இம்ரான் கானை மீட்க மனைவி புஷ்ரா பீபி கையில் அரசியலை ஆயுதமாக எடுத்துள்ளாரா?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி. இருவரும் வெவ்வேறு வழக்குகளில் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திடும் படம் ஜூலை 2023இல் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி. இருவரும் வெவ்வேறு வழக்குகளில் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திடும் படம் ஜூலை 2023இல் எடுக்கப்பட்டது.
    • எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத்
    • பதவி, பிபிசி உலக செய்திகளுக்காக

நவம்பர் பிற்பகுதியில், புஷ்ரா பீபி ஒரு சரக்கு கன்டெய்னரின் மீது ஒரு வெள்ளை சால்வையுடன் நின்றார்.

அவருக்குக் கீழே, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃபின் (PTI) ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கொடிகளை அசைத்து உரத்த குரலில் கோஷமிட்டனர்.

பலத்த இரைச்சல் இருந்தபோதிலும், புஷ்ரா பீபியின் குரல் தெளிவாக இருந்தது.

"என் குழந்தைகளே! என் சகோதரர்களே!

நீங்கள் என்னுடன் நிற்க வேண்டும்!" என்றார் புஷ்ரா பீபி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புஷ்ரா பீபி பேசும்போது கூட்டத்தினர் பலத்த ஆரவாரம் செய்தனர். "நீங்கள் என்னுடன் நிற்காவிட்டாலும், நான் வலுவாக இருப்பேன், இது என் கணவரைப் பற்றியது மட்டுமல்ல, இந்த நாட்டையும் அதன் தலைவரையும் பற்றியதுதான்" என்று புஷ்ரா பீபி அவர்களிடம் கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மூன்றாவது மனைவியான புஷ்ரா பீபி, அரசியல் ஈடுபாடு இல்லாதவராகவும், தனிப்பட்டவராகவும் அறியப்பட்டார். ஆனால் இப்போது, இஸ்லாமாபாத்தின் அரசியல் களத்தின் மையமாக இருக்கிறார். எனவே, பீபியின் அரசியல் பிரவேசம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஓர் அறிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்தப் பேரணி, புஷ்ரா பீபியின் அரசியல் பயணத்திற்கு முதல் படியாக சிலருக்குத் தென்பட்டது. அவரது கணவர் இம்ரான் கான் சிறையில் இருக்கும்போது, அவரது கட்சியான பி.டி.ஐ.யை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் ஓர் உத்தியாக மற்றவர்களுக்குத் தோன்றியது.

குடும்ப அரசியலுக்கு நேரெதிரான அவரது கணவரின் நிலைபாட்டிற்கும் எதிரான நடவடிக்கையாக, புஷ்ரா பீபியின் செயல்பாடு பார்க்கப்படுகிறது.

இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, அவரை விடுவிக்க இஸ்லாமாபாத்திற்குச் செல்லுமாறு போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, அவரை விடுவிக்க இஸ்லாமாபாத்திற்குச் செல்லுமாறு போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கடந்த 2022இல், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் இம்ரான் கான்.

மேலும் ஆகஸ்ட் 2023 முதல் ஊழல், பயங்கரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு இம்ரான் கான் சிறையில் உள்ளார்.

இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு வந்த அன்பளிப்புகளை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஊழல் வழக்கில் ஒன்பது மாதங்கள் புஷ்ரா பீபி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அக்டோபர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பிடிஐ ஆதரவாளர்கள் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, இஸ்லாமாபாத்தில் நடத்திய "இறுதி அணிவகுப்பில்" புஷ்ரா பீபி இணைந்தார்.

இஸ்லாமாபாத்திற்கு செல்லும் வழியில் உள்ள சாலை, தடுப்புகளால் அடைக்கப்பட்டிருந்தது. ஆயுதம் ஏந்திய போலீசார், ராணுவத்தினர் உள்ளிட்ட பலத்த பாதுகாப்புப் படையினர் அந்த வழியில் இருந்தனர்.

பேரணியின் வாகனங்கள் நகரத்தை நெருங்கியதும், பீபி ஆதரவாளர்களை நோக்கிக் கை அசைத்தார்.

அந்த அணிவகுப்பு இஸ்லாமாபாத் மாவட்டத்தின் மையப் பகுதியை அடைந்தபோது, "கான் எங்களோடு வரும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம்!" என புஷ்ரா பீபி அறிவித்தார்.

