இரானில் 108 ஸ்டார்லிங்க் சாதனங்கள் பறிமுதல்- 19வது நாளாக தொடரும் இணைய சேவை துண்டிப்பு

பட மூலாதாரம், Getty Images
இரானின் பொருளாதார பாதுகாப்புப் போலீஸ் தலைவர் ஹொசைன் ரஹீமி, 108 ஸ்டார்லிங்க் சாதனங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிபிசி பாரசீக சேவையின் தகவல்படி, "சமீபத்திய வழக்கில், குர்திஸ்தான் மாகாணத்தில் முதுகுப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 ஸ்டார்லிங்க் சாதனங்கள் மீட்கப்பட்டன" என அந்தப் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் சாதனங்கள் இப்போது ஒரு "பாதுகாப்பு அச்சுறுத்தலாக" கருதப்படுவதாகவும், அவற்றை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இரானில் இணையச் சேவைத் துண்டிப்பு 19-வது நாளை எட்டியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இரானுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையில் எஞ்சியிருக்கும் ஒரு சில தொடர்பு ஊடகங்களில் ஒன்றாக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் மாறியுள்ளது.
டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இரானிய மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி முகமை (HRANA), கடந்த மூன்று வாரங்களில் குறைந்தது 2,400 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.


















