அமெரிக்கா மீது பதிலடி வரி விதிக்காமல் இந்தியா வேறு என்ன செய்யலாம்?

இந்தியா - அமெரிக்கா, வரிக்கு வரி யுத்தம்

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, நீடித்த 50% வரி விதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8% வரை குறைக்கலாம்
    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியா மீது விதித்த 50% வரி ஆகஸ்ட் 27அன்று நடைமுறைக்கு வந்தது. பதிலடி கொடுப்பதற்கு பதிலாக இந்தியா, கவனமாக திட்டமிடப்பட்ட புவிசார் அரசியல் பதில் மூலமாக அமெரிக்காவுக்கு தனது அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது

சீனாவுடன் உறவை மேம்படுத்துவதற்கு மிகவும் வெளிப்படையாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரே காரில் பயணித்த காட்சிகள் ஊடகங்களில் பரவலாக வெளியாகியுள்ளன.

உள்நாட்டில் திணறிக்கொண்டிருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு பிரதமர் மோதி சில உதவிகளை அறிவித்துள்ளார்,. ஏற்றுமதியில் ஏற்படும் தாக்கத்தை குறைக்க வரி விலக்குகள் தயாராக உள்ளன.

ஆனால், இந்தியா மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளியுடனான வரி தொடர்பான முட்டுக்கட்டை எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்து வருகிறது. அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உறவுகள் அமெரிக்க அதிகாரிகளின் தினசரி எச்சரிக்கைகளால் மேலும் மோசமடைந்து வருகின்றன.

இதன் விளைவுகள் குறிப்பிடக்தக்கவையாக இருக்கின்றன.

நீடித்த 50% வரி விதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.8% வரை குறைக்கலாம் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் வரிவிதிப்பு அதிர்ச்சியை குறைக்க இந்தியா உள்நாட்டில் வரி குறைப்பை அறிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 பில்லியன் டாலர் வரை குறையலாம், ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் போன்ற முக்கிய தொழில்களில் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.

இந்தியா பதிலடி கொடுக்குமா? இந்தியாவுக்கு உள்ள மாற்றுவழிகள் என்ன? விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் சிலர் கேட்கும் கேள்வி இதுதான்.

இந்தியா - அமெரிக்கா, வரிக்கு வரி யுத்தம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தியான்ஜின் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (இடது) மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் (வலது) பேசுகிறார்.

இந்தியா-சீன உறவுகள் பல ஆண்டுகளாக நீடித்த பதற்ற நிலை மாறத் தொடங்கியுள்ளது.

கடந்த காலத்தை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால் இந்தியா பதிலடி கொடுப்பதற்கு தயங்கியதில்லை. 2019-ல், வாஷிங்டன் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு உயர் வரிகளில் இருந்து இந்தியாவிற்கு விலக்களிக்க மறுத்தபோது, பாதாம் மற்றும் ஆப்பிள்கள் உட்பட 28 அமெரிக்க பொருட்ககள் மீது இந்தியா கடுமையான வரிகளை விதித்தது.

ஆனால் இந்த முறை, வர்த்தகப் போரை தீவிரப்படுத்துவது இந்தியாவின் நலன்களுக்கு உகந்ததல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"பதிலடி என்பது மிகப்பெரிய விலை தரவேண்டிய பயனற்ற உத்தியாகும், ஏனெனில் இறுதியில் அமெரிக்கா இந்தியாவை சார்த்திருப்பதைவிட இந்தியா அமெரிக்காவை சார்ந்திருப்பதே அதிகமாக உள்ளது." என கார்னெகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் நிறுவனத்தின் பேராசிரியர் ஆஷ்லி டெலிஸ், தி வையர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

" ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை ஆழப்படுத்துவது உள்ளிட்ட "பன்முனை உலகத்திற்கு ஆதரவாக" இந்தியா எடுத்த அடையாள நடவடிக்கைகள் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் என்று டெல்லியைச் சேர்ந்த குளோபல் டிரேட் ரிசர்ச் இன்ஷியேட்டிவ் நிறுவனத்தின் அஜய் ஸ்ரீவஸ்தவா பிபிசியிடம் தெரிவித்தார். இந்த கட்டத்தில் நேரடி பதிலடி கொடுப்பது அவசரப்பட்டு எடுத்த முடிவாகவே இருக்கும் என அவர் கூறினார்.

" டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களின் கணிக்க முடியாத தன்மை காரணமாக 50 விழுக்காடு வரி மட்டுமல்லாது, அமெரிக்கா எடுக்க சாத்தியமுள்ள பிற நடவடிக்கைகளின் முழு தாக்கத்தையும் மதிப்பிட இந்தியா குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது காத்திருக்க வேண்டும்," என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

பதிலடி வரி நடவடிக்கைகள் என்ன செய்யக்கூடும் என்பதை புரிந்து கொள்ள, இந்தியா வடக்கில் உள்ள அதன் பெரிய அண்டை நாடான சீனாவைப் பார்த்தாலே போதும். சீனா பதிலடி வரிகளை விதித்தபோது, அமெரிக்கா சீனா மீது விதித்த வரிகள் 150% வரை உயர்ந்தன.

பதிலடி மோதல் ஏற்பட்டால் பொருட்கள் அல்லாத துறைகளான சேவைகள், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் அவுட்சோர்ஸிங் (outsourcing) ஆகியவற்றுக்கும் அமெரிக்கா வரிகளை விதிக்கலாம் என்பதையும் இந்தியா கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% ஆகும்.

அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஹெச்1பி புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களில் மாற்றங்கள் குறித்து ஏற்கனவே எச்சரித்துள்ளார், ஹெச்1பி விசாக்களில் 70% இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தகத்தைத் தாண்டி பாதிக்கிறது என்பதை சுட்டிக்கட்டுகின்றன.

இந்தியா - அமெரிக்கா, வரிக்கு வரி யுத்தம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 35 பில்லியன் டாலர் வரை குறையலாம்

இந்த நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 பில்லியன் டாலர்கள் வரை குறையலாம்.

எனவே, பதிலடி கொடுப்பதில் அபாயங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால், இந்தியாவின் அடுத்த சிறந்த தேர்வுகள் என்ன?

அமெரிக்க வரிகளுக்கு எதிரான சிறந்த தற்காப்பு, ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்துவது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"மெக்ஸிகோ, கனடா, சீனா போன்ற நாடுகளுடன் பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகளை வளர்ப்பதற்கான நேரம் இது. டிரம்பின் வரிகளின் தாக்கத்தால் கவலையில் உள்ள பிற அரசுகளுடன், குறிப்பாக ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ளவற்றுடன், வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்," என்று இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுஷிக் பாசு, பிரோஜக்ட் சிண்டிகேட் இதழில் எழுதிய கட்டுரையில் தெரிவித்தார்.

ஸ்ரீவஸ்தவா இதை ஒப்புக்கொள்கிறார். அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க, பதிலடி தருவதை கடைசி வாய்ப்பாக வைத்துக்கொண்டு, ராஜதந்திர கூட்டணிகளையும், வர்த்தக பன்முகப்படுத்துதலையும் பயன்படுத்துவது இந்தியாவிற்கு இருக்கும் சிறந்த வழி என்றும் அவர் கூறுகிறார்.

மற்ற வர்த்தக ஒப்பந்தங்களை துரிதப்படுத்துவதற்கு இந்தியா ஏற்கனவே செயல்பட்டு வருவதை காட்டுவதற்கு சில அறிகுறிகள் உள்ளன.

ஜூலை மாதம் பிரிட்டனுடன் விரிவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை இறுதியடையும் நிலையில் உள்ளது என்று கூறினார்.

ஆனால், பன்முகப்படுத்துதல் உடனடி தீர்வாக இருக்காது.

"முன்பு பங்காளிகள், வாடிக்கையாளர்கள் அல்லது தொடர்புகள் இல்லாத சந்தைகளில் புதிய வாடிக்கையாளர்களை கண்டுபிடிப்பது தனிப்பட்ட ஏற்றுமதியாளருக்கு மிகவும் கடினமாக இருக்கும்," என்று சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தக நிபுணர் ஸ்ரீவித்யா ஜந்த்யாலா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா, வரிக்கு வரி யுத்தம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மற்றொரு சவால், புதிய சந்தைகளுக்கு மாறுவதற்காக ஏற்படும் செலவுகள் ஆகும்.

"புதிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தயாரிப்பு முறைகள், இயந்திரங்கள், உபகரணங்கள் தேவைப்பட்டால், எதிர்கால வரிகளைப் பற்றிய அதிக நிச்சயமின்மை இருக்கும் போது, அது தங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்று ஜந்த்யாலா கூறினார்.

டிரம்பின் கொள்கைகளை கருத்தில் கொள்ளும்போது நீண்ட கால அடிப்படையில் புதிய வர்த்தக பங்காளிகளை கண்டுபிடிப்பதை தவிர வேறு வழியில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளை தவிர்க்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் ஏற்றுமதி மையங்களை அமைப்பதன் மூலம் பன்முகப்படுத்துதலை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இப்போது முன்பு எப்போதையும் விட, "ஏற்றுமதியாளர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தர மேம்பாட்டு நிதிகள் மூலம் உள்நாட்டு போட்டித்திறனை வலுப்படுத்த வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

இல்லையெனில், ஒப்பீட்டளவில் அமெரிக்காவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை அனுபவிக்கும் வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற மற்ற ஆசிய நாடுகளிடம் இந்தியா ஏற்றுமதி சந்தை பங்கை மேலும் இழக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு