கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் குறித்து இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பல இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் அமைப்பு, தங்களின் பேச்சுவார்த்தைக் குழுவைக் கொல்வதற்கான முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் அமைப்பை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இந்தத் தாக்குதல் குறித்து "அதிருப்தி" தெரிவித்தார்.
இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
அதே நேரம் தாக்குதலுக்கு முன்பே அமெரிக்கா மற்றும் கத்தாருக்குத் தகவல் அளித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய கடுமையான செயல் என்றும், இது ஒரு "கோழைத்தனமான செயல்" என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கத்தார் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க கத்தாருக்கு முழு உரிமை உண்டு. மேலும், அதன் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு பொறுப்பற்ற செயலையும் அல்லது தாக்குதலையும் எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச சட்டங்களை மீறியதற்காகப் பொறுப்பேற்கச் செய்யும் பணியை சட்ட வல்லுநர்கள் குழுவிடம் கத்தார் அரசு ஒப்படைத்திருப்பதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகளின் அரசாங்கங்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் இந்தத் தாக்குதல் ஒரு "புதிய உச்சத்தைத் தாண்டியுள்ளது" என்று இந்த நாடுகளின் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் காரணம் என சில ஊடக செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும், தாக்குதல் குறித்துத் தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், தனது சிறப்புத் தூதர் கத்தாருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு முன்பே "மிகத் தாமதமாகி விட்டது" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மறுபுறமோ ஐ.நாவுக்கான இஸ்ரேலின் தூதர், இஸ்ரேல் எப்போதும் அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்றவாறு செயல்படாது என்று கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரபு நாடுகள் வலியுறுத்தல்
கடந்த ஆண்டு ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் இஸ்ரேலால் கொல்லப்பட்டார். அத்தகைய தாக்குதலை எதிர்கொண்ட இரான் இந்தத் தாக்குதலுக்கு முதல் எதிர்வினையை ஆற்றியது.
இந்தச் சமீபத்திய நிகழ்வு "பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்திற்கு ஒரு கடுமையான எச்சரிக்கை" என்று இரான் தெரிவித்துள்ளது.
ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இதனை "ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டும் செயல்" என்று விவரித்துள்ளது.
செளதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், சர்வதேச சட்டங்களை "மீண்டும் மீண்டும் மீறியதற்காக" இஸ்ரேல் "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத், இந்தத் தாக்குதலை "கோழைத்தனமானது" மற்றும் "பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்" என்று கண்டித்தார்.
இது பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையைப் பலவீனப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
எகிப்து இந்தத் தாக்குதலை "ஆபத்தான முன்னுதாரணம்" என்று குறிப்பிட்டது. காஸாவில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கத்தார் தலைமையேற்றிருக்கும் நேரத்தில், இது கத்தாரின் இறையாண்மையின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் கூறியது.
எகிப்து அதிபர் அலுவலகத்தின் அறிக்கையில், இந்தத் தாக்குதல் மத்தியஸ்த முயற்சிகளைப் பலவீனப்படுத்துவதாகவும், பரந்த ஸ்திரமின்மையை ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளது.
ஜோர்டான் டிவியின் கூற்றுப்படி, இந்த "ஆபத்தான ஆத்திரமூட்டலை" நிறுத்தி, சர்வதேச சட்டங்களைப் பின்பற்ற இஸ்ரேலை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோர்டான் அரசு கோரியுள்ளது.
ஓமன் வெளியிட்ட அறிக்கையில், இது "அரசியல் படுகொலை" மற்றும் "நாட்டின் இறையாண்மையின் கடுமையான மீறல்" என்று கூறியுள்ளது.
இராக் வெளியுறவுத் துறை அமைச்சகம் இதனை "கோழைத்தனமான செயல்" மற்றும் கத்தார் பாதுகாப்புக்கு "கடுமையான அச்சுறுத்தல்" என்று கூறியுள்ளது.
லெபனான் அதிபர், "அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களையும் மீறும்" இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அல்ஜீரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், இது இஸ்ரேல் "அமைதியை விரும்பவில்லை" என்பதை நிரூபிக்கிறது என்று கூறியது.
பாலத்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, அதனை "கடுமையான ஆத்திரமூட்டல்" என்று விவரித்தார். பாலத்தீன பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வு காண வேண்டும் என்ற தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அரபு ஊடகங்கள் என்ன கூறுகின்றன?

பட மூலாதாரம், AFP via Getty Images
செப்டம்பர் 10 அன்று, பெரும்பாலான அரபு ஊடகங்கள் இந்தத் தாக்குதலுக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகள் வெளியிட்டன.
கத்தாரைச் சேர்ந்த அல் ஜசிரா மற்றும் அபுதாபியைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் அரேபியா தங்கள் செய்தி அறிக்கைகளில், பதிலடி கொடுக்க கத்தாருக்கு உரிமை உள்ளது என்றும், ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து.
செளதி அரசு ஊடகமான அல் அரேபியா அதன் செய்தி அறிக்கைகளில், இந்தத் தாக்குதலில் தனக்கு "மகிழ்ச்சியில்லை" என்று டிரம்ப் கூறிய கருத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.
பெரும்பாலான ஊடகங்கள் இன்று நடைபெறவிருக்கும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளன.
அரசியல் அறிவியல் பேராசிரியர் ஹயால் அல்-தஜா ஜோர்டான் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தத் தாக்குதல் காஸாவில் போர் நிறுத்த சாத்தியக் கூறுகளை அழித்துவிட்டது என்றார்.
செளதி அரேபியாவின் அஷர்க் அல்-அவ்சத் நாளிதழ், அதன் முதல் பக்கத்தின் முக்கிய தலைப்புச் செய்தியாக, "இஸ்ரேல் தோஹாவில் ஹமாஸை குறிவைத்து பேச்சுவார்த்தையையும் காயப்படுத்தியுள்ளது" என்று வெளியிட்டது.
'புதிய எல்லை மீறல்'

பட மூலாதாரம், AFP via Getty Images
லண்டனைச் சேர்ந்த நாளிதழான அல்-குட்ஸ் அல்-அரபி, அதன் தலையங்கத்தில் இந்தத் தாக்குதல் இஸ்ரேலால் "புதிய எல்லை மீறல்" என்றும், இத்தகைய நடவடிக்கை "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறையில் சாத்தியமில்லை" என்றும் எழுதியுள்ளது.
கத்தாரின் இறையாண்மை மீறல், அரசியல் தீர்வுகளுக்கான பாதை இப்போது மூடப்பட்டுவிட்டது என்பதையும், "ராணுவ ஆதிக்கத்தின் தர்க்கம்" முன்னுரிமை பெறுகிறது என்பதையும் குறிக்கிறது என்று அந்த நாளிதழ் மேலும் எழுதியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த அல்-அரபியா நாளிதழின் முக்கிய தலைப்புச் செய்தியாக, "இஸ்ரேல் எல்லா இடங்களிலும் தாக்குகிறது, அதற்கு எந்த எல்லையும் இல்லை" என்று இருந்தது.

கத்தார் ஆதரவு பெற்ற அல்-அரபி அல்-ஜதித் நாளிதழில் எழுதிய எகிப்திய பத்திரிகையாளர் வயல் கண்டிர், இஸ்ரேலின் தாக்குதல் "பாலத்தீன தலைமை மீதானது மட்டுமல்ல, கத்தார் மீதான நேரடி தாக்குதல்" என்று கூறினார்.
அவர் இதனை அரபு நாடுகளில் "இஸ்ரேலிய மீறல்களின் நீண்ட பட்டியலில்" ஒரு கூடுதல் மீறல் என்று விவரித்தார். மேலும், இதனை "பெரிய இஸ்ரேல் திட்டம்" என்று அழைக்கப்படும் திட்டத்தின் விரிவாக்கம் என்றும் கூறினார்.
கத்தார் காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வருகிறது. மேலும் காஸா போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழு தோஹாவில் உள்ளது.
ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் மற்ற நாடுகளில் தாக்குதல்களை நடத்துவது இது முதல் முறை அல்ல.
இரானைத் தவிர, லெபனான் மீதும் இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












