சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக மக்கள் கவலை கொள்ள வேண்டுமா? - என்ன சொல்கிறது அரசு?

பட மூலாதாரம், Getty Images
சீனாவின் பல பகுதிகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதால், உலகம் முழுவதுமே கொரோனா குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவத் துறை என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது?
சீனாவின் பல பகுதிகளில் தொற்று பரவிவருவதால், பெய்ஜிங்கிலும் வேறு நகரங்களிலும் மருத்துவமனைகள் நிரம்பிவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய அளவில் பரவல் இருந்தாலும்கூட, புதன்கிழமையன்று அங்கு ஒருவரும் உயரிழக்கவில்லை. ஆகவே, இந்தப் புதிய பரவலின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது குறித்த கவலைகள் நீடிக்கவே செய்கின்றன.
சீனாவில் 2020ஆம் ஆண்டிலிருந்து கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் இருந்துவந்த நிலையில், சமீபத்தில் நடந்த போராட்டங்களை அடுத்து அந்தக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அப்போதிலிருந்து அங்கு பெருமளவில் பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிற நாடுகளிலும் கோவிட் மீண்டும் பரவக்கூடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமையன்று தமிழ்நாடு, உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநில முதல்வர்கள் கோவிட் பரவல் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்கு கூட்டங்களைக் கூட்டியுள்ளனர்.
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன், முகக் கவசம் அணிவது போன்ற கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமெனக் கூறியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கோவிட் - 19 பரவல் குறித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு சோதனைகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதேபோல, மாநிலங்களில் புதிதாக ஏற்படும் தொற்றின் மரபணு வரிசையை சோதித்து பட்டியலிடும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் பரவல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமையன்று பிற்பகல் ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் பொது சுகாதார இயக்குநர் மத்திய அரசின் இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் சீனாவிலும் ஹாங்காங்கிலும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீனாவிலிருந்தும் ஹாங்காங்கிலிருந்தும் வரும் சர்வதேசப் பயணிகளுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்வது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 49 பேர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரும் உயிரிழக்கவில்லை. கடந்த சில நாட்களாக புதிதாக ஏற்படும் தொற்றின் எண்ணிக்கை 7-6 என்ற அளவிலேயே இருக்கிறது.
தடுப்பூசியைப் பொறுத்தவரை, முதல் டோஸை 97 சதவீதம் பேரும் இரண்டாவது டோஸை 92 சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை கண்காணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை (Whole Genomic Sequencing) செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள், ஆக்ஸிஜன் ஆகியவை போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதிகள் கூடுதலாக்கப்படும் எனவும் மாநில அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கோவிட் தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழு மரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் இன்புளூயன்சா போன்ற காய்ச்சல், அதிக நுரையீரல் தொற்று (ILI & SARI) ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி (SOP) கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையைச் சேர்ந்தது. இது BA-2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும். சில ஆசிய நாடுகளில் தற்போது பரவி வரும் BF-7 வகையான கொரோனா தொற்று BA-5-ன் உள்வகையைச் சேர்ந்தது. இந்த BA-5 தொற்று தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












