குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் 'செயற்கை கருப்பை' - மருத்துவ துறையில் என்ன நடக்கிறது?

    • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி
    • பதவி,

செயற்கை நஞ்சுக்கொடி மற்றும் கருப்பை உருவாக்கப்படுவது சாத்தியமானால், குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் பல பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால் மனிதச் சோதனைகள் தொடங்குவதற்கு முன்னதாக இதில் கருத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?

பச்சிளம் குழந்தைகளை தாயின் கருவறையில் இருந்து எடுத்து, திரவம் நிறைந்த உறையில் வைக்க வேண்டும். இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படத்தின் கதை போல் தோன்றலாம். ஆனால், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஃபிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனையின் (The Children's Hospital of Philadelphia) விஞ்ஞானிகள் தீவிரமான பிரச்னைகள் உள்ள பிரசவங்களில் இந்த முறையைப் பயன்படுத்தலாம் என்று முன்மொழிந்திருக்கின்றனர்.

அவர்கள் செயற்கை கருப்பை அல்லது பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கான கூடுதல் கருப்பை சூழலை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு 'Extra-uterine environment for newborn development' அல்லது 'Extend’ என்று பெயரிட்டுள்ளனர்.

'Extend’ என்பது கருவுற்றது முதல் பிறப்பு வரை கருவை வளர்ப்பதற்கான செயற்கை அமைப்பு அல்ல - அது சாத்தியமற்றதும் கூட. இது மிகவும் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிர் வாழும் விகிதத்தை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது. பொதுவாகக் குறைமாதக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

ஆரோக்கியமான கர்ப்பம் என்பது சுமார் 40 வாரங்கள் வரை நீடிக்கும். 37 வாரங்களில் குழந்தை பிறப்பது முழுமையான பருவமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன, அதன் விளைவாக கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை முன்கூட்டியே பிரசவிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்கள் காரணமாக, பெரும்பாலான குறைமாதக் குழந்தைகள் உயிர் பிழைக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. சில சிக்கல்களுடன் கருவில் இருந்து வெளியே எடுக்கப்படும் குறைப்பிரசவ குழந்தைகள் சிகிச்சைக்குப் பின் இயல்பாகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிகளவில் உயிர் பிழைக்கும் குழந்தைகள்

22 வார கர்ப்பகாலத்தில் பிறந்த குழந்தைகளில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் 30% பேர் உயிர் பிழைத்திருப்பதாக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.

"உண்மையில் 22 முதல் 23 வாரங்களில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் உயிர்பிழைப்பது அதிகரித்து வருகிறது. இருப்பினும், குறைப்பிரசவத்தில் பிறப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையானவை." என்கிறார் கன்சாஸ் நகரில் உள்ள மெர்சி குழந்தைகள் மருத்துவமனையின் புதிதாகப் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணரான ஸ்டெபானி குகோரா.

கர்ப்ப காலம் முடிவடைவதற்கு முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கடுமையான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த குழந்தைகள் பிறக்கும் போது 900 கிராமுக்கும் குறைவான எடையுடன் பிறக்கின்றனர். மேலும் இதயம், நுரையீரல், செரிமான உறுப்புகள் மற்றும் மூளை போன்ற முக்கியமான உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருக்கும். தீவிர மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் அந்த குழந்தைகள் உயிர்பிழைப்பது கடினம்.

நீண்ட காலப் பிரச்னைகள்

இதற்கிடையில், மிகவும் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய நீண்ட காலப் பிரச்னைகளில் பெருமூளை வாதம், கற்றல் சிரமங்கள், பார்வை மற்றும் செவிப்புலன் பிரச்னைகள், மற்றும் ஆஸ்துமா ஆகியவை அடங்கும்.

பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பச் சாதனங்கள் கூட (ஆக்ஸிஜன் சப்போர்ட் மற்றும் காற்றோட்டச் சாதனங்கள்) அவர்களின் பலவீனமான நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

"கர்ப்ப காலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே பிரசவிக்கப்படும் குழந்தைகளின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும்," என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சி.எஸ். மோட் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ பேராசிரியர் ஜார்ஜ் மைக்கலிஸ்கா விளக்குகிறார்.

"அவர்கள் மிகவும் முன்கூட்டியே பிறந்ததால் ​​​​அவர்களின் மூச்சுக்குழாயில் ஒரு எண்டோட்ராகியல் (endotracheal) குழாயை வைக்கிறோம், மேலும் அவர்களின் நுரையீரலுக்குள் அதிக அழுத்தம் ஏற்படுத்தி காற்று மற்றும் ஆக்ஸிஜனை உட்செலுத்துகிறோம் - இதனால் பச்சிளம் குழந்தைகளின் உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,” என்கிறார்.

காலப்போக்கில் இந்தக் காயங்கள் நுரையீரலில் வடுக்களாக மூச்சுக்குழாய் டிஸ்ப்ளாசியா (bronchopulmonary dysplasia) அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் என்னும் நிலைக்கு வழிவகுக்கும். நீண்ட கால ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் இயந்திரக் காற்றோட்டச் சாதனம் (mechanical ventilation) தேவைப்படுகிறது.

நுரையீரலை சேதபடுத்தாமல் சிசுவைப் பாதுகாக்க முடியுமா?

செயற்கைக் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடி உருவாக்குவதன் முக்கிய நோக்கம், நுரையீரலைச் சேதப்படுத்தாமல், குழந்தை தனது முதல் சுவாசத்தை எடுக்கத் தயாராகும் வரை சிசுவைப் பாதுகாப்பான சூழலில் தொடர்ந்து வளர அனுமதிப்தே ஆகும்.

செயற்கைக் கருவறைச் சூழலை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் மூன்று முக்கிய குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

சிசுவைப் பாதுகாக்கக் கருவறை போன்ற சூழலை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் ஆய்வில் இருப்பவர்களுக்கு முக்கிய உத்வேகமாக இருப்பது, 'எக்ஸ்ட்ரா கார்போரல் மெம்பிரேன் ஆக்சிஜனேஷன்’ (எக்மோ) என்னும் சாதனம் தான். நுரையீரல் மற்றும் இதயம் சரியாக செயல்படாத நோயாளிகளுக்கு உதவும் ஒரு வகை செயற்கை உயிர்காக்கும் கருவியாகும்.

இதயம், நுரையீரல் இரண்டுமே தேவையான ரத்தமும் ஆக்சிஜனும் பெறமுடியாமல் சிரமப்படும் சூழலில், எக்மோ கருவி பொருத்தப்படுவது வழக்கம். எக்மோவில், கார்பன் டைஆக்சைடை அகற்றி ஆக்ஸிஜனைச் சேர்க்கும் இயந்திரத்திற்குள் நோயாளியின் ரத்தம் செலுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தம் பின்னர் உடலில் உள்ள திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே, இந்த இடைவெளியில் இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகள் ஓய்வெடுக்கவும் குணமடையவும் அனுமதிக்கிறது.

எக்மோ கருவி பெரியவர்களுக்குப் பயனளிக்கும் ஆனால், குறைமாத பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. எனவே செயற்கைக் கருவறை ஆய்வு மேற்கொண்டிருக்கும் குழு, இந்த எக்மோ தொழில்நுட்பத்தைச் சிறியதாக்கி மாற்றியமைக்க முயற்சி செய்கின்றன.

கருப்பை போன்று திரவம் நிறைந்த உறை

கரு அறுவைசிகிச்சை நிபுணர் ஆலன் ஃப்ளேக் தலைமையிலான ஃபிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவமனையின் விஞ்ஞானிகள் குழு, கர்ப்பப்பையின் அம்னியோடிக் திரவத்தைப் போன்று உருவாக்கப்பட்ட திரவம் நிறைந்த உறைகளில் குறைமாதக் குழந்தைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழந்தையின் தொப்புள் கொடியின் சிறிய ரத்த நாளங்களை எக்மோ போன்ற சாதனத்துடன் இணைப்பார்கள். இயற்கையாக நிகழ்வது போலவே கருவின் இதயத்தைப் பயன்படுத்தி உடலினுள் ரத்தம் செலுத்தப்படுகிறது.

2017-ஆம் ஆண்டில், ஃபிளேக்கும் அவரது சக விஞ்ஞானிகளும் 23 முதல் 24 வாரங்களான குறைமாத ஆட்டுக்குட்டிகளை எடுத்து செயற்கைக் கருப்பைக்குள் வைத்து, நான்கு வாரங்கள் வரை உயிருடன் வைத்திருந்தனர்.

அந்த நேரத்தில் ஆட்டுக்குட்டிகள் சாதாரணமான வளர்ச்சியைக் கொண்டிருந்தன. ஆட்டுக் குட்டிகளின் ரோமம் கூட வளர்ந்திருந்தது.

செயற்கை நஞ்சுக்கொடி

மறுபுறம், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ் மைக்கலிஸ்காவின் குழு, செயற்கை நஞ்சுக்கொடியை (artificial placenta) உருவாக்கி வருகின்றனர்.

முழு கருவையும் திரவத்தில் வைப்பதற்கு பதிலாக, குழந்தையின் நுரையீரலில் சுவாசக் குழாய்களைப் பயன்படுத்தி சுவாசத்துக்கு வழிவகுக்கும் திரவத்தை (specially developed fluid) நிரப்ப திட்டமிட்டுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, அந்த அமைப்பு பாரம்பரிய எக்மோ இயந்திரங்களைப் போலவே ஜுகுலர் ரத்தநாளம் (jugular vein) வழியாக இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியேற்றுகிறது, ஆனால் தொப்புளின் ரத்தநாளம் வழியாக ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை திருப்பி அனுப்புகிறது.

"பெரும்பாலான குறைமாதக் குழந்தைகளுக்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய ஒரு அமைப்பை நான் உருவாக்க விரும்பினேன், இது பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலிலும் பயன்படுத்தப்படலாம்," என்கிறார் மைக்கலிஸ்கா.

"செயற்கை நஞ்சுக்கொடி, உண்மையான நஞ்சுக்கொடியின் எண்ணற்றச் செயல்பாடுகளை மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. இது வாயு பரிமாற்றத்தில் கவனம் செலுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் கருவின் சுழற்சியை பராமரிக்கிறது, அதே நேரத்தில் முழுமையாக வளராத உறுப்புகள் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வளரும்,” என்கிறார்.

செயற்கை நஞ்சுக்கொடி பற்றிய சமீபத்திய சோதனையில், மருத்துவ உபகரண உதவியுடன் பராமரிக்கப்படும் குறை மாத ஆட்டுக்குட்டிகள் பாதுகாப்பாக இயந்திர காற்றோட்டத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு 16 நாட்கள் உயிர் பெற்றிருந்தன. இந்த நேரத்தில், அவற்றின் நுரையீரல், மூளை மற்றும் பிற உறுப்புகள் தொடர்ந்து வளர்ச்சியை கொண்டிருந்தன.

மூன்றாவது குழு, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த குழு, 'எக்ஸ் விவோ கருப்பைச் சூழல்’ சிகிச்சை [ex vivo uterine environment (Eve) therapy] எனப்படும் செயற்கை கருப்பையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது மற்ற இரண்டு குழுக்களை விட மிகவும் குறைமாதத்தில் பிறக்கும் நோய்வாய்ப்பட்ட சிசுக்களுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நெறிமுறை சார்ந்த பிரச்னைகள்

செயற்கைக் கருவறை, செயற்கை நஞ்சுக் கொடி உள்ளிட்ட மருத்துவ தொழில்நுட்பங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதில் நெறிமுறை சார்ந்த பிரச்னைகள் உள்ளன.

சமீபத்தியக் கட்டுரையில், ஒவ்வொரு தனிநபருக்கும் இந்த தொழில்நுட்பங்கள் ஒரே மாதிரியான பலன் அளிப்பதில்லை. இவை தனித்துவமான நெறிமுறை சவால்களை உருவாக்குகின்றன என்று ஸ்டெபானி குகோரா குறிப்பிடுகிறார்.

உதாரணமாக, EVE மற்றும் CHOP ஆகிய இரண்டு குழுக்களின் செயற்கை கருப்பைகளுக்கும் தொப்புள் கொடியில் 'கானுலா’ (cannula) பொருத்தப்பட வேண்டும் என்பதால், குழந்தை பிறந்தவுடன் தொப்புள் தமனி விரைவாக மூடப்படுவதால், பச்சிளம் குழந்தைகளைத் தாயிடமிருந்து சாதனத்திற்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இல்லையெனில் பிறப்புறுப்பு மூலம் பிரசவம் செய்யக்கூடிய தாய்மார்கள் முன்கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டும்.

"இவ்வளவு விரைவாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும் போது, வழக்கமாக முழு கர்ப்பக்கால குழந்தைகளை வெளியே எடுக்கச் செய்யும் அறுவை சிகிச்சையை போன்று சுலபமான செய்து விட முடியாது," என்கிறார் குகோரா.

"குறைமாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருப்பையின் தசை அடுக்கு வழியாக ஒரு மெல்லிய கீறலை உள்ளடக்கிய கடினமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டி இருக்கும், மேலும் அந்தப் பெண்ணின் எதிர்காலக் கர்ப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், அதாவது மாதவிடாயில் பிரச்னையை ஏற்படுத்தலாம், எதிர்காலத்தில் பிறப்புறுப்பு மூலம் பிரசவம் செய்வதில் சிக்கலை ஏற்படுத்தலாம்,” என்கிறார்.

"பிறப்புறுப்பு வழியாக நடக்கும் பிரசவங்களை ஒப்பிடும்போது இந்தச் செயல்முறையில் அதிக ஆபத்துகள் உள்ளன, எனவே சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்,” என்கிறார்.

"இந்தப் புதிய சிகிச்சை முறையைச் சோதிப்பதில் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்னை, இந்த புதிய சிகிச்சை முறையைப் பற்றி பெற்றோரை எப்படி அணுகுவோம் என்பதுதான்," என்கிறார் குகோரா.

இது புரட்சியை ஏற்படுத்துமா?

"22 வாரங்களிலேயே மிகவும் குறை மாதத்தில் பச்சிளம் குழந்தையை பிரசவிக்க வேண்டிய சோகமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு பெற்றோரிடம் இந்தப் புதிய சிகிச்சை முறையைப் பற்றி விளக்குவது அவ்வளவு எளிதா? மேலும் சிலப் பெற்றோர்கள் தங்கள் குழந்தை உயிருடன் பாதுக்காக்கப்பட்டால் போதும் என்ற உற்சாசத்தில் ஒப்புக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது,” என்றார்.

ஒரு பச்சிளம் குழந்தை 'எக்ஸ்டெண்ட் ' அமைப்பில் வைக்கப்படும்போது, அது பாரம்பரிய சிகிச்சை முறைகளில் எவ்வாறு செயல்பட்டிருக்கும் என்பதை மதிப்பீடு செய்ய வாய்ப்பில்லை, இது மற்றொரு பிரச்னை. பாரம்பரிய சிகிச்சை முறைகளிலேயே சிறப்பாக உடல்நிலை முன்னேற்றம் அடையும் வாய்ப்புகள் இருக்கையில் உண்மையில் எந்த குறைமாத குழந்தைக்கு 'எக்ஸ்டெண்ட்’ அமைப்பு தேவை என்பதை அறிய சோதனை முறைகள் இல்லை.

"எக்ஸ்டெண்ட் அமைப்பில் வைக்க வேண்டிய தேவை ஏற்படுவதைத் தீர்மானிக்க சிசுவின் கர்ப்பகால வயதைத் தவிர விஞ்ஞானிகளிடம் அதிக தரவு இல்லை," என்று மைக்கலிஸ்கா விளக்குகிறார். மேலும், 22-23 வார கர்ப்பகால வயதில், அதிக இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையால் பாதிக்கப்படுவதாக அறியப்படும் குறைமாதக் குழந்தைகளுக்கு Extend அமைப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று மைக்கலிஸ்கா நம்புகிறார்.

"இந்த மருத்துவத் தொழில்நுட்பம் குறைமாதக் குழந்தைகள் சிகிச்சை முறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன், மேலும் செயற்கை நஞ்சுக்கொடி மற்றும் கருவறை ஆகிய அணுகுமுறைகள் மருத்துவ நடைமுறையில் பாராட்டுக்குரியதாக இருக்கும்," என்று மைக்கலிஸ்கா கூறுகிறார்.

"இருப்பினும், சில சாத்தியமான அபாயங்களும் உள்ளன, அவை முன்கூட்டியே பாதுகாப்பு பரிசோதனையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தின் அபாயங்கள் மற்றும் செயல்திறனைக் கண்டறிந்த பிறகு, இது குறைப்பிரசவக் குழந்தைகளில் உயிர்வாழும் வாய்ப்பு குறைவாக உள்ள சிசுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)