திருப்பூர்: மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது

    • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், குழந்தைகளின் உடல்நலனைப் போல் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

காவல்துறை கூறுவது என்ன?

மன முதிர்ச்சியற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பிபிசி தமிழிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, வெள்ளகோவிலில் கோவில் ஒன்றில் கடந்த 9-ம் தேதி இரவு கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் கச்சேரியைக் காண அந்த 17 வயது சிறுமியை அவரின் தாய் அழைத்து வந்துள்ளார். அச்சிறுமிக்கு மனமுதிர்ச்சி சற்று குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறுமியும் நடனமாடிக் கொண்டிருக்க, ’வீட்டுக்குச் செல்லலாம் வா’ என தாய் அழைத்தபோது அவர் உடன் செல்ல மறுத்துள்ளார். நடனத்தின் மீதான ஈடுபாட்டில் பக்கத்து வீட்டுத் தோழிகளுடன் தான் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறியதால் தாயும் அவரை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

கச்சேரியின்போது மேடைக்குக் கீழ் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அச்சிறுமியை நோட்டமிட்டு, வீடியோவும் எடுத்துள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள் முடிந்து வெகுநேரமாகியும் எல்லோரும் வீடு திரும்பிய பின்பும் தனது மகளைக் காணவில்லை என்பதால், காவல்துறையிலும் இதுகுறித்து முறையிட்டார். முழு மனமுதிர்ச்சி இல்லாத பெண் என்பதால், உடனடியாகக் கண்டுபிடித்துத் தரும்படி போலீசாரிடம் கோரினார்.

இதையடுத்து போலீசாரும் ஒருபுறம் சிறுமியைத் தேடினர். அதிகாலை 3 மணியளவில் யாரோ ஒருவர் அழைத்து வந்தததாக வீடு திரும்பிய சிறுமி மிகவும் களைத்துப் போய் சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார்.

தனக்கு நேரிட்ட கொடுமையை சொல்லக் கூட தெரியாத சிறுமி

சிறுமியின் நிலை கண்டு சந்தேகித்த தாயும், என்ன ஆனது என சிறுமியிடம் கேட்க 6 பேர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி கூறி இருக்கிறார். தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறோம் என்று கூட சொல்லத் தெரியாத அந்தச் சிறுமியின் பேச்சைக்கேட்டு தாயும் அதிர்ந்து போனார். இதுதொடர்பாக, அச்சிறுமியின் தாய் வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார், சிசிடிவி காட்சி உதவியுடன் சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றவர்களை அடையாளம் கண்டு இருவரைப் பிடித்தனர்.

இது போக்சோ வழக்கு என்பதால், வெள்ளகோவில் காவலர்களின் வழிகாட்டுதலின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தார் சிறுமியின் தாய். இதையடுத்து போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

நடனத்தை யூடியூப்பில் போடுவதாகக் கூறி அழைப்பு

விசாரணையில் பின்வரும் விவரங்கள் தெரியவந்தததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா கலைநிகழ்ச்சியில் சிறுமியின் நடனத்தைப் பார்த்த இளைஞர்களில் பிரபாகர், மணிகண்டன் ஆகிய இருவர் சிறுமியை அருகே வருமாறு அழைத்து, “நீ, நன்றாக நடனமாடுகிறாய். உன்னை மட்டும் தனியே நடனம் ஆட வைத்து, அதை யூடியூப்பில் பதிவேற்றினால், நீ விரைவில் பிரபலமாகிவிடுவாய்” எனக் கூறியிருக்கின்றனர். பேசிய இரு இளைஞர்களில் ஒருவர் சிறுமிக்கு ஏற்கனவே பரிச்சயமான டீ மாஸ்டர் என்பதால், சிறுமியும் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர்

காட்டுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமியை வீட்டில் விட அழைத்துச் சென்றபோது, அவ்வழியே வந்த அதிமுக நிர்வாகியான கதிர்வேல்சாமியின் மகனும் அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகியுமான தினேஷ் அவர்களைத் தடுத்து நிறுத்தினாராம். நடந்ததை அறிந்த தினேஷும், சிறுமியைத் தங்களிடம் விட்டுவிட்டு செல்லுமாறு கூறி சிறுமியை அழைத்துக் கொண்டனர்.

பின், தினேஷ் சிறுமியைத் தனது காரில் வைத்து கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவரது நண்பர்களும் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவ்வழியே காரில் வந்த மேலும் 2 இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அவரை வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்ற நிலையில்தான் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிக்கியது தெரியவந்தது.

தனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்றுகூட அறிந்துகொள்ளும் பக்குவம் அந்த சிறுமிக்கு இருந்திருக்காது என்றும், சிறுமியின் மனமுதிர்ச்சி ஒரு 9 வயது சிறுமியை ஒத்ததாகத்தான் இருக்கும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது

இந்த விசாரணைக்குப் பின், 27 முதல் 32 வயதுக்குள் உள்ள பிரபாகர், மணிகண்டன், தமிழ்செல்வன், தினேஷ், பாலசுப்ரமணி, நவீன்குமார், நந்தகுமார், மோகன்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களின் மீது ஐபிசி பிரிவு 366, பிரிவு 506 (1), போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே திருமணமானவர்கள் ஆவர். அதில் தினேஷ் ஆட்டோ ஃபினான்ஸ் செய்துவருவதும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட காரில் ’ஜெ’ என அதிமுக வண்ணத்தில் நம்பர் பிளேட்டில் எழுதப்பட்டிருந்தது.

எளிதில் இலக்கான மனமுதிர்ச்சியற்ற சிறுமி

சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் மூலனூரில் கொலையாகி ஓராண்டுக்குப் பின்பே அவரது சடலம் மீட்கப்பட்டது. சிறுமி ஒற்றைத் தாயின் அரவணைப்பில் வளரும் மனமுதிர்ச்சியற்ற சிறுமி என்பதும், வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லாததையும், சிறுமிக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார் அந்த டீ மாஸ்டர். சிறுமியின் வாழ்க்கைச் சூழலை சாதகமாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

டிப்ளமோ படிக்கும் சிறுமிக்கு எப்படி மனநலப் பிரச்னை?

இந்தச் சிறுமி பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வந்தாலும், அவர் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்ததும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்தை அணுகியது பிபிசி தமிழ். இந்தச் சிறுமிக்கு இருப்பது அன்டக்னைஸ்ட் இன்டலெக்சுவல் டிசெபிலிடி (Undiagnosed intellectual disability) என்ற கண்டறியப்படாத அறிவுசார் திறன் குறைபாடு என்றார். இப்படிப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பே படித்திருந்தாலும் வயதுக்கு உரிய அறிவும் பக்குவமும் இருக்காது என்றார். பெரும்பாலும் இதுமாதிரியான சிறுமிகள் தான் பாலியல் கொடூரங்களுக்கு எளிதில் இலக்காகிறார்கள் எனக் கூறினார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

இந்தச் சிறுமிக்கு சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும் என்பது தெரியாது என்றார். ’சோசியல் ஸ்கில்ஸ் அடாப்டபிலிடி’ (Social skills adaptability) அதாவது, சமூகத்தில் பழகுவதற்கான திறமைகளை கிரகிப்பதில் அவருக்கு ‘மைல்ட் டூ மாடரேட்’ அதாவது லேசானது முதல் மிதமானது வரைதான் அறிவு இருக்கும் என்றார்.

`வளர்ந்தால் சரியாகிவிடும்` என்ற அலட்சியம்

வீட்டில் விளையாட்டுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் வளர்ந்தால் சரியாகிவிடும், திருமணமானால் சரியாகிவிடும், சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுப் பிள்ளை, வெகுளி, வெள்ளந்தி, அனைவரிடமும் சிரிக்கச் சிரிக்க பேசுவார்கள் என்று கூறிக்கொண்டு பெற்றோர் குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் ஏதும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சமூக பக்குவம் இல்லாமல் போகும்போது, அது ஒரு மனநல பிரச்னை என்பதை அறியாமல் விட்டுவிடுவதும்தான் இதுபோன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதில் மாட்டிக்கொள்ளக் காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சூசகமான வார்த்தைகளைச் சொல்லி தவறான செயல்களுக்கு அழைக்கும்போது அதனை புரிந்துகொள்வது 17 வயது மனமுதிர்ச்சியற்ற சிறுமிக்கு அது சிரமம்தான்“ எனக் குறிப்பிட்டார்.

"உடல் எல்லை, பாலியல் கல்வி மிகமிக அவசியம்"

இத்தகைய குழந்தைகள் பொதுவெளிக்குச் செல்வதற்கு முன்பே அவர்களுக்குக் கட்டாயம் பாலியல் கல்வியை பெற்றோர் கற்றுத்தர வேண்டும் என்கிறார் அவர். “இது உன் உடல், யாரும் அதைத் தொட அனுமதிக்கக் கூடாது, இதனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படக்கூடும்” என்பதை அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என அவர் கூறுகிறார்.

“இதுபோன்ற மன முதிர்ச்சியற்றவர்களுக்கு கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். ஏனெனில் இவர்கள் வெளியுலகில் யாருடைய ஆதரவும் இல்லாமல் இயங்க முடியாது எனும்போது அவர்களைப் பெற்றோர் தனித்து விடாது நிழல் போல் காக்க வேண்டும். அல்லது உடல் தொடுதல் எல்லைகளையும், `குட் டச் பேட் டச்`சையும் சொல்லித்தர வேண்டும்” என அதன் அவசியத்தை தெளிவுபடுத்தினார் சித்ரா அரவிந்த்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

குழந்தைகளுக்கு அறிவுசார் குறைபாடு வருகிறது என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம் எனவும் அவர் படிநிலைகளை விளக்கினார்.

  • குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற மைல்ஸ்டோன்களை அடையாதது
  • நடப்பது, பேசுவது ஆகியவற்றைத் தாமதமாக செய்வது
  • அதிக கோபமும், சமூகத்தில் பழகும் முறைகளைத் தெரியாதிருப்பது
  • பொருட்களைக் கையாள்வதில் சிரமம் (ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ்)
  • கல்வியில் பின்தங்கியிருப்பது
  • போதிய மனநல விழிப்புணர்ச்சி இல்லாததால், பெற்றோர் இதனை கண்டுகொள்ளாது விட்டுவிடுகிறார்கள்.

`ரிஸ்கி பாபுலேசன்` (எளிதில் ஆபத்துக்கு இலக்காகுபவர்கள்) என இவர்களை அடையாளப்படுத்துவதால் பாலியல் கல்வி அளிப்பது கட்டாயம் என மீண்டும் அறிவுறுத்தினார் சித்ரா அரவிந்த்.

”நிழல் போல் இருந்து பெற்றோர் காக்க வேண்டும்”

மனப் பக்குவம், சமூகத்தில் செயல்படும் விதங்கள், பாலியல் ரீதியிலான நடத்தைகளைக் கற்றுக் கொடுத்தும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், பெற்றோர் நிழல் போல் உடன் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். யாரையும் நம்பி விடக்கூடாது என்றும் இதுபற்றி முதலில் பெற்றோர் விழிப்படைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் பெற்றோர், அதுவே மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரை அணுகுவதில்லை. அதை நிராகரித்துவிடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே தயங்காமல், சமூகம் என்ன சொல்லும் என நினைக்காமல் தைரியமாக மனநல நிபுணர்களை அணுகவேண்டியது அவசியம்” எனக் கூறினார்.

IQ பரிசோதனையின் அவசியம்

பிறந்ததும் குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழந்தைக்கு ஏதும் பிரச்னை இருந்தால் கண்டறிந்துவிடுவார்கள். 3 அல்லது 5 வயதுக்கு மேல் அல்லது எந்த வயதிலும் கூட இத்தகைய குழந்தைகளுக்கு IQ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களின் மனநலம் பற்றி அறிந்துகொள்ளலாம். இது தலைமை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற்று பயனடையலாம்.

இன்டலெக்சுவல் அதாவது அறிவாற்றல் எனப்படுவது காரணம் அறிதல், பிரச்னைகளை தீர்த்தல், கல்வி கற்றல், திட்டமிடுதல், யோசித்தல், நீதி காணுதல், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்ற படிநிலைகளின் கீழ் அறியப்படும். இவற்றை சரியாக பின்பற்றாத குழந்தைகள் அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளாக அறியப்படுபவர்கள்.

சில குழந்தைகள் வளர்ந்த பின்பும் கூட குளிப்பது, உடை அணிந்து கொள்வது, சாப்பிடுவது, வழக்கமான பணிகளை செய்வது, அடிப்படையாக சமைப்பது, துவைப்பது, போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் குறைகள் இருக்கலாம்.

சில குழந்தைகளுக்கு புதிதாக கற்றுக்கொள்ளுதல் திறன்களை வளர்த்தல் பெரியளவு வழிகாட்டுதல் இன்றி தானாகவே செயல் திறன்களை மேற்கொள்வது ஆகியவற்றில் சிரமம் இருக்கலாம்.

10 வயது குழந்தை 5 வயது குழந்தையை போல் பேசுவது இதற்கு உதாரணம்.

லேசான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 52-55 முதல் 70)

  • 5 முதல் 6 வகுப்புக்கு மேல் படிப்பில் சிரமம்
  • பேசுவது தாமதம் ஆகலாம். ஆனால் கற்றுக்கொண்ட பின் பிறருடன் தொடர்புகொண்டு பேசுவது மேம்படலாம்.
  • தன்னை தானே பார்த்துக் கொள்வது பராமரித்துக்கொள்வதில் முழுமையான சுதந்திரம் இருக்கும்.
  • படித்தல் மற்றும் எழுதலில் சிரமம் இருக்கும்.
  • சமூகத்தில் பக்குவமின்மை இருக்கும்.
  • திருமணம், குழந்தை வளர்ப்பு, பெற்றோராக கடமை ஆற்றும் பொறுப்புகளில் இயலாமை இருக்கும்.

மிதமான அறிவு திறன் குறைபாடு (IQ மதிப்பு 35 - 42 முதல் 52 – 55)

  • 2-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதில் சிரமம்
  • மொழியை புரிந்துகொள்வதில் மெதுவாக செயல்படுவார்கள்.
  • பேசுவதிலும் பழகுவதிலும் குறைந்த திறன் இருக்கும்.
  • சாதாரணமாக படித்தல், எழுதுதல், எண்ணுதல் சாத்தியமாக இருக்கும்.
  • தனித்து சுதந்திரமாக வாழ்வது, இயங்குவதில் சிரமம்.
  • ஏற்கனவே தெரிந்த இடங்களுக்கு மட்டும்தான் சிரமம் இன்றி பயணிக்க முடியும்.

தீவிர அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 முதல் 35 – 40)

  • பேசுவதிலும் ’மோட்டார் டெவலப்மென்ட்’ என்ற பொருட்களை கையாளுவதில் சிரமம் இருக்கும்
  • பாதுகாப்பான சூழலில் மருத்துவ உதவியோடு தான் வாழ முடியும்.
  • வெகு சில வார்த்தைகள் மட்டுமே புரியும்.

ஆழமான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 க்கு கீழ்)

  • பிறர் என்ன சொல்கிறார்கள் என்று புரியாது.
  • நரம்பு குறைபாட்டால் அசாதாரணமாக இருப்பார்கள்.
  • சுதந்திரமாக செயல்படுவது சாத்தியமில்லை.
  • எப்போதும் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டியது அவசியம்.

அறிவுசார் குறைபாடு வரக் காரணம் என்ன?

மரபணு, கர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், அம்மை, மூளைக்காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற உடல்நல குறைபாடுகள் இதற்கு காரணமாக அமையலாம்.

குறிப்பாக, பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல்களைக் கொடுக்கும் போதும், அவர்களின் மன நலன் பாதிக்கப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையின் மனநலனும் பாதிக்கப்படக்கூடும்.

104 என்ற எண்ணில் இலசவ மனநல ஆலோசனை

குழந்தைகளை மனநல மருத்துவர்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏதும் தடைகள் இருந்தால், 24 மணிநேரமும் செயல்படும் 104 என்ற அரசின் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை மைய எண்ணை அழைத்து, தங்களின் பிரச்னைகளைக் கூறவேண்டும். எவ்வளவு நேரமாயினும் மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு உங்களுக்கான வழிகாட்டு முறைகளை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பகிர்வார்கள்.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை எழுதி வைத்துக்கொண்டு பின்பற்றி, அவர்கள் சொல்லும் காலகட்டத்துக்குப் பின் மீண்டும் 104 என்ற எண்ணை அழைத்து அதே மருத்துவரின் பெயரைச் சொல்லி பேச வேண்டும் எனக் கூறினால் அவர்கள் இணைப்பை வழங்குவார்கள். எத்தகைய சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள், மன சங்கடங்களையும் தயக்கமின்றி பகிர்ந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)