You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடி: குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்கப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு, இருவர் கைது - முழு பின்னணி
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் கடத்தப்பட்ட நான்கு குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளைக் கடத்தி குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு விற்ற இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 9ஆம் தேதி தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை, 2022ஆம் ஆண்டு ஜனவரியில் திருச்செந்தூர் கோவிலில் கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குலசை கோவிலில் வைத்துக் கடத்தப்பட்ட மதுரையைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை மற்றும் புகார் அளிக்கப்படாத ஒரு குழந்தை உள்பட 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
தென்காசி தம்பதிகளுக்கு விற்கப்பட்ட குழந்தைகள்
தூத்துக்குடியில் அந்தோணியார் கோவில் அருகில் சாலையோரமாக நான்கு மாத பெண் குழந்தையுடன் வேலூரைச் சேர்ந்த பெண் வசித்து வந்துள்ளார். இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது நான்கு மாத குழந்தை மர்ம நபர்களால் மார்ச் 9ஆம் தேதி கடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், பத்து தனிப்படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இந்தக் குழந்தையை போலீசார் கண்டுபிடித்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட, ஆலங்குளத்தைச் சேர்ந்த சாமி என்ற கருப்பசாமி (47) மற்றும் ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற ராஜா (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களைக் கைது செய்தபோது, இந்த மாதம் கடத்தப்பட்ட குழந்தை மட்டுமல்லாமல் மேலும் மூன்று குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தென் மண்டல ஐஜி கண்ணன், “நாங்கள் தேடிப் போனது ஒரு குழந்தை. ஆனால் எங்களுக்கு நான்கு குழந்தைகள் கிடைத்தன.
இதில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே காணவில்லை என்று புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோர்களை அடையாளம் கண்டுவிட்டோம். மற்றொரு குழந்தையின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை. மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளோம்,” என்றார்.
குழந்தைகள் கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்-ல் வைரலான வதந்தியைப் பரப்பும் வீடியோக்கள் வெளியான நிலையில், நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் குழந்தைகள் கடத்தல் அதிகரித்துள்ளதாகக் கூற முடியாது என்கிறார் தென் மண்டல ஐஜி கண்ணன்.
“இந்தக் குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்து கடத்தப்படவில்லை. மூன்று வெவ்வேறு ஆண்டுகளில் கடத்தப்பட்டன. இது வழக்கத்துக்கு மாறான சம்பவம் கிடையாது. எனவே இவை ஒருங்கிணைந்த குழந்தைக் கடத்தல் கும்பலால் செய்யப்பட்டது என்றோ, அப்படி ஒரு கும்பல் தூத்துக்குடியில் தீவிரமாகச் செயல்படுகிறதோ என்று கூற முடியாது,” என்றார்.
'கடத்தியவர்கள் முதல்முறை குற்றவாளிகள்'
இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் முதல் முறை குற்றவாளிகள் என்றும் தென் மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார். “அவர்கள் வசித்து வந்த பகுதிகளுக்கு அருகிலிருந்த குழந்தைகளைத்தான் குறி வைத்துள்ளனர். கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள், கோவில், தெருவோரத்தில் இருப்பவர்களின் குழந்தைகள், ஊர் ஊராகச் செல்பவர்களின் குழந்தைகளைக் கடத்துகின்றனர். இவர்களை குழந்தைகள் இல்லாத தம்பதிகளிடம் விற்றுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் மலைப்பகுதியில் இருப்பதாகவும், அவர்களால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றும் தம்பதிகளிடம் கூறி, பணம் வாங்கியுள்ளனர்,” என்றார்.
குழந்தைக் கடத்தல்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார், “இந்தக் குழந்தைகள் தென்காசி மாவட்டத்தில் வெவ்வேறு குடும்பங்களில் இருந்து மீட்கப்பட்டனர். குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கு குழந்தைகள் கடத்தப்பட்டது தெரியாது. பணத்தைக் கொடுத்து வாங்கியுள்ளனர்,” என்றார்.
சில குழந்தைகள் ஒராண்டுக்கும் மேலாக தம்பதிகளுடன் இருந்ததால் குழந்தைகளை அவர்களிடமிருந்து மீட்டபோது, அவர்கள் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். குழந்தைகள் தம்பதிகளால் நன்றாகப் பராமரிக்கப்பட்டதாகவும், குழந்தைகள் மிகவும் சிறியவர்கள் என்பதால் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை என்றும் தெரிவித்தார்.
“அடையாளம் காண முடியாத மற்றொரு குழந்தைக்கு ஒரு வயது. அந்தக் குழந்தை தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகில் கடத்தப்பட்டது. எனவே அந்க் குழந்தையின் பெற்றோர்கள் வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது,” என்று டிஐஜி பிரவேஸ்குமார் கூறினார்.
மீட்கப்பட்ட நான்கு குழந்தைகளும் குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் இருக்கின்றன. பெற்றோர்களிடம் உரிய விசாரணை நடத்திய பிறகு குழந்தைகள் ஒப்படைக்கப்படுவர்.
வாட்ஸ் ஆப்-ல் பரவும் வதந்திகள்
கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தைக் கடத்தல் குறித்த வதந்திகள் வாட்ஸ் ஆப் செயலியில் பரவி வந்தன. குழந்தைகள் ஒரு கும்பலால் கடத்தப்படுவதாகவும், அவர்களின் உறுப்புகள் வெட்டப்படுவதாகவும் பயங்கரமான செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அவை உண்மையல்ல என்று சென்னை மாநகர காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த வதந்தியை நம்பி, சென்னை பம்மல் பகுதியில் திருநங்கை ஒருவரைக் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனத் தவறாக நினைத்து அப்பகுதியினர் அடித்துத் துன்புறுத்தினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் பிறகு கைது செய்யப்பட்டனர்.
இதே போன்ற மற்றொரு சம்பவம் சென்னை திருவொற்றியூரில் நிகழ்ந்தது. தூய்மைப் பணியாளரை குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகித்த ஊர் மக்கள் அவரைத் தாக்கினர். விம்கோ நகரில் வட மாநில தொழிலாளர் ஒருவருக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சமீப காலமாக சில நபர்கள் குழந்தைகளைக் கடத்த முயல்வது போன்ற பொய்யான காணொளிகள் சமூக ஊடகங்களில் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற போலியான செய்திகளைக் கேட்டு துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை. குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகக் கூறுவது சரியல்ல,” என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை மட்டுமல்லாமல் இந்த வதந்திகள் மதுரை, திண்டுக்கல் என தென் மாவட்டங்களிலும் பரவத் தொடங்கின. வட மாநில கும்பல் ஒன்று குழந்தைக் கடத்தலில் ஈடுப்பட்டு வருவதாக காணொளிகள் பகிரப்பட்டன. அப்போது திண்டுக்கல் வேடசந்தூர் ஒரு நபர் வட மாநிலத்தவர் என்று தெரிய வந்ததும் ஊர் மக்கள் அவரைத் தாக்கியுள்ளனர். பின், போலீசார் விசாரணையில் அவர் குழந்தைக் கடத்தலில் ஈடுபடவில்லை, ஆனால் மன நலன் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
இந்த வதந்திகள் வேண்டுமென்றே வட மாநிலத்தவருக்கு எதிராக சில குழுக்களால் பரப்பப்படுகிறது என ஒப்புக்கொள்ளும் குழந்தைகள் நல செயற்பாட்டாளர், தேவநேயன், ஆள் கடத்தலுக்கு எதிராக வலுவான சட்டங்கள் அவசியம் என்கிறார்.
“ஒருவர் 24 மணிநேரத்துக்கு மேல் காணவில்லை என்றால் அந்த வழக்கை ‘காணாமல் போனவர்’ என்பதிலிருந்து ‘கடத்தல்’ வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றமும் பல முறை கூறியுள்ளன. ஆனால் பல நேரங்களில் அப்படிச் செய்யப்படுவதில்லை. காணாமல் போன வழக்கு என்றால், அக்கம் பக்கத்தில் தேடச் சொல்லி அலட்சியமாக கையாளக்கூடும்.”
மேலும், பாலியல் குற்றங்களுக்காக நடைபெறும் கடத்தல்களுக்கு எதிராகவே சட்டம் உள்ளது என்றும், ஆள் கடத்தலுக்கு எதிரான பொதுவான சட்ட வரைவுக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைக்காததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
குழந்தைக் கடத்தல் பற்றிய செய்திகள் அல்லது தகவல்கள் கிடைத்தால் சைல்ட் ஹெல்ப் லைன் எனும் 1098 கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போலீசாருக்கு தகவல் சொல்ல 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)