You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேச வன்முறையில் இருந்து தப்பி வந்த தமிழக மாணவியின் நேரடி அனுபவம் என்ன?
அரசு வேலைகளில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து இதுவரை 100-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
டாக்கா, சிட்டகாங் போன்ற வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் இந்த வன்முறை மிகத்தீவிரமான முறையில் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சூழலில், வங்கதேச மாணவர் போராட்ட வன்முறையில் இருந்து தப்பித்து வந்துள்ள தமிழக மாணவி மேற்குவங்கத்தின் பலூர்காட்-இல் இருந்து பிபிசி தமிழிடம் பேசினார்.
அதேபோல், பிபிசி தமிழிடம் பேசிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்களை சென்னை அழைத்து வர தமிழக அரசின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் தமிழக மாணவி
2023-ஆம் ஆண்டு வங்கதேசம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஜனனி பிரியா, அங்கு இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
இந்தப் போராட்டம் ஆரம்பித்த முதல் நாள் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டதே தங்களுக்கு தெரியவில்லை என்கிறார்.
"பெரும்பான்மை மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் இடையே சண்டை வெடித்தது. மாணவர்கள் மாணவர்களை அடிப்பதும், காவலர்களை அடிப்பதும் என சூழல் விபரீதமானது," என்கிறார்.
மேலும், "எங்கள் கல்லூரி பாதுகாப்பாகதான் இருந்தது. எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களைப் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டனர். சூழல் மிகமோசமான நிலையை எட்டியதை அடுத்து, ஒருவேளை எங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிடுமோ என்ற அச்சத்துடன்தான் எங்களைத் திரும்ப தாய்நாடு அனுப்பி வைத்தனர்,” என்கிறார்.
'மிகவும் பயமாக இருந்தது'
இந்தப் போராட்டம், மற்றும் வன்முறைச் சம்பவங்களின் போது எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பேசிய மாணவி ஜனனி ப்ரியா, "முதல் நாளில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால், இரண்டாம் நாளன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்துவிட்டனர். இதனால், எங்களால் பெற்றோரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. எங்களுடன் தொடர்புகொள்ள முடியாததால், பெற்றோர் பீதி அடைந்தனர்,” என்கிறார்.
"இரண்டாவதாக, மாணவர்கள் இடையிலான போராட்ட வன்முறையைப் பற்றிய தகவல்கள் கேள்விப்பட்ட போது எங்கள் அச்சம் மேலும் அதிகரித்தது. மாணவர்களை, மாணவர்களே தாக்குவதும், அதைத் தொடர்ந்து வன்முறைச் சூழலைச் சமாளிக்க துப்பாக்கிச்சூடு நடத்த அரசு உத்தரவிட்டதை எல்லாம் கண்டு பயம் அதிகரித்தது," என கூறுகிறார்.
‘தீவைப்பு, குண்டுவீச்சு தாக்குதல்கள்’
மேலும் தொடர்ந்த அவர், "இந்திய எல்லைக்குள் வந்ததும் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டோம், அப்போது சுபத்திரா எனும் அதிகாரி முதலில் பேசினார். இங்கிருக்கும் 31 மாணவர்களுக்கும் பயணசீட்டுகளை அரசு ஏற்பாடு செய்துக் கொடுத்தது.''
''நாங்கள் பயணிக்கும் நேரம் வேறுபட்டு இருந்தாலும், இந்த டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்ததே பேருதவி. அரசுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறினார் ஜனனி பிரியா.
தங்கள் கல்லூரியில் எந்த மாணவர்களும் பாதிக்கப்படவில்லை, ஆனால், தலைநகரான டாக்காவில்தான் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ஜனனி பிரியா.
"கல்லூரி மற்றும் தாங்கும் விடுதிகளை உடைத்து, தீவைத்து நாசமாக்கப்பட்டது என அங்கிருந்த மாணவர்கள்தான் அதிக பிரச்சனைகள் எதிர்கொண்டனர். அதேபோல, எங்கள் பகுதிக்கு அருகே இருந்த ரங்ப்பூர் (Rangpur) எனும் ஊரில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன," என்கிறார் ஜனனி பிரியா.
படிப்பைத் தொடர்வது குறித்து மாணவி கூறியது என்ன?
மேலும், எல்லை கடந்து வந்த அனுபவம் குறித்த பேசிய ஜனனி பிரியா, ‘'எங்கள் கல்லூரி உதவி இல்லையென்றால், எல்லையை எங்களால் கடந்து வந்திருக்க முடியாது. மிக பாதுகாப்பாக மெய்காவலர்கள் உதவிகளுடன் ஏழு பேருந்துகளில் எங்களை அனுப்பிவைத்தனர். ஒவ்வொரு பேருந்திலும், கல்லூரி நிர்வாகி மற்றும் காவலர் அதிகாரிகளுடன் எங்களை பாதுகாப்பாக எல்லை கடக்க உதவினர்'' என கூறினார்.
''நிச்சயம் படிப்பை நிறுத்த முடியாது. ஓரளவுக்கு பிரச்சனை ஓயும் பட்சத்தில் மீண்டும் வங்கதேசம் சென்று படிப்பை தொடர்வேன். இங்கு படிக்க முடியாததால்தான் வெளிநாடுகளில் முயற்சி செய்து படித்து வருகிறோம். படிப்பு மிகவும் முக்கியம் அதை விட முடியாது'' என்று கூறினார் ஜனனி பிரியா.
‘சென்னை வரவிருக்கும் 49 மாணவர்கள்’
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "வங்கதேசத்தில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்களை சென்னை அழைத்து வர தமிழக அரசின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு, விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சென்னை வந்தடைவார்கள். அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம்.''
''இவர்கள் கிருஷ்ணகிரி, கடலூர், தருமபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சென்னை, விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் சில மாணவர்கள் வங்கதேசத்தில் இருப்பதாகவும், இந்திய தூதரகம் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடு திரும்பிய பிற மாநில இந்திய மாணவர்கள் கூறுவது என்ன?
பிபிசி செய்தியாளர் பினாகி தாஸ் வங்கதேசத்தில் இருந்து நாடு திரும்பிய சில இந்திய மாணவர்களை அகர்தலா - அகௌரா சோதனைச் சாவடி எல்லையில் சந்தித்துப் பேசினார்.
இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் வங்கதேசத்தின் பிரம்மன்பரியா (Brahmanbaria) மாவட்டத்தில் இருந்து திரிபுரா எல்லை மூலம் நாடு திரும்பியவர்கள்.
இந்த மாணவர்கள் பிரம்மன்பரியா மருத்துவ கல்லூரியில் படிக்கச் சென்றவர்கள்.
இதே மாவட்டத்தில் அமைந்திருக்கும் கட்டூரா மருத்துவ கல்லூரியில் (Ghatura Medical College) பயிலும் 36 மாணவர்களும் இதே வழியாக நாடு திரும்பியுள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த பிரகிரிதி எனும் மாணவி வங்கதேசத்தில் எம்.பி.பி.எஸ் படித்து வருபவர்.
இதுகுறித்து இவர் பேசுகையில், "நாங்கள் இருந்த இடத்தில் நிலைமை சாதாரணமாகதான் இருக்கிறது. எங்களை கல்லூரி விடுதியிலேயே இருக்க கூறி இருந்தனர். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் வெளியே சென்றுவிட வேண்டாம் என்றனர். உள்ளூர் மற்றும் கல்லூரி நிர்வாகமும் பெருமளவு உதவி செய்தனர். கல்லூரிப் பேருந்து மூலமாக எங்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்” என்றார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் எனும் மாணவர், "ஒரு மாதத்திற்கு முன் தான் நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் தங்கி இருந்த கல்லூரி விடுதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருந்தோம், விடுதியில் உணவும் கிடைத்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்தனர்,” என்றார்.
"டாக்கா மற்றும் சிட்டகாங் போன்ற இடங்களில்தான் வன்முறை தீவிரமாக இருப்பதாக கேள்விப்பட்டோம். இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து உண்மை நிலவரம் மற்றும் போதிய தகவல் கிடைக்கப்பெறாமல் போனது," என்று கூறினார்.
தூதரகத்தைத் தொடர்புகொள்ள உதவிய இந்திய சிம் கார்டு
அசாம் மாநிலத்தை சேர்ந்த ரைமா சிம்ரேகா எனும் மாணவர், "எங்கள் கல்லூரியை மூடிவிட்டனர். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரியவில்லை. இன்டர்நெட் இணைப்பும் துண்டித்துவிட்டனர்,” என்றார்.
பிரம்மன்பரியாவில் இருந்து திரும்பிய ஷகிபுல் ஹக், "இந்த மாவட்டம் இந்திய எல்லைப் பகுதியில் இருந்தது. எங்களிடம் இந்திய சிம் கார்டு இருந்ததால், இந்திய நெட்வர்க் இணைப்பு வசதி கிடைத்தது,” என்றார்.
"கல்லூரியின் மேல் தளத்தில் ஏறி நெட்வர்க் இணைப்பு பெற்று, இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். அவர்களின் உதவி மூலம் நாங்கள் அங்கிருந்து வெளிவர முடிந்தது. கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு உதவியது," என கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)