"12 மணி நேர வேலை சமூகத்தை பின்னோக்கி அழைத்து செல்லும்" - எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

“தொழிலாளர் விரோத நடவடிக்கையின் உச்சமாக, தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் (சஸ்பென்ட்) செய்யப்படுகின்றன” என்று உத்தர பிரதேச அரசும், “8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது” என்று மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசுகளும் அறிவித்திருக்கின்றன.

ஏழை தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம். அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம்” என்ற ஆபத்தான உள்நோக்கத்தை இந்த மாநிலங்களின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், ஏதோ பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் போல், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பெற்றவை அல்ல; 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பேரணி நடத்தி - ரத்தம் சிந்தி - உயிரைத் தியாகம் செய்து பெற்ற உரிமை!``

2020ஆம் ஆண்டில் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆண்ட பா.ஜ.க. அரசுகள், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிட்டதற்கு எதிராக தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனம்தான் மேலே உள்ள வார்த்தைகள்.

"பா.ஜ.க. அரசின் “மக்கள் விரோத”, “தொழிலாளர் விரோத" நடவடிக்கைகளை - அப்படியே “காப்பி” அடித்துவரும் அ.தி.மு.க. அரசு - தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது" என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக கடுமையாக எச்சரித்தார் மு.க.ஸ்டாலின்.

தற்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது, அவரது தலைமையிலான அரசே அப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் குறித்து விளக்கம் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், "தற்போது நடைமுறையில் உள்ள வாராந்திர, தினசரி வேலை நேரம், வரம்புமுறைகள், ஓய்வு, இடைவேளை, ஓவர் டைம், பணிக்கால சம்பளம், வாராந்திர விடுமுறை போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் தொழிலாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே புதிய திருத்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை என்பது அப்படியே தொடரும்" என்று தெரிவித்திருந்தார்.

நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நெகிழ்வுத்தன்மை எது?

தொழிலாளர் நலன்

பட மூலாதாரம், Getty Images

"தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் மாறுபட்ட வேலை சூழலில் இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது" என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், "அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல், தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் அறிக்கையை அவரே படித்துப் பார்க்க வேண்டும்

ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது உரிமையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

2020ஆம் ஆண்டில் மத்திய அரசு தொழிலாளர் வேலை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது அந்தச் சட்டத்தின் ஷரத்து.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தச் சட்டத்தை எதிர்த்து வக்கணை பேசினார். பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் மத்திய அரசுக்கு தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக அரசுக்கு கெடு விதித்தார்.

அன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக தொழிலாளர்களின் நலனைக் காக்க அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளூம்` என்று குறிப்பிட்டுள்ளார்.

12 மணி நேர வேலையின் ஆரம்பப் புள்ளி எது?

ஸ்டாலின்

பட மூலாதாரம், TNDIPR

கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டன. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்தன.

இந்நிலையில், 2020 மே மாதம் 6ம் தேதி தொழில் நிறுவனங்களுடன் அப்போதைய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 12 கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தனர்.

  • கொரோனா பொது முடக்க காலத்தை பணி நீக்கமாக கருதும் வகையில் தொழில் தகராறுகள் சட்டத்தில் விதிகளை தளர்த்த வேண்டும்.
  • தொழில் துறை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பணப்புழக்க நெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை சிஎஸ் ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்பு) நிதியின் கிழ் செலவீனங்களின் கீழ் ஈடு செய்ய வழி வகை செய்ய வேண்டும்.
  • குறைந்தபட்ச ஊதியம், போனஸ் மற்றும் சட்டப்பூர்வ நிலுவைத் தொகைகள் போன்ற விதிகளை தவிர்த்து தொழிலாளர் சட்டங்களை அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
12 மணி நேர வேலை திருத்த சட்டம்

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, சந்தோஷ் கங்வார்- முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்

தொழில்நிறுவன பிரதிநிதிகள் மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது.

அதற்கு முன்பாகவே ஒருசில மாநிலங்கள் 12 மணி நேரம் வேலை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. கொரோனா பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப் பட்ட பின்னர், பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்கவும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி, தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் என வாரத்திற்கு அதிகப்பட்சமாக 72 மணி நேரம் (6 நாட்கள்) வேலை செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டது. மத்திய அரசு எவ்வித திருத்தமும் செய்வதற்கு முன்பே, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வேலை செய்யும் நேரத்தை நீடிப்பது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டன. உத்தரப் பிரதேசமும் 12 மணி நேரம் வேலை தொடர்பாக 2020 மே மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது, எனினும் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுகொண்டது.

புதிய தொழிலாளர் விதிகள் 2022

தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், பலத்த எதிர்ப்புகள் காரணமாகவும், பல மாநிலங்கள் அதற்கு தேவையான விதிகளை வகுக்காமலும் உள்ளதால் இந்த விதிகள் தற்போதுவரை அமல்படுத்தப்படாமல் உள்ளன. புதிய தொழிலாளர் விதிகள் 2022ல் நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த 29 சட்ட விதிகளில் ஊதிய பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன. புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்படை சம்பளமாக காட்டப்பட வேண்டும். இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின் பங்கு அதிகரிக்கும்.

இதனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் 'டேக் ஹோம்' வருமானம் குறையும் என, தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மாற்றத்தால் அவர்களின் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் பி.எஃப் மற்றும் பணிக் கொடை தொகை உயர்ந்து அவர்கள் மதிப்பான வாழ்க்கையை வாழ உதவும் என அரசு கூறுகிறது.

அதன்படி, வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வேலைநேரத்தில் மாற்றம் கிடையாது. அந்த வேலை நேரத்தை வாரத்திற்கு 4 நாட்கள், 5 நாட்கள், 6 நாட்கள் என பிரித்து வழங்கலாம். அதற்கேற்ப, தொழிலாளர்களுக்கு வார விடுமுறை கிடைக்கும். அதாவது தினசரி 12 மணி நேரம் வீதம் வேலை செய்தால் வாரத்திற்கு 3 நாட்கள் வாரவிடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட விதிகள் கூறுகின்றன.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

12 மணி நேரம் வேலை

பட மூலாதாரம், STR/AFP VIA GETTY IMAGES

12 மணி நேர வேலை என்ற தொழில் நிறுவனங்களின் முன்மொழிவை மத்திய அரசு பிரதிபலித்த போது கடுமையாக எதிர்த்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதனை செயல்படுத்த முனைவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "2020ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை தி.மு.க கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு தி.மு.கவின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது.

வேலை நேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

கருணாநிதி விருப்பத்திற்கு எதிராகவே திமுக செயல்படலாமா?

தொழிலாளர் விரோத எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம், ANI

திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க விரும்பியதாகம் தற்போதைய திமுக அவரது விருப்பதற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "8 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பதுதான் தொழிற்சாலைகளுக்கான சட்டம். தேவைப்பட்டால் அதிகப்பட்சமாக கூடுதலாக 1 மணி நேரம் சேர்த்து 9 மணி நேரம் வேலை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற கணக்கை தாண்டக் கூடாது," என்கிறார்.

"8 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதிக்கும்போதே ஒருசில இடங்களில் 12 மணி நேரம் வாங்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது 12 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதித்தால் என்ன ஆகும்.

12 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்தால் தொழிலாளியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மன அழுத்தத்திற்கு உள்ளாவர். இதனால், அவரது நலம் மட்டுமல்லாது குடும்பத்தின் நலமும் பாதிக்கப்படும். மேற்கு உலக நாடுகள் வாரத்துக்கு 48 நேரம் என்பதை 36, 35 என்று குறைத்து வருகின்றனர்.

இந்தியாவில் கூட திமுக தலைவராக இருந்த கருணாநிதி உட்பட பலர் வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். அவரது மே தின முழக்கத்தில் இந்த கோரிக்கை இருக்கும். 20 ஆண்டுகளாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 8 என்பதை 6 ஆக குறைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதனை அதிகரிப்பது எப்படி சரியாகும்?

முதலாளிகள், முதலாளிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த சட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். இந்த சட்டத்திருத்தத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த தொழிலாளர்கள், தொழில் சங்கங்களிடம் கருத்து கேட்க வேண்டாமா? தமிழ்நாட்டில் மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளது. தொழிற்சங்கங்கள், முதலாளி சங்கங்கள், அதிகாரிகள் என முத்தரப்பு குழு இதில் இடம்பெற்றுள்ளது. இந்த குழுவில் கூட சட்டத்திருத்தம் குறித்து அரசு விவாதிக்கவில்லை. அரசு செய்துள்ள திருத்தம் என்பது பின்னோக்கி இழுத்துச் செல்லக்கூடியது. உடனடியாக சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்," என்கிறார் சவுந்திரராசன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: