You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேச வன்முறை: இட ஒதுக்கீடு மட்டுமல்ல; பின்னணியில் உள்ள 2 முக்கிய பிரச்சனைகள்
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர்
வங்கதேசத்தில் நடந்து வந்த பெரும் போராட்டங்களுக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக இருந்த பெரும்பாலான இட ஒதுக்கீட்டுத் திட்டங்களை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் இன்று (ஜூல 21) ரத்து செய்துள்ளது.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரில் ஈடுபட்ட வீரர்களின் உறவினர்களுக்கு பொதுத்துறை வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டது.
இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து, அங்கு நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வந்தன. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இது பெரும் வன்முறைச் சம்பவங்களுக்கும் வழிவகுத்தது. இந்தச் சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (ஜூலை 19) மட்டும் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வங்கதேச உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 21) அரசு வேலைகளில் அதிகபட்சம் 5% பணியிடங்களை மட்டுமே முன்னாள் சுதந்திரப் போர் வீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
பின்னணி என்ன?
17 கோடி மக்கள் வசிக்கும் இந்தத் தெற்காசிய தேசத்தில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் மிக மோசமாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுத்துறை அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971-இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமானது என்று மாணவர்கள் வாதிடுகின்றனர், மேலும் தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகங்களில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய ஆர்பாட்டமாக உருமாறியுள்ளது.
போராட்டம் தீவிரமானது ஏன்?
காவல்துறையும், 'பங்களாதேஷ் சட்ரா லீக்' என அழைக்கப்படும் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினரும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிருகத்தனமான நடவடிக்கைகளைப் மேற்கொண்டதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. வியாழன் (ஜூலை 18) அன்று வன்முறை உச்சகட்டத்தை அடைந்தது. அன்று குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், வெள்ளிக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைய சேவைகளை முடக்கியுள்ளது மற்றும் தொலைபேசி சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
"இது மாணவர்கள் போராட்டம் என்ற கட்டத்தை கடந்து விட்டது. அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்திருப்பது தெரிகிறது," என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் சமினா லுத்பா பிபிசியிடம் கூறுகிறார்.
போராட்டங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. வங்கதேசம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விரக்தியில் வங்கதேச இளைஞர்கள்
சுமார் 1.8 கோடி வங்கதேச இளைஞர்கள் வேலை தேடி வருவதாக ஆய்வு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களை விட குறைவாக படித்தவர்களை விட அதிக வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர்.
வங்கதேசம் ஆயத்த ஆடைகள் (ready-to-wear clothing) ஏற்றுமதியின் அதிகார மையமாக மாறியுள்ளது. இது உலக சந்தைக்கு சுமார் 40 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
இந்தத் துறையில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணியாற்றுகின்றனர், அவர்களில் பலர் பெண்கள். ஆனால் பட்டம் பெற்ற இளைய தலைமுறையினருக்கு இந்த தொழிற்சாலை வேலைகள் போதுமானதாக இல்லை.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சியின் கீழ், தலைநகர் டாக்காவில் புதிய சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள் , மெட்ரோ ரயில் என கட்டமைக்கப்பட்டதன் மூலம் வங்கதேசம் புதிய மாற்றங்களைக் கண்டது.
கடந்த பத்து ஆண்டுகளில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி பிரதமர் ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பலன் அளிப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.
டாக்டர் லுத்ஃபா கூறுகையில், "நாங்கள் பல ஊழல்களை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் செய்யும் ஊழல் நீண்ட காலமாக தண்டிக்கப்படாமல் தொடர்கிறது,” என்றார்.
சமீப மாதங்களில் வங்கதேச சமூக ஊடகங்களில், ஹசினாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் சிலருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவாதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முன்னாள் ராணுவத் தலைவர், முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி, மூத்த வரி அதிகாரிகள் மற்றும் மாநில ஆட்சேர்ப்பு அதிகாரிகள் உட்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
சொத்து குவித்த அரசு அலுவலக பியூன்
கடந்த வாரம் ஹசினா செய்தியாளர் சந்திப்பில், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இது நீண்ட கால பிரச்னை என்றும் கூறினார்.
டாக்காவில் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் 34 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய்) மதிப்பிலான சொத்துக்கள் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட உதவியாளர் (பியூன்) மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.
"சாதாரணப் பயணங்களுக்கு கூட ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறார். அவர் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? இதை அறிந்த நான் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தேன்," என்றார்.
இருப்பினும் அந்த நபர் யார் என்பதை பற்றி அவர் குறிப்பிடவில்லை.
வங்கதேச ஊடகங்களில் இந்த விவகாரம் பற்றிய பல எதிர்வினைகள் எழுந்தன. அரசாங்க ஒப்பந்தங்களுக்கான லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் மூலம் இவ்வளவு பணம் குவிக்கப்பட்டிருக்கும் என்பது ஊடகங்களின் கூற்று.
ஒரு காலத்தில் ஹசினாவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்பட்ட முன்னாள் காவல்துறைத் தலைவர் பெனாசிர் அகமது சட்டவிரோதமான வழிகளில் மில்லியன் கணக்கான டாலர்களைக் குவித்ததற்காக வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பொருளாதார நெருக்கடி ஆகிய சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கு இந்த செய்திகள் சீற்றத்தை ஏற்படுத்தியது.
ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி, கடந்த 15 ஆண்டுகளில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கான இடம் சுருங்கிவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"தொடர்ந்து மூன்று தேர்தல்களில் நம்பகமான, சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்குப்பதிவு செயல்முறை இல்லை," என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் (Human Rights Watch) தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி பிபிசி-யிடம் தெரிவித்தார்.
"எங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமை இங்குள்ள மக்களுக்கு மறுக்கப்படுவதைப் பற்றி ஹசினா குறைத்து மதிப்பிட்டுள்ளார்," என்று கங்குலி கூறினார்.
2014 மற்றும் 2024-ஆம் ஆண்டு தேர்தல்களை பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) புறக்கணித்தது, ஹசினாவின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்றும், தேர்தல்கள் நடுநிலையான கவனிப்பு நிர்வாகத்தின் கீழ் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவதாகக் கூறினர்.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஹசினா நிராகரித்துவிட்டார்.
குற்றச்சாட்டுகளை மறுக்கும் அமைச்சர்கள்
கடந்த 15 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், அவர்களில் பலர் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள், என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
ஷேக் ஹசினா கடந்த சில ஆண்டுகளில் அரசியல் ரீதியாக எதேச்சதிகாரமாக வளர்ச்சி அடைந்துள்ளார் என்ற பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில், அரசாங்கம் ஊடகங்களையும் எதிர்பவர்களையும் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.
"அரசாங்கத்திற்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான கோபம் நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது," என்கிறார் டாக்டர் லுத்ஃபா.
“மக்கள் இப்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்து வருகின்றனர். தங்களுக்கு எந்த வழியும் இல்லை என்ற சூழலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,” என்கிறார்.
ஹசினாவின் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட போதிலும் அரசாங்கம் தீவிர நிதானத்தைக் காட்டியதாகக் கூறுகிறார்கள்.
இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர்களது அரசியல் எதிர்கட்சிக தான் என்று அமைச்சர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சில இஸ்லாமியக் கட்சிகளாலும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதாக அவர்கள் கூறுகிறார்கள்
பிரச்னைகளை நிதானமாக விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் கூறினார்.
“மாணவர் போராட்டக்காரர்களை அரசு அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நியாயமான வாதம் முன்வைக்கப்பட்டால், நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம்” என்று ஹக் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார்.
2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஹசினா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாணவர் போராட்டங்கள் இருக்கலாம்.
இந்திய மாணவர்கள் நிலை என்ன?
இதுவரை, 778 இந்திய மாணவர்கள் பல்வேறு தரை துறைமுகங்கள் மூலம் இந்தியா திரும்பியுள்ளதாக இந்திய வெளியுறவு துறையின் அறிக்கை கூறுகிறது. மேலும், டாக்கா மற்றும் சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
''டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் உதவி தூதரக அலுவலங்களுடன், வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நாடு திரும்பாத மீதமுள்ள 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான தவிகள் வழங்கப்படுகின்றன'' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)