சென்னையில் மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் - பிகார் குடும்பம் கொலை பற்றி காவல்துறை கூறியது என்ன?

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு' : மனைவி, குழந்தையுடன் கொல்லப்பட்ட பிகார் இளைஞர் - காவல்துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

(எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள வன்முறை தொடர்பான விவரணைகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

சென்னையில் கடந்த 24 ஆம் தேதியன்று மனைவி, குழந்தையுடன் பிகார் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிகார் இளைஞரின் மனைவி சடலத்தை பெருங்குடி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாகத் தேடி காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது.

வேலை தேடி சென்னை வந்த பிகார் இளைஞருக்கு என்ன நேர்ந்தது? காவல்துறை அளித்துள்ள விளக்கம் என்ன?

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த வழக்கு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, அடையாறு இந்திரா நகரில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதியன்று இருசக்கர வாகன விற்பனை நிலையத்தின் முன்பாக சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையில் இருந்து ரத்தம் வழிவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அடையாறு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

சாக்கு மூட்டையில் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்ததாக, சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த சடலத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இறந்து கிடந்த இளைஞரின் ஆடையில் இருந்த சில தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு போலீசார் பேசியுள்ளனர். அதில், சென்னையில் உள்ள தனியார் பாதுகாப்பு ஏஜென்சி நிறுவனம் ஒன்றின் தொடர்பு எண் இருந்ததுள்ளது.

அந்நிறுவனத்தில் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், இறந்துபோன நபர் பிகாரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

சென்னையில் காவலாளி வேலைக்கு வாய்ப்பு தேடி தனது மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் இந்த நபர் வந்துள்ளார். ஆனால், அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

வேலை தேடுகையில், தரமணியில் காவலாளியாக வேலை பார்க்கும் சத்யேந்தர் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இந்திரா நகரில் சடலத்தை வீசிச் சென்ற இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் சத்யேந்தர் என்கிற சந்தோஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இவர் பிகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மத்திய கெமிக்கல் தொழில்நுட்பக் கல்லூரியில் பகல்நேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவரிடம் கடந்த 24 ஆம் தேதியன்று வேலை தேடி வந்த இளைஞர் தொடர்பு கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் வேலைபார்க்கும் கல்லூரி வளாகத்தில் உள்ள நான்காவது தளத்தில் பயன்பாட்டில் உள்ள கட்டடத்தில் அந்த இளைஞரின் குடும்பத்தை தங்க வைத்துள்ளார்.

 'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு' : மனைவி, குழந்தையுடன் கொல்லப்பட்ட பிகார் இளைஞர் - காவல்துறை கூறுவது என்ன?
படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் மனைவியின் சடலம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கிறது (கோப்பு படம்)

இதே கல்லூரியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் யாதவ் என்ற நபர், இரவுநேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு நன்கு அறிமுகமான விகாஷ் குமார் என்ற நபர், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி இரவு , சத்யேந்தர், லலித் யாதவ், விகாஷ் குமார் ஆகியோர் கொலையான இளைஞருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகராறில் சத்யேந்தர், லலித் யாதவ், விகாஷ் குமார் ஆகியோர் சேர்ந்து வேலை தேடி வந்த இளைஞர், அவரது மனைவி மற்றும் குழந்தையை இரும்பு ராடால் தாக்கியதாக காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதில் அவர்கள் மூவரும் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்களை அன்று இரவே சாக்குமூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். தரமணி அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பெண்ணின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சடலம், பெருங்குடி குப்பைக் கிடங்கில் குப்பைகளுடன் கொட்டப்பட்டதால் அதனைத் தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து காவல்துறை தேடியது.

வெள்ளிக்கிழமையன்று பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து பெண்ணின் உடலை காவல்துறை மீட்டுள்ளது. இதன்மூலம், சம்பவம் நடந்த நாளில் அந்த பெண்ணுக்கு பாலியல்ரீதியான தாக்குதல் நடந்ததா என கண்டறியப்பட வாய்ப்புள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் சத்யேந்தர், லலித் யாதவ், விகாஷ் குமார் ஆகியோரை கைது செய்து 29 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இறந்துபோன இளைஞரின் உடன்பிறந்த சகோதரர் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது சகோதரருடன் சரிவர பேசுவதில்லை எனவும் அவர் சென்னை வந்துள்ள தகவலை தனது தந்தை கூறியே தனக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறந்துபோன இளைஞரின் உடலை அவரது சகோதரரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். இரண்டு வயது சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிகார் இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக, அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் இளங்கனியிடம் பிபிசி தமிழ் பேசியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பேச இயலாது என்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே ஊடகங்களிடம் விளக்கம் அளிப்பார்கள் என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

அடையாறு துணை ஆணையர் ஹரிகிரனை தொடர்பு கொண்டு பேசும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு