செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது? முன்னணி நாடாக மாறுமா?

கணினி சிப் உற்பத்தியில் சீனா, தைவானை இந்தியாவால் முந்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ப்ரீத்தி குப்தா
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்

அர்னாப் ராய், தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். அவரைப் பொறுத்தவரை, நம்பகமான கணினி சிப்கள் விநியோகிக்கப்படுவது அவசியமானது.

இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள அவரது நிறுவனம், மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் செயல்படத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கிறது.

"அடிப்படையில், தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் முழுவதும் இணைய தொடர்புகளைக் கொண்டு செல்லத் தேவையான மின்னணு சாதனங்களை நாங்கள் விநியோகிக்கிறோம்," என்கிறார் அவர்.

அதற்கு தொலைத்தொடர்பு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சிப்கள் தேவை.

"டெலிகாம் சிப்கள் அடிப்படையில், ஸ்மார்ட்போன் சிப்களில் இருந்து வேறுபட்டவை. அவை லட்சக்கணக்கான பயனர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் வரும் மிகப்பெரிய அளவிலான தரவுகளைக் கையாள்கின்றன.

இந்த நெட்வொர்க்குகளின் இயக்கம் தடைபடக்கூடாது. நம்பகத்தன்மை, பிரச்னைக்குரிய நேரத்தில் சமாளிப்பதற்கான பாதுகாப்பு அம்சம் போன்றவை மிகவும் அவசியம். சிப் கட்டமைப்பு அதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்," என்று கூறுகிறார் அர்னாப் ராய்.

'செமிகண்டக்டர் உற்பத்தி இல்லை'

கணினி சிப்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. அந்த கணினி சிப்களில் (செமிகண்டக்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) பலவற்றை தேஜஸ் நிறுவனம் வடிவமைக்கிறது.

உலகின் செமிகண்டக்டர் பொறியாளர்களில் 20% பேர் இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

"கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய உலகளாவிய சிப் நிறுவனமும், அதிநவீன தயாரிப்புகளில் பணியாற்றும் தனது மிகப்பெரிய அல்லது இரண்டாவது-பெரிய சிப் வடிவமைப்பு மையத்தை இந்தியாவில் கொண்டுள்ளது," என்று இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா கூறுகிறார்.

ஆனால், செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை.

இதனால், தேஜஸ் நெட்வொர்க்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சிப்களை இந்தியாவில் வடிவமைத்து, அவற்றை வெளிநாடுகளில் உற்பத்தி செய்கின்றன.

தேஜஸ் நெட்வொர்க்ஸ் மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான உபகரணங்களை விநியோகிக்கிறது

பட மூலாதாரம், Tejas Networks

படக்குறிப்பு, தேஜஸ் நெட்வொர்க்ஸ் மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான சாதனங்களை விநியோகிக்கிறது

கோவிட் பேரிடரின்போது, இந்த அமைப்பின் பலவீனம் வெளிப்பட்டது. அப்போது சிப்களின் விநியோகம் தடைபட்டதால், அனைத்து தொழில் துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருந்தது.

"குறைக்கடத்தி என்று அழைக்கப்படும் இந்த செமிகண்டக்டர்களின் உற்பத்தியை உலகளவில் பார்த்தால், ஒரு சில இடங்களிலேயே அதிகமாகக் குவிந்துள்ளது. இத்தகைய சூழல் கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளதை பெருந்தொற்றுப் பேரிடர் தெளிவுபடுத்தியது," என்று தெரிவித்தார் அர்னாப் ராய்.

இந்த நிலைமை, இந்தியாவை அதன் சொந்த செமிகண்டக்டர் தொழில்துறையை உருவாக்கத் தூண்டியது.

"உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் எவ்வளவு பலவீனமானவை என்பதை கோவிட் பேரிடர் நமக்குக் காட்டியது. உலகின் ஒரு பகுதி மூடப்பட்டால், அனைத்து இடங்களிலும் மின்னணுவியல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது" என்கிறார் சின்ஹா.

