தமிழ்நாட்டில் ஜாமீன் கிடைத்தும் கூட வெளிவர முடியாமல் தவிக்கும் 175 கைதிகள் - பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
நாள் 16.11.2024
நேரம்: இரவு 7 மணி
இடம்: வேலூர் பெண்கள் சிறை
சிறைத்துறையின் நடைமுறைகளை முடித்துவிட்டு சிவகங்கையை சேர்ந்த 41 வயதான அந்தப் பெண், 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையை விட்டு வெளியே வந்தார்.
இரண்டு வயது மகளைக் கொன்றதாக பதிவான வழக்கில், கோவை நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
"இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த பிறகும் கூட 300 நாட்களாக அவரால் வெளியில் வர முடியவில்லை" எனக் கூறுகிறார், அவரது வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா. ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதது தான் அதற்கான காரணம் என்று அவர் கூறினார்.

ஜாமீன் நிபந்தனைகள் என்ன?
"கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அந்தப் பெண் சிறையில் இருந்தார். அவர் வெளியில் வருவதற்கு ஜாமீன் நிபந்தனையாக, ரத்த உறவுள்ள ஒருவரும் ரத்த உறவு அல்லாத ஒருவரும் உத்தரவாதம் (Surety) தர வேண்டும்; அடுத்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்திரம் (Bond) சமர்ப்பிக்க வேண்டும்; ஜாமீன் உத்தரவாதம் தருபவர்களின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அது அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா.
சிறையில் 11 ஆண்டுகள் இருந்த போது அந்தப் பெண்ணை சந்திக்க அவரது உறவினர்கள் ஒருவர் கூட வரவில்லை. "குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டு இருந்ததால் ஜாமீனுக்கு உத்தரவாதம் தரவும் அவர்கள் மறுத்துவிட்டனர்" என்கிறார் கே.ஆர்.ராஜா.
இதனால் ஜாமீன் கிடைத்தும் 300 நாட்களாக அந்தப் பெண், சிறையில் தவிப்பதாக, ஆங்கில நாளேடு ஒன்றில் கடந்த 13 ஆம் தேதி செய்தி வெளியானது.
அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி
இதையடுத்து, வேலூர் சிறையில் ஜாமீன் கிடைத்தும் 300 நாட்களாக பெண் ஒருவர் தவிப்பது குறித்து தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களிடம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு கேள்வி எழுப்பியது.
இதனால், பெண்ணின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு சிறைத்துறை அதிகாரிகள் பேசியதன் விளைவாக, ஜாமீனுக்கு உத்தரவாதம் தருவதற்கு பெண்ணின் சகோதரர் முன்வந்ததாக கூறுகிறார், வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா.
"சிறையில் இருந்து வெளியில் வந்த அந்தப் பெண், தற்போது சிவகங்கையில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார்" என்கிறார் கே.ஆர்.ராஜா.

நீதிபதிகள் கூறியது என்ன?
சிவகங்கை பெண்ணைப் போல ஜாமீன் கிடைத்தும் வெளியில் வர முடியாத கைதிகள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரத்தைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு உத்தரவிட்டது.
இதற்கு தமிழ்நாடு சிறைத்துறை அளித்துள்ள பதிலில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் ஜாமீன் கிடைத்தும் அதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் 175 பேர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதில் 153 விசாரணைக் கைதிகளும் 22 தண்டனை கைதிகளும் இருப்பதாக, சிறைத்துறைடி.ஜி.பி அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
"இது துரதிர்ஷ்டவசமானது" எனக் கூறிய நீதிபதிகள், கடந்த திங்கள் அன்று (நவம்பர் 18) இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
"சில வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கினாலும் அவை கைதிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை" எனக் கூறிய நீதிபதிகள், "ஏழைக் கைதிகளுக்கு ஜாமீன் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகள் தாமதமின்றி கிடைக்க வழிவகை வேண்டும்" என்று அறிவுறுத்தினர்.
மாவட்ட முதன்மை நீதிபதிகள், சட்டப் பணிகள் ஆணையக் குழு மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் இல்லாததே ஜாமீன் கிடைத்தும் கைதிகள் சிறையில் இருப்பதற்கு காரணமாக உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், "இதனை சரிசெய்வதற்கு இ-போர்ட்டல் உருவாக்க வேண்டும்" என்று அரசுக்கு பரிந்துரைத்தனர்.
இந்த வழக்கில் பதில் அளிக்க ஏதுவாக, மாநில உள்துறை செயலர், டி.ஜி.பி, மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழு உறுப்பினர் ஆகியோரை வழக்கில் சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பட மூலாதாரம், Pugazhendhi/Facebook
"இந்தியா முழுக்க இந்த நிலைதான்" - வழக்கறிஞர் பா.புகழேந்தி
ஜாமீன் கிடைத்தும் வெளியில் வர முடியாத நிலை என்பது இந்தியா முழுக்க உள்ள சிறைகளில் உள்ளதாக கூறுகிறார், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் பா.புகழேந்தி.
"ஒருவருக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் இரண்டு ஜாமீன்தாரர்களை (Surety) கொண்டு போய் நிறுத்தி வெளியில் வரலாம். அந்த ஜாமீன்தாரர்களிடம் சொத்து பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகம், வாகனத்தின் ஆர்.சி புத்தகம், சொத்து இருப்பதற்கான தாசில்தார் சான்று ஆகியவை கேட்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஏராளமான கைதிகளின் குடும்பங்கள் தவிக்கின்றன. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட கைதிகளால் ஜாமீனில் வருவதை நினைத்துப் பார்க்கவே முடியாது" வழக்கறிஞர் பா.புகழேந்தி கூறுகிறார்.

பட மூலாதாரம், Kanagaraj
சிறைத்துறை தலைவரின் பதில்
"ஜாமீன் பெறுவதற்கான நிபந்தனைகள் சட்டப்படியானவை. அவை பின்பற்றப்பட்டேயாக வேண்டும்" எனக் கூறுகிறார், சிறைத்துறை தலைவர் கனகராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு உத்தரவாதம் பெறாமல் ஜாமீன் கொடுத்தால் சில சிக்கல்கள் உள்ளன. அதன்பிறகு வழக்கை நடத்துவதற்கு அவர் வராமல் போய்விட்டால் என்ன செய்வது. எனவே, இந்த நிபந்தனைகள் அவசியமான ஒன்று" என்கிறார்.
ஜாமீன் கிடைத்து அதற்கு உத்தரவாதம் கொடுப்பதற்கு அவர்களின் உறவினர்கள் வர மறுப்பதால், அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கு எதாவது வாய்ப்புள்ளதா என்பதற்காக இந்த வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளதாக கூறுகிறார், கனகராஜ்.
"ஜாமீன் பெறுவதற்கான நிபந்தனைகள் குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்" என்கிறார் கனகராஜ்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












