மாட்டுக்கறியில் விஷம் கலந்த விவசாயி: நீலகிரியில் அடுத்தடுத்து கொல்லப்படும் புலிகள்

பட மூலாதாரம், Tamil Nadu Forest Department
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தனது மாடு இறந்த கோபத்தில், இறந்த மாட்டின் உடலில் விஷம் வைத்து இரண்டு புலிகளை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 2 புலிகளோடு சேர்த்து ஒரு மாதத்தில் மட்டுமே நீலகிரியில் ஆறு புலிகள் மரணித்துள்ளதால், சூழலியலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலங்களுள் ஒன்றாக உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதியைக் காட்டிலும் நீலகிரியில் மட்டுமே அதிக அளவிலான புலிகள் இருப்பதை வனத்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இப்படியான நிலையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அணை அருகே செப்டம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை, எமரால்டு அருகே அவலாஞ்சி அணையின் உபரிநீர் வெளியேறும் பகுதி அருகே, மர்மமான முறையில் இறந்து கிடந்த, 3 மற்றும் 8 வயதான இரண்டு ஆண் புலிகளின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அவை இரண்டும் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட புலிகள்

பட மூலாதாரம், Tamil Nadu Forest Department
இது தொடர்பாக நீலகிரி வனத்துறையின் முதற்கட்டமாக வெளியிட்ட அறிக்கையில், ‘‘எமரால்டு பீட் பகுதி அருகே செப்டம்பர் 9ஆம் தேதி மாலை இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில், அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் நீரோடையின் கரையில் 8 வயதான புலியும், நீரோடையில் 3 வயதான புலியும் இறந்து கிடந்தது உறுதியானது.
இரண்டு புலிகளின் உடல்களில் பாகங்கள் அப்படியே உள்ளன. மோப்ப நாய் பயன்படுத்தி, 20 பேர் கொண்ட குழுவை அமைத்து, புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என விசாரிக்கிறோம்,’’ எனத் தெரிவித்திருந்தது.
பிறகு இரண்டு புலிகளையும் உடற்கூராய்வு செய்து, பாகங்களின் மாதிரியைச் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியிருந்தனர். புலிகள் இறந்த இடத்துக்கு அருகே, கால்நடையின் சடலத்தை வனத்துறையினர் கண்டறிந்ததால், கால்நடையின் சடலத்தில் விஷம் வைத்து புலிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், தனது மாட்டை புலி கொன்றதால், இறந்த மாட்டின் சடலத்தில் விஷம் வைத்து இரண்டு புலிகளை விவசாயி ஒருவர் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து திங்கட்கிழமை (செப்டம்பர் 11) இரவு அந்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
புலியை கொலை செய்தது ஏன்?

குற்றவாளியைக் கைது செய்தது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய, முதுமலை கள இயக்குனர் வெங்கடேசன், ‘‘புலிகள் இறந்த பகுதியிலிருந்து வெறும், 30 மீட்டர் இடைவெளியில் இறந்த மாட்டின் சடலத்தைக் கண்டறிந்தோம்.
மாட்டின் உடலில் விஷம் வைத்ததால் அதை உட்கொண்ட புலிகள் மரணித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆகவே புலிகள் மற்றும் மாட்டின் சடலத்தை உடற்கூராய்வு செய்து, உடல் பாகங்களின் மாதிரிகளைச் சேகரித்து, ஆனைகட்டி சாலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலைய ஆய்வகம் மற்றும் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியிருந்தோம்.
அருகிலுள்ள கிராமங்களில் ஏதேனும் மாடுகள் காணாமல் போயுள்ளதா என விசாரணை நடத்தப்பட்டது. இதில், எமரால்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகர் என்பவரின் மாடு, 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்தது,’’ என்றார்.
விவசாயி சேகர் புலிகளை விஷம் வைத்துக் கொன்றதை ஒப்புக்கொண்டதாகக் கூறிய கள இயக்குனர் வெங்கடேசன், ‘‘அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஏதோ மர்ம விலங்கு கடித்து இறந்த தனது மாட்டைப் பார்த்த சேகர், மாடு இறந்த கோபத்தில் மாட்டின் சடலத்தில் பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை கலக்கி வைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
விவசாயி சேகர் வைத்த விஷத்தில்தான் புலிகள் இரண்டும் மரணித்துள்ளன, அவரைக் கைது செய்துள்ளோம்,’’ என்றார்.
ஒரு மாதத்தில் 6 புலிகள் பலி

இப்படியான நிலையில் தற்போது இறந்த இரண்டு புலிகளோடு சேர்த்து, நீலகிரியில் வரலாறு காணாத வகையில் ஒரே மாதத்தில் 6 புலிகள் மரணித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி, நீலகிரி நடுவட்டம் வனச்சரகம் முடிமந்து பகுதியில், தனியார் எஸ்டேட்டுக்குள் மர்மமான முறையில் 7 வயதான புலி மரணித்தது.
அதன்பிறகு, தாய் புலியை இழந்த, பிறந்து இரண்டு வாரங்களே ஆன இரண்டு புலிக்குட்டிள் மற்றும் எல்லைச்சண்டையில் ஈடுபட்ட ஒரு புலி மரணித்தது. தற்போது, விஷம் வைத்ததில் இரண்டு புலிகள் என, 6 புலிகள் இறந்துள்ளன.
இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக, பிப்ரவரி மாதம் நீலகிரியில் புலியை வேட்டையாடி அதன் பாகங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயன்ற, நான்கு பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்திருந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நீலகிரியில் புலிகள் எண்ணிக்கை என்ன?

தேசிய புலிகள் காப்பக ஆணையம் இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதில், 2006இல் இந்தியாவில் மொத்தம் 1,411 புலிகள் இருந்தாகவும், வனத்துறை செயல்பாடுகளால் அதன் எண்ணிக்கை அதிகரித்து, 2022இல் நாட்டில் 3,682 என்ற நிலைக்கு புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்த அறிக்கைப்படி, 2006இல் தமிழகத்தில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022இல் 306 ஆக (நீலகிரியில் மட்டுமே 114 புலிகள்) உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக அரசு கூறும் நிலையில், மறுபுறம் புலிகள் தொடர்ச்சியாக மரணித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்கள்.
‘இது சிஸ்டம் பெய்லியர்‘

புலிகள் மரணிப்பது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய, புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு, ‘‘ஒரு கும்பல் தமிழகத்துக்குள் ஊடுருவிய தகவலை போலீசார் முன்கூட்டியே தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தான், அந்த கும்பல் புலியை வேட்டையாடியுள்ளது. இதற்கு வனத்துறையின் ‘சிஸ்டம் பெய்லியர்’ தான் காரணம்.
ஏனெனில் ஊர் பேர் தெரியாத இடத்துக்கு வந்து, வனத்திற்குள் பயணித்த ஒரு கும்பல் நீலகிரியில் புலியை வேட்டையாடிவிட்டு வனத்தின் வழியே ஈரோடு தப்பியுள்ளது என்பது, காட்டுக்குள் வனத்துறையின் கண்காணிப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
கண்காணிப்பு குறைவாக உள்ள காரணத்தால்தான் அவர்கள் மிக எளிதாக வேட்டையை நிகழ்த்தி உள்ளனர்,’’ எனக் குற்றம் சாட்டுகிறார் அவர்.
மேலும், ‘‘காட்டுக்குள் மாடுகளை மேய்க்க விவசாயிகளுக்கு வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் அடர் வனத்துக்குள் சென்று மாடுகள் மேய்ப்பதால், இதுபோன்று சம்பவங்கள் நிகழ்கிறது. மாடுகள் மேய்ப்போருக்கு கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணிக்க வேண்டும்,’’ என்றார்.
இயற்கை சமநிலைக்கே ஆபத்து

பட மூலாதாரம், Getty Images
புலிகள் வேட்டையாடப்படுவது பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முதுமலை கள இயக்குநர் வெங்கடேசன், முதுமலையில் வேட்டையைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார்.
"பவாரியா கும்பல் வேட்டைக்குப் பிறகு, வேட்டைத்தடுப்பு காவலர்களை அதிகப்படுத்தி கண்காணிப்பு பணியை மேலும் பலப்படுத்தியுள்ளோம். இதனால்தான் தற்போது புலிகள் இறந்ததை மிக விரைவாகக் கண்டறிய முடிந்தது," என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், புலிகள் காப்பக ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இயற்கை சமநிலையே மாறிவிடும் என்கிறார் புலிகள் ஆராய்ச்சியாளர் குமரகுரு.
‘‘புலிகள் இல்லையேல், காட்டில் மற்ற பாலூட்டிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து இயற்கைச் சமநிலை கெடும் ஆபத்து உள்ளது.
மற்ற பாலூட்டிகள் அதிகரித்தால் காட்டில் புற்கள் மற்றும் தாவரங்கள் இல்லாமல் போய்விடும். புற்கள் சேமித்து வெளியிடும் நீர்தான் அனைத்து உயிர்களுக்குமான நீராதாரம்.
தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவை ஊருக்குள்ளும் வரத் தொடங்குவது மக்களுக்கும் பிரச்னையாகும். அத்தகைய சிக்கல்களைத் தடுப்பதில் புலிகளின் பங்கு அளப்பரியது.
உணவுச்சங்கிலியில் இத்தகைய அபார சேவையை புலிகள் செய்கின்றன. அந்த வேலையை எத்தனை கோடி ரூபாய் செலவழித்தாலும் நம்மால் செய்ய முடியாது," என்கிறார் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












