மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்: பாஜக வெல்வது தேசிய அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்: பாஜக வெல்வது தேசிய அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தச் செய்தியைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் ஒரு நவீன உலாவி மற்றும் நிலையான இணைய இணைப்பு தேவை.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன.

ஜார்க்கண்டில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி, ஆரம்பம் முதல் முன்னிலை வகித்து வருகிறது.

மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணி ‘மகாயுதி’ ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடி மொத்தமுள்ள 48 இடங்களில் 30 இடங்களிலும், மகாயுதி 17 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால், சட்டப் பேரவைத் தேர்தலின் ஆரம்ப அறிகுறிகள் வேறு விதமாக உள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எதிர்கால அரசியல் பாதை ?

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மட்டுமல்ல, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் (என்.சி.பி.) முக்கியமானது.

உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கான சவால்கள் அதிகரிக்கக் கூடும். பாஜக வெற்றி பெற்றால், மகாராஷ்டிராவில் இந்துத்துவ அரசியல் மீதான பால் தாக்கரே குடும்பத்தின் செல்வாக்கு வலுவிழக்கக்கூடும். வருங்காலத்தில் சிவசேனாவின் இந்துத்துவா அரசியல் தொடர்பான போட்டி முந்தைய காலங்களில் இருந்ததைப் போன்று வலுவாக இருக்காது என்பதையே இது குறிக்கிறது.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் 2024

பட மூலாதாரம், ANI

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக மும்பை கருதப்படுவதால் , அங்கு யார் ஆட்சி அமைத்தாலும் மும்பையின் மீது அவர்களுக்குக் கட்டுப்பாடு இருக்கும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஹரியாணாவை தொடர்ந்து, இரண்டாவது பெரிய தோல்வியாக காங்கிரசுக்கு இது அமையும்.

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோதிக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் இத்தேர்தல் முடிவுகளின் காரணமாக, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிகளின்’ முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் 2024

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோதிக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

முன்னதாக 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பாஜக பெரும்பான்மைப் பெற்று தனித்து ஆட்சி அமைத்தது. 2024 தேர்தலில், பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் நரேந்திர மோதியின் செல்வாக்கு குறைந்துள்ளது.

ஆனால் ஹரியாணா வெற்றி மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் சிறப்பான செயல்பாட்டிற்குப் பிறகு மகாராஷ்டிராவிலும் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் பிரதமர் மோதியின் புகழ் குறைந்துள்ளதாகக் கூறுவது கடினம்.

ஜார்கண்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் காங்கிரசுக்கு அது சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால் மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் ஜார்கண்டின் செல்வாக்கு தேசிய அரசியலில் மிகவும் குறைவு. மேலும் ஜார்கண்ட் மிகச் சிறிய மாநிலம்.

இதனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பாஜகவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளின் தலையீடு பலவீனமடையும்.

பிகாரில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக நிதிஷ்குமாருடன் அதன் விருப்பப்படி,தொகுதிப் பங்கீட்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவுடன் மத்தியில் மோதி அரசு இயங்கினாலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவதால் கூட்டணிக்குள் இருக்கும் சமநிலை மாறும்.

இந்நிலையில், மோதி அரசிடம் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு அதிகம் இல்லாமல் போகலாம்.

மோதி அதிக பலம் பெறுவாரா?

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் 2024

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மகாராஷ்டிராவில் பாஜக அதிகபட்சமாக 149 இடங்களில் போட்டியிட்டது.

ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது.

பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கு எதிரான அலை மற்றும் அரசுக்கு எதிரான பல இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தாலும், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் பலம் பெறும் என ஆய்வாளர்கள் கருதினாலும், அதன் பிறகு நடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகளால் அத்தகைய பலத்தைப் பெற இயலவில்லை.

ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மோதி அரசு பலவீனமாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் பாஜகவின் செல்வாக்கு குறைந்திருக்கும்.

பாஜக வலுப்பெறுவது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் அளிப்பது மட்டுமல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமாக அமையாது.

மகாராஷ்டிராவில் பாஜக அதிகபட்சமாக 149 இடங்களில் போட்டியிட்டது. மேலும் மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் மோதியின் புகழ் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் பாஜக தேர்தலில் போட்டியிட்டது.

இங்கு பாஜக ஆட்சி அமைந்தால் அது மோதியின் வெற்றியாக அறிவிக்கப்படும். மகாராஷ்டிராவில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்தால் அங்கு பாஜகவால் அதன் முதலமைச்சரை உருவாக்க முடியும்.

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வென்றால் இந்திய அரசியலில் அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்றத் தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று கட்சிக்குக் கிடைத்த புதிய ஆற்றல் சரிந்து விடும் என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் ஏமாற்றத்தையே தரும். கட்சி தனது எதிர்கால உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் கட்சித் தலைமையையும், மக்கள் கேள்விக்கு உட்படுத்துவார்கள்.

மறுபுறம், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி வெற்றி பெற்றால், அது காங்கிரஸின் வெற்றி என்று சொல்லப்படும். காங்கிரஸ் ஒரு புதிய ஆற்றலைப் பெறும்.

மகா விகாஸ் அகாடி பின்னடைவைச் சந்தித்தால், காங்கிரஸ் தலைமை மற்றும் குறிப்பாக ராகுல் காந்தி மீது மீண்டும் கேள்விகள் எழக்கூடும். ஏற்கெனவே அவரது தலைமைத் திறன் குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் காட்சிகள் இணைந்து போட்டியிட்டதால், யாரேனும் ஒருவர் மீது மட்டும் பழி சுமத்துவது கடினமாக இருக்கலாம்.

டெல்லியில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2025 பிப்ரவரியில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் மூன்று முக்கியக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி இல்லை. மேலும் டெல்லியிலும் இவர்களுக்கிடையே கூட்டணி இருக்காது.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வலுவாக உள்ளதால் மற்ற மாநிலங்களுடன் இதை ஒப்பிட முடியாது.

இந்துத்துவ அரசியலின் வெற்றியா?

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் 2024

பட மூலாதாரம், ANI

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் போதே, “நாம் பிளவுபட்டால், அழிக்கப் படுவோம்” என்ற முழக்கம் பரவலாகப் பேசப்பட்டது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்த கோஷத்தை அதிகமாகப் பயன்படுத்தினார். இந்த முழக்கம் இந்து சமூகத்தின் பல்வேறு சாதிகளை ஒன்றிணைப்பதாக நம்பப்பட்டது.

இந்த முழக்கம் குறித்து சர்ச்சை எழுந்தபோது, மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில், ‘ஒன்றிணைந்தால் பாதுகாப்பு’ என்ற முழக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி முன்வைத்தார். இந்த முழக்கம் இந்து சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான ஒரு வழியாகப் பார்க்கப்பட்டது.

மகாராஷ்டிரா தேர்தலின்போது, சாதி அடிப்படையில் பிளவுபடாமல் இருக்க பா.ஜ.க முயற்சி செய்தது. அதேநேரம், ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தலின்போது, ”வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள்” குறித்து பா.ஜ.க குரல் எழுப்பியது.

பாஜகவின் இந்துத்துவ அரசியல் எந்தத் திசையில் செல்கிறது என்பதை மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.

இவ்விரு மாநிலங்களின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தால், பல சாதிகளாகப் பிரிந்துள்ள இந்து சமூகம் ஒரே மாதிரியான நிலைபாட்டில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது புலப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)