போஜ்ஷாலா: சரஸ்வதி கோவிலா? கமால் மௌலா மசூதியா? ஞானவாபி போல மற்றொரு இந்து - முஸ்லிம் சர்ச்சை

    • எழுதியவர், சினேகா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஞானவாபி வழக்கு தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள போஜ்ஷாலா வளாகம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவிலும் ஏற்கனவே இத்தகைய ஒரு சர்ச்சை எழுந்தது. இதற்கிடையில், தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா வளாகத்தில் அறிவியல் ஆய்வு நடத்துமாறு இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த கட்டடம் தொடர்பாக, இந்து தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் வாக்தேவி (சரஸ்வதி) கோவில் என்றும், முஸ்லிம் தரப்பு இதை கமால் மவுலா மஸ்ஜித் என்றும் கூறுகிறது. இந்த கட்டடம் ASI கட்டுப்பாட்டில் உள்ளது.

மார்ச் 11ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா ஆகியோர் தங்கள் உத்தரவில், "போஜ்ஷாலா கோயில் மற்றும் கமல் மவுலா மசூதி வளாகத்தை விரைவில் அறிவியல் ஆய்வு நடத்துவது ஏஎஸ்ஐ,யின் அரசியலமைப்பு மற்றும் சட்டப் பொறுப்பு" என்று கூறியுள்ளனர்.

நீதிக்கான இந்து முன்னணி' என்ற அமைப்பின் மனு மீது நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும்.

போஜ்ஷாலா விவகாரம் மத்திய பிரதேசத்தில் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டில், ஏஎஸ்ஐ ஒரு தீர்வைக் கண்டறிந்தது. அதன்படி, இந்துக்கள் செவ்வாய்க்கிழமை பிரார்த்தனை செய்யலாம், முஸ்லிம் சமூகம் வெள்ளிக்கிழமை நமாஸ் செய்யலாம்.

இதனுடன், பசந்த பஞ்சமி தினத்தில் இந்துக்கள் இங்கு வழிபடலாம் என்ற ஏற்பாடும் செய்யப்பட்டது.

மே 2, 2022 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ASI உத்தரவை எதிர்த்து நீதிக்கான இந்து முன்னணி அமைப்பு வழக்குத் தொடர்ந்தது.

போஜ்சாலா வளாகத்தில் வழிபாடு நடத்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றார்கள்.

இப்போது திங்கட்கிழமை, போஜ்ஷாலா வளாகத்தை ஆய்வு செய்ய ஏஎஸ்ஐக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிக்கான இந்து முன்னணி என்ன சொல்கிறது?

நீதிக்கான இந்து முன்னணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "13-14 ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் போது "பண்டைய கோவில் கட்டமைப்புகளை" இடித்து கிழக்கில் அமைந்துள்ள போஜ்ஷாலா கோவிலில் மசூதி கட்டப்பட்டது," எனக் கூறியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீதிக்கான இந்து முன்னணியின் துணைத் தலைவர் ஆஷிஷ் கோயல் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "இது இந்து சமுதாயத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி. சரஸ்வதி கோயிலில் வழிபடுவதற்கான உரிமை போஜ்சாலாவில் எந்த நிபந்தனையும் இன்றி வழங்கப்படுகிறது. இதற்கு இந்து சமுதாயம் பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது.

"ஏஎஸ்ஐ ஆய்வுக்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம், மாண்புமிகு நீதிமன்றம் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் உண்மை வெளிவரும். வாக்தேவி சிலை சரஸ்வதி கோயில் போஜ்சாலாவில் மீண்டும் நிறுவப்படும்." என்றார் அவர்.

இந்த வழக்கின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், இந்த முடிவை வரவேற்று, போஜ்ஷாலாவின் மதத் தன்மையை தீர்மானிப்பதில் இது ஒரு பெரிய மைல்கல் என்று கூறினார்.

மனுவை ஏற்று, ஏ.எஸ்.ஐ., கணக்கெடுப்புக்கு, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த ஏஎஸ்ஐ., கணக்கெடுப்பில், தரைவழி ஊடுருவும் ரேடார் மூலம், இருதரப்பினரும் முன்னிலையில், போட்டோகிராபி, வீடியோகிராபி எடுக்கப்படும்,'' என்றார்.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த உரிமை கோரிய மனுதாரர்களின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆவார். ஞானவாபி மசூதியிலும் ஏஎஸ்ஐ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் தரப்பு என்ன சொல்கிறார்கள்?

தார் நகர காசி (முஸ்லீம் சமூகத்தின் உள்ளூர் தலைவர்) வக்கார் சாதிக், நீதிமன்றத்தின் இந்த முடிவு குறித்து பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நீதிமன்றத்தின் மீது எனக்கு மரியாதை உள்ளது, ஆனால் இந்த முடிவை நாங்கள் ஏற்க முடியாது. ."

இந்த பிரச்னையை மீண்டும்மீண்டும் எழுப்பி மதச் சர்ச்சைக்கான சூழ்நிலைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனால் இதனை முஸ்லிம் சமூகம் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த விஷயத்திற்கு அயோத்தி வடிவம் கொடுக்க முயற்சி நடக்கிறது. ஏறக்குறைய 800 ஆண்டுகளாக முஸ்லிம்கள் இங்கு தொழுகை நடத்துகிறார்கள். இப்போது அதன் வடிவத்தை மாற்ற முயற்சி நடக்கிறது. அதிகாரம் உள்ளவர்கள் கையில் இப்பிரச்னை இருப்பதாக நான் உணர்கிறேன். அவர்கள்தான் நிலைமையை மோசமாக்க முயற்சிக்கிறார்கள்,"என்றார்.

நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ சொன்னது என்ன?

இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஹிமான்ஷு ஜோஷி, “ஜூலை 2003 இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 1902-03 ஆம் ஆண்டில் அப்போதைய நிபுணர் குழுவின் கீழ் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மேற்கொள்காட்டியுள்ளனர். அந்த அறிக்கை வாக்தேவியின் போஜ்சாலா கோவில் முன்பு இருந்ததை தெளிவாகக் கூறியது, மேலும் குருகுலம் மற்றும் வேத ஆய்வுக் கோவில் பற்றியும் கூறப்பட்டது."

தொடர்ந்து பேசிய அவர், "இந்தக் கோயில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்றும், பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு, இங்கு மசூதி கட்டப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது."என்றார்.

இது குறித்து, முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் அஜய் பகடியா நீதிமன்றத்தில் வாதிடுகையில், மாநில அரசும், ஏஎஸ்ஐயும், அரசின் செல்வாக்கு மற்றும் அழுத்தத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தரப்பின் வாதத்தை மட்டும் எடுத்துக்கொள்வது வெளிப்படையாகவே தெரிகிறது.

இப்போது முடிவை விரிவாக ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா, ஏஎஸ்ஐ ஆய்வுக்கு உத்தரவிடும்போது, ​​இந்த முழு தளத்தின் தன்மையிலிருந்தும் மர்மத்தை அகற்றி, சந்தேகத்தின் பிடியில் இருந்து அந்த இடத்தை விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார்.

ஏஎஸ்ஐ இயக்குநர் அல்லது கூடுதல் இயக்குநர் தலைமையில் ஏஎஸ்ஐயின் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அதன் அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.எஸ்.ஐ.க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் என்ன?

  • நிபுணர் குழுவில் இரு சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளையும் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
  • இரு கட்சிகளின் நியமன பிரதிநிதிகள் முன்னிலையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும்.
  • மூடிய அறைகள், முழு வளாகத்தின் அரங்குகள் மற்றும் அனைத்து கலைப்பொருட்கள், சிலைகள், கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அறிவியல் விசாரணை நடத்தும்படி ஏஎஸ்ஐ கேட்டுக் கொண்டுள்ளது. கார்பன் டேட்டிங் உள்ளிட்ட நவீன முறைகளைப் பயன்படுத்தி பல்வேறு கட்டமைப்புகளின் வயதை மதிப்பிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

போஜ்ஷாலாவின் வரலாறு என்ன?

தார் என்பது மத்திய பிரதேசத்தின் ஒரு மாவட்டம். தலைநகர் போபாலில் இருந்து சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தார் அரண்மனைகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

தார் மாவட்டத்தின் இணையதளத்தில் ராஜா போஜ் தாரில் ஒரு கல்லூரியை நிறுவியதாகக் கூறப்படுகிறது, அது பின்னர் போஜ்ஷாலா என்று அறியப்பட்டது.

போஜ்ஷாலா அல்லது சரஸ்வதி கோவிலின் எச்சங்கள் இன்றும் புகழ்பெற்ற கமால் மௌலா மசூதியில் காணப்படுவதாக கூறப்படுகிறது, இது அன்றைய தார் முஸ்லீம் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.

மசூதியில் ஒரு பெரிய திறந்த முற்றம் உள்ளது, அதைச் சுற்றி தூண்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வராண்டா உள்ளது மற்றும் மேற்கில் அதன் பின்னால் ஒரு பிரார்த்தனை மண்டபம் அமைந்துள்ளது.

பாரம்பரியமாக, இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சரஸ்வதி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நடத்துகிறார்கள்.

ஆனால், 2003 ஆம் ஆண்டில், இந்து ஜாக்ரன் மஞ்ச் அங்கு இந்துக்கள் வழக்கமாக நுழையக் கோரி ஒரு இயக்கத்தைத் தொடங்கியது.

இந்த இயக்கம் வன்முறையாக மாறி வகுப்புவாத பதற்றம் உருவானது. இதனால், தார் நகரில் தொடர்ந்து பல நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்குப் பிறகும் பல பதற்றமான சம்பவங்கள் நடந்தன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இங்கு கமல் அல் தின் கல்லறை உள்ளது. அவர் ஒரு சிஷ்டி துறவி மற்றும் ஃபரித் அல்-தின் கஞ்ச்-இ ஷகர் மற்றும் நிஜாமுதீன் அவுலியாவைப் பின்பற்றுபவர்.

அவரது கல்லறை இந்த மசூதிக்கு அருகில் உள்ளது, இது ஒரு கோவிலின் பகுதிகளிலிருந்து கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2012 இல் ராயல் ஏசியாடிக் சொசைட்டியில் வெளியிடப்பட்ட மைக்கேல் வில்லிஸின் ஆய்வுக் கட்டுரையின்படி, போஜ்ஷாலா 'ஹால் ஆஃப் போஜ்' என்ற சொல் ராஜ் போஜுடன் தொடர்புடையது. போஜ் மன்னரின் 'சமஸ்கிருத ஆய்வு மையத்தை' குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ராஜா போஜ் பர்மர் வம்சத்தின் ஆட்சியாளர்.

வில்லிஸ் தனது அறிக்கையில், "20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்து, கமாலுதீன் சிஷ்டியின் கல்லறைக்கு அருகில் அமைந்துள்ள மசூதி ஒரு விருந்து மண்டபமாக அடையாளம் காணப்பட்டது, அதன் பிறகு இந்த கட்டடம் மத, சமூக மற்றும் அரசியல் பதட்டத்தின் மையமாக மாறியது," என எழுதியுள்ளார்.

வில்லிஸின் 'தார், போஜ் மற்றும் சரஸ்வதி: ஃப்ரம் இண்டாலஜி டூ பொலிட்டிக்கல் மித்தாலஜி அண்ட் பேக்' என்ற ஆய்வுக் கட்டுரையில், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் பல வகையான தூண்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுதியிருக்கிறார். இங்கே, தரையில் செதுக்கப்பட்ட பலகைகள் மற்றும் சுவர்களில் வேலைப்பாடுகள் இன்னும் காணலாம். இந்த கட்டிடத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஒரு பெரிய பகுதியில் உள்ள பண்டைய தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என அந்தக் கட்டுரையில் கூறியுள்ளனர்.

இந்த மசூதி 1822 இல் ஆங்கில எழுத்தாளர் ஜான் மால்கம் மற்றும் 1844 இல் வில்லியம் கின்கெய்ட் ஆகியோரின் எழுத்துக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ராஜா போஜ் தொடர்பான பிரபலமான கதைகளை ஆவணப்படுத்தியுள்ளார், ஆனால் அவரது எழுத்துக்களில் போஜ்ஷாலா பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)