பிகார்: இணையத்தில் வைரலான வயலுக்கு நடுவே கட்டப்பட்ட பாலம்- உண்மையான பின்னணி என்ன?

பிகாரில் இருந்து வைரலான அதிசய பாலங்களில் இதுவும் ஒன்று.
படக்குறிப்பு, பிகாரில் இருந்து வைரலான அதிசய பாலங்களில் இதுவும் ஒன்று.
    • எழுதியவர், சித்து திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகார் மாநிலம் பல்வேறு காரணங்களுக்காக தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது.

சமீப காலமாக பிகாரில் ’ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழும் பாலங்கள்', நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இத்தகைய பாலங்களின் வீடியோக்களும் பெருமளவில் வைரலானது.

இத்தனைக்கும் மத்தியில் பிகாரில் சில பாலங்கள் 'அதிசயங்களாக' பார்க்கப்படுகின்றன. பிகாரில், அராரியா மாவட்டத்தில் உள்ள ஒரு பாலம் சமீபத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதுபோல கட்டப்பட்ட, இணையத்தில் வைரலான வேறு சில பாலங்களும், அவற்றைப் பற்றிய உண்மைக்கதைகளும் பிபிசியின் கவனத்திற்கு வந்தது.

பர்மானந்த்பூர் கிராமமானது, பிகாரின் தலைநகரான பாட்னாவிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அராரியாவின் ராணிகஞ்ச் வட்டாரத்தில் உள்ளது. மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பகுதியிலிருந்து வயல்களை நோக்கிச் செல்லும்போது, வயலுக்கு நடுவே பாலம் ஒன்று இருப்பதைக் காணலாம்.

சில நாட்களுக்கு முன், 'வயலுக்கு நடுவில் கட்டப்பட்ட அதிசய பாலம்' என்று சமூக வலைதளங்களில் இது மிகவும் பிரபலமானது.

பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த பாலம் பர்மானந்த்பூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று துலார்தய் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
படக்குறிப்பு, இந்த பாலம் பர்மானந்த்பூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று துலார்தய் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

நீர் நிரம்பிய வயல்களைக் கடந்து பாலத்தின் அருகே சென்றால் அதன் அடியில் ஆறு ஓடுவதைக் காணலாம்.

பர்மானந்த்பூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று துலார்தய் நதியின் மீது இந்த பாலம் கட்டப்பட்டது.

"நாங்கள் நான்கு ஆண்டுகளாக அரசிடம் இரண்டு பாலங்களை கட்டித்தருமாறு கோரி வந்தோம். இந்த ஆண்டு ஜனவரியில் அரசு ஒரு பாலத்தைக் கட்டியது. ஆனால் பாலத்தின் மேல் ஏற சாலை அமைக்கவில்லை. சாலை இல்லாமல் ஒருவர் பாலத்தில் எப்படி ஏற முடியும்?” என்று கிராமத்து இளைஞர் சஞ்சய் குமார் மண்டல் பிபிசியிடம் கூறினார்.

வயல்களுக்கு நடுவே செல்லும் ஆற்றின் இரண்டு ஓடைகள்.
படக்குறிப்பு, வயல்களுக்கு நடுவே செல்லும் ஆற்றின் இரண்டு ஓடைகள்.

வைரலாக பரவிய பாலத்தின் கதை என்ன?

இந்த பாலம் கட்டப்பட்ட பகுதி முழுவதும் பர்மானந்த்பூர் கிராம மக்களின் விவசாய நிலம். இந்த வயல்களுக்கு நடுவே துலார்தய் என்ற ஆறு ஓடுகிறது.

கிராம மக்கள் போய் வருவதிலும், டிராக்டர் போன்ற வாகனங்களை ஓட்டிச்செல்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டனர். எனவே பாலம் கட்ட கோரிக்கை எழுந்தது.

முதலமைச்சர் ஊரக சாலைத் திட்டத்தின் கீழ் பர்மானந்த்பூரின் லட்சுமி ஸ்தானில் இருந்து குபாரி எல்லை வரை 3.20 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் திட்டம் 2023ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பாலம், சாலையின் ஒரு பகுதியாகும்.

“இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டது. அது கட்டப்பட்டபோது கிராம மக்கள் ஒத்துழைத்தனர். ஆனால் பாலத்திற்கு மேல் செல்லும் பாதையை அமைக்க ஜேசிபி மூலம் மண் நிரப்பத் தொடங்கியபோது அது தனியார் நிலம் எனக் கூறி சமூக விரோதிகள் சிலர் பணிக்கு இடையூறு விளைவித்தனர்,” என்று ஊரகப் பணிகள் துறையின் ஃபோர்ப்ஸ்கஞ்ச் பகுதியின் நிர்வாகப் பொறியாளர் பிரவீன் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாலத்திற்கான திட்டமிடப்பட்ட அணுகு சாலையில் கிராமவாசி உதய்காந்த் ஜாவின் நிலம் வருகிறது.
படக்குறிப்பு, இந்த பாலத்திற்கு செல்ல திட்டமிடப்பட்ட சாலையில் கிராமவாசி உதய்காந்த் ஜாவின் நிலம் வருகிறது.

கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?

பர்மானந்த்பூர் கிராம மக்கள் இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள். முதலாவதாக, பாலத்தின் கட்டுமானம் 2024 ஜனவரியில் தொடங்கப்பட்டு இந்த மாதத்தில் முடிக்கப்பட்டது.

இரண்டாவதாக, பாலத்திற்கு மேல் செல்லும் சாலையை அமைக்க கிராம மக்களின் நிலத்தை தருமாறு அரசு அணுகவில்லை என்றும் கூறினர்.

பாலத்தின் கட்டமைப்பும், பாலத்திற்கு மேல் செல்லும் சாலையின் ஒருபுறமும் அரசு நிலத்தில் உள்ளது. ஆனால் அதன் மறுபுறம் அர்ஜுன் மண்டல் மற்றும் உதய்காந்த் ஜா என்ற இரண்டு கிராமவாசிகளின் நிலத்தில் உள்ளது.

இந்த பாலத்திற்கு செல்லும் சாலையில் உதய்காந்த் ஜாவின், சுமார் 871.12 சதுரஅடி நிலம் உள்ளது.

“2024 ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நிலம் கேட்டு எந்த அதிகாரியும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. பாலம் பற்றிய செய்தி வைரலான பிறகு வட்டார அதிகாரி என்னை அழைத்தார். அரசு இழப்பீடு கொடுத்தால் நன்றாக இருக்கும். இழப்பீடு வழங்காவிட்டாலும் நான் நிலத்தை தருவேன்,” என்று உதய்காந்த் ஜா தெரிவித்தார்.

ஆனால் ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் போது இந்த விஷயங்கள் ஆராயப்படவில்லையா? என்பதுதான்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிர்வாக பொறியாளர் பிரவீன்குமார், "இது மிகச்சிறிய விஷயம். திட்டங்களை செயல்படுத்தும்போது சிலநேரங்களில் இவ்வாறு நிகழ்கிறது, இந்த விஷயங்களுக்கு பின்னர் தீர்வு காணப்படும்,” என்றார்.

சின்ன மழைக்கே இந்தப்பாலம் இடிந்துவிடும் என்கிறார் மற்றொரு கிராமவாசி கல்பனா தேவி.
படக்குறிப்பு, சின்ன மழைக்கே இந்தப்பாலம் இடிந்துவிடும் என்கிறார் மற்றொரு கிராமவாசி கல்பனா தேவி.

'இங்கு மனித உயிருக்கு மதிப்பு இருக்கிறதா?'

பாலத்தின் படம் வைரலானதையடுத்து அரசு நிலத்திலுள்ள பாலத்திற்கு செல்லும் சாலையில் மண் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.

அதாவது இப்போது கிராம மக்கள் இந்த மண்ணின் உதவியுடன் ஒரு பக்கத்திலிருந்து பாலத்தில் ஏறுகிறார்கள். ஆனால் மறுபுறத்தில் கீழே இறங்க அவர்கள் பாலத்தில் இருந்து குதிக்க வேண்டும்.

கனமான சாமான்களை சுமந்து செல்லும் கிராம மக்கள் துலார்தய் ஆற்றை கடந்து செல்கின்றனர். இதில் தற்போது அவர்களின் இடுப்புக்கு மேல் தண்ணீர் உள்ளது. கனமழை பெய்தால் இந்த ஆற்றை கடப்பதும் கடினமாக இருக்கும்.

கல்பனா தேவி தனது எருமை மாடுகளை மேய்ப்பதற்காக பாலத்தின் அருகே வந்துள்ளார். “சின்ன மழைக்கே இந்தப் பாலம் இடிந்துவிடும். அரசு பாலம் கட்டியது, ஆனால் சாலை வசதியை செய்துதரவில்லை. தண்ணீரில் நடந்து நடந்து கால்கள் புண்ணாகிவிட்டன,” என்று அவர் கூறினார்.

பாலத்தில் ஏறுவதற்கு மக்கள் சுவர் ஏறுவது போல மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே இப்படித்தான் ஏறுகிறார்கள்.

“இங்குள்ளவர்களின் உயிருக்கு மதிப்பில்லை. இங்கு பாலம் கட்டப்பட்டதால் இந்த இடம் ஆபத்தானதாக மாறியுள்ளது. சாலை அமைக்கவில்லையென்றால் மக்கள் இப்படியே செல்ல நேரிடும். நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். அரசு வெறுமனே பாலத்தின் வெளிகட்டமைப்பை மட்டும் எழுப்பி அப்படியே விட்டுவிட்டது,” என்று 70 வயதான ஜோகிந்தர் மண்டல் தெரிவித்தார்.

அராரியா மாவட்டத்தில் இது மட்டும் அல்ல, இதுபோன்ற இன்னும் பல பாலங்கள் உள்ளன.
படக்குறிப்பு, அராரியா மாவட்டத்தில் இது மட்டும் அல்ல, இதுபோன்ற இன்னும் பல பாலங்கள் உள்ளன.

அராரியாவில் இருக்கும் இதுபோன்ற பல பாலங்கள்

அராரியா மாவட்டத்தில் இதுபோல பல பாலங்கள் உள்ளன. பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பாலத்தில் ஏற சாலைகள் அமைக்கப்படவில்லை.

மாவட்டத்தின் பலாசி ப்ளாக்கில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரம்மகும்பா பஞ்சாயத்தில் இதேபோன்ற ஒரு பாலம் உள்ளது.

பிரம்மகும்பா பஞ்சாயத்தின் பெல்பரா வார்டு எண் 4 இல் பக்ரா என்ற நதியின் குறுக்கே அத்தகைய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி 2021 ஜூலையில் தொடங்கி 2022 ஜூலையில் நிறைவடைந்தது. ஆனால் இந்த பாலத்தின் மேல் செல்லவும் சாலை இல்லை. அதாவது பாலத்தில் ஏற வழி இல்லை.

இந்த பாலத்தை சுற்றி சேறு தேங்கி கிடப்பதால் மக்கள் பாலத்தின் மீது தாவி ஏறுகின்றனர். குதித்து இறங்குகின்றனர்.

சைக்கிளில் செல்பவர்கள், தங்கள் கைகளில் சைக்கிளை சுமந்துகொண்டு பாலத்தின் மீது ஏறுகிறார்கள்.

''ஏறி இறங்குவதில் சிரமம் அதிகம். ரோடு போட்டிருந்தால் பிரச்னையே இருந்திருக்காது. பாலங்கள், சாலைகள் அமைக்க அரசு பணம் தருகிறது. ஆனால் பொதுமக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை,” என்று பாலத்தின் வழியே நடந்து கொண்டிருந்த ஷோபாதேவி கூறினார்.

“பலரின் வீட்டில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் உள்ளன. ஆனால் பாலத்தின் மீது அவற்றை ஓட்டிச்செல்ல முடியாது,” என்று முகமது குட்டு தெரிவித்தார்.

இதேபோன்ற ஒரு பாலம் அராரியாவின் குர்சாகாண்டா ப்ளாக்கில் குவாரி பஜார் அருகே உள்ளது.

இந்த பாலம் மஸ்னா என்ற ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் உயரம் அதிகமாக உள்ளதால் மக்கள் அதில் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

“புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் யாரும் ஏற முடியாது. மக்கள் கீழே ஆற்றைக் கடந்துதான் போய் வருகிறார்கள்,” என்று பாலம் குறித்து முகமது சஹாபுதீன் கூறினார்.

அணுகு சாலைகள் கட்டப்படாத எல்லா பாலங்களின் பட்டியலும் கோரப்பட்டுள்ளது என்கிறார் அராரியா டிஎம் இனாயத் கான்.
படக்குறிப்பு, அணுகு சாலைகள் கட்டப்படாத எல்லா பாலங்களின் பட்டியலும் கோரப்பட்டுள்ளது என்கிறார் அராரியா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான்.

'அணுகு சாலைகள் இல்லாத பாலங்களின் பட்டியல் கோரப்பட்டுள்ளது'

இந்த பாலம் பஹ்சி, லாலோகர், குவாரி, குர்சாகாண்டாவை இணைக்கிறது.

இந்த பாலம் 2017 ஆம் ஆண்டு முதல் இப்படியே இருப்பதாக லலோகர் பஞ்சாயத்து தலைவர் மக்தூப் ஆலம் கூறுகிறார்.

“இந்த பாலம் பிகார் அரசால் கட்டப்பட்டது. நாங்கள் நேபாளத்திற்கு அருகில் உள்ளோம். பின்னர் இந்த சாலை 'எல்லை சாலையாக' மாற்றப்பட்டது. நாங்கள் எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட அதிகாரிகள் என்று அனைவரிடமும் பேசிவிட்டோம். பலத்த மழை பெய்தால் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும். ஆற்றைக் கடப்பது கடினமாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்துப்பேசிய அராரியா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான், “அராரியா மற்றும் ஃபோர்ப்ஸ்கஞ்ச் பிரிவுகளின் நிர்வாகப் பொறியாளர்களிடம், பாலத்திற்கு செல்ல சாலைகள் அமைக்கப்படாத பாலங்களின் பட்டியலை கேட்டுள்ளோம். இந்த பட்டியல் கிடைத்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

'கிராமப்புறங்களில் எல்லா வானிலைகளையும் தாக்குப்பிடிக்கக்கூடிய சாலை வசதிகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் பிகார் பின்தங்கிய நிலையில் உள்ளது' என்று பிகார் அரசின் ஊரகப் பணித்துறையின் இணையதளம் தெரிவிக்கிறது.

2005-06 முதல் 2023 செப்டம்பர் வரை ஊரகப் பணித்துறை 1910 பாலங்களைக் கட்டியுள்ளது என்று பிகார் மாநிலத்தின் 2023-24 பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிகார் மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் கிராமப்புற மக்களுக்காகக் கட்டப்பட்ட இந்தப் பாலங்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.

பிகாரில் கங்கை ஆற்றில் கட்டப்பட்டு வந்த அகுவானி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த புகைப்படம் இந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி எடுக்கப்பட்டது.(கோப்பு படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரில் கங்கை ஆற்றில் கட்டப்பட்டு வந்த அகுவானி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த புகைப்படம் இந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி எடுக்கப்பட்டது. (கோப்பு படம்)

பாலம் இடிந்து விழுந்த சம்பவங்கள்

சமீபகாலமாக பிகாரில் பல பாலங்கள் இடிந்து விழுந்ததால் அரசு கண்டனத்திற்கு உள்ளானது. பிகாரில் 2024 ஜூன் 18 முதல் ஜூலை 6 வரை 13 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதில் கண்டகி ஆற்றில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்தன. அதன் பிறகு பிகார் அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. பொறியாளர்களின் அலட்சியமே இவற்றுக்கு காரணம் என்று அதில் கூறப்பட்டது.

சிவான், ஸாரண் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பாயும் கண்டகி நதியில் (சாடி நதி என்றும் அழைக்கப்படுகிறது) ’நதிகளை இணைக்கும் திட்டத்தின்’ கீழ் வண்டல் மண் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட இருந்தது.

முன்னதாக அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆற்றில் இடிந்து விழுந்த பாலம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

பிகார் இன்ஜினியரிங் சர்வீசஸ் அசோசியேஷன் இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. பாலத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பொருட்கள், சுற்றுப்புறம் போன்ற அம்சங்களை இந்த விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது.

"பக்ரா ஆற்றில் பாலம் இடிந்து விழுந்ததற்கு இரண்டு காரணங்கள் தெரியவந்துள்ளன. முதலாவது, பாலத்தின் அடித்தளத்திற்கு அருகில் மணல் எடுக்கப்பட்டது. இரண்டாவதாக பால வடிவமைப்பாளர், ஆற்றின் நீரோட்ட போக்கு மாறுவதை வடிவமைப்பின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை,” என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் ராகேஷ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

"முதலாவதாக அரசின் பாலம் கட்டும் கழகம் உள்ளது எனும்போது, ஊரகப் பணிகள் துறை உட்பட பாலம் கட்டும் துறைகள், கழகத்தின் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, ஆலோசனை சேவைகளை அரசு வெளியிலிருந்து இருந்து பெறக்கூடாது. அதற்கென அரசு துறையின் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,” என்று ராகேஷ் குமார் தெரிவித்தார்.

பிகாரில் பாலம் கட்டும் பொறுப்பு, சாலை கட்டுமானத் துறை, ஊரக பணித் துறை, பஞ்சாயத்து துறை உள்ளிட்ட பல துறைகளிடம் உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)