‘அவன் கையில் ஆயுதம் இருக்கவில்லை’ - வங்கதேசப் போராட்டத்தின் முகமாக மாறிய சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்

    • எழுதியவர், அக்பர் ஹுசேன் மற்றும் தரேகுஸ்ஸமான் ஷிமுல்
    • பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை

வங்கதேசத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தின் முகமாக மாறியுள்ளார் அபு சயீத்.

போராட்டத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் ஒன்றையொன்று செங்கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்கிக் கொண்டன. நாடு முழுவதும் நடந்த இந்த மோதல்களில் கொல்லப்பட்ட ஆறு பேரில் 22 வயதான அபு சயீதும் ஒருவர். இந்தப் பேரணிகளைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர்.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய வங்கதேசப் போர் வீரர்களின் உறவினர்களுக்கு பொதுத் துறையில் சில வேலை வாய்ப்புகளை ஒதுக்கும் முறை அங்கு உள்ளது. இதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் பல நாட்களாகப் போராட்டங்கள், பேரணிகளை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது.

சயீத்தின் மரணத்திற்கு காவல்துறையே காரணம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தின் வடமேற்கு நகரமான ரங்பூரின் போலீஸ் கமிஷனரான முகமது மோனிருஸ்ஸமான் பிபிசி-யிடம் பேசினார். அபு சயீதின் மரணம் குறித்து போலீசார் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர், என்று அவர் கூறினார்.

போராட்டங்களில் 6 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா புதன்கிழமை உறுதியளித்தார்.

பல நாட்கள் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க, அதிகாரிகள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.

சயீதுக்கு என்ன ஆனது?

இந்தச் சம்பவம் தொடர்பாக வலம்வரும் ஒரு வீடியோவில், போலீசார் திடீரென ரப்பர் தோட்டாக்களைச் சுடத் தொடங்கும் போது, ​​சயீத் நடுரோட்டில் நிற்பதைக் காணலாம். பிபிசி இந்த வீடியோவை சரிபார்க்கவில்லை.

அப்போது சயீத், கையில் ஒரு குச்சியைப் பிடித்தபடி தோட்டாவிலிருந்து ஒதுங்க முயல்கிறார். அவர் பல அடிகள் பின்னோக்கி நடந்து, சாலையின் மையத்திலுள்ள தடுப்புகளைக் கடந்து, தரையில் விழுகிறார்.

ரப்பர் தோட்டாக்களால் காயமடைந்த சயீத், மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் சில வீடியோக்களை பிபிசி வங்காள மொழிச் சேவை ஆய்வு செய்தது. அவற்றில் சயீத் வன்முறையாகவோ, ஆக்ரோஷமாகவோ நடந்துகொள்வதுபோலத் தெரியவில்லை.

பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசிய ரங்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சஹ்ரியா மிம், "போலீசார் முதலில் சயீதை வேறு இடத்திற்கு போகச் சொன்னார்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்," என்று கூறினார். அப்போதுதான் ரப்பர் தோட்டாக்கள் சுடப்பட்டன என்று மிம் கூறுகிறார்.

பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஒரே குழந்தை

ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த சயீத், அரசு வேலை கிடைக்கும் என்ற கனவில் இருந்தார்.

ரங்பூர் நகரில் உள்ள பேகம் ரோகியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவரான இவர், வங்கதேசத்தின் தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அபு சயீதுக்கு உடன்பிறந்த ஒன்பது சகோதர சகோதரிகள் உள்ளனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினரில் அவர் ஒருவர் மட்டுமே பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளார்.

அவரது இளைய சகோதரிகளில் ஒருவரான சுமி அக்தர் பிபிசி-யிடம் பேசினார். அவரது சகோதரர் பட்டப்படிப்பை முடிந்தவுடன் அவருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

அவர், தனது சகோதரரின் மரணத்துக்கு காவல்துறைதான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

“அவர் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. அவர் நாட்டின் தேசியக் கொடியை வைத்திருந்தார்,” என்று அவர் கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு கடுமையான முறையில் பதிலடி கொடுத்த காவல்துறையை மனித உரிமை ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.

"ஒருவரின் கருத்தை வெளிப்படுத்துவது, கிளர்ச்சி செய்வது - இவை குடிமக்களின் ஜனநாயக உரிமைகள், அவை நமது அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன," என்று மனித உரிமைகள் அமைப்பான சட்டம் மற்றும் நடுவர் மையத்தின் (Law and Arbitration Centre - ASK) நிர்வாக இயக்குநர் ஃபரூக் பைசல் பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் தெரிவித்தார்.

“அங்கு போராட்டம் நடத்திய நிராயுதபாணி மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? […] அந்த இளைஞரிடம் கொடிய ஆயுதம் எதுவும் இல்லை. அதனால் போலீசார் வன்முறையில் ஈடுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று அவர் கூறினார்.

பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசிய முன்னாள் காவல் கண்காணிப்பாளரான (IGP) முஹம்மது நூருல் ஹுடா, வங்கதேசத்தின் சட்டங்கள் "சில சூழ்நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குகின்றன," என்று கூறினார்.

"ஆனால் அது ஒரு விகிதாசார மட்டத்தில் அல்லது தர்க்க அடிப்படையில் இருக்க வேண்டும், ஆனால் இது அப்படியா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். செவ்வாய் கிழமை பிற்பகல் பேகம் ரோகியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினார்.

இந்தச் சம்பவத்தில், நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு, இரண்டு வாரங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு

போர் வீரர்களின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஒதுக்கும் முறை பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும் என்றும் போராடும் மாணவர்கள் கூறுகின்றனர்.

சில வேலைகள் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் உள்ள அரசாங்க வேலைகள், தனியார் துறை வேலைகளுடன் ஒப்பிடும்போது நல்ல ஊதியம் வழங்குகின்றன. பாதுகாப்பான ஓய்வூதிய பலன்களையும் வழங்குகின்றன.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தக் கொலைகளைக் கண்டித்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அரசாங்க வேலைகளைத் தனது விசுவாசிகளுக்கு ஒதுக்குவதற்காக ஷேக் ஹசீனா இட ஒதுக்கீட்டுத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

"ஒவ்வொரு கொலையையும் நான் கண்டிக்கிறேன்," என்று புதன்கிழமை மாலை தொலைக்காட்சியில் உரையாற்றிய ஷேக் ஹசீனா கூறினார். போலீஸ் படைகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களுக்கு நடந்து ஒருநாள் கழித்து அவர் இந்த உரையை ஆற்றினார்.

"கொலை, கொள்ளை மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வேன் என்று தீர்க்கமாக அறிவிக்கிறேன்," என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடந்த மரணங்களுக்கு அவர் யார்மீதும் பொறுப்பு சுமத்தவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் ஹசீனா வேலை ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை ‘ரஜாக்கர்’ என்று விமர்சித்தார். ரஜாக்கர் என்பது 1971 போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்தவர்களைக் குறிக்கும் சொல்.

'எங்கள் குரல்களை அடக்க நினைக்கிறார்கள்'

இந்த வாரம், தலைநகர் டாக்கா உட்பட பல வங்கதேச நகரங்களில், ஒதுக்கீட்டு எதிர்ப்பு இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கும், குறிப்பாக பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) என அழைக்கப்படும் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவினருக்கும், அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தேறின.

"நாட்டில் பயங்கரவாத ஆட்சியை உருவாக்குவதன் மூலம் அவர்கள் எங்கள் குரல்களை நசுக்க நினைக்கிறார்கள்," என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் மாணவி ரூபாயா ஷெர்ஸ்தா பிபிசி-யிடம் கூறினார்.

"இன்று நான் போராட்டம் நடத்தவில்லை என்றால், இன்னொரு நாள் என்னை அடிப்பார்கள். அதனால்தான் நான் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறேன்," என்கிறார் அவர்.

இருப்பினும், பங்களாதேஷ் சத்ரா லீக் அமைப்பினர் கூறுகையில், எதிர்ப்பாளர்கள் நாட்டில் ‘அராஜகத்தை’ உருவாக்க முயற்சிக்கின்றனர் என்கின்றனர். மேலும் அவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்க உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

வங்கதேச உச்ச நீதிமன்றம், கடந்த வாரம் இந்த இடஒதுக்கீட்டு முறையை இடைநிறுத்தியது. ஆனால் அது நிரந்தரமாக அகற்றப்படும் வரை எதிர்ப்புகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பேரணியில் உரையாற்றிய பங்களாதேஷ் சத்ரா லீக்கின் தலைவர் சதாம் ஹொசைன், தனது குழு இந்த இடஒதுக்கீடு முறையின் "தர்க்கரீதியான சீர்திருத்தத்தை" விரும்புவதாகக் கூறினார். நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு எதிர்க்குழுவின் மாணவர்கள் ஏன் ‘தங்கள் இயக்கத்தை நீடிக்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

"அவர்கள் ஏன் தெருக்களில் அராஜகம் செய்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

பெரும்பாலான அரசுப் பல்கலைக்கழக வளாகங்கள் காலி செய்யப்பட்டுள்ளதால், நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர மாணவர்கள் வியாழக்கிழமை உறுதிபூண்டனர். சாலைகள் மற்றும் ரயில் வழிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மொபைல் இணையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்று வங்கதேசத்தின் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவித்தார்.

அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள்

ஆளும்கட்சியன அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான ஒபைதுல் காதர், மாணவர் போராட்டங்களை ‘அரசுக்கு எதிரான இயக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் அரசியல் எதிரிகள், தங்கள் சொந்த லாபத்திற்காகப் போராட்டங்களைத் தூண்டி வருவதாக மூத்த அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இதை மறுத்துள்ளது.

அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜுபைதா நஸ்ரின் பிபிசியிடம், இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம், வங்கதேசத்தில் உள்ள பல இளைஞர்களின் ‘ஒன்று திரண்ட கோபத்தின்’ வெளிப்பாடு என்று கூறுகிறார்.

"இட ஒதுக்கீடு இயக்கம் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் கோபம் வெளிப்படுகிறது. அதனால்தான் ஆளும் அரசாங்கம் தான் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது," என்று பேராசிரியர் நஸ்ரின் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)