன் தாக்குதலை எனது கண் விழிக்குப் பின்னாலும் தாடை வரையிலும் உணர்கிறேன்.

எனவே சில விஞ்ஞானிகள் மூளையைச் சுற்றியுள்ள இந்தப் பை போன்ற அமைப்பு மைக்ரேனைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலைக் கொண்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

மெனிஞ்சஸ் வகிக்கும் பங்கு

மெனிஞ்சஸில் நோய் எதிர்ப்பு செல்கள் நிறைந்துள்ளன, மூளையைப் பாதுகாப்பதே அவற்றின் வேலை. அவை தூண்டப்படும்போது, அவை வெளியிடும் மூலக்கூறுகள் மெனிஞ்சஸின் மறுபுறம் உள்ள நியூரான்களைப் பாதிக்கும் வீக்கத்தைத் தூண்டும். இந்த நோய் எதிர்ப்பு செல்களின் அதிகப்படியான எதிர்வினை மைக்ரேனைத் தூண்டக்கூடும் என்ற கருதுகோளை டஸ்ஸர் மற்றும் பிறர் முன்வைக்கின்றனர். ஒவ்வாமை, மூக்கடைப்பு மற்றும் ஹே காய்ச்சல் (Hay fever) உள்ளவர்களிடமும், ஒவ்வாமை காலங்களிலும் மைக்ரேன் பாதிப்புகள் புள்ளிவிவரப்படி அதிகமாகக் காணப்படுவது ஏன் என்பதை இது விளக்கக்கூடும்; ஏனெனில் மகரந்தம் போன்ற ஒவ்வாமைப் பொருட்கள் இந்த நோய் எதிர்ப்பு செல்களைத் தூண்டக்கூடும்.

சுற்றுச்சூழல் தூண்டுதல்களுக்கும் மூளையில் என்ன நடக்கிறது என்பதற்கும் இடையே மெனிஞ்சஸ் ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கக்கூடும் என்பதற்கான பிற அறிகுறிகளும் உள்ளன. இந்தச் சவ்வில் அமிலத்தன்மையின் மாற்றங்களைக் கண்டறியும் கட்டமைப்புகள் உள்ளன - இவை உடலியல் ஏற்ற இறக்கங்கள், மூளையைச் சுற்றியுள்ள வீக்கம் அல்லது மூளையின் செயல்பாட்டை அடக்கும் ஒரு மின் அலை ஆகியவற்றால் ஏற்படலாம். மெனிஞ்சஸ் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறுவதை அவை கண்டறியும்போது, மைக்ரேன் பாதிப்புகளில் ஈடுபடும் வலி இழைகளைத் தூண்டுவதற்கு மின் சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

மெனிஞ்சஸின் மற்ற பகுதிகள் வெப்பம் மற்றும் குளிர்ச்சிக்கு இதே போன்ற முறையில் பதிலளிக்கின்றன. இது ஏன் சில நோயாளிகள் ஐஸ் பேக்குகள் அல்லது சூடான தலையணைகள் மூலம் தங்கள் தலைவலிக்கு நிவாரணம் பெறுகிறார்கள் என்பதை விளக்க உதவும்.

ஹார்மோன் ஏற்ற இறக்கங்களும் பெரும்பாலும் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகின்றன. பல நோயாளிகள் தங்களின் மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்தில் மைக்ரேன் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் 'புரோஸ்டாக்லாண்டின்கள்' எனப்படும் மூலக்கூறு குடும்பம் மூளையில் உள்ள ரத்த நாளங்களின் விரிவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

'மைக்ரேனுக்கு பல பாதைகள் உள்ளன'

இந்த மாறுபட்ட காரணிகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகின்றன. "இறுதியில் ஒரு பொதுவான காரணி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் மைக்ரேனுக்கு பல பாதைகள் உள்ளன" என்கிறார் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மருந்தியல் மையத்தின் இயக்குநர் அமினா பிரதான். "ஒரு நபருக்குள்ளேயே மைக்ரேன் வருவதற்குப் பல வழிகள் இருக்கலாம் மற்றும் ஒவ்வொருவருக்கும் பல விஷயங்களின் கலவை நடந்து கொண்டிருக்கிறது."

இருப்பினும், ஒரு மூளையை மைக்ரேன் மூளையாக மாற்றுவது எது என்பதற்கான நிலையான, புறநிலை மூலக்கூறு உயிரியல் குறிகாட்டியைத் தேடும் பணி இன்னும் முடிவடையவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் மிக முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்று அத்தகைய ஒரு மூலக்கூறைத் தேடியதில் இருந்து வந்தது.

ஆராய்ச்சியாளர்கள் 'கால்சிட்டோனின் மரபணு தொடர்பான பெப்டைடுகள்' (calcitonin gene-related peptides - CGRP) எனப்படும் ஒரு வகை நியூரோமாடுலேட்டரின் அசாதாரண உயர் அளவுகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்தச் சிறிய புரதங்கள் நியூரான் செயல்பாடு மற்றும் உணர்திறனை அதிகரிக்க அல்லது குறைக்க உதவும் டிம்மர் சுவிட்சுகள் போலச் செயல்படுகின்றன. மைக்ரேன் தாக்குதலின் போது இவற்றின் அளவு அதிகமாக இருந்ததாகத் தோன்றியது; ஆனால் கோட்ஸ்பி மற்றும் அவரது குழுவினரின் ஆராய்ச்சியின் படி, மைக்ரேன் பாதிப்பு உள்ளவர்களுக்குத் பாதிப்பு இல்லாத நேரங்களிலும் இவை அதிகமாகவே இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நுண்ணறிவு, CGRP-களை இலக்காகக் கொண்டு சந்தையில் புதிய மருந்துகள் வர வழிவகுத்தது. இது ஒரு தாக்குதலை ஆரம்பத்திலேயே நிறுத்த அல்லது அதைத் தடுக்க உதவுகிறது. மற்ற சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறாத நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் பெரிய அளவில் உதவியுள்ளன. அக்டோபர் 2025-ல் ஒரு வருடம் முழுவதும் CGRP எடுத்துக்கொண்ட 570-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 70% பேர் தங்கள் மைக்ரேன் பாதிப்புகளின் எண்ணிக்கையில் 75% குறைவது என்ற இலக்கை அடைந்துள்ளனர்; மேலும் சுமார் 23% பேருக்கு மைக்ரேன் பாதிப்புகள் முற்றிலும் இல்லாமல் போயின.

"மைக்ரேனுக்கான மூலக்கூறு அடையாளத்தைக் கண்டறிய முடிந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும், குறிப்பாக நோயாளிகளுக்குச் சிகிச்சையைத் தொடங்கும்போது, யாருக்கு மருந்து வேலை செய்கிறது, யாருக்கு செய்யவில்லை என்பதைக் கண்டறிய இது உதவும்," என்கிறார் மான்டீத்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால் இன்னமும், CGRP உயர்வை வெளிப்படுத்தும் ரத்த அளவீடுகள் பெரும்பாலும் மூளையின் புற வழிமுறைகளையே பிரதிபலிக்கின்றன என்கிறார் பிரதான். தாக்குதலின் போது மூளையின் பகுதியில் CGRP-கள் ஏன் இவ்வளவு அதிகமாகக் காணப்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாது. மைக்ரேன் என்பது முழு உடலையும் பாதிக்கும் ஒரு ஸ்பெக்ட்ரம் போன்ற, நாள்பட்ட நிலை என்று அதிகம் கருதப்படுவதால், இவை ஒரு பெரிய புதிரின் சிறிய துண்டுகளே.

"இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்," என்கிறார் பிரதான். இது சற்று சவாலானதாகத் தோன்றினாலும் - வாரந்தோறும் எனக்கு வலி வரும்போது இது என் தலையிலுள்ள வலியை இன்னும் குறைக்கவில்லை என்றாலும் - அறிவியல் மெதுவாக மைக்ரேனின் மர்மத்தை உடைத்து வருகிறது என்பது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. அனைவருக்கும் ஏற்ற ஒரே பதில் இன்னும் இல்லை என்றாலும், அதற்குப் பதிலாகப் பல விருப்பங்கள் ஒன்றிணைய வாய்ப்புள்ளது.

"மைக்ரேனில் என்ன நடக்கிறது என்பதன் மேற்பரப்பை மட்டுமே நாம் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்," என்கிறார் பிரதான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு