நேரலை, தே.ஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம்? டிடிவி தினகரன் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் என்ன கூறினார்?

    ஷி ஜின்பிங்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, ஷி ஜின்பிங், சீனாவையும் இந்தியாவையும் "நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் பங்காளிகள்" என்று வர்ணித்தார்.

    அந்த வாழ்த்துச் செய்தியில்,கடந்த ஓராண்டில் சீனா-இந்தியா உறவுகள் தொடர்ச்சியாக மேம்பட்டு வளர்ந்துள்ளன என்றும், இது உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஷி ஜின்பிங் கூறினார்.

    சீனாவும் இந்தியாவும் "நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் பங்காளிகளாக" இருப்பதுதான் சரி என்று சீனா எப்போதும் நம்புகிறது என்று சீன அதிபர் கூறினார்.

    இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தி, நிலையான உறவுகளை வளர்க்க ஒருவருக்கொருவர் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்று நம்புவதாக ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

  2. இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் தெரிவித்த குடியரசு தின வாழ்த்து

    டிரம்ப், குடியரசு தினம்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் டிரம்ப்பின் செய்தியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.

    டிரம்ப் தனது செய்தியில், "அமெரிக்க மக்களின் சார்பாக, இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.

    உலகின் பழமையான ஜனநாயகம் அமெரிக்கா என்பதாலும், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உறவு இருப்பதாக அவர் கூறினார்.

    இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர்வும் இந்தியாவிற்கு குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் தனது பதிவில், "இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உணர்வைக் கொண்டாடும் குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாகப் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்," என்று எழுதினார்.

  3. 77 வது குடியரசு தின கொண்டாட்டம் - 5 வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்

    ஸ்டாலின், ஆளுநர்

    பட மூலாதாரம், @lokbhavan_tn/X

    நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார்.

    ஆளுநர் கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருது, மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    குடியரசு தின விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  4. தே.ஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம்? டிடிவி தினகரன் கூறியது என்ன?

    தே.ஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம்? டிடிவி தினகரன் கூறியது என்ன?

    பட மூலாதாரம், PTI

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    ''தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவதற்கு நான் அழைப்பு விடுக்கிறேன்'' என தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ''இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன்'' என்றார் டிடிவி தினகரன்.

    மேலும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று தான் கூறினேன் தவிர ஒரே கட்சியில் இணைய வேண்டும் என கூறவில்லை எனவும் அவர் கூறினார்.

    ''நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடன் இருப்பவர்களை வாய்ப்பு இருந்தால் அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை'' என்றார் டிடிவி தினகரன்.

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இணைந்தார்.

    "எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்" என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  5. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடுமா? புதிய அப்டேட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    பட மூலாதாரம், Getty Images

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஞாயிற்றுக்கிழமை டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. ஆனால் இந்த இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்தத் தொடர் அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உள்துறை அமைச்சரும் பிசிபி தலைவருமான மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை திங்கட்கிழமை அதாவது இன்று சந்திக்கலாம் என பிபிசி உருது சேவை குறிப்பிட்டுள்ளது.

    உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பங்கேற்பு குறித்து இந்தச் சந்திப்பில் முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பையிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்ட சூழல் குறித்தும் பிசிபி தலைவர் பிரதமரிடம் தெரிவிப்பார் என்றும், தனது பரிந்துரைகளையும் பிரதமரிடம் எடுத்துரைப்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்தை இந்த தொடரில் சேர்ப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டது.

    பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விளையாடவில்லை என்று வங்கதேசம் கூறியது. ஐசிசியின் அறிவிப்புக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு துணை நிற்கிறது என்று கூறியிருந்தார்.

  6. ஆறாவது முறையாக பிக் பாஷ் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

    ஆறாவது முறையாக பிக் பாஷ் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடரை ஆறாவது முறையாக (ஆண்கள் பிரிவு) வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெர்த்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட அந்த அணியின் பௌலர்கள், சிட்னி சிக்சர்ஸ் பேட்டர்களுக்கு சவால் கொடுத்தனர். அதனால், சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது. இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பெர்த் பௌலர்களில் ஜை ரிச்சர்ட்சன் மற்றும் டேவிட் பெய்ன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய பெர்த் அணிக்கு, ஃபின் ஆலன் மற்றும் மிட்செல் மார்ஷ் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 80 ரன்கள் எடுக்க, அந்த அணிக்கு சேஸிங் எளிதானது. இறுதியில் 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி வெற்றியை வசப்படுத்தியது. டேவிட் பெய்ன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    ஆறாவது முறையாக பிக் பாஷ் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    இது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு ஆறாவது பிக் பாஷ் பட்டம். இதுவரை நடந்த 15 சீசன்களில் அந்த அணி 9 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அதில் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் இரு அணிகளுக்கும் இடையே நடந்த ஆறாவது பிக் பாஷ் ஃபைனல் இது. இதில், ஸ்கார்ச்சர்ஸ் நான்காவது முறையாக வென்றிருக்கிறது.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் சாம் ஹார்பர் தொடர் நாயகன் விருது வென்றார்.

  7. குடியரசு தினத்தையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வாழ்த்து

    இந்தியா – அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ

    அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இந்தியா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை அவர் பாராட்டியுள்ளார். இந்தியா – அமெரிக்கா உறவு, இரு நாடுகளுக்கும் பயனளிக்க கூடிய ‘விளைவுகளை’ அளித்து வருகின்றன என்றும் ரூபியோ தெரிவித்துள்ளார்.

    பாதுகாப்பு, ஆற்றல், முக்கிய கனிம வளங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றில் குவாட் அமைப்பின் மூலம் இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா இன்று தனது 77வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது. 1950ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

  8. SA20 கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது சன்ரைசர்ஸ்

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

    பட மூலாதாரம், X/SunrisersEasternCape

    தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரான SA20-யை மூன்றாவது முறையாக வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. இறுதிப் போட்டியில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வீழ்த்தியது.

    கேப் டவுனில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிரிடோரியா கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கமே கடினமாக இருந்தது. முதல் 7 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. பிரைஸ் பார்சன்ஸ் மற்றும் டெவால் பிரெவிஸ் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். அந்தக் கூட்டணியும் உடைந்துவிட, கேபிடல்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    டெவால் பிரெவிஸ் மட்டும் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 56 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் அவுட் ஆனார். அவருடைய ஆட்டத்தின் காரணமாக கேபிடல்ஸ் 158 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் 4 ஓவர்களில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

    அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணியுமே ஒருகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 8.4 ஓவர்களில் அந்த அணி 48/4 என்ற மோசமான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு ஜோடி சேர்ந்த மேத்யூ பிரீட்ஸ்கி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து அந்த அணியை வெற்றி பெற வைத்தனர். பிரீட்ஸ்கி 68 ரன்களும், ஸ்டப்ஸ் 63 ரன்களும் எடுத்தனர்.

    கேபிடல்ஸ் தோல்வியடைந்தாலும் சதம் அடித்த, பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த சீசனில் 390 ரன் எடுத்த சன்ரைசர்ஸ் வீரர் குயின்டன் டி காக் தொடர் நாயகன் விருது வென்றார்.

    இது சன்ரைசர்ஸ் அணிக்கு மூன்றாவது கோப்பை. மொத்தம் 4 சீசன்களே நடந்திருக்கும் இந்த SA20 தொடரில் அந்த அணி 4 முறையுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அதில் மூன்றில் வென்றிருக்கிறது.

  9. ராஜஸ்தான்: நாகூரில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

    ராஜஸ்தானில் 10 ஆயிரம் கிலோ வெடிபொருள் பறிமுதல்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, நாகூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிருதுல் கச்வா

    ராஜஸ்தானில் 10 ஆயிரம் கிலோ அளவுக்கு வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உளவுத் தகவலின் அடிப்படையில் மாவட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாகூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிருதுல் கச்வா தெரிவித்தார். 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டுடன், பெருமளவு டெட்டனேட்டர்கள், டெட்டனேஷன் வயர் மற்றும் சுரங்கத் தொழில் தொடர்பான பிற வெடிபொருட்களையும் காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி. கச்வா கூறுகையில், "நாகூர் மாவட்டத்தில் பெருமளவு வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நீண்ட நாட்களாக நாகூர் காவல்துறைக்கு உளவுத் தகவல்கள் கிடைத்து வந்தன. தகவல் கிடைத்ததும், அது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருள் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட சுலைமான் கான் என்பவர் ஹர்சோரைச் சேர்ந்தவர். அவர் தனது பண்ணை வீட்டில் வெடிபொருட்களைச் சேகரித்து வந்திருந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

  10. இந்தியா வந்ததும் ஐரோப்பிய ஆணைய தலைவர் என்ன கூறினார்?

    இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 'பிளவுபட்ட உலகத்திற்கு' ஒரு மாற்று வழியை வழங்குகின்றன என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.

    ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

    இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் கூறியுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் டெல்லி பயணத்தின் தொடக்கத்தில் இது கூறப்பட்டது. நிலம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றங்கள் நிலவும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

    "இந்தியாவும் ஐரோப்பாவும் ஒரு தெளிவான தேர்வை எடுத்துள்ளன: மூலோபாய கூட்டாண்மை, உரையாடல் மற்றும் வெளிப்படைத்தன்மை," என்று உர்சுலா வான் டெர் லேயன் தனது 'எக்ஸ்' சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். "பிளவுபட்ட உலகிற்கு மற்றொரு பாதை சாத்தியம் என்பதை நாங்கள் காட்டுகிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார்.

    வான் டெர் லேயன் சனிக்கிழமை (ஜனவரி 24) டெல்லிக்கு வந்தார். இதற்கு முன்னர், அவர் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டார். அங்கு பல ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்து மற்றும் வரிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தனர்.

  11. நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வென்றது இந்தியா

    இந்தியா - நியூசிலாந்து

    பட மூலாதாரம், Getty Images

    கவுஹாத்தியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

    154 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா, 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து, அதை அடைந்தது.

    அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இரு பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

  12. வணக்கம் நேயர்களே!

    இன்று (26/01/2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது பிரதீப் கிருஷ்ணா