வலுவான நிலையில் இந்தியா: ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை தகர்த்த ஜெய்ஸ்வால் - ராகுல்

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் - ராகுல் இணை
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கை சற்று ஓங்கியுள்ளது. அனுபவம் குறைந்த வீரர்களை ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கியிருக்கிறது இந்திய அணி என்று விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடியை ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் கூட்டணி அளித்துள்ளது.

முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 2வது நாளான இன்று 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. இந்திய வீரர்களின் ஒரு விக்கெட்டைக் கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் சாய்க்க முடியவில்லை.

பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழும் பெர்த் ஆடுகளத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை நெருங்கியுள்ளார். அவருக்கு துணையாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராணாவை சீண்டிய ஸ்டார்க்

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்திருந்தது. அலெக்ஸ் கேரே 19, ஸ்டார்க் 6 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அலெக்ஸ் கேரே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் சேர்ந்தார்.

பும்ரா, ஹர்ஷித் ராணா வீசிய பந்துகள் பிட்சில் பட்டு பேட்ஸ்மேனை நோக்கி எகிறி, சீறிப்பாய்ந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. “உன்னைவிட நான் வேகமாக பந்துவீசுவேன். பார்க்கத்தானே போகிறாய்” என்று ராணாவை வம்புக்கு இழுத்தார் மிட்செல் ஸ்டார்க். ஆனால், ராணா எந்தவித பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சென்றார்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஸ்டார்க் நிதானமாக ஆடி 26 ரன்களைச் சேர்த்து, ஆஸ்திரேலிய அணியை 100 ரன்களைக் கடக்க உதவி செய்தார்.

நேதன் லயன் 5 ரன்கள் சேர்த்தநி லையில் ராணா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்டார்க் 26 ரன்னில் ராணாவிடமே விக்கெட்டை இழந்து வெளியேறினார். 51.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்றைய ஆட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.

2வது குறைந்தபட்ச ஸ்கோர்

ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகி இருந்தது. அதேநேரத்தில், பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் 1985 ஆம் ஆண்டுக்குப்பின், மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 2016-ல் ஹோபர்ட்டில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 85 ரன்களிலும், 2010ம் ஆண்டில் மெல்போர்னில் இங்கிலாந்து அணியிடம் 98 ரன்களுக்கும் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி சுருண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர்.

டாப்-6 பேட்டர்கள் நிலை

ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். கடந்த 1978-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய டாப்-6 பேட்டர்கள் 22 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் இப்போதுதான் டாப்-6 பேட்டர்கள் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளனர்.

கபில்தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா

இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேப்டன் பும்ரா டெஸ்ட் அரங்கில் வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியக் கண்டத்துக்கு வெளியே 9-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ் சாதனையை சமன் செய்தார்.

30 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் பந்துவீச்சு பெர்த் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும்.

2007-ஆம் ஆண்டில் மெல்போர்ன் டெஸ்டின்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர் கேப்டனாக இருந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும்.

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

நங்கூரமிட்ட ஜெய்ஸ்வால், ராகுல்

முதன் இன்னிங்சில் கிடைத்த 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ராகுல், ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை மிகவும் கவனமாக பந்துகளை எதிர்கொண்டனர். குறிப்பாக ஜெய்ஸ்வால், கிரீஸுக்கு உள்ளே நின்றே பந்துகளைச் சந்தித்ததால், எளிதாக பேக்ஃபுட் செய்து ஆட முடிந்தது.

புதிய பந்தில் ஹேசல்வுட்டும், ஸ்டார்க்கும் ஆவேசமாகப் பந்துவீசியும் அதை ஜெய்ஸ்வால் லாவகமாக எதிர்கொண்டார். அவர் தேவையற்ற பந்துகளை தொடாமல் அப்படியே விக்கெட் கீப்பரிடம் விட்டுவிடவும் செய்தார். எந்த பந்தையும் வலுக்கட்டாயமாக அடிக்காமல், பந்து செல்லும் போக்கிலேயே தட்டிவிட்டு ஜெய்ஸ்வால் ரன் சேர்த்தார். சில நேரங்களில் கம்மின்ஸ் வீசிய பந்துகளை அப்பர்கட் ஷாட், ஸ்டார்க் பந்துவீச்சில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ஜெய்ஸ்வால் ஷாட் அடித்து பவுண்டரி அடித்தார்.

ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டார்க்கை நோக்கி, 'பந்து மிகவும் மெதுவாக வருகிறது' என்று கூறி ஜெய்ஸ்வால் சீண்டினார்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் ஜெய்ஸ்வால் அபாரமாக பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை கவர் டிரைவ் செய்ய ஜெய்ஸ்வால் முயல, பந்து அவரை ஏமாற்றிவிட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது.

இதைத் தொடர்ந்து, அந்த ஓவரின் 5-வது பந்தை 141 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்டார்க் வீசினார். அந்த பந்தை தடுத்தாடிய ஜெய்ஸ்வால் அத்துடன் நிற்காமல், ஸ்டார்க்கை நோக்கி, 'பந்து மிகவும் மெதுவாக வருகிறது' என்று சீண்டினார். அதற்கு ஸ்டார்க் பதிலேதும் கொடுக்காமல், சிறிய புன்னகையை உதிர்த்தார். பின்னர் அந்த ஓவரின் கடைசிப் பந்தை இன்னும் வேகமாக, 145 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்டார்க் வீசினார். அந்த பந்தை தொடாமல் அப்படியே விக்கெட் கீப்பரிடம் ஜெய்ஸ்வால் விட்டுவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த ஓவர் முடிவுக்கு வர, ஜெய்ஸ்வால், ஸ்டார்க் இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின் போது இந்திய அணியின் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவிடம் “உன்னைவிட நான் வேகமாக பந்துவீசுவேன். பார்க்கத்தானே போகிறாய்” என்று ஸ்டார்க் சீண்டியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஜெய்ஸ்வாலும் ஸ்டார்க்கை சீண்டியதாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறல்

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால்

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுதான் ஓங்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ராகுல் சிதைத்துவிட்டனர்.

முதல் இன்னிங்ஸில் ராகுல்,ஜெய்ஸ்வாலை எளிதாக ஆட்டமிழக்கச் செய்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், ஸ்ட்ராக், கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் பலவிதமான வித்தைகள் செய்தும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை.

பெர்த் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. கூக்கபுரா பந்தில் விரைவாக விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கருதி, ஜெய்ஸ்வாலும், ராகுலும் ரன் சேர்ப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் நீண்ட நேரம் களத்தில் நிற்கவும், விக்கெட்டை நிலைப்படுத்தவும் கவனம் செலுத்தினர்.

இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று முற்றிலும் தோல்வி அடைந்து, சோர்வடைந்தனர். அவர்கள் சோர்வடைந்த நேரத்தைப் பயன்படுத்தி ஜெய்ஸ்வால், ராகுல் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தினர்.

ராகுல் 124 பந்துகளில் அரைசதமும், ஜெய்ஸ்வால் 123 பந்துகளில் அரைசதத்தையும் எட்டி நங்கூரமிட்டனர். 2-வது செஷனில் ராகுல், ஜெய்ஸ்வால் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது, இதைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்களும் சோர்வடையத் தொடங்கினர். நேதன் லயன், டிராவிஸ் ஹெட் என சுழற்பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தினார். அவர்களின் ஓவர்களில் ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார், சில பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

218 ரன் முன்னிலை

இருவரின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

38 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை

20 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் அடித்துள்ளனர். கடைசியாக 1986்-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடக்க ஜோடியாக களமிறங்கி இருவரும் அரைசதம் அடித்திருந்தனர். அதன்பின் எந்த இந்த தொடக்க ஜோடியும் அரைசதம் அடிக்கவில்லை. 38 ஆண்டுகளுக்குப்பின் இப்போது ஜெய்ஸ்வால், ராகுல் அடித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)