You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஸ்போர்ட்டில் அமெரிக்கா, ஆதாரில் தமிழ்நாடு - மகாராஷ்டிர காட்டில் மீட்கப்பட்ட பெண் யார்? தொடரும் மர்மம்
- எழுதியவர், முஷ்டாக் கான், கீதா பாண்டே & செரிலன் மொல்லன்
- பதவி, பிபிசி
மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க பெண் ஒருவர் சில நாட்கள் முன்னர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பெரும் மர்மம் இருப்பது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் லலிதா கயி. அவருக்கு வயது 50. ஒரு வாரத்திற்கு முன்பு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் உதவி கோரி அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு கால்நடை மேய்ப்பவர்கள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, பின்னர் போலிஸுக்கும் தகவல் கொடுத்தனர்.
சங்கிலியால் மரத்துடன் சேர்த்து அவர் கட்டப்பட்டிருந்தார். சங்கிலியை அறுத்து அவரை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் இருந்ததால் முற்றிலும் மெலிந்து காணப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல்நிலை சற்றி தேறி வருகிறார் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2), அவர் மேல் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குற்றம்சாட்டப்பட்டவரை தமிழ்நாட்டில் தேடி வரும் போலீஸ்
பேச முடியாத நிலையில் இருந்த லலிதா கயி காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட்டு, உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்துவிட வேண்டும் என்பதற்காக காட்டில் விட்டுச் சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரது கணவரை தமிழ்நாட்டில் தேடி வருகிறோம் என்று மகாராஷ்டிர போலீசார் கூறுகின்றனர்.
ஆனால் லலிதா கயி மீட்கப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகும், அவர் யார், அவர் எப்படி காட்டுக்குள் வந்தார், அவரை மரத்தில் கட்டிவைத்தது யார், எதற்காக அப்படி செய்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.
கடந்த சனிக்கிழமை அவரைக் கண்டுபிடித்த கால்நடை மேய்ப்பவரான பாண்டுரங் கவ்கர், பிபிசி மராத்தியிடம், " காட்டுக்குள் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, ஒரு பெண் அலறுவதைக் கேட்டேன்" என கூறினார்.
"மலையின் அடிவாரத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குள் சத்தம் கேட்டது. நான் அங்கு சென்றபோது, அவருடைய ஒரு கால் மரத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். அவர் ஒரு மிருகம் போல கத்தினார். மற்ற கிராமவாசிகளையும் உள்ளூர் காவல்துறையையும் அங்கு வரவழைத்தேன். " என்று அவர் தெரிவித்தார்.
திருட்டுக்கான வாய்ப்பு இல்லை
அமெரிக்க குடியுரிமை இருப்பதற்கான பாஸ்போர்ட் நகலும், தமிழ்நாட்டில் வீட்டு முகவரியுடன் இந்தியர்களுக்கான பிரத்யேக அடையாள அட்டையான ஆதார் அட்டையும் அவரிடம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணிடம் ஒரு மொபைல் போன், ஒரு டேப்லெட் கணினி (Tab) மற்றும் 31,000 ரூபாய் இருந்ததாக அவர்கள் கூறினர். எனவே பணத்தை திருடுவதற்காக அவரை யரும் கட்டிப் போடவில்லை என்பது தெளிவாக புரிந்தது.
கால்நடை மேய்ப்பவர் அன்றைய தினம் தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அந்த காட்டு பகுதிக்குள் ஓட்டி சென்றதால் தான் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு மீட்க முடிந்தது. அது பெரிய அளவில் மனித நடமாட்டம் ஏதும் இல்லாத பகுதி. பாண்டுரங் கவ்கர் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம் என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.
அவர் கட்டி போடப்பட்டிருந்த அந்த காடு மிகப் பெரியது, அவர் உதவிக்காக கத்தியது யாருக்கும் கேட்காது. அன்று மட்டும் மீட்கப்படாமல் இருந்திருந்தால் அப்படியே பல நாட்கள் இருக்க வேண்டிய நிலை வந்திருக்கலாம்.
காவல்துறையினர் முதலில் அவரை ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அண்டை மாநிலமான கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
கோவா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவானந்த் பந்தேகர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவரது காலில் சில காயங்கள் இருப்பதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதாகவும் கூறினர்.
"அவர் எவ்வளவு நாட்கள் சாப்பிடவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் தற்போது உடல் நலம் தேறி உள்ளது" என்று டாக்டர் பாண்டேகர் கூறினார். உடல் நலம் மேம்பட்டதால் வெள்ளிக்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
"தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சங்கமித்ரா ஃபுலே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
"அவர் மருந்து சாப்பிடுகிறார், உணவு உட்கொள்கிறார். இங்கிருக்கும் மக்களுடன் பழகுகிறார். ஏதாவது தேவை என்றால் கேட்கிறார். அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும்." என்று விவரித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, லலிதா கயி அமெரிக்காவில் ஒரு பாலே நடனக் கலைஞராகவும் யோகா பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் - அவரிடம் உள்ல சில ஆவணங்களில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் யோகா மற்றும் தியானம் படிக்க சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தார்.
இந்தியாவில் தான் அவர் தனது கணவரைச் சந்தித்தார். சில ஊடகங்களில், போலீசார் அவரின் பெயரை `சதீஷ்’ என்று குறிப்பிட்டனர். கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீசார் நம்புகின்றனர்.
அவர் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும், பின்னர் மும்பை நகருக்குச் சென்றதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் கடந்த வாரம் அவர் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காட்டு பகுதிக்குள் அவர் எப்போது அல்லது எப்படி வந்தார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.
ஆரம்பத்தில் பேச முடியாத நிலையில் இருந்த கயி, ஒரு பேப்பரில் தான் சொல்ல நினைக்கும் குறிப்புகளை எழுதி காண்பித்து, காவல்துறை மற்றும் மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டார்.
பேப்பரில் எழுதியதில் முக்கிய தகவலாக பார்க்கப்பட்டது, தன்னை மரத்தில் கட்டி வைத்தது கணவர் தான் என்று கூறியதுடன், 40 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், தனக்கு "அதிகப்படியான மன நோய்க்கான ஊசிகள்" போடப்பட்டதாகவும், அதன் விளைவாக தனது தாடை பகுதி பாதிக்கப்பட்டது, தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். தாடை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நரம்பு வழியாக ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டிய சூழல் உருவானது.
"நான் துன்பத்தை அனுபவித்து உயிர் பிழைத்திருக்கிறேன். ஆனால் அவர் இங்கிருந்து ஓடிவிட்டார்" என்று லலிதா குற்றம் சாட்டினார்.
உண்மை வெளிவருமா?
லலிதா கயி கொடுத்த வாக்குமூலத்தை தங்களால் சரிபார்க்க முடியவில்லை என்றும், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் ஒருவர் இவ்வளவு காலம் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றும் காவல்துறை கூறுகிறது.
அவரது கணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள மகாராஷ்டிர காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்த தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பி உள்ளனர். அவரது கணவர் இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் ஊடகங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.
மேலும் அந்த பெண்ணிடம் இருந்து கிடைத்த மொபைல் போன் மற்றும் டேப்லெட்டில் உள்ள தகவல்களை வைத்து தடயங்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் - "விசாரணையை விரைவுபடுத்த காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது" என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன - இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஒரு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், "அமெரிக்க தனியுரிமைச் சட்டம் காரணமாக" தனிப்பட்ட தகவல்களைப் பரப்புவதை நிர்வகிக்கும் விசாரணைகளுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)