இந்தியாவிடம் மீண்டும் தோல்வி: பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், ஆசிய கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. ஒரு வார இடைவெளியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா பேசுகையில், பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த நல்ல தொடக்கத்திற்கு 180 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும் என்றார்.

"முதல் 10 ஓவர்களில் எங்களுக்கு கிடைத்த தொடக்கத்தை வைத்துப் பார்த்தால் 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு 10 ஓவர்களுக்குப் பிறகு பேட்டிங் செய்வது சுலபமில்லை, எனவே 170 என்பதே மிகவும் சவாலான ஸ்கோர் தான்" என சல்மான் அகா தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் செயல்பாடுகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு சல்மான் அகா பதிலளித்துள்ளார்.

"நாங்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்யவில்லை என நீங்கள் கூறலாம், ஆனால் பேட்டிங்கில் எங்களின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக தொடங்கவில்லை, ஆனால் முடிவில் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது." என்றார் சல்மான் அகா.

இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 2வது முறையாக இந்திய அணியிடம் தோற்றிருப்பது குறித்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் அந்த அணியை விமர்சித்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், ஆசிய கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் அணி தேர்வு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் அணி தேர்வு பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்தர், "பாகிஸ்தான் அணித் தேர்வு சரியில்லை" எனத் தெரிவித்தார்.

"முதலில் அணித் தேர்வு தவறாக உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டாம் எனக் கூறினோமோ அதையே தான் செய்தார்கள். சரியான அணிக்கான சரியான திறமைசாலிகளைத் தேர்வு செய்கிற விஷயத்திற்கு வருகிற போது இது மோசமான மேலாண்மையைக் காட்டுகிறது. எங்கே தவறு நடந்துள்ளது என்பது மிகத் தெளிவாகிறது." என்றார்

பந்துவீச்சாளர் தேர்வு பற்றியும் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். "அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அணியைத் தேர்வு செய்ய என்ன வழிமுறையை பின்பற்றுகிறார்கள்? பயிற்சியாளரை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். கேப்டனுக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியவில்லை. என்ன கேப்டன்ஷிப் செய்கிறார், என்ன விளையாடுகிறார் என அவருக்கு எதுவுமே தெரியவில்லை." எனத் தெரிவித்தார் அக்தர்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவை கடுமையாகச் சாடிய அக்தர், "இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை, ஆனால் அவர் விளையாடுகின்ற இடத்திற்கு தகுதியுடையவரா எனத் தெரியவில்லை. 6வது இடத்தில் விளையாட வருகிறார், அணியில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என அடுக்கடுக்காக பல கேள்விளை முன்வைத்தார் அக்தர்.

 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், ஆசிய கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்

போட்டிக்குப் பிறகு சோனி லைவ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணியால் தற்போது இந்திய அணியுடன் போட்டியிட முடிவதில்லை எனத் தெரிவித்தார்.

"பாகிஸ்தான் இப்படி விளையாடுவதைப் பார்ப்பதற்கு கடினமாக உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியால் இந்திய அணியுடன் போட்டி போட முடிவதில்லை." என்று தெரிவித்தார் அக்ரம்.

இந்தியாவை பாகிஸ்தான் கடைசியாக வென்றது எப்போது?

பாகிஸ்தான் அணி எந்தவொரு வடிவத்திலும் இந்திய அணியை வீழ்த்தி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 7வது முறையாக பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோற்றுள்ளது.

கடைசியாக 2022-இல் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்திருந்தது.

இருநாடுகளிடைய உறவுகள் சுமூகமாக இல்லாததால் இருதரப்பு தொடர்கள் நடத்தப்படுவதில்லை. 2012-2013-இல் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடர் 1-1 என்கிற கணக்கில் டிராவில் முடிந்தது.

அப்போதிலிருந்து இரு அணிகளும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.

ஒருநாள் போட்டிகளிலும் 2010 முதல் இரு நாடுகளிடையே 18 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 13 போட்டிகளிலும் பாகிஸ்தான் 4 போட்டிகளிலும் வென்றுள்ளன, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

எனினும் 2017-இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருந்தது பாகிஸ்தான். ஆனால் அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு