அரசு அலுவலகம் செல்லாமல், காகிதமில்லா முறையில் வீடு – மனை பதிவு செய்வது எப்படி? 12 கேள்வி – பதில்

வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வராமலே, பத்திரப் பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் காகிதமில்லா ஆவணப் பதிவு, நேரில் வராமலே பதிவு செய்வது, க்யூ ஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது, டிஜிட்டல் கையெழுத்து, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 22ஆம் தேதியன்று தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், எந்த நாளிலும் எந்த நேரத்திலும் பதிவு தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டித் தந்த பதிவுத் துறை

தமிழக பதிவுத் துறையின் கீழ், மாநிலத்திலுள்ள 38 வருவாய் மாவட்டங்கள் 56 பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 590 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் பதிவுத் துறை, கடந்த நிதியாண்டில் (2024–2025) ரூ.21,968 கோடி வருவாய் ஈட்டியதாக சட்டப் பேரவையில் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 16.7% வருவாய் அதிகமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசு, ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. இதன் வழியாக ஆன்லைன் மூலமாக வில்லங்கச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் பத்திரப் பதிவு செய்வதற்கு, அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதிலும் முக்கியமான நாள் என மக்கள் கருதும் நாட்களில் பதிவுத் துறை அலுவலகத்திற்கு ஆவணப் பதிவுக்கு வரும் கூட்டம் பல மடங்கு அதிகமாகிவிடும்.

இதற்கு தொழில்நுட்ப ரீதியாகத் தீர்வு காணும் வகையில், ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், 'ஸ்பிரின்ட் 1' செயல் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 18 விதமான சேவைகளை வழங்குவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சேவைகள் என்னென்ன, அதனால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது பற்றி பதிவுத் துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானத் துறையினரிடம் பிபிசி தமிழ் பேசியது. மேலும் பதிவுத் துறையில் இதுதொடர்பாக வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரங்களையும் அத்துறையிடமிருந்து பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு

பட மூலாதாரம், Getty Images

காகிதமில்லாத ஆவணப் பதிவு எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

தமிழக அரசின் பதிவுத்துறையுடைய https://tnreginet.gov.in/portal/ என்ற இணைய முகவரியில் சென்று, நான்கே படி நிலைகளில் ஆவணத்தைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதில் சொத்து வாங்குபவர், விற்பவர் விவரங்கள், சொத்து விவரங்களை நிரப்பிய பிறகு, ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்களில் வரும் ஒடிபி (OTP) அல்லது விரல் ரேகை வழியாகச் சரி பார்க்கப்படும்.

அதன் பின் ஆவணத்தை பதிவுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் வழியில் பணம் செலுத்தி, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருந்தால், சார் பதிவாளர் மின்னணு கையொப்பம் இட்டு, மின்னணு ஆவணமாக இணைய வழியில் அதை உடனே அனுப்பி வைப்பார்.

இந்த முறையில் முத்திரைத் தாள் அல்லது இ–ஸ்டாம்ப் பயன்படுத்தி ஆவணம் பிரின்ட் எடுக்கப்பட்டு பதிவேற்றம் செய்வதுடன் முத்திரைத் தாள் எண், விற்பனை முகவர் விவரம் உள்ளிட்ட பல விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த முத்திரைத் தீர்வையைக் கணக்கில் கொண்டு, ஆவணம் பதிவு செய்யப்படும்.

நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு எப்படி நடக்கும்?

பதிவுத் துறை அலுவலகத்திற்குப் போகாமலே வீட்டிலிருந்தே அல்லது கட்டுமான நிறுவன அலுலகத்தில் இருந்தே பத்திரப் பதிவு செய்யும் இந்த நடைமுறை, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் போதும், புதிய மனைப் பிரிவுகளில் இருந்து மனையிடங்களை வாங்கும்போதும் முதல் கிரய ஆவணத்திற்கு (First Sale) மட்டும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதிலும் இணைய வழியில் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்த பிறகு, சொத்தினை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் அடையாளமானது விரல் ரேகை ஆதார் ஆணையத்துடன் சரி பார்க்கப்படும். அதன் பிறகு ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவுடன், ஆவண விவரங்களை சார் பதிவாளர் சரி பார்ப்பார்.

அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சார் பதிவாளரின் மின்னணு கையொப்படம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியில் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை (Digital Document) பதிவிறக்கம் செய்து, வாங்குபவர், விற்பவர் வைத்துக் கொள்ளலாம். கடன் வழங்கும் வங்கிக்கும் இதையே கொடுக்கலாம். இது முதல் முறை விற்பனைக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அரசு வாரியங்களால் எழுதிக் கொடுக்கப்படும் சொத்துகளுக்கு சம்பந்தப்பட்ட வாரிய அலுவலகத்தில் இருந்தே பத்திரத்தைப் பதிவுக்கு தாக்கல் செய்யலாம். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை உடனே வாரிய அலுவலகத்தில் இருந்தே தரவிறக்கும் செய்யலாம்.

அடுக்குமாடி குடியிருப்பு (FLAT) அல்லது புதிய மனைப் பிரிவில் மனையிடம் (PLOT) முதல் முறை வாங்குவோருக்குப் பயன்படும் இந்தத் திட்டத்தில், பதிவுத் துறை அலுவலகத்தில் செய்யும் அனைத்து நடைமுறைகளையும் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்து செய்ய வேண்டும்.

பதிவுத் துறை இணையதளத்தில் பத்திர வரைவும் மாதிரிக்கு உள்ளது. அதில் சர்வே எண், பட்டா எண், கட்டடப் பரப்பு (Build Up Area), பயன்பாட்டுப் பரப்பு (UDS) உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யலாம் அல்லது ஏற்கெனவே ஒரு படிவம் வைத்திருந்தால் அதில் (Paste) செய்து கொள்ளலாம். இதில் முக்கியமான ஒரு விஷயம், இந்த விவரங்கள் மற்றும் படிவங்களைப் பல முறை சரி பார்ப்பது அவசியம்.

மூலப் பத்திரத்தின் முதல் 2 பக்கங்களை ஸ்கேன் செய்து உள்ளே சேர்க்க வேண்டும். பதிவுத் துறையில் இந்த ஆவணங்கள் இருக்கும் என்பதால் அது ஒப்பிடப்பட்டு பரிசீலிக்கப்படும். இவற்றைப் பதிவேற்றம் செய்தால் கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டுமென்ற விவரம் வரும். அதைச் செலுத்தினால், சில மணிநேரத்தில் சார் பதிவாளர் அதைப் பரிசீலித்து ஒப்புதல் அளித்து பதிவு ஆவணத்தை அனுப்பி விடுவார்.

நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு எப்படி நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

ஆன்லைன் பதிவு ஆவணங்களை மின்னணு ஆவணமாக திருப்பி அனுப்புவதற்கு காலக்கெடு உள்ளதா?

இதுதொடர்பாக பதிவுத்துறை சார்பில் சார் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ''அரசு வாரியங்களால் பொது மக்களுக்கு விற்கப்படும் சொத்து ஆவணங்களில், இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சார் பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு, மின்னணு ஆவணமாக அதே நாளில் வேலை நேரத்திற்குள் அனுப்பப்பட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு வீடு அல்லது மனையிடம் அல்லது வாரியங்களால் விற்கப்பட்ட சொத்து ஆவணங்களை, அன்றைய வேலை நேரத்திலேயே பதிவு செய்வது, நிலுவையில் வைப்பது, பதிவு மறுத்தளிப்பது (Refusal), திருத்தம் செய்து திரும்ப அளிப்பது (Return) போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அடுத்த வேலை நாளில் சார் பதிவாளர்களால் வழக்கமான ஆவணப் பதிவு பணிகளை மேற்கொள்ள இயலாத வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆவணங்களை எத்தனை நாட்களுக்குள் பொது மக்கள் இணைய வழியில் பெற முடியும்?

சார் பதிவாளரால் மின்னணு சான்றிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை ஆவணதாரர், அரசு வாரிய நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட இணைய வழியில் (Login/Email) 60 நாட்களுக்குள் தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை 60 நாட்களுக்குள் எடுக்காவிட்டால், அதன் பிறகு ஆவணதாரர் அல்லது அரசு வாரியங்கள் தங்களுடைய ஆவணங்களைச் சான்றிட்ட நகல் வழியாக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் வீடு - மனைகளை அரசு அலுவலகம் செல்லாமல் எளிமையாக பதிவு செய்வது எப்படி? 12 கேள்வி – பதில்

பட மூலாதாரம், Getty Images

வேறெந்த வகையான பதிவுகளை இதுபோன்று நேரடி வருகையில்லாமல் ஆவணப் பதிவு செய்ய முடியும்?

பின்வரும் ஆவணங்களையும் பொதுமக்கள் நேரடி வருகையில்லா ஆவணப் பதிவின் வாயிலாக இணைய வழியில் பதிவுக்குத் தாக்கல் செய்யலாம்.

  • விற்பனை உடன்படிக்கை (Sale Agreement)
  • குத்தகை ஆவணம் (Lease Deed/Agreement of Lease)
  • உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம் (Deposit of Title Deeds)
  • ரசீது ஆவணம் (Deed of Receipt)
  • சுவாதீனத்துடன் கூடிய அடைமான ஆவணம் (Mortage with Possession Deed)
  • சுவாதீனமில்லா அடைமான ஆவணம் (Mortage without Possession Deed)
  • சுவாதீனத்துடன் கூடிய மேல் ஈடு ஆவணம் (Further charge Mortage with Possession Deed)
  • சுவாதீனமில்லா மேல் ஈடு ஆவணம் (Further charge Mortage without Possession Deed)
  • அறக்கட்டளை ஆவணம் (Deed of Trust)
நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு எப்படி நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

எந்த நாளில் எந்த நேரங்களில் எங்கிருந்து இந்த ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்?

நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு வசதி வாயிலாக பொது மக்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட எந்த இடத்தில் இருந்தும் (Any-Time and Any-Where application submission) எந்த நேரத்திலும் (24 x 7 x 365) அனைத்து நாட்களிலும் ஆவணங்களைத் தயார் செய்து இணைய வழியில் சமர்ப்பிக்கலாம் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

பொது மக்கள் தாங்களாகவே பத்திரத்தை உருவாக்கும் புதிய முறை என்ன?

பத்திர எழுத்தர் அல்லது வழக்கறிஞர் உதவியின்றி, பொது மக்கள் தங்கள் ஆவணத்தைத் தாங்களே உருவாக்கும் தானியங்கி பத்திர உருவாக்கம் (Automatic Deed Creation) முறையும் இந்த ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கிரைய ஆவணம் (Sale Deed), கிரைய உடன்படிக்கை ஆவணம் (Sale Agreement), உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம் (Deposit of Title Deeds), ரசீது ஆவணம் (Deed of Receipt) ஆகிய ஆவணங்களுக்கு மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி, பதில் வடிவிலான இந்த மென்பொருளில் பொது மக்கள் தங்கள் சொத்து தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை அளித்த உடனே தானாகவே பத்திரம் உருவாகிவிடும். அதை காகிதமில்லா ஆவணப் பதிவு முறையிலோ அல்லது அச்சுப் பிரதி எடுத்து வழக்கமான பத்திரப் பதிவு முறையிலோ பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் முறை எந்த வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது?

தற்போது நடைமுறையிலுள்ள ஆன்லைன் கட்டண வசதியுடன் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவுக்கு வந்த பின்பு, ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகப் பணம் செலுத்த வேண்டிய சூழல்களில், கூடுதல் வசதியாக பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட குறுபணப் பரிவர்த்தனை (Point of Sales) மற்றும் க்யூ ஆர் கோட் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனையில் வந்துள்ள மாற்றம் என்ன?

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை மறுவிற்பனை செய்யும்போது, சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அந்த வீட்டைக் கள ஆய்வு செய்து மதிப்பீடு அளித்த பிறகே பதிவுக்கு அனுமதிக்கப்படும்.

தற்போது மறுவிற்பனை செய்யும்போது, கட்டுமான விவரங்களுடன் அங்குள்ள கார் பார்க்கிங் மற்றும் லிஃப்ட் வசதிகள் இருப்பதாக ஆதார ஆவணம் சமர்ப்பித்தால், கட்டடக் கள ஆய்வின்றி கட்டணங்களைக் கணக்கீடு செய்து பதிவு செய்த அன்றே ஆவணங்களைத் திருப்பித் தரும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வில்லங்கச் சான்று பெறுவதில் இருந்த சிரமங்கள் எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது?

இதில் முன் ஆவண வழி தேடுதல் (Previous Document Based Search) என்ற முறையில் ஓர் ஆவணத்தின் பதிவு எண்ணைக் கொடுத்து தேடும்போது, அதனுடன் தொடர்புடைய அனைத்து முன்பதிவு ஆவணங்களும் பின்பதிவு ஆவணங்களும் வில்லங்கச் சான்றில் வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர் பரிவர்த்தனைகளையும், தற்போதுள்ள உரிமையாளர் விவரத்தையும் எளிதாக அறிய முடியும்.

வில்லங்கச் சான்று தேடும்போது, பலருக்கு பதிவு மாவட்டம் தெரியாமல் அதை எடுக்க முடிவதில்லை. தற்போது வருவாய் மாவட்டம், வருவாய் வட்டம், வருவாய் கிராமம் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் சொத்துப் பரிவர்த்தனை விவரங்களைத் தேடும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு எப்படி நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இவை தவிர்த்து கிடைக்கும் பிற சேவைகள் என்னென்ன?

சான்றிட்ட நகல்கள் பெறும் வசதி

வெளிநாடுகளில் வசிப்பவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்டு சார் பதிவாளர்களால் முத்திரைத் தீர்வை சான்று செய்யப்பட்ட பொது அதிகார ஆவணங்கள் (Adjudiciated Power of Attorney), நீதிமன்ற ஆணைகள், கடன் ஆணைகள், குறிப்பாணைகள் (Memo), இசைவு தீர்ப்பு (Awards) ஆகிய ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை ஆன்லைன் வழியாகப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கைபேசி செயலி - வாட்ஸ்ஆப் தகவல்

TNREGINET என்ற கைபேசி செயலி வழியாக வழிகாட்டி மதிப்பு, வில்லங்கச் சான்று, டோக்கன் நிலை, அதிகார எல்லை, ஆவணத்தின் நிலை, கட்டடத்தின் மதிப்புக் கணக்கீடு, முத்திரைத் தாள் விற்பனையாளர் விவரம், ஆவண எழுத்தர் விவரம், சங்கப் பதிவு விவரம், திருமண விவரம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம் ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறுஞ்செய்தி வழியாக மட்டும் அனுப்பப்பட்டு வந்த தகவல்கள், இனிமேல் வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பப்படும்.

குடியிருப்பு உரிமை சங்கம் பதிவு

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம் 2022 (ACT No. 44 OF 2022)இன்படி பதிவு செய்யப்பட வேண்டிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சங்கம் தொடர்பான புதிய மென்பொருள் வசதியால் சங்கத்தினர், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.

திருமண பதிவுத் தகவல்கள் தேடுதல்

திருமண பதிவு எண் வாரியாகவும் அல்லது மணப்பெண், மணமகனின் பெயர், பிறந்த தேதி ஆகிய ஏதேனும் ஒருவர் விவரத்தை உள்ளீடு செய்து தேடினால், அதுதொடர்பான திருமண விவரங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த மென்பொருளில் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இணைய வேகம் அதிகரிப்பு

இவை தவிர்த்து பதிவுகளின் எண்ணிக்கையைப் பொருத்து, 300 சார் பதிவாளர் அலுவலகங்களில் இணைய வேகம் (2 MBPS –4 MBPS) அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிபிசி தமிழிடம் பேசிய மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் சிலர், ஏற்கெனவே இணைய வேகம் குறைவாக இருப்பதால் பதிவுகளில் பெரும் தாமதம் ஏற்படுவதாகவும் இன்னும் வேகத்தை அதிகரிக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பத்திரப் பதிவுக்கான அசல் ஆவணங்கள் இல்லாதபோது என்ன செய்வது?

இனி பத்திரப் பதிவின்போது மூலப் பத்திரங்களின் அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூதாதையர் சொத்து என்றால், அதற்கு மூலப் பத்திரம் இல்லாத சூழலில் வருவாய்த்துறை பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும். சொத்து அடமானத்தில் இருந்தால் அடமானம் பெற்றவரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால் அதுகுறித்து உள்ளூர் நாளிதழில் விளம்பரம் கொடுத்து அதன் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த புதிய முறை பற்றி கட்டுமானத் துறையினர் கூறுவது என்ன?

ஸ்டார் 3.0 திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் புதிய சேவைகளை தமிழகத்திலுள்ள கட்டுமானத் துறை அமைப்பினர் பலரும் வரவேற்றுள்ளனர்.

இது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய 'கிரடாய்' நிர்வாகி ஏகாம்பரம், ''இது நடைமுறைக்கு வந்த பிறகுதான், இதில் வேறென்ன மாற்றங்கள் தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து அதுபற்றி முறையிட முடியும்'' என்றார்.

'கிரடாய்' தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், ''இது புரட்சிகரமான திட்டம். தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முன்பாக, அரசுத் தரப்பில் பல கட்டங்களாக எங்களைப் போன்ற அமைப்பினருடன் ஆலோசித்து, எங்கள் சந்தேகங்களைத் தீர்த்து, பல மாற்றங்களைச் செய்த பின்பே நடைமுறைப்படுத்தியுள்ளனர். அத்துடன் தேவையான திருத்தங்கள் கூற ஹாட்லைன் எண் கொடுத்துள்ளனர்'' என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு