பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின் யார்? முழு பின்னணி

நிதின் நபின் - பாஜக புதிய தேசிய செயல் தலைவர்

பட மூலாதாரம், BJP

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகார் மாநில அமைச்சர் நிதின் நபின் பாரதிய ஜனதா தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட கடிதத்தில், "பாஜக-வின் நாடாளுமன்றக் குழு, பிகார் மாநில அரசின் அமைச்சர் நிதின் நபினை கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமித்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி, நிதின் நபின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

நிதின் நபின், பிகார் மாநில அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் கட்சிப் பொறுப்பாளராகவும் உள்ளார்.

பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின், பாஜகவின் மூத்தத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"இது, தொண்டர்களின் கடின உழைப்பிற்கு கட்சி அங்கீகாரம் அளிப்பதைக் காட்டுகிறது. அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் மீது கட்சியின் மூத்த தலைவர்கள் எப்போதும் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன். எனக்குக் கிடைத்த ஆசிர்வாதம் இது. நாம் ஒன்றிணைந்து வேலை செய்வோம்" என்று அவர் கூறினார்.

நிதின் நபினை வாழ்த்தியுள்ள பிரதமர் மோதி, தனது எக்ஸ் பக்கத்தில், அவர் கடின உழைப்பாளியாக தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

"அவர் ஓர் இளம் தலைவர் மற்றும் கடின உழைப்பாளி, நல்ல அனுபவம் பெற்றவர். பிகாரில் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக அவர் சிறப்பாக பணியாற்றுகிறார். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்" என்று பிரதமர் மோதி பாராட்டியுள்ளார்.

"சிறந்த குணத்திற்கும் களப் பணிக்கும் பெயர் பெற்றவர். அவரது ஆற்றலும் அர்ப்பணிப்பும் எதிர்வரும் காலங்களில் நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று மோதி குறிப்பிட்டுள்ளார்.

நிதின் நபின் யார்?

  • 2006-ஆம் ஆண்டில் பாட்னா மேற்கு தொகுதியில் இருந்து நிதின் நபின் முதன்முதலில் எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
  • 2010 முதல் 2025 வரை தொடர்ச்சியாக ஐந்து முறை பங்கிபூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
  • நிதின் நபின் தற்போது பிகாரின் என்.டி.ஏ அரசாங்கத்தில் சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சராக உள்ளார்.
  • தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வழங்கிய தகவல்களின்படி, 1980-ஆம் ஆண்டு மே மாதம் ஜார்க்கண்டின் ராஞ்சியில் பிறந்தவர் நிதின் நபின். அவர் தந்தையின் பெயர் நவின் கிஷோர் பிரசாத் சின்ஹா.
  • தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, நிதின் நபின் எந்த குற்ற வழக்கிலும் தண்டனை பெறவில்லை.
  • நிதின் நபின் 1996 ஆம் ஆண்டு பாட்னாவில் உள்ள செயின்ட் மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் படிப்பையும், 1998 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள சிஎஸ்கேஎம் பள்ளியில் இடைநிலைப் படிப்பையும் முடித்தார்.
நிதின் நபின் - பாஜக புதிய தேசிய செயல் தலைவர்

பட மூலாதாரம், @NitinNabin

நிதின் நபின் பின்னணி

நிதின் நபின் தற்போது பாட்னாவின் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், பிகார் மாநில அமைச்சராகவும் உள்ளார்.

நிதின் நபின் பற்றிக் கூறும் மூத்த பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண், "நிதின் நபின் தனது அரசியல் வாழ்க்கையை 2006 இல் தொடங்கினார். அவரது தந்தை நவீன் கிஷோர் சின்ஹா, ஆரம்ப காலத்தில் பல முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, நிதின் நபின் அரசியலில் நிதின் நபின் நுழைந்தார்."

நிதின் நபின் 2016 முதல் 2019 வரை பாஜக யுவ மோர்ச்சாவின் பிகார் மாநிலத் தலைவராக இருந்தார். அவர் முதன்முதலில் 2021-இல் நிதிஷ் குமாரின் அரசாங்கத்தில் அமைச்சரானார்.

"நிதின் நபின் மற்றும் சஞ்சீவ் சௌராசியா ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களால் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிதிஷ் குமார் கோபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவு நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்தார்" என்ற நச்சிகேத நாராயண் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்.

"தேசிய அரசியலில் நரேந்திர மோதி பற்றி விவாதமே எழாத காலகட்டத்தில் இருந்தே, நிதின் நபின் மோதியின் பக்கம் இருந்தார் என்று கூறலாம்."

2010ஆம் ஆண்டு அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி, பாஜகவின் தேசிய செயற்குழுவில் கலந்து கொள்ள பிகாரின் தலைநகரான பாட்னாவிற்கு வந்திருந்த போது நடந்த சம்பவம் அது. அப்போது, ​​பிகார் முதல்வர் நிதிஷ் குமார், செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றைப் பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

வெள்ளத்தின் போது குஜராத் அரசு, பிகாருக்கு எவ்வாறு உதவியது என்பதை விவரித்த அந்த விளம்பரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோதியும் நிதிஷ் குமாரும் கைகோர்த்து இருப்பது போல் காட்டப்பட்டிருந்தது. இதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிதிஷ்குமார், இந்த விளம்பரம் தனது அனுமதியின்றி வெளியிடப்பட்டதாகக் கூறியிருந்தார்.

நிதின் நபின் - பாஜக புதிய தேசிய செயல் தலைவர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தந்தை புகைப்படத்தின் முன் நிதின் நபின்

அந்த விளம்பரத்தால் கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தலைவர்களுடனான இரவு விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார். அது குறித்து அப்போது நிறைய விவாதங்கள் நடந்தன.

"நிதின் நபின் பாஜகவின் செயல் தலைவராக ஏன் நியமிக்கப்பட்டார் என்பதை உடனடியாக உறுதியாகக் கூறுவது எளிதல்ல. ஆனால் பாஜகவின் உயர்மட்டத் தலைமை அவரை நம்புகிறது என்பது உறுதியாகிறது" என்று நச்சிகேத நாராயண் கூறுகிறார்.

புதிய தேசியத் தலைவரை முடிவு செய்ய முடியாமல் பாஜக நீண்ட காலமாக தாமதித்து வருகிறது. இந்தப் பிரச்னை அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், பாஜகவால் தனது தேசியத் தலைவரைக் கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்போது, ​​இந்த விவகாரம் தொடர்பாக அகிலேஷ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தொண்டர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சி, குடும்பக் கட்சி அல்ல என்றும், அதனால்தான் தாமதம் என்றும் கூறியிருந்தார்.

ஜே.பி. நட்டாவின் பதவிக் காலத்தை பாஜக நீண்ட காலமாக நீட்டித்து வருவது குறித்து அரசியல் வட்டாரத்தில் பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் கூறுகையில், "இதுவொரு ஆச்சரியமான முடிவு. ஜே.பி. நட்டாவுக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதற்காக, பாஜக செயல் தலைவராக ஒருவரை நியமித்திருப்பது போல் தெரிகிறது. ஆனால் இந்த நடவடிக்கை மேலும் பல கேள்விகளை எழுப்பும்."

"பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா என்று மக்கள் இப்போது கேட்கலாம். பாஜகவின் உயர்மட்டத் தலைமையிடம் ஒருமித்த கருத்து இல்லையா, அதனால்தான் முழுநேரத் தலைவரை நியமிப்பதற்குப் பதிலாக, தற்போது தற்காலிகத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளாரா?" என்ற கேள்விகள் எழும் என அவர் கூறுகிறார்.

"பாஜக போன்ற பெரிய கட்சியின் தலைவர் பதவியை எந்தத் தலைவர் ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு தேசிய அளவிலான தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும்" என்று ரஷீத் கித்வாய் சொல்கிறார்.

நிதின் நபின் எத்தனை நாட்கள் இந்தப் பதவியில் நீடிப்பார் என்பது தற்போது முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், கட்சியின் உயர்மட்டத் தலைமை, கட்சியின் பொறுப்பை, பணிகளை எளிதாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபர் ஒருவரிடம் ஒப்படைப்பது இயல்பானது.

ஆனால் பாஜகவின் இந்த முடிவு அரசியல் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் புதிய கேள்விகளை எழுப்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நிதின் நபின் நிரந்தரத் தலைவர் ஆவாரா?

பாஜகவின் கட்சி விதிகளில் செயல் தலைவர் பதவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிதின் நபின் தலைவர் பதவிக்கான பொறுப்புகளை வகிப்பார் என்று நம்பப்படுகிறது.

அவர் நிரந்தரத் தலைவராக நியமிக்கப்பட முடியுமா? என்று மூத்த பத்திரிகையாளர் பிரிஜேஷ் சுக்லாவிடம் கேட்ட போது, "நிதின் நபின் தற்போதைக்கு செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பாணி மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்கு பாஜகவுக்கு சிறிது அவகாசம் கிடைக்கும். ஜனவரி மாத தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் நிரந்தரத் தலைவராக நியமிக்கப்படலாம்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு