தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா? மலச்சிக்கலுக்கான காரணங்களும் தீர்வும்

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலக கழிவறை தினம் கடைபிடிக்கப்படுறது.
ஐ.நாவால் 2013-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மையக்கருவாக 'மாறி வரும் உலகில் தூய்மை' (Sanitation in a changing world) உள்ளது.
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது சுமார் 340 கோடி பேர் சரியான சுகாதார வசதியற்ற சூழலில் வாழ்வதாக ஐநா கூறுகிறது.
கழிவறை வசதி இல்லாமல் இருப்பது, தூய்மையான கழிவறைகள் இல்லாததால் மலம் கழிப்பதை தவிர்ப்பது அல்லது தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னையை பலரும் எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலச்சிக்கல் ஏற்படுத்தும் காரணிகள் அதனால் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த மூத்த இரைப்பை குடல் மருத்துவரான கயல்விழி ஜெயராமனிடம் பிபிசி தமிழ் பேசியது.
மலச்சிக்கல் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாகக் கூறுகிறார் கயல்விழி ஜெயராமன். பெரும்பாலும் தினசரி பழக்க வழக்கங்களால் தான் மலச்சிக்கல், சீரற்ற குடல் இயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தினசரி மலம் கழிப்பதன் அவசியம், மலச்சிக்கல் பிரச்னைக்கான காரணிகள், தீர்வுகள் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக குடல் இயக்கம் பற்றி தவறான புரிதல்கள் உள்ளன. தினசரி காலை மலம் கழித்தே ஆக வேண்டும் எனக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அது அறிவியல் ரீதியாக சரியானது கிடையாது. ஒவ்வோர் உணவுக்குப் பிறகும் 20 நிமிடங்கள் கழித்து அதற்கான உணர்வுகள் ஏற்படும். பெரும்பாலும் அத்தகைய உணர்வு ஏற்படுகிற போது அடக்கி வைப்பதுதான் மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிற போதே கழிவறைக்குச் செல்ல வேண்டும். அதனை புறக்கணிக்கக் கூடாது. ஆனால் பயணங்களில் இருப்பவர்கள், வெளி வேலைக்குச் செல்பவர்கள், பணியிடங்களில் முறையான கழிவறை வசதி இல்லாதவர்கள், வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்கள் அவ்வாறு செய்ய முடியாமல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தூய்மையான சூழல் இல்லாதபோது மக்கள் அதனை தள்ளிப்போடுவது இயற்கையான சுழற்சியை பாதிக்கிறது. பெரும்பாலானோர் வீட்டுக்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம், அல்லது இரவு பார்த்துக் கொள்ளலாம் எனத் தவிர்க்கின்றனர். ஆனால் இது செரிமான அமைப்பை பாதிக்கும். மலம் கழிப்பதை முடிந்தவரை தவிர்க்கக் கூடாது. மலச்சிக்கலுடன் ஒப்பிடுகையில் சுகாதாரமற்ற கழிவறை பயன்படுத்துவதால் ஏற்படும் தொற்று பாதிப்பு என்பது மிக மிகக் குறைவு.
யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
மலச்சிக்கல் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் வந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு கழிவறை மற்றும் மலம் கழிக்கும் வழக்கத்தை முறையாக பின்பற்றுவது குறித்து சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். வேலை நேரம் மாறுவது, வாழ்க்கை முறை மாறுவது, சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்றவை மலச்சிக்கலை அதிகப்படுத்துகின்றன.
நீண்ட கால பாதிப்பு இருப்பவர்கள் அதனை புறக்கணிக்கக்கூடாது. மலச்சிக்கல் தொடர்வதால் மூல நோய், ரத்தக்கசிவு, வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உணவுப் பழக்கம் காரணமா?
மாமிசம் போன்ற அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் சாப்பிடுகிறபோது மலச்சிக்கல் ஏற்படும். இருப்பினும் அது அச்சப்பட வேண்டிய விஷயம் இல்லை. அத்தகைய சூழலில் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்னையை தீர்ப்பதற்கான சில வழிகள்.
- தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
- 20 - 25 கிராம் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்
- துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்
- அதிக புரதச்சத்துள்ள உணவு சாப்பிடும் போது அதற்கு நிகராக நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதாகக் கூறும் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "மலச்சிக்கல் வருவதால் மட்டும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதைப்பற்றி கூடுதல் விழிப்புணர்வு தேவை" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












