மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது - அடுத்த முதல்வர் யார்?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தச் செய்தியைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் ஒரு நவீன உலாவி மற்றும் நிலையான இணைய இணைப்பு தேவை.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி யும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.

200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து அமோக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி, அடுத்து வந்த ஐந்தே மாதங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஜார்க்கண்டைப் பொருத்தவரை, காங்கிரசை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்

  • மகா விகாஸ் அகாடி கூட்டணி- 51
  • மகாயுதி கூட்டணி - 228
  • மற்ற கட்சிகள்- 9

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்

  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி- 57
  • பாஜக கூட்டணி - 23
  • மற்ற கட்சிகள்- 1

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், மாநில பாஜக அலுவலகத்திற்கு வெளியே மகிழ்ச்சியான சூழல் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மகாயுதி கூட்டணியில் பாஜக மட்டும் 132 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தப் புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால் மகாராஷ்டிராவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் முதல்வர் யார்?

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போது, ​​மகாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகிய 3 பேர் முன்னணியில் உள்ளனர்

மகாராஷ்டிராவில் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 220 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவே இறுதி முடிவுகளாக மாறினால், அது மகாயுதி கூட்டணிக்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்.

ஆனால், மகாயுதி ஆட்சி அமைத்தால் முதல்வர் யார் என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

மகாராஷ்டிர அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ஜிதேந்திர தீட்சித், மகாயுதி கூட்டணியில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து வருவதாக பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்துள்ளார்.

“எனவே ஒரு பாஜக தலைவர் மட்டுமே முதல்வராக முடியும். முதலில் நமது நினைவுக்கு வரும் பெயர் தேவேந்திர பட்னாவிஸ். ஆனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகம் அறியப்படாத ஒருவர்தான் திடீரென முதல்வர் ஆக்கப்பட்டார். அதேபோல இங்கும் நடந்தால், பட்னாவிஸ் தவிர்த்து வேறு சில முக்கியத் தலைவர்கள் உள்ளனர்” என்கிறார் ஜிதேந்திர தீட்சித்.

“சுதிர் முங்கண்டிவார், ஒரு முக்கியமான நபர். ஏனென்றால் அவர் ஓபிசி சமூகத்தின் முகமாக இருப்பவர், விதர்பா பகுதியில் இருந்து வந்தவர். இவர்களைத் தவிர, வினோத் தாவ்டே அல்லது பங்கஜா முண்டேவும் முக்கியமான நபர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார் ஜிதேந்திர தீட்சித்.

‘வளர்ச்சிப் பணிகளுக்கு கிடைத்த வெற்றி’- பிரதமர் மோதி

‘வளர்ச்சிப் பணிகளுக்கு கிடைத்த வெற்றி’- பிரதமர் மோதி

பட மூலாதாரம், ANI

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பது குறித்து பிரதமர் மோதி, “வளர்ச்சி வென்றுள்ளது. ஒரு நல்ல அரசு வென்றுள்ளது. இணைந்து நின்றால் இன்னும் பல உயரங்களை நம்மால் அடைய முடியும்.” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிர சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு நன்றி. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக எங்கள் கூட்டணி தொடர்ந்து பணியாற்றும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா." என்று தெரிவித்துள்ளார்.

‘வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி’- ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே
படக்குறிப்பு, மகாயுதி செய்த பணியை பார்த்து பொதுமக்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார் ஏக்நாத் ஷிண்டே (வாக்குப்பதிவு தினத்தன்று ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது குடும்பம்)

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, “மகாயுதி செய்த பணியை பார்த்து பொதுமக்கள் வாக்களித்துள்ளனர், அதனால் தான் மகாயுதிக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

“மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களுக்கும் இன்று நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஏனெனில் இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. மகாயுதி அமோக பெரும்பான்மையைப் பெறும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். எனது அன்பு சகோதரிகள், அன்பான விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.” என்று கூறினார்.

முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, "முதலில் முழுமையான முடிவுகள் வரட்டும். அதன்பிறகு 3 கட்சிகளின் முக்கிய தலைவர்களும் ஒன்று ஆலோசனை செய்து, அந்த முடிவை எடுப்போம்." என்று கூறினார்.

தேவேந்திர பட்னாவிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல்வர் பதவி குறித்து எந்த சர்ச்சையும் இல்லை என்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவின் தற்போதைய துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், “மகாராஷ்டிரா மக்கள் அனைவரும் பிரதமர் மோதிக்குப் பின்னால் நிற்கிறார்கள் என்பதை இந்த முடிவுகள் காட்டுகிறது” என்றார்.

மகாராஷ்டிராவின் முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த பட்னாவிஸ், "முதல்வர் பதவி குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு மூன்று கட்சிகளும் ஒன்றாக ஆலோசித்து முடிவு செய்யும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. எங்கள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா செய்தியாளர் சந்திப்பிலும் இதைத் தெரிவித்துள்ளார்.” என்று கூறினார்.

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சந்தேகம்’

ஃபஹத் அகமது

பட மூலாதாரம், X/@ReallySwara

படக்குறிப்பு, என்சிபி (சரத் பவார்) கட்சியின் வேட்பாளரும் பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கரின் (வலது) கணவருமான ஃபஹத் அகமது

என்சிபி (சரத் பவார்) சார்பில், மும்பையின் அனுசக்தி நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஃபஹத் அகமது கடைசிச் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும், சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

அந்தத் தொகுதியில் நவாப் மாலிக்கின் மகளும், என்சிபி (அஜித் பவார்) கட்சியின் வேட்பாளருமான சனா மாலிக் முதலிடத்தில் உள்ளார்.

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) குறித்து பல்வேறு கேள்விகளை ஃபஹத் அகமது எழுப்பியுள்ளார்.

அதில், “தேர்தல் ஆணைய இணையதளத்தில் நான் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தேன். மொத்தம் 19 சுற்றுகளில், 17வது சுற்று வரையிலும் நான் முன்னிலையில் இருந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“வாக்குப்பதிவு அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கிய இவிஎம் இயந்திரங்களில், சில அவற்றின் பேட்டரியில் 99 சதவீதம் சார்ஜை இழந்திருந்தன. அத்தகைய இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டபோது, எதிர்தரப்பு வேட்பாளர் சனா மாலிக் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என ஃபஹத் அகமது குற்றம்சாட்டியுள்ளார்.

“மறு வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அளிக்கப் போகிறேன். இதை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த விசாரணைக்கு முன் எந்தவிதமான முடிவுகளும் அறிவிக்கப்படாது." என்று ஃபஹத் அகமது கூறினார்.

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்

ஜார்க்கண்டில் போட்டியிடும் முக்கியக் கட்சிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு அதன் கூட்டணியில் உள்ள 'அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் பேரவை’க்கு (ஏஜெஎஸ்யு) பத்து இடங்களை வழங்கியது.

'இந்தியா’ கூட்டணியின் முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணிக்கு எதிராகக் களமிறங்கின.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மற்றும் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளதால், மும்பை பாஜக அலுவலகத்தின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள்
படக்குறிப்பு, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளதால், மும்பை பாஜக அலுவலகத்தின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள்

மகாராஷ்டிரா தேர்தல் களத்தின் நிலவரம்

இந்த முறை மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சிகள் களத்தில் உள்ளன.

ஆறு கட்சிகளின் (மகா விகாஸ் அகாடி மற்றும் மகாயுதி) இரண்டு கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தாலும், மூன்றாவது கூட்டணியான பகுஜன் வஞ்சித் அகாடி மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க145 தொகுதிகள் தேவை.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்
படக்குறிப்பு, தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கின்றது
மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வாக்களித்த 101 வயது இந்திரா குல்கர்னி மற்றும் அவரது குடும்பத்தினர்
படக்குறிப்பு, மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வாக்களித்த 101 வயது இந்திரா குல்கர்னி மற்றும் அவரது குடும்பத்தினர்

மகாராஷ்டிராவின் முக்கிய தலைவர்களின் நிலை என்ன?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024 live updates

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வோர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி தொடர்ச்சியாக அரசியல் தளத்தில் விவாதிக்கப்பட்டு வந்த தொகுதி. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவார் (மகாயுதி) இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யுகேந்திர பவார் (மகா விகாஸ் அகாடி) போட்டியிடுகிறார்.

பாராமதி தொகுதியின் 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அஜித் பவார் 1,20,813 வாக்குகளும், யுகேந்திர பவார் 53,541 வாக்குகளும் பெற்றுள்ளனர். அஜித் பவார் 67,272 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல, நாக்பூர் தென்மேற்கு தொகுதியின் 20வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக) 90,595 வாக்குகளும், பிரபுல்லா வினோத்ராவ் குதாதே (காங்கிரஸ்) 63,209 வாக்குகளும் பெற்றுள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் 27,386 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிராவின் வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளரான 57,553 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி வேட்பாளர் மிலிந்த் தியோரா 48,321 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 9,232.

எம்.என்.எஸ். தலைவர் ராஜ் தாக்கரேவின் மகன் அமித் தாக்கரே முதல் முறையாக தேர்தலில் களம் கண்டார். அவர் மஹிம் தொகுதியில் இருந்து போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி அவர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

உத்தவ் சிவசேனாவின் வேட்பாளர் மகேஷ் சாவந்த் 34,552 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். ஷிண்டேவின் சிவசேனாவில் இருந்து சதா சர்வன்கர் 32,858 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அமித் தாக்கரே 22,716 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

பாபா சித்தீக்கி மகன் ஜீஷான் சித்தீக்கியின் நிலை என்ன?

ஜீஷான் சித்தீக்கி மற்றும் வருண் சர்தேசாய்

பட மூலாதாரம், Getty Images/@SardesaiVarun (X)

படக்குறிப்பு, ஜீஷான் சித்தீக்கி மற்றும் வருண் சர்தேசாய்

பாபா சித்தீக்கியின் மகன் ஜீஷான் சித்தீக்கி மகாராஷ்டிரா சட்டசபையின் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

சமீபத்தில் பாபா சித்தீக்கி கொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரசை விட்டு வெளியேறி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர். இந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது மகன் ஜீஷான் சித்தீக்கியும் அஜித் பவாரின் அணியான என்சிபியில் போட்டியிடுகிறார்.

வந்த்ரே கிழக்கு தொகுதியின் 15வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ஜீஷான் சித்தீக்கி 36,047 வாக்குகளும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் வருண் சர்தேசாய் 43,973 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜீஷான் 7,926 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

வருண் சர்தேசாய் ஆதித்யா தாக்கரேவின் உறவினர் ஆவார்.

‘மகாராஷ்டிரா மக்களின் முடிவு இதுவல்ல’

சஞ்சய் ராவத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இது மக்களின் முடிவாக இருக்க முடியாது என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில், பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், “இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது, மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

"வெளிவரும் முடிவுகளை நான் நம்பத் தயாராக இல்லை. மகாராஷ்டிர மக்களின் வாக்குகள் எந்தத் திசையில் செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு கெளதம் அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. பாஜகவின் ரகசியம் அதன்மூலம் வெளி வந்தது. அதைத் திசை திருப்பவே இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன” என்று கூறினார்.

மேலும், “மகாராஷ்டிராவும், மும்பையும் அதானியின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால்தான், இதுபோன்ற முடிவுகள் மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இது மக்களின் முடிவாக இருக்க முடியாது” என்று சஞ்சய் ராவத் கூறினார்.

ஜார்க்கண்ட் தேர்தல் களத்தின் நிலவரம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024

பட மூலாதாரம், ANI

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 41 தொகுதிகளில் வெற்றி தேவை.

கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளையும், காங்கிரஸ் 16 தொகுதிகளையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் சிபிஎம் தலா ஒரு தொகுதியையும் பெற்றன. இந்தக் கூட்டணி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. பாஜகவுக்கு 25 தொகுதிகள் கிடைத்தன.

மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில், ஜேஎம்எ கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் சந்தால் பர்கானாவின் 18 தொகுதிகளிலும், கோல்ஹான் பகுதியில் 14 தொகுதிகள் மீதும் அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.

கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தால் பர்கானாவில் உள்ள 18 தொகுகளில் 3 தொகுகளில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. இந்த முறையும் அனைவரின் பார்வையும் இந்த 32 தொகுதிகள் மீதுதான் இருக்கும்.

ஜார்க்கண்டின் முக்கிய தலைவர்களின் நிலை என்ன?

ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹெத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இருந்து ஏற்கனவே 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, இவர் 53,171 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார், இவரை எதிர்த்து களம் கண்டுள்ள பாஜகவின் கமலியம் ஹெம்ப்ராம் 32,702 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 20,469.

சம்பாய் சோரன்

பண மோசடி வழக்கில் ஹேமந்த் சிறை சென்ற போது, சம்பாய் சோரன் அம்மாநிலத்தின் முதல்வராக பணியாற்றினார். சிறையில் இருந்து ஹேமந்த் வெளியே வந்து மீண்டும் முதல்வரான பிறகு சம்பாய் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் தற்போது சரைகேலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் தற்போது, 92,106 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கணேஷ் மஹாலி 63,201 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 28,905.

கல்பனா சோரன்

கண்டேய் தொகுதியில் போட்டியிடுகிறார் கல்பனா சோரன். ஹேமந்தின் மனைவியான இவர் 2024ம் ஆண்டு இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது 78,814 பெற்று முன்னிலையில் இருந்தாலும், அடுத்த இடத்தில் உள்ள பாஜகவின் முனியா தேவிக்கும் இவருக்கும் வித்தியாசம் வெறும் 1073 வாக்குகளே.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனைவி கல்பனா சோரனுடன் ஹேமந்த் சோரன்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)