சனாதனம்: உதயநிதி பேச்சால் 'இந்தியா' கூட்டணியில் பிரச்னையா? பா.ஜ.க. லாபம் பெறுமா?

பட மூலாதாரம், UDHAY/TWITTER
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசிய பேச்சு பா.ஜ.க.விடமிருந்தும் நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசிய பேச்சை முன்வைத்து பா.ஜ.க. நாடு முழுவதும் எதிர்ப்பை ஒருங்கிணைத்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பட மூலாதாரம், UDHAY/TWITTER
சர்ச்சை எப்படித் துவங்கியது?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் (த.மு.எ.க.ச) சார்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 1) சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்களிப்பு என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார்.
"இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம்.
சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியமாகும். சனாதனம் சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகள். பாசிஸ்டுகள் நம் குழந்தைகள் படித்துவிடக் கூடாது என்பதற்காக பல திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள். நாம் எல்லோரும் படித்துவிடக்கூடாது என்பதுதான் சனாதன கொள்கை. அதற்கு உதாரணம்தான் நீட் தேர்வு.” என்று பேசினார்.

பட மூலாதாரம், BJP RAJASTHAN/TWITTER
‘இன ஒழிப்பிற்கான அழைப்பு’ என்று கூறிய பா.ஜ.க
உதயநிதியின் சனாதனம் குறித்த இந்தப் பேச்சு, பா.ஜ.க. தலையீட்டால் நாடு முழுவதும் பேசுபடு பொருளாக மாறியது. செப்டம்பர் 2ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு” உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உதயநிதியின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ராஜஸ்தானின் துங்கர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா “ ‘இந்தியா’ கூட்டணியின் இரண்டு மிகப் பெரிய கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களின் மகன்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். சனாதன தர்மத்தை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் தயாரா?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.
பா.ஜ.க.வின் மாநிலச் செயலரான ஏ.அஸ்வத்தாமன், உதயநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். தில்லியில் வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி புகார் ஒன்றை தில்லி காவல்துறையில் பதிவுசெய்தார்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரசின் நிலைப்பாடு என்ன?
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளை ஆதரிக்கிறார்கள்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், "தமிழ்நாட்டில் சனாதன தர்மம் என்பது ஜாதி கட்டமைப்பு. அதைத் தவிர, வேறு எந்தத் தத்துவ அர்த்தமும் இல்லை. உதயநிதி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் எந்த இன அழிப்பு குறித்தும் அழைப்பு விடுக்கவில்லை," என்று தெரிவித்தார்.
கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான ப்ரியங் கார்கேவிடம் இது குறித்து கேட்டபோது, "சமத்துவத்தைப் பரப்பாத எந்த மதமும் மனித கண்ணியத்தை உறுதிசெய்யாத எந்த மதமும் நோயைப் போன்றதுதான்," என்று பதிலளித்தார்.
ஆனால், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இதற்கு பட்டும்படாமலும் பதிலளித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான கே.சி.வேணுகோபால், “சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு. எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் அவர்களது கருத்துகளை சொல்ல அனைத்து உரிமையும் உண்டு. அனைத்து மத நம்பிக்கையையும் மதிக்கிறோம், அனைவருடைய நம்பிக்கைகளையும் மதிக்கிறோம்,” என்று மட்டும் தெரிவித்து இந்த சர்ச்சையைக் கடந்துசென்றார்.
வட இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை, இந்த சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை விரும்பவில்லை. மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத்திடம் உதயநிதியின் கருத்து குறித்து கேட்டபோது, "அது அவருடைய கருத்து. ஆனால், அதில் நான் உடன்படவில்லை" என்றார்.

பட மூலாதாரம், INCINDIA
மமதா பானர்ஜியின் எதிர்ப்பு
உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்து இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மமதா பானர்ஜியிடம் கேட்டபோது, "தமிழக மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஒவ்வொரு மதத்திற்கும் என உணர்வுகள் உண்டு. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, ஜனநாயக நாடு. அதே நேரம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம்முடைய துவக்கமாக அமைந்தது. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். நாம் கோவில்களுக்கு மசூதிகளுக்கு தேவாலயங்களுக்குச் செல்கிறோம். எந்தப் பிரிவினரையும் புண்படுத்தக்கூடிய எந்தச் செயலிலும் நாம் ஈடுபடக்கூடாது. சிறிய பிரிவோ, பெரிய பிரிவோ, எந்தப் பிரிவினரையும் புண்படுத்தக்கூடிய எதையும் சொல்லக்கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.
மமதா பானர்ஜியின் இந்தக் கருத்து, கிட்டத்தட்ட வட இந்திய காங்கிஸ் தலைவர்களின் கருத்தை ஒத்ததாக இருந்தது.

பட மூலாதாரம், ANI
உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியார்
இதற்கிடையில், அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவர், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை இழிவுபடுத்திவிட்டதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார். உதயநிதியின் படத்தை கத்தியால் குத்தி அவர் கிழிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாயின.
மேலும் இது தொடர்பாகப் பேசிய அவர், "உதயநிதியின் தலையை வெட்ட பத்து கோடி ரூபாய் போதாது என்றால் நான் அந்தப் பரிசுத் தொகையை அதிகரிப்பேன். சனாதன தர்மத்தை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த நாட்டில் ஏற்பட்ட எல்லா முன்னேற்றமும் சனாதன தர்மத்தால்தான் ஏற்பட்டது. அவர் தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்த நாட்டின் 100 கோடி மக்களின் உணர்வுகளை அவர் காயப்படுத்திவிட்டார்," என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "எனது தலையைச் சீவ பத்து கோடி ரூபாய் எதற்கு, பத்து ரூபாய் சீப்பு போதுமே," என்று பதிலளித்தார். சாமியாரின் மிரட்டலுக்குப் பதிலடியாக, வேலூரில் அவரது உருவ பொம்மையை எரித்து தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் இருந்து எச்சரிக்கை
உதயநிதி ஸ்டாலின் மகாராஷ்டிர மாநிலத்தில் கால் வைக்க முடியாது என மகாராஷ்டிர மாநில மூத்த தலைவரும் அம்மாநில திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான மங்கள் பிரபாத் லோதா எச்சரித்திருக்கிறார்.
“சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசுவதன் மூலம் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் மாநிலத்தின் அமைதியைக் குலைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவில் உள்ள தேச விரோத சிந்தனைகளை ஒழிக்கும் அற்புத மருந்துதான் சனாதன தர்மம்," என்று தெரிவித்திருக்கிறார் லோதா. உதயநிதி ஸ்டாலினை மகாராஷ்டிராவிற்குள் கால் பதிக்க அனுமதிக்கக்கூடாது என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பட மூலாதாரம், K.BALAKRISHNAN/FB
தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்சனையில் சற்று மழுப்பலான நிலைப்பாடுகளை எடுத்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உதயநிதியின் கருத்தை ஆதரித்திருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் சிதம்பரம் உதயநிதியை ஆதரித்து பேசியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, "உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் எதையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. 100 வருடம் முன்பு பெரியார் சொன்னதை அவர் இன்று சொல்லியிருக்கிறார். இவர் இளம் பெரியார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை," என்று தெரிவித்திருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை திரித்தும் சிதைத்தும் ஆர்எஸ்எஸ்சும் பா.ஜ.கவும் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன. பா.ஜ.கவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆத்திரத்தில் சங்க பரிவாரத்தினர் மேற்கொள்ளும் விஷமப் பிரச்சாரத்தை இந்திய மக்கள் நிராகரிப்பார்கள்," என்று தெரிவித்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசனும் "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானம் குறித்து தெரிவித்த கருத்துகள் பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வரும் கருத்துதான். கடந்த காலங்களில் வாய்மூடி கடந்துசென்ற பா.ஜ.க.வும், இந்துத்துவா கும்பலும் தற்போது வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கிறார்கள். இது பகுத்தறிவு சிந்தனைக்கும் அறிவியல் கண்ணோட்டத்துக்கும் எதிரானது," என்று தெரிவித்திருக்கிறார்.
எதிர்பார்த்ததைப் போலவே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












