12 மணி நேர வேலை திட்டம் - தொழிலாளர்களுக்கு வரமா? சாபமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலெக்ஸ் கிறிஸ்டியன், மேகன் டாடூம்
- பதவி, பிபிசி வொர்க்லைஃப்
தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்ததின் படி தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 48 மணி நேர வேலையை தினமும் 12 மணி நேரம் என்ற அடிப்படையில் 4 நாட்கள் செய்ய வேண்டும். மீதமுள்ள 3 நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறுகிறது.
வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற நடைமுறை அறிமுகமாவது இது முதல் முறையல்ல. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இதை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அமெரிக்காவின் சில நிறுவனங்களும், ஐரோப்பா கண்டத்தில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருக்கும் இந்த 4 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் என்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது? இத்திட்டத்தினால் பயனடைவது ஊழியர்களா? நிறுவனங்களா? ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாகி இருக்கிறதா?
வாரத்திற்கு 4 நாள் வேலை எப்படி உருவானது?

பட மூலாதாரம், Getty Images
ஊழியர்களின் வேலை நேரம் குறித்த விவாதம் எழுவது புதிதல்ல. 1926 ஆம் ஆண்டில், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை என்ற முறையை தனது நிறுவனத்தில் அறிமுகப்படுத்தியது.
அதற்கு முன்பு வரை ஆறு நாள் வேலை வாரம் என்ற நடைமுறை அங்கு இருந்தது. "ஹென்றி ஃபோர்டின் கோட்பாடு என்னவென்றால், ஐந்து நாட்கள் அதே சம்பளத்துடன் வேலை செய்தால் தொழிலாளர் மத்தியில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். இதனால் குறுகிய காலத்தில் அதிக வேலையை செய்து முடிப்பார்கள்," என்று அமெரிக்க பகுப்பாய்வு நிறுவனமான கேலப்பின் பணியிட மேலாண்மை, நலவாழ்வுக்கான தலைமை விஞ்ஞானி ஜிம் ஹார்ட்டர் கூறுகிறார்.
இதனால் விளைந்த நேர்மறை நன்மைகளால் அதற்குப் பிந்தைய தசாப்தங்களில், ஐந்து நாள் வேலை வாரம் என்பது உலகம் முழுவதும் பல நாடுகளில் பொதுவான நடைமுறையாகிவிட்டது.
பின்பு, 1950களில், நான்கு நாள் வாரத்தை அறிமுகப்படுத்துமாறு தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால் இந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்படவில்லை.
ஆனால் கோவிட் தொற்று இந்த எண்ணத்தை அறிவிப்பாக்கியது. பல நிறுவனங்களில் நான்கு நாள் வேலை வாரம் என்ற திட்டம் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு வந்தது.
நான்கு நாள் வேலை மாடலில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
"கோவிட் தொற்றினால் நமது பணியிடங்களின் தன்மை மாறி இருக்கிறது. ஒருவர் வேலை செய்யும் நேரம், இடம் ஆகியவற்றின் பண்புகள் மாறியிருக்கின்றன. மேலும் நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைக்க பல சலுகைகளை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். அவற்றில் மிக முக்கியமானது 4 நாள் வேலை வாரம்," என்று அமெரிக்காவில் செயல்படும் 4 டே வீக் குளோபல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அலெக்ஸ் கூறினார்.
நான்கு நாள் வேலை வாரத்தில் சில மாடல்கள் உள்ளன. வேலை நாட்களை குறைப்பது, வேலை நேரத்தைக் குறைத்து அதே ஊதியத்தை வழங்குவது, ஐந்து நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை நீண்ட வேலை நேரத்தின் வழியாக நான்கு நாட்களில் முடிப்பது என அந்த பட்டியல் இருக்கிறது.
இவற்றில் சில ஊழியர்களின் நலவாழ்வுக்காக கொண்டு வரப்பட்ட மாடல் ஆகும். சில நிறுவனங்களில் வேலைத் திறனை அதிகரித்து லாபத்தை பெருக்க செயல்பாட்டில் இருக்கும் நடைமுறை.
ஊழியர்களுக்கு எப்படி வேலைகளை பிரித்து அளிப்பது, எந்த வேலையை எப்போது முடிக்க வேண்டும், ஐந்து நாட்களுக்கான வேலையை எப்படி தரம் குறையாமல் நான்கு நாட்களில் முடிப்பது என்ற சிக்கல் குறித்து ஆலோசிக்காமல் நான்கு நாட்கள் வேலை வாரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, ஊழியர்கள் மத்தியில் பணிச்சுமையை அதிகரிக்கும் என்கிறார் அலெக்ஸ்.
