கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தானின் குழந்தைகள் எனக் கூறியது ஏன்? சீமான் விளக்கம்

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்

பட மூலாதாரம், SEEMAN

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறுபான்மையினரை ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்று குறிப்பிட்டு பேசிய பேச்சு சர்சைக்குள்ளானது.

அதற்கு இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது பேச்சுக்கு விளக்கமளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது என்ன?

மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை 30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், "ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை...

இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் 18% வாக்குகளை தி.மு.க.வுக்குப் போட்டு, காங்கிரசுக்குப் போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான்.

சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்?" என்று பேசினார்.

சீமான் கொடுத்த விளக்கம் என்ன?

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.க. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்.

நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்," என்று குறிப்பிட்டார்.

வலுக்கும் கண்டனங்கள்

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்
படக்குறிப்பு, ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது

சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது.

"இவரின் நோக்கம் தெளிவானது. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா.ஜ.க. அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.க. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்," என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லாவும் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார். "இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்றார் அவர்.

மேலும், “மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு மௌனமாக ஆதரிப்பவர்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் பொழுது, சீமானுக்கு கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள்.

சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்," என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘சிறுபான்மையினர் தங்கள் இருப்புக்காகப் போராடுகிறார்கள்’

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்

பட மூலாதாரம், JAWAHIRULLAH FB

படக்குறிப்பு, சீமான் பேசுவது சங்க பரிவாரங்களின் மொழி, என்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஜவாஹிருல்லா, "சீமான் தொடர்ந்து இப்படிப் பேசி வருகிறார். ஆரம்பத்தில் சாசனம் என்ற ஒன்றை வெளியிட்டார், அதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தனி தேசிய இனத்தினர் என்றும் அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக வேறு பல விஷயங்களையும் சொன்னார். அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு அதனை ஓரங்கட்டி வைத்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாக எல்லோரும் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்றார். இது போன்ற மொழி சங்க பரிவாரங்களின் மொழி. இது மிக அருவெருப்பானது.

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் லஞ்சத்திற்கு எதிராக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்கிறார். சிறுபான்மையினரின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கும்போது அவர்கள் முதலில் அதற்காகத்தான் போராடுவார்கள்," என்றார்.

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்கவில்லை; இருந்தபோதும் இஸ்லாமியர்கள் தி.மு.கவையே ஆதரிக்கிறார்கள் என்று சீமான் கூறுவது குறித்துக் கேட்டபோது, "இஸ்லாமியச் சிறைவாசிகள் பிரச்சனையைப் பொறுத்தவரை சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து பேசி வருகிறோம்.

கடந்த 2021இல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே பேசினேன். இதற்குப் பிறகு நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், அந்த அரசாணையின் கீழ் இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க வழியில்லை. இதைச் சுட்டிக்காட்டிய பிறகு, இந்த விவகாரம் குறித்து ஆராய அரசு ஆதிநாதன் குழுவை அமைத்தது. அந்தக் குழு தற்போது தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.

விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இஸ்லாமிய சிறைக் கைதிகளுக்காக கடந்த மாதம் கோவையில் மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தினோம். ஆகவே, சீமான் சொல்வது தவறு," என்கிறார் ஜவாஹிருல்லா.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் சீமானின் பேச்சை கண்டித்திருக்கிறது. அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கமும் சீமானின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

சீமான்
படக்குறிப்பு, "அநீதிக்கு எதிராக நீங்கள் எங்கே போராடினீர்கள்? பழனிபாபா மட்டும்தான் அநீதிக்கு எதிராக போராடினார். ஆனால் அவரையே நீங்கள் அநியாயமாக சாகவிட்டீர்களே" என்று பேசியிருக்கிறார் சீமான்.

மன்னிப்புக் கேட்டால் வாக்களிப்பீர்களா?

இதனிடையே, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜவாஹிருல்லாஹ் பேசியது குறித்து சீமானிடம் பத்திரிகையாளர்கள் புதன்கிழமையன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சீமான், "மன்னிப்பு கேட்டால் எனக்கு வாக்களிப்பீர்களா? வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் நீங்கள்தான். அநீதிக்கு எதிராக நீங்கள் எங்கே போராடினீர்கள்? பழனிபாபா மட்டும்தான் அநீதிக்கு எதிராக போராடினார். ஆனால் அவரையே நீங்கள் அநியாயமாக சாகவிட்டீர்களே" என்றார்.

"எனக்கு உரிமையும் வலியும் இருக்கிறது. அதனால் நான் பேசுகிறேன். நீங்கள் எப்போது எனக்கு வாக்களித்தீர்கள். செந்தில் பாலாஜிக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே சிபிஐ தமிழ்நாட்டிற்குள் வர முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடுகிறீர்கள்.

நள்ளிரவில் வீடு புகுந்து இஸ்லாமியர்களின் வீடுகளில் NIA சோதனை நடத்துக்கிறதே. இது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை. இதெல்லாம் அவர்களிடம் கேட்க மாட்டார்கள். என் மேல் மட்டும் ஏன் கோபம் வருகிறது" என்றார்.

நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன?

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்

பட மூலாதாரம், packiarajan/twitter

படக்குறிப்பு, அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார், என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்

சீமானின் கருத்துக்கு எழுந்திருக்கும் எதிர்வினை குறித்து அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் கேட்டபோது, சீமான் பேசியதற்கு முன்னும் பின்னும் பார்க்காமல் அவரது கருத்து புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறார்.

"சீமான் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் திட்டினார் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். குறிப்பிட்ட அந்தப் பேச்சுக்கு முன்னும் பின்னும் அவர் கூறியதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார்.

கலவரங்களை பா.ஜ.க. திட்டமிட்டு மேற்கொள்கிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது, அதனால் அதைச்செய்கிறது என்று சொன்னார். அமித் ஷா மணிப்பூருக்குச் சென்று, அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என்று சொன்னதையடுத்து இந்தக் கலவரம் நடக்கிறது என்பதை நீண்ட நாட்களாக அவர் சொல்லிவருகிறார். அன்றைக்கும் அதைச் சொன்னார்.

“ 'அநீதிக்கு துணை போகாதீர்கள்' என இயேசுவும் நபிகளும் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், தவறான ஒருவருக்கு துணை போகிறீர்கள். திரும்பத் திரும்ப தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் துணையாக இருக்கிறீர்கள். சரியான ஒருவருக்கு கைகொடுப்பதில்லை என்ற பொருளில் அந்த வாசகங்களைச் சொன்னார்.

“தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கு வாக்களிப்பதால் என்ன நன்மை கிடைத்தது? இஸ்லாமியக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து மோசமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறது தமிழக அரசு. இப்படிச் செய்யும் தி.மு.கவை ஆதரிப்பதை எதிர்த்து கேள்விதான் கேட்க முடியும்" என்கிறார் பாக்கியராசன்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்துச் சீமான் பேசியவை குறித்து இதற்கு முன்பும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. 2013ஆம் ஆண்டில் விவிலியம் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைக் கண்டித்து கிறிஸ்தவ அமைப்புகள், அவரைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரின. இதற்குப் பிறகு, தமிழர்கள் எல்லாம் தாய் மதமான சைவத்திற்குத் திரும்ப வேண்டும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்ன விளக்கம் சொல்கிறார் ?

இந்நிலையில், விழாயனன்று பத்திகையாளர்களிடம் பேசிய சீமான், அநீதிக்கு துணை நிற்பவர்களைத்தான் சாத்தனின் பிள்ளைகள் என்று கூறியதாக விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அநீதிக்கு துணை நிற்பவர்களைத்தான் கூறுகிறேன். நீங்கள் சாத்தானின் குழந்தைகள் எனக்கூறவில்லை.

சாத்தானின் குழந்தைகளாக மாறிவிட்டீர்களே எனக் கூறுகிறேன். ஏனென்றால், அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கிறீர்கள். எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். ஆனால், இறுதி நாட்களில் ஏக இறைவனுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி முறை எதாவது ஒரு நேர்மையாளன், ஒரு நியாயவான், ஒரு தேவனின் மகன் செய்கின்ற ஆட்சி மாதிரி இருக்கா?

எல்லாம் சாத்தானின் ஆட்சி முறை. கணக்கில் அடங்கா மது, சகிக்க முடியா ஊழல், லஞ்சம், கணக்கில்லாத கொலை கொள்ளை, கணக்கில்லாத வளச்சுரண்டல், இதையெல்லாம் செய்பவன் சாத்தான். இந்த சாத்தானின் வேலையை சகித்துக்கொண்டிருப்பவன் யார் ? அதை குரானும், பைபிளும் சொல்கிறது. அதையே நான் சொன்னால், ஏன் கோவித்துக்கொள்கிறீர்கள்.

இஸ்லாமிய மார்க்கமும், கிறுஸ்துவ மாரக்கமும், அநீதிக்கு எதிராக பிறந்தது. இஸ்லாம் ஒரு மதம் அல்ல, அது ஒரு புரட்சி என்கிறார்கள். நபிகள் செய்ததும், ஏசு செய்ததும் புரட்சி. அநீதிக்கு எதிரான பெரும் புரட்சித் தீயை பற்றவைக்கவே நான் பூமிக்கு வந்தேன் என்கிறார் ஏசு.

ஒரு கோட்பாட்டைத் தகர்த்து, புதிய சித்தாந்தத்தை கருத்தை விதைப்பவன், ஏற்பார்களா மாட்டார்களா, இது சரியா தவறா என்றெல்லாம் அச்சப்பட முடியாது. எனக்கு தோன்றியதை நான் சொன்னேன்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: