You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசம்: மாணவர் போராட்டத்தின் போது நிகழ்ந்த கொடூரம் -அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள்
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன் மற்றும் ஸ்ருதி மேனன்
- பதவி, பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி வெரிஃபை
ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை கூட ஒரு புகைப்படம் உணர்த்தி விடும் - சில சமயங்களில், அது ஒட்டுமொத்த தேசத்தையே அசைத்துவிடக் கூடும்.
வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஆயுதம் ஏந்திய காவல்துறையை எதிர்கொள்ள கையில் சிறிய தடியுடன் கைகளை விரித்தபடி நின்ற பல்கலைக்கழக மாணவர் அபு சயீத் போராட்டத்தின் முகமாக மாறினார். ஆயுதம் ஏந்திய காவலர்களை அவர் எதிர்கொண்டு நின்ற புகைப்படம்
அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டிற்கு எதிராக அந்நாட்டில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின் திருப்புமுனையாக அது அமைந்தது.
வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, சில நொடிகளில் அபு சயீத் மீது ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது , அப்போதும் அவர் தொடர்ந்து அந்த இடத்திலேயே நின்றார். அதன் பிறகு பலமுறை அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சத்தங்கள் ஒலித்தாலும் அவர் எதிர்கொண்டு நின்றார். ஆனால் சில நிமிடங்களில் அவர் சரிந்து விழுந்தார்.
வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தினர். பொதுத்துறை அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971-இல் நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்குவது பாரபட்சமானது என்று மாணவர்கள் கூறி போராட்டத்தில் குதித்தனர்.
ஜூலை 16 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் வைரலாகி மேலும் பல மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்தது.
அதன் பிறகு வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வன்முறை, அமைதியின்மை நாட்கள் நீடித்தன. கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக வங்கதேச காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இறுதியாக அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெளிச்சத்துக்கு வந்த தாக்குதல்கள்
பெங்காலி நாளிதழ் `Prothom Alo’ மற்றும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் ஆகியவை இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இதில் பல மாணவர்கள் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் அடக்கம். அந்நாட்டு உள்துறை அமைச்சரின் கூற்றுப்படி, அதிகாரப்பூர்வ அரசாங்க புள்ளிவிவரங்கள் 147 பேர் இறந்திருப்பதாக கூறுகிறது.
ஆனால் சரியான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. உண்மையில் போராட்டத்தின் போது சாலைகளில் என்ன நடந்தது என்பதைக் காட்டும் வீடியோக்கள், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த இணைய முடக்கம் காரணமாக வெளிவருவது தாமதமானது.
இருப்பினும், கடந்த வாரம் அங்கு இணையச் சேவை ஓரளவு மீண்டதால், போராட்டத்தின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அதிகமான காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தலைநகர் டாக்காவின் ஜத்ராபரி பகுதியில் காயமடைந்த தனது நண்பரை இளைஞர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து செல்ல முயலும் வீடியோ உண்மையானது என்று பிபிசி வெரிஃபை குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களில், ஹெல்மெட்டுடன் சாதாரண உடையில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் அந்த இரண்டு இளைஞர்கள் இருக்கும் திசையில் சுடுவது போல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் படுகாயமடைந்த தனது நண்பரை விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்தை தேடி ஓடுகிறார்.
இந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் சம்பவமும் அபு சயீத்தின் மரணமும் "சட்டவிரோதமான கொலைகள்" என்று கருத்து சுதந்திரத்தின் உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதற்கான சிறப்பு நிருபர் ஐரீன் கான், பிபிசியிடம் கூறினார்.
“அபு சயீத் காவல்துறைக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் காரணமேயில்லாமல் அவரை சுடுவது தெரிகிறது. இது நியாயமற்ற செயல். வன்முறையின் தெளிவான காட்சி” என்று கான் விளக்கினார்.
போலீஸின் சட்ட விரோத செயல்களை ஒப்புக் கொண்ட அமைச்சர்
சயீத் மீது தாக்குதல் நடத்தியது "சட்டவிரோதமானது" என்று வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இளநிலை அமைச்சர் முகமது அலி அராபத் ஒப்புக்கொண்டார்.
"இது தெளிவாக தெரிகிறது. இளைஞர் அவர்கள் முன் நின்று, கைகளை நீட்டி நிற்கிறார், மிகக் குறுகிய தூரத்தில் நிற்கும் அவரை காவல்துறை சுடுகிறது."
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை நடத்த ஒரு சுயாதீன நீதித்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அராபத் கூறினார்.
பிபிசி வெரிஃபை குழுவால் சரிபார்க்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட மூன்றாவது வீடியோ, டாக்காவின் முகமதுபூர் பகுதியில் வெகு தொலைவில் போராட்டக்காரர்கள் குழுவை நோக்கி ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுடுவதைக் காட்டுகிறது.
ஆனால், டாக்கா பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஃபரூக் ஹொசைன், காவல்துறையின் செயல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார்.
“உயிரையும் உடமையையும் காப்பாற்ற போலீசார் தங்கள் பலத்தை பயன்படுத்துகின்றனர். எந்தவொரு காவல்துறை அதிகாரியும் தங்கள் சொந்த பாதுகாப்பு பற்றிய கவலைகள் எழும் சூழல்களில் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்துவார்”என்று ஹொசைன் ஒரு வாட்ஸ்அப் செய்தியில் கூறினார்.
மற்றொரு சம்பவத்தின் வீடியோக்களை அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். அதில் டாக்காவின் உத்தரா பகுதியில் ஒரு போலீஸ் வேனை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குவதை காட்டுகிறது. பின்னர் வாகனத்தில் இருந்த அதிகாரியை அவர்கள் தாக்குவதும் பதிவாகி உள்ளது.
“போராட்டக்காரர்கள் ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்று, டாக்காவின் ஜத்ராபரி பகுதியில் தலைகீழாகத் தொங்கவிட்டனர்” என்று அராபத் குற்றம் சாட்டினார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"வன்முறை ஒருதலைப்பட்சமாக மட்டும் நடக்கவில்லை. மக்கள் இரு தரப்பையும் பார்க்க வேண்டும், என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும்" என்று அராஃபத் கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கப்படாததால் பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் தாக்கப்பட்டனர்" என்றார் அவர்.
அரசாங்கத்தால் பகிரப்பட்ட இரண்டாவது காணொளி, காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரியை சக காவலர்கள் தூக்கிச் செல்வதைக் காட்டியது.
பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் ஆதரவாளர்கள் மாணவர் போராட்டங்களில் ஊடுருவி, பாதுகாப்புப் படையினர் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தியதோடு, அரசு சொத்துகளுக்கும் தீ வைத்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
`இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஆளும் அவாமி லீக் கட்சியின் முயற்சி’ என்று எதிர்க்கட்சிகள் இந்தக் கூற்றை நிராகரிக்கின்றனர்.
போராட்டங்கள் ஓய்ந்த பின்னர், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் உட்பட 9,000க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
மாணவர் போராட்டத் தலைவர்களும் சுற்றி வளைக்கப்பட்டனர். இது "தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக" எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அரசு தரப்புக் கூறியது.
போராட்டம் செய்தவர்கள் மீது அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்வதால் வங்கதேசத்தில் மேலும் அமைதியின்மை சூழல் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“அரசுக்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கை உணர்வு இல்லை, இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் நம்பவில்லை. அது வெளிப்படையாக தெரிகிறது. அதனால்தான் இங்கு போராட்டமும் பயங்கரமான சூழ்நிலையையும் ஏற்பட்டது”என்று ஐ நா நிபுணர் (UN expert) கான் கூறினார்.
மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பின் யாமின் மொல்லா, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவாக உள்ளார்.
"அரசாங்கம் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)