குடும்பத்துடன் அதிக நேரம்

பட மூலாதாரம், Getty Images
லண்டனில் உள்ள பிரபல மக்கள் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் கோரே காம்கோஸுக்கு, நான்கு நாள் வேலை வாரம் பயன்பாட்டுக்கு வந்த போது பல நன்மைகள் கிடைக்கும் என நம்பினார்.
அண்மையில் தந்தையாகி இருந்த காம்கோஸ், தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட அந்த ஒரு நாள் உதவியாக இருந்தது என்றார்.
ஆனால் நாளடைவில் விடுமுறை நாட்களில் கூட அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையின் காலக்கெடுவை எண்ணி அவரால் விடுமுறையை கொண்டாட முடியவில்லை. ஐந்து நாட்களில் முடிக்க வேண்டிய பணியை நான்கே நாட்களில் முடிக்க வேண்டிய கட்டாயத்தால் அடுத்த வாரத்திற்கான திட்டமிடலை ஞாயிற்றுக் கிழமையன்று காம்கோஸ் செய்ய வேண்டியிருந்தது.
"இது வீட்டிற்கும் வேலைக்கும் இடையிலான இடைவெளியை மங்கலாக்கியது" என்று காம்கோஸ் கூறுகிறார். ஆனால் நேர மேலாண்மையை கடைபிடிக்க பழகிவிட்டால், நமக்கு கூடுதலாக கிடைக்கும் அந்த ஒருநாள் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
"கூடுதலாக கிடைக்கும் ஒருநாள் விடுமுறையால் என் குழந்தையை பராமரிக்க டே கேருக்கு செல்ல வேண்டியதில்லை. இதனால் ஒரு மாதத்திற்கு 400 யூரோ வரை தன்னால் சேமிக்க முடிந்தது," என்றார் காம்கோஸ்.
ஐந்து நாள் வேலையை எப்படி நான்கு நாட்களில் முடிப்பது?

பட மூலாதாரம், Getty Images
சோதனை முறையில் இயங்கிய இந்த நான்கு நாள் வேலை வாரம் திட்டத்தை சில நிறுவனங்களின் தலைவர்கள் நிரந்தரமாக்கினர். ஊழியர்களும் இதற்கு நன்கு பழகியதால் நான்கு நாள் வேலை வாரத்தின் நன்மை தீமைகளை அவர்கள் அறிந்துள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து இயங்கும் 'டர்ஹாம்' என்ற நிறுவனம் அதன் 430 ஊழியர்களுக்கும் 2021 ஆண்டு நவம்பர் மாதம் முதல் நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது. "குறுகிய வேலை வாரத்திற்கு மாறுவது நல்ல முயற்சி" என்று அங்கு பணியாற்றும் ஜெனிபர் ஷெப்பர்ட் கூறுகிறார்.
"இப்போது வெள்ளிக்கிழமைகள் எனது ஒரு வயது மகளுடன் செலவிடும் ஒரு சிறப்பான நாளாகிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு நிறுவனமான பஞ்ச் கிரியேட்டிவிட்டி நிறுவனம் 2020ஆண்டு முதல் நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஊழியரான ஆண்டி இல்லிங்வொர்த், "வரலாற்றில் வெள்ளிக்கிழமை மதியம் என்பது எப்போதும் செயல்திறன் குறைந்த நாளாக மட்டுமே இருந்துள்ளது. இப்போது வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற அறிவிப்பால், எனக்கு பிடித்தவற்றை நான் அன்று செய்கிறேன். மேலும் திங்கள் அன்று அலுவலகம் செல்லும் போது எனது திறமைகளை எப்படி மெருகேற்றுவது என்று விடுமுறை நாட்களில் யோசிக்க முடிகிறது," என்றார்.
ஆண்டி இல்லிங்வொர்துக்கு மீண்டும் ஐந்து நாள் வேலை வாரம் நடைமுறைக்கு வருவதில் விருப்பமில்லை.
ஐந்து நாட்களுக்குப் பதிலாக நான்கு நாட்களில் அந்த வேலைகளை செய்து முடிக்க கூடுதல் நேரத்தை அலுவலகத்தில் செலவிடுவதாக ஆண்டியும், ஜெனிபரும் ஒப்புக் கொள்கின்றனர்.
"முன்பு எனது அலுவலக நேரம் என்பது காலை 8 மணி முதல் மாலை 5 மணி இருந்தது. உணவுக்காக அதில் 30 நிமிடங்கள் வரை இடைவெளி எடுத்துக் கொள்வேன். ஆனால் இப்போது நான்கு நாள் வேலை வாரம் என்பதால் தினமும் 90 நிமிடங்கள் வரை கூடுதல் நேரத்தை அலுவலகத்தில் நான் செலவிடுகிறேன். எனது உணவு இடைவெளியை இரண்டு பாதியாக நான் எடுத்துக் கொள்கிறேன்," என்கிறார் ஆண்டி இல்லிங்வொர்த்.
"நான்கு நாள் வேலை வாரம் என்பதால், வியாழக்கிழமை மதியம் மிக கடினமாக இருக்கும். மீதமிருக்கும் பணிகள் அனைத்தையும் முடிக்க ஏற்படும் அழுத்தம் மிக ஆழமானது. மற்றவர்கள் வேலையை முடித்து விட்டு சென்ற பிறகும், சில நாட்கள் கூடுதல் நேரம் எடுத்து வேலையை முடித்து விட்டு வீடு திரும்புவேன்," என்றார் ஜெனிபர் ஷெப்பர்ட்.
நான்கு நாள் வேலையின் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம், Getty Images
கேலப் நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில், நான்கு நாள் வேலை வாரத்தின் நன்மை, தீமைகள் தெரிய வந்துள்ளது. நான்கு நாள் வேலை என்பதால், ஊழியர்களின் நலவாழ்வு அதிகரித்துள்ளது. குறிப்பாக குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். அதே போல நிறுவனத்தின் மீதான வெறுப்புணர்வும் ஊழியர்கள் மத்தியில் குறைந்து இருக்கிறது.
ஆனால் நிறுவனத்தின் மீது பற்றுதல் இல்லாத ஊழியர்கள், குறைந்த நாட்கள் வேலை செய்வதால் நிறுவனத்தை விட்டு இன்னும் அதிக தூரம் விலகிச் செல்கின்றனர். வேலை நேரத்தின் போது அடிக்கடி அவர்களின் கவனம் சிதறி வேலையின் திறன் குறைகிறது என்றும் இந்த அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.
3 நாட்கள் கிடைக்கும் விடுமுறையின் போது சிலர் தங்களுக்கு பிடித்த செயல்களை செய்கின்றனர். தோட்டம் வளர்ப்பது, மலை ஏறுவது, அலை சறுக்கில் ஈடுபடுவது, தொலைதூர கிராமங்களுக்கு பயணப்படுவது என தங்களுக்கு பிடித்ததை செய்ய உதவுகிறது என்கின்றனர் ஊழியர்கள்.
இன்னும் சிலர் இந்த நாட்களை கூடுதல் வருமானம் வாய்ப்பாக கருதுகின்றனர். விடுமுறை நாட்களில் மாடலிங், போட்டோகிராபி என பலதுறைகளில் கால் பதித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார் ஜென்னிங்ஸ்.
இன்னும் சிலர் தங்கள் வேலையில் உயர் பதவியை அடைய, வேலையை இன்னும் திறனுடன் செய்ய தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்த விடுமுறையை பயன்படுத்துகின்றனர்.
வியாழக்கிழமைகளில், வேலையை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நிறுவனங்களை சில இடங்களில் தொழிலாளர்கள் எதிர்க்கக்கூடும். இது அந்த நிறுவனத்தின் கூட்டு உழைப்புக்கு ஒரு எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும் என அலெக்ஸ் கூறுகிறார்.
"குறுகிய வாரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காலக்கெடுவை மனதில் வைத்து தொடர்ந்து பணியாற்றுவதால், ஊழியர்கள் மத்தியில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது," என்கிறார் அலெக்ஸ்.
"இது தீவிரமான பிரச்னை அல்ல, நாளடைவில் இதை சரி செய்ய முடியும். எல்லா வியாழக்கிழமை மதியத்திலும் இந்த பிரச்னை எழவில்லை," என்றார் ஆண்டி இல்லிங்வொர்த்.
"காலண்டரில் ஒரு நாள் வெட்டப்பட்டாலும், பல சந்தர்ப்பங்களில் பணிச்சுமை இன்னும் குறையவில்லை. குறுகிய காலக்கெடுவை கொண்ட வேலையை முடிக்க பணிக்கப்படும் போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன," என்று காம்கோஸ் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












