அன்று காத்திருப்பில் வைக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இன்று டி20 கேப்டன் ஆனது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் யாதவ். லட்சக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பெயர் இது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி அன்று நடைபெற்ற டி20 உலகப்கோப்பை இறுதிப் போட்டியில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து, இந்தியாவின் உலகக்கோப்பை கனவை நிறைவேற்ற சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்காற்றினார்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி, தன் 31-வது வயதில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற சூர்யகுமார், தற்போது இலங்கை தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
இதற்கு முன்பு ஏழு டி20 போட்டிகளில் சூர்யகுமார் கேப்டனாக இருந்துள்ளார். இதில், ஐந்து போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.
இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, இளம் வீரரான சுப்மன் கில்-க்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜிம்பாப்வே தொடரில் திறமையாக விளையாடிய அபிஷேக் சர்மா இலங்கை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ரியான் பராக் அணியில் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஹாஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹமது, முகமது சிராஜ்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், GETTY IMAGES
சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரம்
சூர்யகுமார் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி, முதல் தர கிரிக்கெட் (First class cricket) போட்டிகளுக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 2021-ஆம் ஆண்டு, மார்ச் 14-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக விளையாடினார்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு சூர்யகுமார் 11 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்தார்.
உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கு சூர்யகுமார் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், இதுவரை அவருடைய பயணம் தடைகள் நிரம்பியதாகவே இருந்தது. சூர்யகுமாரின் ஆட்டம் ஏபி டி-வில்லியர்ஸ் உடன் ஒப்பிடப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மைக் ஹசி-யும் சூர்யகுமார் போன்றே காத்திருந்தார். 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற அவர் பத்தாண்டுகள் காத்திருந்தார். ஆனால், ஹசி புகார் கூறவில்லை, அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்து ரன்களை குவித்து வந்தார். கடைசியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20-20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஹசி தன் திறமையை நிரூபித்தார். ‘டாப் ஃபினிஷர்’, ‘மிஸ்டர் கிரிக்கெட்’ ஆகிய பெயர்களை ஹசி பெற்றார்.

பட மூலாதாரம், RANDY BROOKS
எளிதில் திறக்காத இந்திய அணியின் கதவுகள்
ஹசி போன்றே சூர்யகுமாரும் தன்னுடைய 30 வயதுகளில் வாய்ப்பை பெற்றார். வாய்ப்பு கிடைத்த ஒன்றரை ஆண்டுகளில், 20-20 போட்டிகளுக்கான ஐ.சி.சி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் இடம்பெற்றிருக்கிறார்.
சூர்யகுமாருக்கு கௌதம் கம்பீரும் வாய்ப்பு வழங்கியுள்ளார். அவர் இன்னும் அதிகமாக விளையாடினால், பெரிய வீரராவார் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முதுகெலும்பாக இருந்தாலும் அவருக்கு இந்திய அணிக்கான கதவு அவ்வளவு எளிதில் திறக்கவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் ரன்களைக் குவித்தாலும் அவர் காத்திருப்பில் வைக்கப்பட்டார். 2021-இல் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

பட மூலாதாரம், SURJEET YADAV
சூர்யகுமார் மீது அதிக எதிர்பார்ப்பு
சூர்யகுமாரின் குடும்பம் மகாராஷ்டிரா மாநிலம் செம்பூரில் உள்ள அனுஷக்தி நகரில் வசிக்கிறது.
படிப்பை விட சூர்யகுமார் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததை அவருடைய குடும்பத்தினர் உணர்ந்தனர்.
கடினமான சந்தர்ப்பங்களிலும் தன் பாணியை மாற்றாமல் விளையாடுவதற்காக அவர் அறியப்பட்டார்.
ரன்களைக் குவிக்காமல் இந்திய அணிக்கான கதவு திறக்காது என்பதை அவர் உணர்ந்திருந்தார். தொடர்ந்து விளையாடினார், பல சீசன்களில் அவருடைய ஆட்டம் கவரத்தக்க வகையிலும் சில ஆட்டங்கள் சாதாரணமானதாகவும் இருந்தன.