இது புஷ்ரா பீபி பயணித்த லாரியின் படம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இது புஷ்ரா பீபி பயணித்த லாரியின் படம்

நாடாளுமன்றம் உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள "சிவப்பு மண்டலத்தில்" போராட்டம் நடைபெற்றது.

கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பீபி இந்த இடத்தைத் தேர்வு செய்ததாக அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இரவு நெருங்க நெருங்க, நிலைமை மேலும் பதற்றமடைந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

அங்கு ஏற்பட்ட குழப்பத்தின்போது, புஷ்ரா பீபி போராட்டத்தைக் கைவிட்டு இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியேறினார். வேறு வேறு கார்களை பயன்படுத்தி, பீபி அப்பகுதியை விட்டு வெளியேறுவது போல சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவின. ஆனால் பிபிசியால் இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

புஷ்ரா பீபி திடீரென போராட்டத்தில் இருந்து விலகியதால் அவரது ஆதரவாளர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

ஆதரவாளர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் கைது நடவடிக்கைகளை எதிர்கொண்டபோது, பீபி வெளியேறியது அவருடைய ஆதரவாளர்களிடையே அதிகமான கேள்விகளை எழுப்பியது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள்

பட மூலாதாரம், FAROOQ NAEEM/AFP via Getty Images

படக்குறிப்பு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள்

புஷ்ரா பீபி பஞ்சாப் மாநிலத்தில், சக்தி வாய்ந்த மற்றும் வளமான குடும்பத்திலிருந்து வந்தவர். 2018இல் இம்ரான் கானுடனான அவரது திருமணம், ஆர்வத்தையும் விமர்சனத்தையும் பெற்றது.

இம்ரான் கானை திருமணம் செய்வதற்கு முன், புஷ்ரா பீபிக்கு வேறொரு நபருடன் திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகியிருந்தன.

இம்ரான் கானை திருமணம் செய்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இம்ரான் கானும், பீபியும் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்றவில்லை என்று பீபியின் முன்னாள் கணவர் அவர்கள் மிது குற்றம் சாட்டினார்.

அவருடனான விவாகரத்துக்கும் இம்ரான் கானுடனான பீபியின் திருமணத்திற்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்காக இம்ரான் கான், பீபி ஆகியோர் தண்டிக்கப்பட்டு, பின்னர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இஸ்லாமாபாத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், "இது என் கணவரைப் பற்றியது மட்டுமல்ல, இது பாகிஸ்தானை பற்றியது" என்று புஷ்ரா பீபி கூறினார்.

2023 இல் நீதிமன்றத்தில் ஆஜரான போது இப்படம் எடுக்கப்பட்டது, இதில் புஷ்ரா பீபி இம்ரான் கானுடன் காணப்படுகிறார்.

பட மூலாதாரம், ARIF ALI/AFP via Getty Images

படக்குறிப்பு, 2023 இல் நீதிமன்றத்தில் ஆஜரான போது இப்படம் எடுக்கப்பட்டது, இதில் புஷ்ரா பீபி இம்ரான் கானுடன் காணப்படுகிறார்.

பீபி சூஃபியிசத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர். இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது முக்கியமான முடிவுகளை எடுக்க அவருக்கு ஆலோசனை வழங்கியவர். ஆனால், புதிதாக பிடிஐ கட்சியின் அரசியலில் அவர் பகிரங்கமாக ஈடுபடுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நவம்பர் தொடக்கத்தில், பிடிஐ ஆட்சியில் இருக்கும் கைபர் பக்துன்க்வாவின்(Khyber Pakhtunkhwa) தலைநகரான பெஷாவரில் நடந்த கட்சிக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.

நவம்பர் அணிவகுப்பை ஆதரிக்குமாறும் இல்லையென்றால் கட்சியில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் பி.டி.ஐ தலைவர்களிடம் புஷ்ரா பீபி கூறினார். பீபியின் நடவடிக்கையை, அதிகரித்து வரும் செல்வாக்கின் அடையாளமாகவும், மற்றவர்கள் அதைக் குறுக்கீடு என்றும் கருதினர்.

“புஷ்ரா பீபியின் அணுகுமுறை பிடிஐ தலைவர்களுக்கு ஒத்து வரவில்லை. ஏனெனில் பிடிஐ கட்சி, குடும்ப அரசியலை எதிர்ப்பதில் பெயர் பெற்றது. அதற்கு மாறாக பீபி பொறுப்பேற்றால், அது பிடிஐ மற்றும் இம்ரான் கானின் பிம்பத்தைப் பாதிக்கலாம்” என பத்திரிக்கையாளர் அமீர் ஜியா கூறினார்.

அசாதாரண சூழ்நிலையில் இதுவோர் அசாதாரணமான நடவடிக்கை" என்று புஷ்ரா பீபியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வாளர் இம்தியாஸ் குல் பிபிசி உருதுவிடம் கூறினார். இம்ரான் கான் இல்லாதபோது பீபியின் நடவடிக்கைகள் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

புஷ்ரா பீபி பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில், போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த முதல் பெண் அல்ல. கடந்த காலங்களில்,

அரசியல்வாதிகளாக இருந்த தங்கள் கணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டபோது, பெண்கள் பேரணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

உதாரணமாக, முன்னாள் அதிபரும் பிரதமருமான சுல்பிகார் அலி பூட்டோவின் மனைவியான நுஸ்ரத் பூட்டோ மற்றும் மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்த நவாஸ் ஷெரீஃபின் மனைவி கல்சூம் நவாஸ் இருவரும் தங்கள் கணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது முக்கிய நபர்களாக மாறினர்.

"அரசியலில் நுழைவதே தனது நோக்கம்" என்று போராட்டத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, புஷ்ரா பீபி ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.

இருப்பினும், சிலருக்கு இதுகுறித்து சந்தேகம் உள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், பீபி ஒரு "சந்தர்ப்பவாதி" என்று குற்றம் சாட்டினார், மேலும் தனக்கு அரசியலில் எதிர்காலம் இருப்பதாகவும் பீபி கருதுவதாக அவர் கூறினார்.

போராட்டமன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டமன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது

பிடிஐ கட்சிக்குள், புஷ்ரா பீபியின் அரசியல் ஈடுபாடு குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. “இம்ரான் கான் தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதால் மட்டுமே பீபி களத்தில் இறங்குகிறார்” என்று சிலர் பிபிசியிடம் கூறினார்கள். இருப்பினும், பீபியின் ஈடுபாடு கட்சியின் ஜனநாயக விழுமியங்களைக் குறைக்கலாம் என மற்றவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“பிடிஐயில் எடுக்கப்படும் இறுதி முடிவு இம்ரான் கானுடையது.

அவரது இரண்டாவது மனைவி ரெஹாம் கானை போலன்றி, அரசியலில் சேர ஆர்வமாக இருந்தவர், புஷ்ரா பீபி.

அவருக்குக் கட்சியில் அதிக செல்வாக்கும் இடமும் உள்ளது,” என்று அரசியல் ஆய்வாளர் மெஹ்மல் சர்ஃப்ராஸ் விளக்கினார்.

ஏனென்றால், இம்ரான் கான் பீபியை தனது ஆன்மீக வழிகாட்டியாகப் பார்க்கிறார், இம்ரான் கானின் வாழ்க்கையில் உள்ள மற்றவர்களிடம் இருந்து பீபியை இது வேறுபடுத்துகிறது.

“பிடிஐ ஆதரவாளர்களை இஸ்லாமாபாத்தின் மையப் பகுதிக்கு அணிவகுத்துச் செல்ல ஊக்குவித்த புஷ்ரா பீபியின் செயல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பத்திரிக்கையாளரும் ஆய்வாளருமான அமீர் ஜியா கூறுகிறார்.

அவர் வேகமாகத் தோன்றியதைப் போலவே, நவம்பர் பிற்பகுதியில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு விரைவாக மறைந்தும் விட்டார்.

விமர்சனங்கள் இருந்தபோதிலும், பல பிடிஐ ஆதரவாளர்கள் புஷ்ரா பீபியை தங்களுக்கு நெருக்கமாகக் கருதுகின்றனர்.

"அவர்தான் உண்மையிலேயே இம்ரான் கானை சிறையிலிருந்து வெளியில் எடுக்க விரும்புகிறார். நான் அவரை முழுமையாக நம்புகிறேன்" என்று இஸ்லாமாபாத்தில் வசிக்கும் அசிம் அலி கூறுகின்றார்.

முந்தைய காலத்தைப் போல், ‘புஷ்ரா பீபி இப்போது புதிரான உருவம் அல்ல’ என்பது தெளிவாகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானின் கணிக்க முடியாத அரசியல் சூழலில் பீபி இப்போது ஆழமாக இடம் பிடித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)