மேலும் அவர், "அதனால்தான் அத்தகைய அபாயத்தைக் குறைக்கவும், மீள்திறனை அதிகரிக்கவும் இந்தியா தனது சொந்த செமிகண்டக்டர் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது," என்றார்.

செமிகண்டக்டர் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு அமிதேஷ் குமார் சின்ஹா தலைமை தாங்குகிறார். இதில், உற்பத்திச் செயல்முறையின் எந்தெந்தப் பகுதிகளில் இந்தியாவால் பிற நாடுகளுடன் போட்டியிட முடியும் என்பதைக் கண்டறிவதும் அடங்கும்.

கணினி சிப்கள் சிலிகான் தகடுகளின் மீது மின்சுற்றுகளைப் பொறிப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கணினி சிப்கள் சிலிகான் தகடுகளின் மீது மின்சுற்றுகளைப் பொறிப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன

இந்தியாவின் கவனம் எங்கே?

கணினி சிப் தயாரிப்பதில் பல கட்டங்கள் உள்ளன. அதில் முதலாவதாக இருக்கும் சிப் வடிவமைப்பில் இந்தியா ஏற்கெனவே வலுவாக உள்ளது.

இரண்டாவது கட்டம், வேஃபர் தயாரிப்பு. இதில், மிகவும் மெல்லிய சிலிகான் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்பு இயந்திரங்கள் இந்தத் தகடுகளின் மீது மிகச் சிறிய மின்னணு சுற்றுகளை வரைகின்றன. இந்த இயந்திரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் எனப்படும் பிரமாண்ட தொழிற்சாலைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டாவது கட்டத்தில், குறிப்பாக மிகவும் அதிநவீனமான சிப்களின் உற்பத்தியைப் பொறுத்தவரை, தைவானில் உள்ள நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சீனா அதை முந்துவதற்கு முயல்கிறது.

மூன்றாவது கட்டத்தில், அந்தப் பெரிய சிலிகான் வேஃபர்கள் தனித் தனி சிப்களாக வெட்டப்பட்டு, பாதுகாப்பு உறைகளில் அடைக்கப்பட்டு, இணைப்பிகளுடன் இணைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன.

அவுட்சோர்ஸ்ட் செமிகண்டக்டர் அசெம்ப்ளி மற்றும் சோதனை (OSAT) என்றழைக்கப்படும் இந்த மூன்றாவது கட்டத்தைத்தான், இந்தியா தனது உற்பத்திச் செயல்முறையின் இலக்காகக் கொண்டுள்ளது.

"சிப் உற்பத்திச் செயல்முறையின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்குவதைவிட அசெம்ப்ளி, சோதனை, பேக்கேஜிங் ஆகியவற்றைத் தொடங்குவது எளிது. அதில்தான் இந்தியா முதலில் கவனம் செலுத்துகிறது" என்கிறார் இந்திய மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் சங்கத்தின் தலைவர் அசோக் சந்தக்.

இதுபோன்ற பல தொழிற்சாலைகள், இந்த ஆண்டில் "பெரியளவிலான உற்பத்தியைத் தொடங்கும்" என்கிறார் அவர்.

சீனா தனது செமிகண்டக்டர் தொழிலை மேம்படுத்தி வருகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா தனது செமிகண்டக்டர் தொழிலை மேம்படுத்தி வருகிறது

கடந்த 2023இல் நிறுவப்பட்ட கேன்ஸ் செமிகான், இந்திய அரசின் ஆதரவுடன் ஒரு செமிகண்டக்டர் ஆலையை நிறுவி, அதை வெற்றிகரமாக இயக்கி வரும் முதல் நிறுவனமாகும்.

கேன்ஸ் செமிகான், குஜராத்தில் கணினி சிப்களை ஒருங்கிணைத்து சோதனை செய்வதற்கான ஒரு தொழிற்சாலையில் 260 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிப்பை தொடங்கியது.

கேன்ஸ் செமிகானின் தலைமை செயல் அதிகாரி ரகு பணிக்கர் அதுகுறித்துப் பேசியபோது, "பேக்கேஜிங் என்பது ஒரு சிப்பை ஒரு பெட்டியில் வைப்பது மட்டுமல்ல. இது 10 முதல் 12 கட்டங்களைக் கொண்ட ஓர் உற்பத்திச் செயல்முறை" என்றார்.

"அதனால்தான், பேக்கேஜிங் மற்றும் சோதனையைச் செய்வது, சிப்களை உருவாக்குவதைப் போலவே மிகவும் முக்கியமானது. இது இல்லையென்றால், வேஃபர் பயனற்றதாகிவிடும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய மொபைல் போன்களில் காணப்படும் அல்லது செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட கணினி சிப்களை இவரது ஆலை தயாரிக்காது.

"ஆரம்பக் கட்டத்திலேயே இந்தியாவுக்கு மிகவும் சிக்கலான தரவு மையம் அல்லது செயற்கை நுண்ணறிவு சிப்கள் தேவையில்லை. அங்கு நமது தேவை இல்லை என்பதோடு, அங்கு நாம் பலமாகவும் இல்லை" என்கிறார் ரகு பணிக்கர்.

கணினி சிப் உற்பத்தியில் சீனா, தைவானை இந்தியாவால் முந்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

அதற்குப் பதிலாக, அவர்கள் கார், தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சிப் வகைகளைத் தயாரிப்பார்கள்.

"இவை கவர்ச்சிகரமான சிப்கள் இல்லை. ஆனால், அவை இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் முக்கியமானவை. முதலில் நமது சொந்த சந்தைக்குச் சேவையாற்றுவதன் மூலம் ஒரு தொழில்துறையை உருவாக்க வேண்டும். அதன் சிக்கலான தன்மை அதற்கடுத்து வரக்கூடும்" என்று ரகு பணிக்கர் தெரிவித்தார்.

கேன்ஸ் செமிகான் நிறுவனத்திற்கு இதுவொரு கடினமான கற்றல் அனுபவமாக இருந்துள்ளது.

"நாம் இதற்கு முன்பு இந்தியாவில் செமிகண்டக்டர் தூய்மை அறைகளை உருவாக்கியதில்லை. நாம் இதற்கு முன்பு இந்த உபகரணங்களை நிறுவியதில்லை. நாம் இதற்கு முன்பு இதற்காக யாருக்கும் பயிற்சி அளித்ததில்லை," என்கிறார் பணிக்கர்.

அவரைப் பொறுத்தவரை, "செமிகண்டக்டர் சிப்களுக்கு, பாரம்பரிய உற்பத்தி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் ஒழுங்கு, ஆவணப்படுத்தல் மற்றும் செயல்முறைக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அந்த கலாசார மாற்றம் தொழில்நுட்ப மாற்றத்தைப் போலவே முக்கியமானது."

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.

ரகு பணிக்கரின் கூற்றுப்படி, "பயிற்சிக்கு நேரம் எடுக்கும். ஐந்து வருட அனுபவத்தை ஆறு மாதங்களில் சுருக்கிவிட முடியாது. அதுதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது."

பெங்களூருவில் உள்ள தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில், அர்னாப் ராய் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிகமான தொழில்நுட்பப் பொருட்களை வாங்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்.

"அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க செமிகண்டக்டர் உற்பத்தி தளம் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக உதவும்," என்கிறார் அர்னாப் ராய்.

அவரது கூற்றுப்படி, இதுவொரு நீண்ட பயணத்திற்கான தொடக்கம்.

"இந்திய நிறுவனங்கள் இறுதியில் முழுமையான தொலைத்தொடர்பு சிப்செட்களை வடிவமைத்து தயாரிக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முதலீடும் நேரமும் தேவைப்படும். ஆழ்ந்த தொழில்நுட்ப தயாரிப்புகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுக்கும். அதோடு இந்தியா இப்போதுதான் அத்தகைய முதலீட்டை ஆதரிக்கத் தொடங்கியுள்ளது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு