நேரலை, சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு - கல்லூரி முதல்வர் கைது

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வணக்கம் நேயர்களே!

    இன்று (28/01/2026) இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது நந்தினி வெள்ளைச்சாமி.

  2. அஜித் பவார் மறைவுக்கு கார்கே, ராகுல் இரங்கல்

    அஜித் பவார் மறைவு

    பட மூலாதாரம், Getty Images

    விமான விபத்தில் அஜித் பவார் மறைந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

    "நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கை கொண்டவரின் எதிர்பாராத மரணம் இது. இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. பவார் குடும்பத்திற்கும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    "மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் விமான விபத்தில் உயிரிழந்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த துக்கமான நேரத்தில் மகாராஷ்டிர மக்களுடன் நான் நிற்கிறேன். இந்த சோகமான நேரத்தில் பவார் குடும்பத்திற்கும் அவரின் அன்பிற்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

  3. அஜித் பவார் மறைவுக்கு மோதி, அமித் ஷா இரங்கல்

    அஜித் பவார் மறைவு

    பட மூலாதாரம், @narendramodi

    அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    "பாராமதியில் ஏற்பட்ட விபத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு சக்தி கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்," என பிரதமர் மோதி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    அஜித் பவாரின் மறைவு என் இதயத்தை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

    "கடந்த 35 ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் அனைத்து பிரிவுகளின் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் மகாராஷ்டிர மக்களின் நலனுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்னைகள் பற்றி நீண்ட விவாதங்களில் ஈடுபடுவார். அவரின் மறைவு என்டிஏ குடும்பத்திற்கு மட்டுமல்ல, எனக்குமே தனிப்பட்ட முறையில் இழப்பு," என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

  4. சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு - கல்லூரி முதல்வர் கைது

    சோலைராணிக்கு நீதி வேண்டும்,

    சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் கல்லூரி முதல்வரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பயின்று வந்த மாணவி கடந்த 20-ஆம் தேதி இரவில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மாணவியின் தனிப்பட்ட விஷயத்தில் கல்லூரி முதல்வர் தலையிட்டு, தாயாரை வரவழைத்து கண்டித்து மன்னிப்பு கடிதம் பெற்றதே காரணம் என்று குற்றம்சாட்டி அந்த கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக், முதல்வரின் உதவியாளர் மணிமாறன் மற்றும் சக மாணவி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    சோலைராணிக்கு நீதி வேண்டும்,

    கடந்த 24-ஆம் தேதி உயர் கல்வித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் கலைச்செல்வி கல்லூரியில் விசாரணை நடத்தினார். அதை தொடர்ந்து முதல்வரின் உதவியாளர் மணிமாறனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் முதல்வரின் உதவியாளர் மணிமாறன் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    முதல்வர் அசோக்கை காவல்துறையினர் கைது செய்து சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுனில்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார். இந்த வழக்கில் முதல்வரின் உதவியாளரான மணிமாறனை போலீசார் தேடி வருகின்றனர்.

  5. இரானை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைவதாக டிரம்ப் தகவல்

    டிரம்ப், அமெரிக்கா, இரான்

    பட மூலாதாரம், Getty Images

    இரானை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதோடு, அமெரிக்காவுடன் இரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    "மேலும் சில அமெரிக்க கப்பல்கள் இரானை நோக்கிச் செல்கின்றன. என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்," என செவ்வாய்கிழமை அன்று டிரம்ப் தெரிவித்திருந்தார். "அவர்கள் ஒரு சமரசத்திற்கு வருவார்கள் என நம்புகிறேன்" என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக ஒரு பெரிய அமெரிக்க போர்க்கப்பல் இரானை நோக்கிச் செல்வதாக கடந்த வாரம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் எனப் பெயரிடப்பட்ட அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல் பாரசீக வளைகுடாவிற்கு வந்துள்ளதாக பிபிசி பாரசீக மொழி சேவை தெரிவிக்கிறது. இந்தக் கப்பல் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நவீனமான விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றாக உள்ளது.

  6. வணக்கம் நேயர்களே!

    இன்று (28/01/2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது மோகன்.

  7. இரானின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது

    இரானின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது

    பட மூலாதாரம், Getty Images

    இரானின் நாணயமான ரியாலின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

    ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் ரியால்களை எட்டியுள்ளது

    . மத்திய கிழக்கில் ஓர் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் வந்து சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

    இரானிய ஆட்சிக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்த தனது அச்சுறுத்தலை டொனால்ட் டிரம்ப் விடுத்திருந்த நிலையில், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல் வந்துள்ளது.

  8. இரானில் 108 ஸ்டார்லிங்க் சாதனங்கள் பறிமுதல்- 19வது நாளாக தொடரும் இணைய சேவை துண்டிப்பு

    இரானில் 108 ஸ்டார்லிங்க் சாதனங்கள் பறிமுதல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய போராட்டங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இரானின் பொருளாதார பாதுகாப்புப் போலீஸ் தலைவர் ஹொசைன் ரஹீமி, 108 ஸ்டார்லிங்க் சாதனங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    பிபிசி பாரசீக சேவையின் தகவல்படி, "சமீபத்திய வழக்கில், குர்திஸ்தான் மாகாணத்தில் முதுகுப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 ஸ்டார்லிங்க் சாதனங்கள் மீட்கப்பட்டன" என அந்தப் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஸ்டார்லிங்க் சாதனங்கள் இப்போது ஒரு "பாதுகாப்பு அச்சுறுத்தலாக" கருதப்படுவதாகவும், அவற்றை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    இரானில் இணையச் சேவைத் துண்டிப்பு 19-வது நாளை எட்டியுள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில், இரானுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையில் எஞ்சியிருக்கும் ஒரு சில தொடர்பு ஊடகங்களில் ஒன்றாக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் மாறியுள்ளது.

    டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அமெரிக்காவைச் சேர்ந்த இரானிய மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி முகமை (HRANA), கடந்த மூன்று வாரங்களில் குறைந்தது 2,400 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.

  9. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்

    சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்

    பட மூலாதாரம், Narendra Modi/YT

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறித்து பேசிய பிரதமர் மோதி, அதன் மூலம் இந்திய மக்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.

    இந்திய எரிசக்தி வாரம் (IEW) 2026-இன் நான்காவது பதிப்பை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) அன்று பிரதமர் மோதி மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்.

    அப்போது பேசிய பிரதமர், ​​"நேற்று (ஜனவரி 26) இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகில் பலரும் அதைப் பற்றி தான் விவாதித்து வருகின்றனர்" என்று கூறினார்.

    "இந்த ஒப்பந்தம் 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கும் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுவருகிறது. இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு."

    "இந்த ஒப்பந்தம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கையும் பிரதிபலிக்கிறது. வர்த்தகம், ஜனநாயகம் மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான நமது அர்ப்பணிப்பு இந்த ஒப்பந்தத்தால் வலுப்படுத்தப்படுகிறது" என்று அவர் கூறினார்.

    ஒப்பந்தம் நிறைவடைந்ததற்காக இந்திய இளைஞர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், "ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் மற்றும் காலணிகள் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.

  10. வணக்கம் நேயர்களே!

    இன்று (27/01/2026) இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது சிராஜ்.

  11. ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தான் தவறான கருத்தை தெரிவிப்பதாக இந்தியா குற்றச்சாட்டு

    இந்தியா, பாகிஸ்தான்

    பட மூலாதாரம், @IndiaUNNewYork/X

    'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக பாகிஸ்தான் தவறான கருத்தை தெரிவித்ததாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடத்திய "பயங்கரவாத தாக்குதலில்" 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

    "இந்த தாக்குதலை ஒருங்கிணைத்தவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்கள், நிதியுதவி செய்தவர்கள் பொறுப்பாக்கப்பட்டு நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என இதே பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. நாங்கள் அதைச் செய்தோம். இந்தியாவின் நடவடிக்கைகள் மிகவும் கட்டுப்பாடானது, தூண்டுதல் இல்லாதது மற்றும் பொறுப்பானது. அதன் நோக்கம் பயங்கரவாத உள்கட்டமைப்பை தகர்த்து பயங்கரவாதிகளை அழிப்பது," என்று அவர் தெரிவித்தார்.

    "கடந்த ஆண்டில் மே 9-ஆம் தேதி வரை இந்தியா மீது தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் எச்சரித்து வந்தது. ஆனால், மே 10-ஆம் தேதி 'பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு சண்டையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது." என்றார்.

    இந்தியாவின் நடவடிக்கையில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  12. தென் கொரியா மீது 25% வரி - டிரம்ப் அறிவிப்பு

    அமெரிக்கா, தென் கொரியா

    பட மூலாதாரம், Getty Images

    தென் கொரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 25% ஆக உயர்த்தப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை தென் கொரியா 'முறையாக அமல்படுத்தவில்லை' என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கார்கள், மரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் மீதான வரி 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனை "பரஸ்பர வரி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் இந்த அறிவிப்பு தொடர்பாக தங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என தென் கொரியா கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தென் கொரியா கோரியுள்ளது.

  13. பெரம்பலூர் அருகே காவல்துறை என்கவுன்டரில் ஒருவர் பலி

    பெரம்பலூர் அருகே காவல்துறை என்கவுன்டர்
    படக்குறிப்பு, காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்ட அழகுராஜா

    பெரம்பலூர் அருகே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அழகுராஜா என்பவர் உயிரிழந்தார்.

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் பிடியில் இருந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அதுதொடர்பாக அழகுராஜாவை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, காவலர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  14. அமெரிக்காவைத் தாக்கிய பனிப் புயலால் 17 பேர் பலி

    அமெரிக்கா, பனிப் புயல்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவின் பல மாகாணங்கள் பனிப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ன. அங்கே தற்போது வரை 17 பேர் பலியாகி உள்ளனர்.

    சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கான காரணங்களை அறிய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பனிப் புயல் மற்றும் நடுங்க வைக்கும் குளிரால் பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, பனிப் புயல்

    பட மூலாதாரம், Getty Images

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழைப்பொழிவும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூ யார்க்கில் மட்டும் 379 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

  15. வணக்கம் நேயர்களே!

    இன்று (27/01/2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது மோகன்.

  16. இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் என்ன கூறினார்?

    ஷி ஜின்பிங்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, ஷி ஜின்பிங், சீனாவையும் இந்தியாவையும் "நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் பங்காளிகள்" என்று வர்ணித்தார்.

    அந்த வாழ்த்துச் செய்தியில்,கடந்த ஓராண்டில் சீனா-இந்தியா உறவுகள் தொடர்ச்சியாக மேம்பட்டு வளர்ந்துள்ளன என்றும், இது உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஷி ஜின்பிங் கூறினார்.

    சீனாவும் இந்தியாவும் "நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் பங்காளிகளாக" இருப்பதுதான் சரி என்று சீனா எப்போதும் நம்புகிறது என்று சீன அதிபர் கூறினார்.

    இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தி, நிலையான உறவுகளை வளர்க்க ஒருவருக்கொருவர் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்று நம்புவதாக ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

  17. இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் தெரிவித்த குடியரசு தின வாழ்த்து

    டிரம்ப், குடியரசு தினம்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் டிரம்ப்பின் செய்தியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.

    டிரம்ப் தனது செய்தியில், "அமெரிக்க மக்களின் சார்பாக, இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.

    உலகின் பழமையான ஜனநாயகம் அமெரிக்கா என்பதாலும், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உறவு இருப்பதாக அவர் கூறினார்.

    இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர்வும் இந்தியாவிற்கு குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் தனது பதிவில், "இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உணர்வைக் கொண்டாடும் குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாகப் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்," என்று எழுதினார்.

  18. 77 வது குடியரசு தின கொண்டாட்டம் - 5 வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்

    ஸ்டாலின், ஆளுநர்

    பட மூலாதாரம், @lokbhavan_tn/X

    நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார்.

    ஆளுநர் கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருது, மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    குடியரசு தின விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  19. தே.ஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம்? டிடிவி தினகரன் கூறியது என்ன?

    தே.ஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம்? டிடிவி தினகரன் கூறியது என்ன?

    பட மூலாதாரம், PTI

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    ''தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவதற்கு நான் அழைப்பு விடுக்கிறேன்'' என தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ''இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன்'' என்றார் டிடிவி தினகரன்.

    மேலும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று தான் கூறினேன் தவிர ஒரே கட்சியில் இணைய வேண்டும் என கூறவில்லை எனவும் அவர் கூறினார்.

    ''நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடன் இருப்பவர்களை வாய்ப்பு இருந்தால் அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை'' என்றார் டிடிவி தினகரன்.

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இணைந்தார்.

    "எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்" என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  20. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடுமா? புதிய அப்டேட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    பட மூலாதாரம், Getty Images

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஞாயிற்றுக்கிழமை டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. ஆனால் இந்த இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்தத் தொடர் அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உள்துறை அமைச்சரும் பிசிபி தலைவருமான மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை திங்கட்கிழமை அதாவது இன்று சந்திக்கலாம் என பிபிசி உருது சேவை குறிப்பிட்டுள்ளது.

    உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பங்கேற்பு குறித்து இந்தச் சந்திப்பில் முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பையிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்ட சூழல் குறித்தும் பிசிபி தலைவர் பிரதமரிடம் தெரிவிப்பார் என்றும், தனது பரிந்துரைகளையும் பிரதமரிடம் எடுத்துரைப்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்தை இந்த தொடரில் சேர்ப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டது.

    பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விளையாடவில்லை என்று வங்கதேசம் கூறியது. ஐசிசியின் அறிவிப்புக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு துணை நிற்கிறது என்று கூறியிருந்தார்.