2027 ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி, ரோஹித் ஆடுவார்களா? பயிற்சியாளர் கம்பீர் பதில்

இந்தியா - தென் ஆப்ரிக்கா, கோலி, ரோஹித், கம்பீர், 2027 ஒருநாள் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி தன்னால் இன்னும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தார். ரோஹித் சர்மாவின் ஆட்டமும், அவரது உடற்தகுதி மற்றும் வயது குறித்த கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது.

இருந்தாலும், அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், அதன் அடிப்படையில் இந்த செயல்பாடுகளைப் பகுப்பாய்வு செய்யக் கூடாது என்று தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.

"அவர்கள் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களின் அனுபவம் டிரஸ்ஸிங் அறையில் மிகவும் முக்கியமானது. அவர்கள் அதை நீண்ட காலமாக செய்து வருகின்றனர். அவர்கள் அதைத் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். 50 ஓவர் ஃபார்மட்டுக்கு அது மிகவும் முக்கியமானது" என்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு கம்பீர் கூறினார். இந்தப் போட்டியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதேபோல், சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகியோர் ஒருநாள் அணிக்கு திரும்பினாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு முடிந்தவரை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி மற்றும் ரோஹித் ஆடுவார்களா என்று கம்பீரிடம் கேட்டபோது, ​​​​"முதலில் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம். அதுமட்டுமல்லாமல், இளம் வீரர்கள் அணிக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்றார்.

அணியின் தேவைக்கேற்ப ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட்டிங் வரிசையை மாற்றிக்கொண்டார் என்று கம்பீர் கூறினார்.

"ருதுராஜ், வழக்கத்துக்கு மாறான பொசிஷனில் பேட்டிங் செய்தார். ஆனால் அவர் ஒரு தரமான வீரர். இந்தியா ஏ அணிக்காக விளையாடும் போது சிறந்த ஃபார்மில் இருந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்க விரும்பினோம். நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர் அந்த வாய்ப்பை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டார். அவர் அடித்த சதம் உண்மையில் உயர் தரமானது. யஷஸ்வியும் சிறப்பாக ஆடினார். அவரது தரம் பற்றி, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது திறன் பற்றி அனைவருக்கும் தெரியும்." என்று அவர் கூறினார்.

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கோலி மற்றும் ரோஹித் மீதான வெளிச்சம் குறையவில்லை. இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நல்ல ஃபார்மில் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டினர். உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது அணித் தேர்வுக்கு முக்கியம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி போட்டியில் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் அடித்த கோலி, முதலிரு போட்டிகளில் சதமடித்திருந்தார். இந்த தொடரில் ரோஹித் சர்மா இரண்டு அரைசதங்கள் அடித்தார்.

விராட், ரோஹித் செயல்பாடுகள் பற்றிய விவாதம்

"விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஒரு குறிக்கோளுடன் வந்துள்ளார். உயர்தர பேட்டிங்"

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, விராட் கோலியின் பேட்டிங் குறித்து சமூக வலைதளத்தில் இர்ஃபான் பதான் இப்படி கூறியிருந்தார்.

இந்தத் தொடரின் மூன்று போட்டிகளில் 151 என்ற சராசரியில் ரன் எடுத்து, தன் மீது எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் கோலி பதிலளித்துள்ளார்.

ரோஹித் சர்மாவும் தொடர்ந்து இரண்டாவது தொடராக அற்புதமாக பேட்டிங் செய்தார். தன்னைப் புறக்கணிப்பது தேர்வாளர்களுக்கு எளிதானது அல்ல என்பதையும் அவர் காட்டியிருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விமர்சனங்களுக்கு ஆளானர்கள். இருப்பினும், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில், இரு பேட்டர்களும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.

இருந்தாலும், ஆஸ்திரேலிய தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று தனது ஃபார்ம் மற்றும் உடற்தகுதியை நிரூபித்தார் ரோஹித் சர்மா. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்து அந்த ஃபார்மைத் தொடர்ந்தார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, கோலி, ரோஹித், கம்பீர், 2027 ஒருநாள் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலிரு போட்டிகளிலும் சதமடித்தார் விராட் கோலி

"இரண்டு, மூன்று வருடங்களாக என்னால் இப்படி விளையாட முடியவில்லை"

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரு போட்டிகளில் சோபிக்கத் தவறிய விராட் கோலிக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக அமைந்தது.

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் தனது சதங்களின் எண்ணிக்கையை 53 ஆக உயர்த்தினார்.

மூன்றாவது போட்டியில் இந்தியாவுக்கு 271 என்ற இலக்கே நிர்ணயிக்கப்பட்டதாலும், தொடக்க வரிசையில் ரோஹித் சர்மா மற்றும் யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக ஆடியதாலும், கோலியால் மூன்றாவது சதமடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 12 சிக்ஸர்களுடன் 302 ரன்கள் எடுத்த விராட், கடந்த சில ஆண்டுகளில் தன்னுடைய பாணியில் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திருப்தி, தொடர் நாயகன் விருதைப் பெற்றபோது அவரது முகத்தில் தெரிந்தது.

விராட் கோலி கூறுகையில், "உண்மையாக இந்தத் தொடர் எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. என் மனதில் நிம்மதியை உணர்கிறேன். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக என்னால் இப்படி விளையாட முடியவில்லை" என்றார்.

"நீங்கள் 15-16 வருடங்கள் விளையாடும் போது, ​​உங்களை நீங்களே சந்தேகிக்க ஆரம்பிக்கிறீர்கள், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஆனால் அணியின் வெற்றிக்கு என்னால் இன்னும் பங்களிக்க முடிகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அழுத்தம் இல்லாமல் விளையாடும் போது, ​​என்னால் சிக்ஸர்களை அடிக்க முடியும்" என்றும் அவர் கூறினார்.

'கோலி பேட்டிங்குக்கு இணையே இல்லை'

விராட் கோலியின் அபாரமான பேட்டிங் காரணமாக, தொடர் முடிந்த பிறகு சமூக வலைதளங்களில் அனைவரும் அவரைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்.

சமூக வலைதளத்தில் விராட் கோலியைப் பாராட்டியுள்ள நிதிஷ் யாதவ், "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி நாயகனாகத் திகழ்ந்தார். தொடர் முழுவதும் அவரது பேட்டிங்கிற்கு இணையாக யாரும் ஆடிடவில்லை. அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார்" என்று எழுதியுள்ளார்.

"இந்தத் தொடரில் விராட் கோலி 302 ரன்கள் எடுத்தார். என்ன அற்புதமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். தனது சதங்களால், அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்" என்று ஹர்ஷித் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

'எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி'

இந்தியா - தென் ஆப்ரிக்கா, கோலி, ரோஹித், கம்பீர், 2027 ஒருநாள் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோலியும் தொடர் நாயகன் விருது வென்றனர்

இந்தத் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடிக்கவில்லை என்றாலும், அவர் இரண்டு முக்கிய மைல்கற்களை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 20,000 ரன்களுக்கு மேல் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

"38 வயதில், ரோஹித் சர்மா மிகவும் சீராக ரன் குவிக்கிறார். அவரது ஆட்டம் சிறப்பாக இருப்பதாக தெரிகிறது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் இர்ஃபான் பதான் பதிவிட்டிருந்தார். .

இந்த ஆண்டு விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் விராட் கோலி 13 இன்னிங்ஸ்களில் 651 ரன்களும், ரோஹித் சர்மா 14 இன்னிங்ஸ்களில் 650 ரன்களும் எடுத்துள்ளனர்.

தனது மற்றும் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தை குறிப்பிட்ட விராட் கோலி, "அணிக்காக ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்பினோம். பல ஆண்டுகளாக அணிக்காக அதையே நாங்கள் செய்து வருகிறோம். ஏனெனில் நாங்கள் அணியின் தேவைக்கு ஏற்ப விளையாடி வருகிறோம்" என்றார்.

"நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட முடியும். எங்கள் இருவரின் செயல்பாட்டுக்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நாங்கள் அணிக்கு உதவ முடிந்தது, தொடர்ந்து அதைச் செய்வோம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு