சீனா ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு இவ்வளவு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியது ஏன்?

பட மூலாதாரம், CCTV
- எழுதியவர், ஜோனாதன் ஹெட்
- பதவி, தென்கிழக்கு ஆசிய செய்தியாளர்
கடந்த செப்டம்பரில் மியான்மரின் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு சீனா விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, உலகின் வேறு எந்தப் பகுதியையும்விட சீனா அதிகமான மக்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அதன் சரியான எண்ணிக்கை அரசாங்க ரகசியமாக உள்ளது. ஊழல் குற்றங்களுக்காக அதிகாரிகளுக்கு அடிக்கடி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட மிங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அதைவிட மிகவும் தீவிரமானவை.
ஷான், மியான்மரில் வறுமையிலுள்ள ஒரு மாகாணம். அங்கு, தொலைதூர எல்லையில் அமைந்துள்ள லௌக்கைங் நகரத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல், மிங், பௌ, வெய், லியு ஆகிய வம்சாவளிகளைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
நான்கு குடும்பங்கள்
கடந்த 1980களில் இருந்து பல ஆண்டுகளுக்கு, எம்.என்.டி.ஏ.ஏ என்றழைக்கப்படும் ஆயுதமேந்திய இனக்குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் லௌக்கைங் மற்றும் அருகிலுள்ள பகுதிகள் இருந்தன.
மியான்மரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான ராணுவத் தாக்குதலின் மூலம், எம்.என்.டி.ஏ.ஏ என்ற ஆயுதமேந்திய இனக்குழு அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த குடும்பங்கள் செல்வாக்கு பெறத் தொடங்கின.
'நான்கு குடும்பங்கள்' என்று அறியப்பட்ட மிங், பௌ, வெய், லியு குடும்பத்தினர் அப்பகுதியைக் கைப்பற்றி, அங்கு நிலவிய, அபின், மெத்தம்பெட்டமைன் உற்பத்தியைச் சார்ந்திருந்த பழைய நிலையை மாற்றி சூதாட்ட விடுதிகள், இணையவழி மோசடிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கினர்.
அவர்கள் மியான்மர் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். டிசம்பர் 2021இல் தனது ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, மின் ஆங் ஹ்லைங் தலைநகர் நேபிடாவில் லியு குடும்பத்தின் தலைவரான லியு ஜெங்சியாங்கிற்கு விருந்தளித்து, "அரசின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அசாதாரண பங்களிப்புக்காக" ஒரு கௌரவ பட்டத்தையும் வழங்கினார்.

பட மூலாதாரம், Chinese Ministry of Public Security
'சீனாவை சேர்ந்த பலர் கொலை'
அவரது 'ஃபுல்லி லைட்' நிறுவனம் மியான்மர் முழுவதும் லாபகரமான தொழில்களைக் கொண்டிருந்தது. அந்த நான்கு குடும்பங்களின் பிற உறுப்பினர்கள் ராணுவ ஆதரவு பெற்ற யு.எஸ்.டி.பி கட்சியின் வேட்பாளர்களாக இருந்தனர்.
லௌக்கைங்கில் அவர்கள் நடத்திய மோசடி மையங்கள் கொடூரமானவையாக இருந்தன. ஆசியாவின் பிற பகுதிகளிலுள்ள மோசடி மையங்களைவிட இவை மிகவும் மோசமானவை. அங்கு சித்திரவதை என்பது ஒரு வழக்கமான செயலாக இருந்தது.
அதிக சம்பளம் தரும் வேலைகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். ஆனால், அவர்கள் உண்மையில் பெரிய கட்டடங்களில் பூட்டி வைக்கப்பட்டு, இணைய ஊடகங்களின் வழியாக ஒருவரின் நம்பிக்கையை மெதுவாகப் பெற்று, பின்னர் அவர்களிடம் இருந்து பெரும் தொகையைத் திருடும் இணைய மோசடி வேலைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு சிக்கியவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களும், அங்கு சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரும் சமூக ஊடகங்களில் தங்கள் புகார்களையும் உதவி கோரல்களையும் பதிவிடத் தொடங்கினர்.
லௌக்கைங்கில் மிகவும் நன்கு அறியப்பட்ட இத்தகைய ஒரு மோசடி மையம்தான் 'க்ரெளசிங் டைகர் வில்லா'. இது மிங் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அக்டோபர் 2023இல் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியென நம்பப்படும் சம்பவம் ஒன்றின்போது, காவலர்கள் சீனாவை சேர்ந்த பலரைக் கொலை செய்தனர். இதனால் சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய உள்நாட்டுப் போரில் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக எம்.என்.டி.ஏ.ஏ குழு மற்றும் அதன் கூட்டாளிகள் மேற்கொண்டு வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிப்படையான ஆதரவுடன், லௌக்கைங்கை தாக்கி மீண்டும் கைப்பற்றினர்.
அங்கு நடக்கும் மோசடி தொழில்களை முற்றிலுமாக ஒழிப்பதாக எம்.என்.டி.ஏ.ஏ. உறுதி பூண்டது.
அவர்கள் அந்த நான்கு குடும்பங்களின் தலைவர்களையும் கைது செய்ததோடு, அவர்களது உறவினர்கள், கூட்டாளிகள் என 60க்கும் மேற்பட்டோரை சீன காவல்துறையிடம் ஒப்படைத்தனர். குடும்பத் தலைவரான மிங் சூசாங், பிடிபட்ட பிறகு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீன காவல்துறையின் விசாரணைகளின்போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், தனது பலத்தைக் காட்டுவதற்காகவே கூட்டத்தில் ஒருவரைத் தேர்வு செய்து பிறர் முன்னிலையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குடும்பங்களின் மீது மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே இந்த விவரங்களை சீனா வெளியிட்டுள்ளது.
மேலும், பௌ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கின்றனர். அதோடு, வெய் மற்றும் லியு குடும்பங்களின் மீதான வழக்குகள் இன்னும் முடிவடையவில்லை.

இந்த நான்கு குடும்பங்களும் இனரீதியாக சீனர்கள். மேலும், யுனான் மாகாணத்தில் எல்லையின் சீன பகுதியிலுள்ள அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.
மேலும், லௌக்காங்கில் உள்ள இந்த மோசடி தொழில்களுக்கு எதிரான நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தீர்க்கமானதாக இருந்துள்ளது.
இதோடு, பெரிய மோசடி நடவடிக்கைகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சீன வணிக பிரமுகர்களை திருப்பி அனுப்ப தாய்லாந்து மற்றும் கம்போடியாவை சீனா சம்மதிக்க வைத்துள்ளது. அவர்களில் மியான்மரின் போரால் பாதிக்கப்பட்ட கரேன் மாகாணத்தில் ஒரு முழு நகரத்தையே கட்டியெழுப்பிய ஷே ஷிஜியாங்கும் ஒருவர். மற்றொருவர், கம்போடியாவில் தனது பிரின்ஸ் குரூப் நிறுவனத்தின் மூலம் செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்த சென் ஷி.
அத்துடன், மோசடி மையங்களில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கான சீனர்களையும், விசாரணைகளுக்காக சீனா மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது.
இருப்பினும், இந்த மோசடி வணிகம் தம்மைத் தகவமைத்துக் கொண்டு, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அதை முற்றிலுமாக முடக்குமாறு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கம்போடிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோதிலும், இதுவே இன்னமும் அந்நாட்டில் மிகப்பெரிய தொழிலாகக் கருதப்படுகிறது.
மேலும், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள கேகே பார்க், ஷுவே கோக்கோ போன்ற முக்கிய மோசடி மையங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான போதிலும், இந்தத் தொழில் மியான்மரில் புதிய பகுதிகளுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












