வங்கதேசத்தை விட்டு ஹசீனா வெளியேறியது ஏன்? அரசியல் மறுபிரவேசம் செய்வாரா? பிபிசிக்கு மகன் பேட்டி

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே?

வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்?

வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்பதை அங்குள்ள பிபிசி செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.

நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாவதை உணர்ந்த அவர், தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா செய்தி வெளியிட்டிருந்தது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியதாக தகவல்

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதரண சூழல் எதிரொலியாக நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள ஹிண்டர் விமானப்படை தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

ஹசீனா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க தீர்மானித்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் நாட்டிற்கு செல்லப் போகிறாரா என்பதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் லண்டன் செல்லப் போவதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஷேக் ஹசீனா இந்தியா வந்தது ஏன்?

வங்கதேசத்தில் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பாதுகாப்பு தேடி இந்தியா செல்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாகவே, வங்கதேசத்திற்கு இந்தியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே பலன் பெற்றுள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசம் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் நட்பான அரசு அமைவது இந்தியாவுக்கு பலன் தரும் ஒன்று.

ஷேக் ஹசீனா தனது ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராளிக் குழுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதிகார மட்டத்தில் நட்பை பலப்படுத்தினார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து பொருட்களை வங்கதேசம் வழியாக எடுத்துச் செல்ல அவர் அனுமதி கொடுத்தார்.

ஷேக் ஹசீனா 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக தேர்வான போதே இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா - வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.

2022-ஆம் அண்டு இந்தியாவுக்கு வருகை தந்த போது, இந்தியா, இந்திய அரசு, இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றியதை அவர் நினைவுகூர்ந்தார்.

இந்தியாவுடன் ஷேக் ஹசீனாவுக்கு இருந்த நெருக்கமான உறவு, அவரை இந்தியா ஆதரித்தது ஆகியவை வங்கதேச எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தியா, வங்கதேச மக்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கக் கூடாது என்பது அவர்களது நிலைப்பாடு.

ஹசீனா அரசியல் மறுபிரவேசம் செய்வாரா? மகன் பதில்

ஷேக் ஹசீனா அரசியலில் மறுபிரவேசம் செய்ய மாட்டார் என்று பிபிசியிடம் பேசிய அவரது மகன் சஜீப் வாஜித் ஜாய் தெரிவித்தார். "நாட்டிற்காக கடினமாக உழைத்து பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அவர், தனக்கு எதிராக ஒரு சிறிய பகுதியினர் போராட்டத்தில் இறங்கியிருப்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளார்" என்று அவர் கூறியுள்ளார்.

பிபிசி உலக சேவையில் நியூஸ்ஹவர் நிகழ்ச்சியில் ஹசீனா மகனும் இன்று வரை பிரதமரின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவருமான சஜீப் வாஜித் ஜாய் பேசினார். தனது தாயார் பதவியை ராஜினாமா செய்வது பற்றி நேற்றே பரிசீலித்ததாகவும், அவரது பாதுகாப்பு பற்றி அஞ்சிய குடும்பத்தினரின் வற்புறுத்தலால் நாட்டை விட்டே அவர் வெளியேறியதாகவும் சஜீப் வாஜித் ஜாய் தெரிவித்தார்.

தாயாரின் ஆட்சிக்காலத்தை நினைவு கூர்ந்த அவர்,"வங்கதேசத்தின் முகத்தையே அவர் மாற்றியுள்ளார். அவர் பதவியேற்கும் போது வங்கதேசம் தோல்வியில் பிடியில் உள்ள நாடாக பார்க்கப்பட்டது. அது ஏழை நாடாக இருந்தது. ஆனால், அதன் பிறகு இன்று வரையிலும் ஆசியாவில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டார் " என்றார்.

போராட்டக்காரர்கள் கடுமையாக நடத்தியதாக ஹசீனா அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த ஜாய், "நேற்று மட்டும் 13 காவல்துறையினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு கும்பல் மக்களை அடித்துக் கொல்லும் போது காவல்துறையினர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கூறினார்.

வங்கதேச போராட்டத்தில் வெடித்த வன்முறையில் இதுவரையிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் போராட்டக்காரர்கள் ஆவர்.

பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்

வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர்.

அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன. சில வீடியோக்களில், பிரதமர் இல்லத்தில் இருந்து நாற்காலிகள், சோஃபா போன்றவற்றை போராட்டக்காரர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் உள்ளன.

இடைக்கால அரசு - ராணுவ தளபதி

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையிநிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். குடியரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வங்கதேசத்தில் அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு யார் தலைமையேற்பார் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

வங்கதேசத்தின் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய ராணுவ தளபதி உறுதியளித்தார். அங்கே, கடந்த சில வாரங்களாக நீடிக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

போராட்டங்கள் மீண்டும் வெடித்தது எப்படி?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியின் தவறான அரசியல் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஹசீனா தற்போதைய ஒதுக்கீட்டு சீர்திருத்த முறையைக் குறிப்பிட்டு, அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பிட்டார். கடந்த காலக்கட்டத்தில் அவரது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திய கதை இது.

அவர் கூறுகையில்: "சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், ரசாக்கர்களின் பேரப்பிள்ளைகள் (பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்கள்) ஒதுக்கீடு பெற வேண்டுமோ? அதுதான் எனது கேள்வி." என்று பேசினார்

அவர் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், பல்வேறு வளாகங்களில் மாணவர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத் தொடங்கினர்.

காவல்துறை மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு படை, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) படையுடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுத்தது. ஆளும் கட்சியின் மாணவர் பிரிவும் அவர்களின் தாக்குதலில் இணைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

அடுத்த 72 மணி நேரத்தில், வங்கதேசத்தின் பல இடங்களில் வன்முறை மோதல்கள் வெடித்தது. தேசிய தொலைக்காட்சி கட்டிடம் எரிக்கப்பட்டது. ஒரு சிறைச்சாலையின் வாயில் உடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை

ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை.

வங்க தேசத்தின் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணான ஹசீனாவின் வலிமையை அசைத்து பார்த்தனர்.

பதினாறு ஆண்டுகளாக, பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார்.

அவரின் ஆட்சியில் சர்வாதிகார தலைமை போக்கு இருந்தபோதிலும் தேசத்தில் நிகழ்ந்த பெரிய முன்னேற்றங்களுக்கு அவரே காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்.

பெரிய பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால் இம்முறை அவரின் சக்தியை மாணவர் சக்தி அசைத்துவிட்டது.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அமைதியின்மை, கலவரம் மற்றும் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளன.

'இது பிரஷர் குக்கர் திடீரென வெடிப்பது போன்ற நிலை'

ஆசியாவில் சர்வாதிகாரம் பற்றி விரிவாக ஆய்வு செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் முபாஷர் ஹசன், இது ஒரே இரவில் ஏற்பட்ட போராட்டம் அல்ல, மாறாக கொஞ்சம் கொஞ்சமாக கோவம் அதிகரித்து, "பிரஷர் குக்கர் திடீரென வெடித்தால் எப்படி இருக்கும் அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது" இது என்று விவரித்துள்ளார்.

டாக்டர் ஹசன் பிபிசி பங்களாவிடம் கூறுகையில் : "நினைவில் கொள்ளுங்கள், பத்திரிகை சுதந்திர குறியீட்டில் ரஷ்யாவிற்கும் கீழே இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி இங்கே பேசுகிறோம்.

"ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியினரின் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலாக்குவது, குடிமக்களுக்கு ஆண்டுதோறும் அடிப்படை வாக்குரிமை மறுப்பது மற்றும் அவரது ஆட்சியின் சர்வாதிகாரத் தன்மை ஆகியவை சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினரை கோபப்படுத்தியுள்ளன.”

"துரதிர்ஷ்டவசமாக, அவர் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரதமராக நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு குழுவுக்கு மட்டுமே தலைவராக இருந்தார்."

வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகளால் டாக்டர் ஹசன் வியப்படையவில்லை.

1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

கடந்த மாதம் சர்ச்சைக்குரிய இந்த ஒதுக்கீட்டு முறையை உயர்நீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்திய போது எதிர்ப்புகள் அதிகரித்தன, ஆளும் கட்சியினர், போராட்டக்காரர்களைத் தாக்கியபோது போராட்டம் வன்முறையாக மாறியது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வங்கதேச உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையை மீண்டும் நிறுவிய மற்றும் மாணவர் போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)