தன் சக போட்டியாளர்களுக்கு இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தபோது அவர் விரக்தி அடையவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குள் 20-20 போட்டிகளில் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி வெல்வதற்கு சூர்யகுமார் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
மும்பையும் சூர்யகுமாரும்
சூர்யகுமார் மும்பையில் வளர்ந்தவர். வட பாவ், பாவ் பாஜி, சாலையோர சீன உணவான டிரிபிள் சேஷ்வான் ரைஸ் போன்றவை அவருக்குப் பிடித்தமான உணவுகள். கௌரவ் கபூரின் ‘பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ’ என்ற நிகழ்ச்சியில் உணவு மீதான தனது காதலை அவர் வெளிப்படுத்தினார்.
2014-ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக அவர் விளையாட ஆரம்பித்தார். கௌதம் கம்பீர் அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்தார்.
சூர்யகுமார் யாதவின் முதலெழுத்துகளை குறிப்பிட்டு, அவரை ‘ஸ்கை’ (SKY) என அழைக்க ஆரம்பித்தார் கௌதம் கம்பீர்.
மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று அப்புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து வருகிறார்.
தன் உடலில் பல டாட்டூக்களையும் குத்தியுள்ளார். பல தனித்துவமான டாட்டூக்களை குத்திக்கொள்வதில் ஆர்வம் மிக்கவராக சூர்யகுமார் உள்ளார். அவர் கார்களின் மீதும் ஆர்வம் கொண்டவர்.
தன் 30-வது வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்திய அணிக்கு விளையாடுவது வெகுதூரமில்லை என, சூர்யகுமாரை குறிப்பிட்டு ரோஹித் சர்மா கூறியிருந்தார். அவருடைய வார்த்தைகள் சில மாதங்களிலேயே பலித்தது, சூர்யகுமார் இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார்.
“ராஞ்சி போட்டிகளில் விளையாட தொடங்கியபோது ரோஹித் பேட்டிங் செய்தார். அப்போதிலிருந்து அவர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்,” என சூர்யகுமார் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
காதல் திருமணம்
சூர்யகுமாரும் தேவிஷாவும் 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 2010-ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். தன்னுடைய புதிய பரிமாணத்தில் தேவிஷாவின் பங்கு முக்கியமானது என அவர் கூறிவந்தார்.
இந்திய அணிக்கு விளையாடாதது ஏன் என்பது குறித்து ஆலோசித்து இருவரும் செயல்திட்டம் ஒன்றை வகுத்தனர்.
பேட்டிங் பயிற்சியாளர், சத்துணவு நிபுணரை சூர்யகுமார் சந்தித்தார். இரவு நேர கேளிக்கை விருந்துகளை குறைத்துக்கொண்டார். தன் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கத் தொடங்கியதாக சூர்யகுமார் தெரிவித்தார்.
சச்சினின் இடத்தில்...
2012-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி.
இடம்: வாங்கடே மைதானம்.
மும்பை இந்தியன்ஸ் Vs புனே வாரியர்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணியின் தூணாக திகழ்ந்த சச்சினால் விளையாட முடியாத நிலை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், THE INDIA TODAY GROUP
கேப்டன் பொறுப்பு
ஸஹீர் கான், ரோஹித் சர்மா இருவரும் 2014-2015 ஐ.பி.எல் சீசனில் விளையாட முடியாத சூழலில் இருந்ததால், சூர்யகுமாருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. கேப்டன் பொறுப்பைத் தாண்டி, அவர் பேட்டிங்கில் தடுமாறினார். மும்பை அணி படுமோசமாக விளையாடியது.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவமதிக்கும் வகையில் பேசியதாக சூர்யகுமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆதித்யா தாரேவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அவமதிக்கும் வகையில் பேசியதற்காக சூர்யகுமாரும் சர்ஃபராஸ் கானும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டனர்.
‘எனக்கு கற்றுத்தருவீர்களா?’
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக விளையாடியபோது, சிறந்த ஆல்-ரவுண்டராக அறியப்பட்ட ஜாகுவஸ் கல்லீஸ் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அவர் சூர்யகுமாரிடம், “எப்படி அந்த ஷாட்டை அடித்தீர்கள்? எனக்கு கற்றுத்தருவீர்களா?” என கேட்டார்.
மும்பை அணியின் ஆட்டம் குறித்து ஆய்வு செய்யும் சௌரப் வால்கர், சூர்யகுமாரின் ஆட்டத்தில் ‘ஆக்ஷன், கொண்டாட்டம், டிராமா’ என எல்லாம் இருப்பதால் அவருக்கு ‘ஜீ சினிமா’ (Zee Cinema) என்ற பட்டப்பெயரை அளித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












